Site icon சக்கரம்

இந்தியா அரியதோர் அதிசயம்!

-சீத்தாராம் யெச்சூரி,
பொதுச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

லகின் பல பகுதிகளிலும் தேசம் மற்றும் தேசிய இனங்களின் தோற்றமானது, மனித குல நாகரிகம் நிலப்பிரபுத்துவ நடைமுறை யிலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறிய கால கட்டத்தோடு நேரடித் தொடர்புடையது.  இந்தக் காலகட்டத்தின் பிரத்யேகச் சூழலே, ஐரோப்பாவில் திருச்  சபைகளின்  மேலாதிக்கத்திலிருந்து அரசுகளை விடுவிப்பதற்கான எழுச்சிமிகு போராட்டங்களுக்கும் வழிவகுத்தது. நிலப்பிரபுத்துவத்தை முறியடித்து முதலாளித்துவம் காலூன்றிய அந்தச் சூழல், அதுகாறும்  ‘கடவுளின் கட்டளைக்கிணங்க’ என்று கூறிக்கொண்டு மன்னர்களும், பேர ரசர்களும் புரிந்துவந்த ஏகபோக மேலாதிக்கத்திற்கும் முடிவைக் கொண்டுவர  முற்பட்டது.  ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய  நாடுகளிடையே 1648 ஆம் ஆண்டு கையெழுத்தான புகழ்பெற்ற ‘வெஸ்ட்பாலியா  ஒப்பந்தம்‘, ரோமானிய திருச்சபைகளின் தலையீடுகள் எதுவும் இல்லாமல் உருவான ‘தேசங்களின் இறையாண்மையை‘ அங்கீகரித்ததோடு, சர்வதேச அளவில் புதிய சட்டங்கள் இயற்றப்படுவதற்கும் அடிகோலியது. இருபதாம் நூற்றாண்டில் நடந்த இரண்டாம் உலகப் போரில் பாசிசம் வீழ்த்தப் பட்டதும், அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் காலனிய ஆட்சிமுறை முடிவுக்கு வந்ததும் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று நிகழ்வு.  மக்கள் திரள் நடத்திய மகத்தான போராட்டங்களின் பயனாக காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பல நாடுகளின் வருங்கால அரசியல் பாதை மற்றும் அரசு கட்டுமானம் குறித்த விவாதங்களும் இத்தருணத்தில் மேலெழுந்து நின்றன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்தியாவில் உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்ற சுதந்திரப் போராட்ட நாட்களிலேயே, இந்தியா என்கிற கருத்தாக்கமும் உருப்பெற்றது.

இந்தியா என்னும் கருத்தாக்கம்
‘இந்தியா‘ என்கிற இந்தக் கருத்தோட்டத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்வ தென்றால், இந்த மிகப்பெரிய நாட்டின் மாறுபட்ட பல்வேறு கூறுகளையும் அவற்றின்  தன்மைக்கேற்ப உள்வாங்கிக் கொண்டு, இங்கு வாழும் மக்களின் ஒற்றுமையை  உறுதிப்படுத்துவதும், ஒன்றுபட்ட நல்வாழ்வை முன்னெடுத்துச் செல்வதும் தான். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அகீல் பில்கிராமி, கடந்த 2010-ம் ஆண்டு, இந்தியாவின் அன்றாட அரசியல் நடப்புகளுக்கும், இங்கு பின்பற்றப்படும் அரசியல் பொருளாதாரத்திற்கும் இடையேயான உறவுகள் குறித்த தொடர் ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். உலகின் கவனத்தை ஈர்த்த அந்தக் கட்டுரைத் தொடரில் பேராசிரியர்  பில்கிராமி கூறுகிறார்: “ஐரோப்பாவில் வெஸ்ட்பாலியா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு, ஆட்சியாளர்கள் கடவுளின் தூதர்களாக, கடவுளிடமிருந்து புனிதமான அதிகாரத்தைப் பெற்றிருப்பவர்களாக, தங்களைக் காட்டிக் கொள்ள இயலவில்லை. இந்தப் பின்னணியிலேயே, ‘குடிமக்களின் உணர்வு‘ என்னும் உளவியல் அம்சத்தை உள்ளடக்கி, தேசம், தேசியம் முதலான கருதுகோள்கள் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்பட்டன. மக்கள் திரளைப் பெரிதும் ஈர்த்த இந்தக் கருது கோள்களை வேகமாக முன்னெடுத்துச் செல்ல, ‘தங்களுக்குள்ளேயே ஒரு எதிரியை வெளியே காட்டுவது‘ (External Enemy within) என்கிற மிகவும் வெறுக்கத்தக்க ஒரு மோசமான உத்தியை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றத் துவங்கின. சமூகத்தின் ஒரு பிரிவினரைத் தனிமைப்படுத்தி, ‘நாம்-அவர்கள்’ என வேறுபடுத்துவது, ‘வெளியாட்கள்’, ‘நம்மைச் சாராதவர்கள்’ என்றெல்லாம் அடையாளப்படுத்துவது போன்ற உத்திகள், தேசியம் என்கிற கருதுகோளுடன் கட்டாயமாக மக்களின் மூளைக்குள் திணிக்கப்படலாயின.

