-சாவித்திரி கண்ணன்
அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுவீச்சுகள்! கோவையில் பொதுக் கூட்டத்திற்கு தமிழக அரசின் தடையை மீறி பிரம்மாண்டமாக ஆர்பாட்டம் நடத்தியுள்ளது பா.ஜ.க! காவல்துறை வேடிக்கை பார்த்தது! அதே போல, ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரத்தில், திமுக அரசு கையறு நிலையில் உள்ளதா..? என்ற சந்தேகம் வலுக்கிறது!
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசும் ஒவ்வொரு பேச்சுமே பல பெட்ரோல் குண்டுக்கு சமமாக உள்ளது! தமிழ்கத்தில் கலவரச் சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஹெச்.ராஜாவோ, ”இன்னும் ஏன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் குண்டு வைத்தவர்களை கைது செய்யவில்லை” என மிரட்டுகிறார்!
பொதுவாக ஆர்.எஸ்.எஸ் எந்தெந்த இடங்களில் எல்லாம் பேரணி, அணிவகுப்பு போன்றவற்றை நடத்துகிறதோ..அந்தப் பகுதிகளில் சில நாட்களில் கலவரம், வன்முறை..ஆகியவை நடக்கின்றன என்ற அச்சம் பலருக்கும் இருக்கிறது! அப்படி சில இடங்களில் நடந்தும் இருக்கிறது! ஆனால், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்ததையடுத்து அடுத்தடுத்து இருபது இடங்களில் பெட்ரோல் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன!
‘இந்த பதட்ட சூழலில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவது சமூக அமைதிக்கு உகந்ததாக இருக்காது’ என்று கூட தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். ஆனால், இந்த நேரம் வரை ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் பேரணி நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து என்னவென்று தெரியவில்லை!
இந்தப் பேரணி மூலமாக தன்னுடைய கம்பீரத்தை, கட்டுக் கோப்பை, ஆள் பலத்தை சுமார் 50 இடங்களில் எடுத்துக் காட்டவுள்ளது! அவர்களின் அணிவகுப்பும், பேரணியும், இறுதியில் நடக்கும் கூட்டத்தில் பேசப்படும் பேச்சுகளும் நிச்சயம் தமிழகத்தில் குறிப்பிடதக்க தாக்கத்தை உருவாக்கவே செய்யும். வெகுஜன ஊடகங்கள் இதை நன்கு ‘கவரேஜ்’ செய்வார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. இதன் மூலம் தமிழக இளைஞர்களில் கணிசமானோர்க்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பால் ஒரு ஈர்ப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ஆர்.எஸ்.எஸ் ஒரு ரகசிய இயக்கம். அதில் உறுப்பினராக செயல்படுவர்களுக்கு அவர்கள் அடையாள அட்டையோ, அங்கீகாரத்திற்கான சான்றோ எதுவும் தருவதில்லை. இன்னும் சொல்வதென்றால், அவர்கள் உறுப்பினர் பதிவேடு கூட வைத்துக் கொள்ளமாட்டார்கள்! ஏதாவது நாசகாரச் செயல்களில் ஈடுபட்டு தங்கள் உறுப்பினராக அறியப்பட்டவர் மாட்டிக் கொண்டால், அவருக்கும் தங்கள் இயக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை என அறிவித்து விடுவார்கள்! காந்தியைக் கொன்ற கோட்சே விவகாரத்தில் இது தான் நடந்தது.
காந்தி கொலை செய்யப்பட்டது போலவே, காமராஜரையும் கொலை செய்ய ஆர்.எஸ்.எஸ் முயன்றது 1970ல்! அப்போது அவர் காங்கிரசின் அகில இந்திய தலைவராக இருந்தார். மாட்டு இறைச்சிக்கு எதிராக தடை சட்டம் தேவையில்லை என காமராஜர் கூறியதால் டெல்லியில் காமராஜர் தங்கி இருந்த வீட்டிற்குள் நுழைந்து ஆர்.எஸ்.எஸ்காரர்கள் சூறையாடினர்!
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வலுப் பெறாமல் போனதற்கு இந்த மண் காந்தியப் பற்றாளர்கள் நிறைந்த மண், வள்ளலார் வாழ்ந்த மண், சமூக நீதி பேசிய பெரியார் களமாடிய மண், பொதுவுடமை சித்தாந்தம் தழைத்தோங்கிய மண் என்பதே காரணமாகும்!
துர்அதிர்ஷ்டவசமாக ஜெயலலிதா மறைந்தவுடன் ஒ.பி.எஸ் முதல்வரானவுடன் அடுத்த மாதமே ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதிக்கப்பட்டது. அந்த வகையில் ஜனவரி 19, 2017 சென்னையில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடந்தது.
அதற்கு அடுத்து இ.பி.எஸ் முதல்வரானவுடன் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 28ல் அதிரடியாக தமிழகத்தில் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடத்தப்பட்டது. இதில் ஹெச்.ராஜா, திரைப்பட இயக்குனர் விசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதாவது, தமிழகத்திற்கு வலுவான தலைமை இல்லாத சூழலைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் உள்ளே நுழைந்தது. அதிமுக இவ்விதம் ஒரு அடிமை ஆட்சியாக இருந்தது என்பதாலேயே நாம் திமுகவை ஆட்சியில் அமரவைத்தோம். ஆனால், திமுக அரசின் செயல்பாடுகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு எதிராக நீதிமன்றத்தில் திமுக அரசு வலுவான வாதம் வைக்கவில்லை. அதுவுமின்றி, உயர் நீதிமன்றம் அனுமதி தந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வதற்கும் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ”தமிழக அரசு இந்த அனுமதியை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும்” என வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் சீமான், ஜவாஹிருல்லா போன்றவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோரிக்கைக்கு முதல்வர் தரப்பில் பதிலே இல்லை. திருமாவளவன் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில் மனுநீதி சாஸ்திரத்தை எதிர்த்து வீரமாக பேசிய ஆ.ராசா போன்ற திராவிட இயக்க பற்றாளர்கள் இது தொடர்பாக கட்சித் தலைமைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும். ஆனால், ஏன் மெளனம் சாதிக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியவர் நீதிபதி இளந்திரையன் என்பது கவனிக்கதக்கது. இவர் தான் கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் ஜாமீன் கேட்ட போது அவர்களுக்கு ஜாமீன் தந்ததோடு, நற்சான்றிதழ் வழங்கியவர் என்பது நினைவு கூறத்தக்கது.
தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிப்புகள் நடந்துள்ள நிலையில், பாரபட்சமில்லாமல் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. ”கடந்த காலங்களில் இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்களே தங்களை பிரபலபடுத்திக் கொள்ளவும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பை கோரவும் இது போன்ற சம்பவங்களை தாங்களே நிகழ்த்திக் கொண்டதையும் தமிழ்நாடு பார்த்துள்ளது! அந்த வகையில் தற்போது நடந்திருக்க வாய்ப்புள்ளதா? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடைபெற வேண்டும். எடுத்த எடுப்பில் முஸ்லீம்களை குற்றவாளியாக்கும் மைண்ட்செட்டோடு வேலை செய்யக் கூடாது” என பலரும் கூறியுள்ளனர்.
ஆனால், நம்முடைய கவலை எல்லாம் ஒரு வேளை இந்துத்துவ இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான் இந்த பெட்ரோல் குண்டுவீச்சில் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறை அறிய வந்தாலும், அதை வெளிப்படுத்தும் துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா? என்பது தான்! ஏனென்றால், கனியாமூர் சக்தி பள்ளி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகளை நன்கு தெரிந்திருந்தும் இன்று வரை அவர்கள் மீது சரியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதை நினைக்கும் போது கவலையாக உள்ளது.
‘நல்லதே நடக்க வேண்டும், உண்மை குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நோக்கங்கள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என நம்பி காத்திருப்பது’ ஒன்று தான் நம் முன் இருக்கும் ஒரே வழி!