பிரிட்டனில் ஐரிஷ்  இனத்தவரும், ஜெர்மனியில் யூதர்களும் எவ்வாறு ‘எதிரிகளாகச்’ சித்தரிக்கப்பட்ட னர் என்பதை இங்கே உதாரணமாகக் கூறலாம். இத்தகைய போக்குகளின் நீட்சியாகவே, சிறுபான்மையினர், பெரும்பான்மை மக்கள் போன்ற வாதங்கள்  தேசியத்தின் பெயரால் முன்வைக்கப்பட்டு, ‘தேசம் பெரும்பான்மையினருக்கா னது’ என்கிற கருத்தோட்டம் மக்களைச் சென்றடையுமாறு திட்டங்கள் தீட்டப்பட்டன. சுதந்திரத்திற்குப் பின், மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக மலர்ந்துள்ள நவீன இந்தியாவை, ஒரு‘ இந்துத்வா ராஷ்டிரமாக‘ எப்படியேனும் மாற்றிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்/பாஜகவினர் யத்தனிப்பதை இந்தப் பின்புலத்தில் ஆய்ந்திட வேண்டும். இஸ்லாமியர்களை எதிரிகளாகச் சித்தரிப்பதும், அனைத்து  மக்களின் ஒற்றுமையைச் சிறுமைப்படுத்தி, பெரும்பான்மை வாதத்தை முன்னிறுத்துவதும், ‘இந்திய தேசம்’ என்பதை ‘இந்து தேசியம்’ என்று நிறுவ முயலும்  ஆர்எஸ்எஸ் அமைப்பினரின் அபாயகரமான நிகழ்ச்சி நிரல் ஆகும். உண்மையில் இது மேற்கத்திய நாடுகளிலிருந்து அப்பட்டமாக இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியாவுக்குள் நடைமுறைப்படுத்த முயற்சி செய்யும் ஒரு சிந்தனைப் போக்கே.  இதன் மூலமாகவே, பெரும்பான்மைவாதமும் சகிப்பின்மையும் இந்துத்வா ராஷ்டிரா என்கிற உரத்த குரலுடன், வெளிப்படையான பாசிச மனப்போக்குடன் வெகுமக்கள் மீது திணிக்கப்படுகிறது. இது, கோடிக்கணக்கான இந்திய மக்கள்  தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின் போது உணர்ச்சிப் பூர்வமாகவும், எழுச்சி கரமாகவும் வெளிப்படுத்திய ‘இந்திய தேசியம்’, என்கிற சிந்தனைக்கும், ‘இந்தியா’ என்கிற கருத்தாக்கத்திற்கும் முற்றிலும் முரணான ஒன்று என்பதைக் கூறவும் வேண்டியதில்லை.”  – பேராசிரியர் அகீல் பில்கிராமி அவர்களின் மேற்சொன்ன கருத்துக்கள் ஆழ்ந்த கவனத்திற்குரியவை.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கடைசி முப்பது வருடங்களில் உருவான  மக்கள் எழுச்சி உண்மையில் மிகவும் அசாதாரணமானது.  சாதி, மத, இன எல்லை கள் கடந்து ‘தேச சுதந்திரம்‘ என்கிற ஒரே குறிக்கோளுடன், ஒற்றுமை முழக்கத்துடன்  இந்திய மக்கள் வெளிப்படுத்திய உணர்வு, இன்று எண்ணிப் பார்த்தாலும் மிகுந்த  வியப்புக்குரியது.  பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அத்தனை அடக்குமுறைகளை யும், தாக்குதல்களையும் துணிவுடன் எதிர்கொண்டு இந்திய மக்கள் காட்டிய  தீரமும், தியாகத் தழும்புகளும் விடுதலைப் போராட்ட வரலாற்றின் பெருமைமிகு நிகழ்வுகளாய் என்றும் போற்றுதலுக்குரியன.  ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ்-பாஜக  அமைப்பினர், மகத்தான இந்தப் போராட்டத்தின் மையக் கூறுகளையே மறுதலிக்க  முற்படுகின்றனர். இந்தியா என்கிற கருத்தாக்கத்தையே நிராகரித்து அதை இந்து  தேசியமாக மாற்றிடத் துடிக்கின்றனர்.  பேராசிரியர் பில்கிராமி சரியான ஆய்வுடன்  இதுகுறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்தியாவின் பன்மைத்துவம் என்பது – மொழி, மதம், இனம், பண்பாடு  உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் –  உலகின் எந்தவொரு நாட்டுடனும்  ஒப்பிட இயலாத அளவுக்கு மிகவும் பரந்துபட்ட ஒன்று.  சில பத்தாண்டுகளுக்கு  முன்பு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பரந்து விரிந்து வியாபித்திருக்கும் நம் இந்திய தேசம் 1618 மொழிகள், 6400 சாதியப் பிரிவுகள், 6 பெரிய மதங்கள், 6 வெவ்வேறு விதமான மானுடவியல் கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கி யது. இத்தனை அம்சங்களுடன் உருவெடுத்துள்ள இந்திய நாட்டின் பிரம்மாண்ட மான இந்தப் பன்மைத்துவத்தின் அடையாளமாகவே மிகவும் அரிதாக, மொத்தம் 29 மத-கலாச்சார விழாக்கள் ஆண்டு முழுவதும் இந்தியாவின் பல பகுதிகளில் மக்களால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.  இது உலகின் வேறு எந்த நாட்டிலும் காணக்கிடைக்காத அரியதோர் அதிசயம்.  இந்திய நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க விடுதலைப் போராட்டமானது, மேற்கூறிய பன்மைத்துவம் நிறைந்த, தேசத்தின் பலதரப்பட்ட மக்களையும் ஒற்று மைப்படுத்திய மகத்தான இயக்கம்.  இதன் நீட்சியாகவே ‘வேற்றுமையில் ஒற்றுமை’  என்னும் உயரிய கோட்பாடு இந்தியாவின் அடையாளமாக உருவானது.  இதன் தொடர்ச்சியாகவே, நாடு விடுதலைய டைந்தவுடன், மகாராஜாக்களின் ஆளுகைக்கு உட்பட்டு இங்கிருந்த 660 சமஸ்தானங்கள் ஒன்றிணைக்கப்படுதலும், அதன் வழியே நவீன இந்தியா உருவாக்கமும் சாத்தியமாயிற்று.

மூன்று வேறுபட்ட கண்ணோட்டங்களின் மோதல்
இந்தியா என்னும் கருத்தாக்கமானது, தேசத்தின் விடுதலைக்கான வீரமிக்க போராட்டக் களத்தில் முகிழ்த்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். சுதந்திரப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கிய 1920-களிலிருந்தே, விடுதலைக்குப் பிறகான இந்தியாவின் தன்மையும், செயல்பாடும் எவ்வாறு இருந்திட வேண்டும் என்பது குறித்த மூன்று வெவ்வேறு விதமான  கண்ணோட்டங்கள் விவாதங்களில் மேலெழுந்து வந்தன. சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலைப் பங்கை வகித்த காங்கிரஸ் கட்சி, சுதந்திர இந்தியா, மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக மலர்ந்திட வேண்டும் என்று ஆழமாக வலியுறுத்தியது. கம்யூனிஸ்ட்டுகளின் தலைமையிலான இடதுசாரி இயக்கமோ, காங்கிரஸின் கருத்துக்கு ஒத்திசைவு தெரிவித்ததுடன், அதோடு கூடுதலாக, நாட்டின் அரசியல் விடுதலையைத் தாண்டி, மக்களின் சமூக-பொருளாதார விடுதலையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கேதுவாக சோஷலிசப் பாதையில் நாடு நடைபோட வேண்டும் என்றும் வற்புறுத்தியது.

மேற்சொன்ன இரண்டு கருத்துக்களிலிருந்தும் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு கண்ணோட்டமும் போராட்டத்தின்போதே வெளிப்பட்டது.  சுதந்திர இந்தியாவின் எதிர்காலம், இங்கு வாழும் பெரும்பாலான மக்களின் மத  நம்பிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப் பட வேண்டும் என்ற வாதத்துடன் ஒருசில குரல்கள் ஒலிக்கத் துவங்கின.  ஒரு புறம், ‘இஸ்லாமிய தேசம்‘ என்னும் முழக்கத்துடன் முஸ்லிம் லீக் கட்சியும், மறுபுறம், ‘இந்துத்வா ராஷ்டிரா‘ என்னும் முழக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் மத அடிப்படையிலான இந்த மூன்றாம் நிலைக் கண்ணோட்டத்தை முன்னிறுத்தி, அதற்குத் தங்கள் முழு ஆதரவையும் தெரிவித்தனர்.   துரதிருஷ்டவசமாக, முஸ்லிம் லீக் கட்சியின் கோரிக்கை ஈடேறியதும், நாடு துண்டாடப்பட்டு பாகிஸ்தான் உதயமானதும், பிரிட்டிஷ் காலனியாதிக்க ஆட்சியாளர்கள் இந்தப் பிரிவினைக் கோரிக்கையை ஊக்குவித்து உர மூட்டி வளர்த்ததும், மறைமுகமாகவும், பின்னர்  நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து, உதவிகள்  பல புரிந்து உறுதுணையாய் இருந்ததும் இந்திய  வரலாற்றின் இருண்ட பக்கங்களாக இடம்  பெற்றுவிட்டன.

இதன் பின் விளைவுகளையும், இதனால் எழுந்த பலவிதமான நெருக்கடிகளை யும் தேசம் இன்றளவும் சந்தித்துக் கொண்டி ருக்கிறது. இன்னொரு புறம், தாங்கள் முன்வைத்த மத அடிப்படையிலான தேசம் என்னும் கருத்து  எடுபடாமல் போன ஏமாற்றத்தில் இருந்த வகுப்புவாத அமைப்பினர், தேச சுதந்திரத்திற்குப் பிறகும், நவீன இந்தியாவை சமய சகிப்புத்தன்மையற்ற, பாசிச மனப்போக்குடைய ‘இந்துத்துவ ராஷ்டிரமாக’ எப்படியேனும் மாற்றிட வேண்டும் என்கிற எண்ணத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வந்தனர்.  இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ் முன்வைத்த மதவாதக் கண் ணோட்டத்தை நிராகரித்ததால் ஏற்பட்ட விரக்தி  மற்றும் வெறுப்புணர்வின் வெளிப்பாடே தேசத்தந்தை மகாத்மா காந்தியின் படுகொலையில் முடிந்தது என்பதையும் இங்கு நினைவுகூர வேண்டும். இன்று இந்தியா சந்தித்து வருகிற அரசியல்  போராட்டங்களும், சித்தாந்த ரீதியான முரண்பாடுகளும், விடுதலை இயக்கக் காலத்தில் நிலவிய மூன்று கண்ணோட்டங்களுக்கு இடையேயான கருத்து மோதல்களின் தொடர்ச்சியே என்பது தெளிவு.  சித்தாந்த ரீதியான இந்தப் போர்க்களத்தில் மேற்கொள்ளப்படுகிற வலிமை வாய்ந்த போராட்ட வியூகமும் வடிவமைப்புமே, இந்தியா என்னும் கருத்தாக்கத்தை ஈடேற்றுவதற்கும், இந்திய நாட்டின் பன்மைத்துவத்தைத் தொடர்ந்து நிலைபெறச் செய்வதற்கும் சரியான அடித்தளமாக அமையும்.

இடதுசாரிகளின் ஏற்றமிகு பங்களிப்பு
நவீன இந்தியாவை உருவாக்குவதில் இடதுசாரி இயக்கத்தினர் பெரும் பங்கை வகித்து வந்துள்ளனர். சுதந்திரப் போராட்ட வேளையில் பல்வேறு பிரச்னைகள் குறித்து இடதுசாரிகள் தொலைநோக்குப் பார்வையுடன் முன் வைத்த ஆழமான கருத்துக்களும், அவற்றின்  செயல்பாடும், இந்தியா என்னும் கருத்தாக்கத்தைச் சரியான திசைவழியில் எடுத்துச் சென்று நிலைபெறச் செய்ததில் மகத்தான பங்களிப்பை நல்கியுள்ளன. கீழ்க்காணும் மூன்று அம்சங்களை முன்னெடுத்துச் சென்றதில் இடதுசாரிகளின் ஏற்றமிகு பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

நிலச் சீர்திருத்தம்

1940-களில் நாட்டின் பல பகுதிகளில் ‘உழுபவனுக்கே நிலம்  சொந்தம்‘ என்கிற முழக்கத்துடன் கம்யூனிஸ்டுகள் முன்னெடுத்த மாபெரும் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிலச்சீர்  திருத்தத்தின் தேவையை தேசிய அளவிலான விவாதத்தின் மையப்புள்ளிக்குக் கொண்டு வந்தது.  கேரளாவின் புன்னப்  புரா -வயலார், வங்காளத்தின் தேபாகா, அஸ்ஸாமின் சுர்மா பள்ளத்தாக்கு, மகா ராஷ்டிராவின் வொர்லி பகுதிகளில் நடை பெற்ற எழுச்சி நிறைந்த போராட்டங்களும், இவற்றின் முத்தாய்ப்பாக தெலுங்கானாவில் மூன்றாண்டுகள் நீடித்த ஆயுதப் புரட்சியும் இவ்விடத்தில் பெருமிதத்துடன் நினைவு கூரத்தக்கது.  இவற்றின் பயனாக ஜமீன்தாரி அடிமை முறை முடிவுக்கு வந்ததும், கோடிக் கணக்கான விவசாயிகள் உண்மையான விடுதலையுணர்வுடன் புத்தெழுச்சி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் நவீன கட்டுமானத்திற்குப் பக்கபலமாய் அமைந்ததோடு, இந்தியாவின் புதிய முகமாக ‘நடுத்தர வர்க்கம்‘ உருவாகி, வேகமாக வளர்ச்சி பெறுவதற்கும் வழிவகுத்தது. ஆனால் இன்றைய தினம், கார்ப்பரேட்டுகளின் தேவைக்காக நிலங்களைக் கட்டாயமாக விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சூழ்ச்சியில் ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.  விவசாயப் பெருங்குடி மக்களின் வரலாற்றுப் புகழ் வாய்ந்த போராட்ட எழுச்சியின் பயனாக சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டு விட்ட  போதிலும், நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரவே செய்கின் றன. நவீன தாராளமயத்தின் ஒரு கூறாக உள்ள இந்த கார்ப்பரேட்மயமாக்கல் கொள்கைக்கு எதிரான வலுவான போராட்டத்தை, விவசாயிகளின் இயல்பான தோழன் என்ற முறையில் இடதுசாரிகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர்.

மொழிவழி மாநிலங்கள் 

அடுத்ததாக, சுதந்திர இந்தியாவில் மாநிலங்கள் மொழி வழியாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்கிற நியாயம் நிறைந்த கோரிக்கையையும் முன்னெ டுத்து, மக்கள் போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமை தாங்கியதும் குறிப்பி டத்தக்கது.  ‘விசாலாந்திரா’, ‘ஐக்கிய கேரளா’,  ‘சம்யுக்த மகாராஷ்டிரா’ போன்ற முழக்கங் களுடன் அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்ற வெகுமக்கள் போராட்டங்களுக்குத் தலை மையேற்றவர்களில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்த வர்களாய் இருந்ததில் வியப்பு ஏதுமில்லை.  இடதுசாரிகளும், இதர தலைவர்களும் இணைந்து நடத்திய போராட்டங்களின் பயனாக, மொழிவழி மாநிலங்கள் உருவாகி நாட்டின் ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்பட்டதும், அந்தந்தப் பகுதி மக்களின் பண்பாட்டு விழுமியங்கள் பாதுகாக்கப்பட்டு, தேசத்தின் பன்மைத்துவம் நிலைபெற்றதும் சுதந்திர இந்திய வரலாற்றின் குறிப்பிடத்தக்க நகர்வு ஆகும். இதன் மூலம் இந்தியாவின்  அரசியல் வரைபடம், அறிவியல் பூர்வமானதாகவும், ஜனநாயகத் தன்மை நிரம்பியதாகவும் அமைந்திடுவதற்கான சூழலும் ஏற்பட்டது. இருப்பினும், நாட்டின் சில பகுதிகளில், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில், ஆங்காங்கே நிலவும் அதிக அளவிலான அசமத்துவம் காரணமாக, ஒருசில இனக்குழுக்கள்  தரப்பிலிருந்து தனி மாநில கோரிக்கை முன் வைக்கப்படுகிறது. நாட்டிலுள்ள அனைத்து  மொழிவழி தேசிய இனங்களுக்கும் சம  வாய்ப்பு உறுதிப் படுத்தப்படுவதன் மூலமாகவே இத்தகைய பிரச்னைகளுக்கு உரிய  தீர்வினை எட்ட முடியும்.  பின்தங்கிய நிலையிலிருந்து அனைத்துப் பிரிவினரையும் முன்னேற்றமடையச் செய்யும் நோக்குடன் முறையான திட்டங்கள் தீட்டப்பட்டு, போதிய நிதி ஒதுக்கீடுகளுடன் அவை  செயல்படுத்தப்பட வேண்டும்.  இடதுசாரிக்  கட்சிகள் மட்டுமே குறுகிய நோக்கங்கள் எதுவுமின்றி, நேர்மறையான அணுகுமுறையுடன் இத்தகு பிரச்சனைகளில் உரிய தலையீடுகள் செய்து வருகின்றன.  அதன் வாயிலாக, பன்மைத்துவம் வாய்ந்த இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பலப்படுத்தும் முறையிலும் தங்களது பங்களிப்பைச் செலுத்தி வருகின்றன.

மதச்சார்பின்மை

மூன்றாவதாக இங்கே குறிப்பிட வேண்டியது, மதச்சார்பின்மைக் கோட்பாட்டின் மீது கம்யூனிஸ்டுகள் காட்டி வருகிற தீர்மானகரமான உறுதிப்பாடு ஆகும்.  பரந்துபட்ட இந்திய நாட்டின் பன்மைத்துவம்  நிறைந்த உண்மை நிலவரத்தை அங்கீகரிப்பது என்பதும் இதில் பின்னிப் பிணைந்துள்ளது.  கோடானுகோடி இந்திய மக்கள் திரளின் பல்வேறு மத நம்பிக்கைகளையும், பல்வகை பண்பாட்டுக் கூறுகளையும், மாறுபட்ட பழக்க வழக்கங்களையும் ஏற்றுக் கொண்டு மதிப்பளிப்பதன் வாயிலாகவே, மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இயலும்.  ‘வேற்றுமையில் ஒற்றுமை‘ என்னும் இந்த மகத்தான நெறிமுறைக்கு மாறாக, வகுப்புவாத சக்திகள் அண்மைக்காலமாக  மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருப்பது போல, நாடு முழுவதும் ஒரே கலாச்சாரத்தைப் புகுத்த முற்படுவது, தேச ஒற்றுமையைச் சீர்குலைத்து முற்றிலும் எதிர்  மறையான விளைவுகளையே ஏற்படுத்தும்.   1947-ன் தேசப்பிரிவினையையொட்டிய வன்முறை வெறியாட்டங்கள், பயங்கரமான படுகொலைகள் உள்ளிட்ட கசப்பான சம்பவங்களின் பின்னணியில், மதச்சார்பின்மை என்பது இந்திய நாட்டிலிருந்து  பிரிக்க முடியாத, மிகவும் அவசியமான தொரு அம்சமாக உருவெடுத்துவிட்டது. அன்றாட அரசியல் நிகழ்வுகளிலிருந்து மதத்தைப் பிரித்து வைத்தல் என்கிற தெளிவான புரிதலுடன் மதச்சார்பின்மைக் கோட்பாட்டை கம்யூனிஸ்டுகள் வரையறை செய்கிறார்கள்.  

தனி மனிதர்களின் மத சுதந்திரத்தையும், வழிபாட்டு உரிமையையும் பாதுகாத்திடும் தனது கடமைப்பொறுப்பை நிறைவேற்றுகிற அதே நேரத்தில், அரசாங்கமானது எந்தவொரு மதத்தையும் சார்ந்து நிற்பதையோ, உயர்த்திப் பிடிப்பதையோ செய்யாது என்பதே இதன் உள்ளார்ந்த உட்பொருள்.  ஆனால் இந்திய ஆளும் வர்க்கமோ, ‘மதச்சார்பின்மைக் கோட்பாடு‘ என்பதை, ‘எல்லா மதங்களையும் சமமாக நடத்துதல்‘ என்கிற அளவோடு அதன் வரையறையைச் சுருக்கிவிட்டது. அடுத்தடுத்து  வந்த ஆட்சியாளர்களோ, இதை மேலும்  நீர்த்துப் போகச் செய்து, பெரும்பான்மை மதத்தைச் சார்ந்தும், பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரும்பான்மையின் பக்கமாகச் சாய்ந்தும் செயல்படத்துவங்கினர்.  ஆட்சியாளர்களின் இத்தகைய போக்கு, ஒன்றாய் வாழும் மக்களிடையே பிரிவினைய உரு வாக்கும் வகுப்புவாத சக்திகளும், மத அடிப்படைவாத அமைப்புகளும் வேகமான வளர்ச்சி பெறுவதற்கு வெண்சாமரம் வீசு வது போல ஆகிவிட்டது. இந்துத்துவா வகுப்புவாத சக்திகள் மத்திய ஆட்சிப் பொறுப்பிலும் அமர்ந்து கொண்டு, தங்களுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலை மிக வேகமாகச் செயல்படுத்த முனைந்து வருகிற இன்றைய காலச் சூழலில், இடதுசாரிக் கட்சியினர் மட்டுமே மதச்சார்பின்மைக் கொள்கையின் மகத்து வத்தை முன்னிறுத்தி, அனைத்துத் தரப்பு மக்களின் விரிவான, உணர்வுபூர்வமான ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கு மிகவும் கடுமையான முறையில் பாடுபட்டு வருகின்றனர்.  அதோடு கூடவே, சிறு பான்மை மக்களின் பாதுகாப்பையும், தனித்துவ அடையாளத்தையும் உறுதிப்படுத்தி, அவர்கள் தங்களுடைய சொந்த நாட்டில், எவ்விதத் தயக்கமுமின்றி, சம  உரிமை கொண்ட குடிமக்களாக எப்போதும் வாழ்வதற்குரிய சூழலை நிலைநாட்டுவதற்கும் இடதுசாரி இயக்கத்தினர் செழுமையான முறையில் அரும் பணியாற்றி வருகின்றனர்.

இடதுசாரிகளைப் பொறுத்தமட்டிலும், கிராமப்புறங்கள் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பல்வேறு வகையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ள சாதாரண ஏழை மக்கள்; சாதிய மேலாதிக்கத்தின் படுமோசமான அடக்குமுறை மற்றும் கொடுமைகளில் சிக்கித் தவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள்; பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகின்ற மக்கள்; எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியர்கள் என்கிற அடையாளத்துடன் இமயம் முதல் குமரி எல்லை வரை வாழ்ந்து வருகிற வெகுமக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, அவர்கள் அனைவருக்கும் பொருளாதார சமத்துவமும், சமூக நீதியும் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்பதே எல்லா நேரங்களிலும் முதன்மை நோக்கமாக இருந்து வருகிறது. இதுவரையிலும் முழுமையாக ஈடேறாத இந்த இலட்சியத்தை எட்டும் வகையில் நிகழ்ச்சி நிரலை வகுத்துக் கொண்டு உறுதியுடன் பாடுபடுவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி இயக்கத்தின் இன்றைய பணியாகவும், இந்தியா என்னும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணமாகவும் உள்ளது.

(இந்திய சுதந்திரத்தின் பவள விழாவையொட்டி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆகஸ்ட் 6-7, 2022 தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில் ஆற்றிய கருத்துரை)

தமிழ் வடிவம்:  க.மன்னன்

Exit mobile version