Site icon சக்கரம்

எதிரிகளை நேசிக்க கற்றுத் தந்தார் காந்தி!

-சு.சரவணன்

சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசமற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார் காந்தியடிகள்! அவர் வாழ்க்கையே நமக்கான செய்தி தான்! அந்த வகையில் பல்வேறு சம்பவங்களில் அவர் எவ்வாறு நடந்து கொண்டார், பகைவர்களை வென்றெடுத்தார் என்பது இன்றைக்கும் நமது சமூக, அரசியல் வாழ்வுக்கான பாடமாகும்!

மனிதர்கள் சமய நம்பிக்கை, பேசும் மொழி, சார்ந்திருக்கும் இனம், ஏற்றுக் கொண்ட அரசியல் சித்தாந்தங்கள், சமூக பழக்கவழக்கங்கள், தேசம்  கலாச்சாரம், போன்றவற்றின் அடிப்படையில் தனித்தும் குழுக்களாகவும், பிரிந்து கிடக்கிறார்கள். மேற் சொன்னவற்றில் தன்னுடையது சிறந்தது என்று எண்ணும் வரை கூட பிரச்சினை இல்லை, ஆனால், தன்னுடையது மட்டுமே சிறந்தது மற்றதெல்லாம் தாழ்ந்தவை, அதனால் மற்றவர்களை விட தாங்களே உயர்ந்தவர்கள் என்று எண்ணும் போதுதான் வன்முறைக்கான வித்து விதைக்கப் படுகிறது.

நம்மிடையே வேறுபாடுகள் என்பது தவிர்க்க முடியாது, ஆனால் அதனால் விளையும் சச்சரவுகள் தவிர்க்கக் கூடியவை! அவ்வாறு, மனிதர்கள் தங்கள் வேறுபாடுகளுக்கு இடையேயும் ஒற்றுமையாக வாழ்வதற்கான வழிமுறைகளை சொன்னவர் தான் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள். சிறிய சூத்திரங்களை கொண்டு பெரிய விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள்வது போல “என் வாழ்வே என் செய்தி” என்று சொன்ன காந்தியடிகளின் ஒற்றை சொல்லின் வழியே அவரது வாழ்க்கையை விரித்துப் பார்த்து நம்மிடையே நிலவும் வேற்றுமைகளை கடந்து ஒருவரை ஒருவர் நேசிக்கும் உன்னத வழிமுறையை நாம் கண்டடையலாம்.

அண்ணல் காந்தியடிகளின் முழு வாழ்க்கையுமே அத்தகைய உதாரண வாழ்க்கைதான்.

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞர் தொழில் செய்ய சென்ற காந்தியடிகள்; தன் இளமைக்கால வாழ்வின் பெரும் பகுதியை அதாவது 21 ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார்.சாதாரண வழக்கறிஞராக இந்தியாவில் இருந்து அங்கு சென்ற அவரது வாழ்வின் மிக முக்கிய நிகழ்வுகள் அங்கு தான் நடந்தேறின.

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளின் நண்பரான கிறித்துவப் பாதிரியார் ஜோசப் ஜெ. டோக் எழுதிய “Gandhi: A Patriot in South Africa” என்ற நூலில் காந்தியடிகளுடன் இணைந்து போராடிய தமிழரான தம்பி நாயுடு சிறையில் இருந்த போது, அவரது மனைவி உடல் நலமின்றி அவதிப்பட்டார். காந்தியடிகள் தம்பிநாயுடு இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய நெகிழ்வான காட்சியை பின்வருமாறு விவரிக்கிறார்:

“தம்பிநாயுடு மூன்றாவது முறையாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தார். அவருடைய நோய் வாய்ப்பட்ட மனைவிக்கு ஆறுதல் கூற காந்தி விரும்பினார். எங்களுடன் மௌல்வியும், இமாமும், மற்றும் ஒரு யூத நண்பரும் வந்தனர். அவரது இல்லத்தில் அந்த அம்மையாருக்கு ஆறுதல் கூற கூடியிருந்தவர்கள் இரண்டு முகம்மதியர்கள், ஒரு இந்து, ஒரு யூதர், ஒரு கிறித்துவர் முதலானோர். ஒரு இந்துப் பெண்மணிக்கு ஆறுதல் கூற வந்தவர்களின் விசித்திரமான கூட்டம். அவரது மூத்தமகன் அருகில் இருந்தான்;

அந்த அம்மையாரின் கண்களிலிருந்து கண்ணீர் சொறிந்தது. நிறைமாதக் கர்ப்பினியாக வேறு அந்த அம்மையார் இருந்தார். நாங்கள் பிரார்த்தனையைத் தொடங்கினோம். முதலில் மௌல்வி உருது மொழியில் ஓதினார். பிறகு நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் வழியில் பிரார்த்தனை செய்து ஆறுதல் கூறினோம். இதுதான் இனம், மதம், நிறம் ஆகியவற்றை எல்லாம் கடந்த தெய்வீக அன்பின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். இதுதான் காந்தியின் லட்சியக்கனவு..”

மதங்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்த சர்வ சமயப் பிரார்த்தனை உள்ளிட்ட எத்தனையோ நிகழ்ச்சிகள் உலகெங்கும் அவ்வப்போது நிகழ்வதை நாம் காண்கிறோம். அதெற்கெல்லாம் முதல் வித்தாக காந்தியின் வாழ்வில் நடந்த இச்சம்பவமே இருந்திருக்கிறது! மனிதர்களைப் பிரிக்கும் விஷயங்களான மதம், மொழி, இனம், தேசம் என அனைத்து தடைகளையும் கடந்து ஒரு ஆரோக்கியமான கூட்டு வாழ்க்கையை நம் இல்லத்தில் இருந்தே தொடங்கலாம் என்பதை காந்தி நடைமுறைப்படுத்தி உள்ளார்.

110-வருடங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் வாழும் போது ஜான் ரஸ்கினின் “கடையேனுக்கும் கடைத்தேற்றம்” என்ற நூலை வாசித்திருக்கிறார். அந்நூலிலிருந்து “எல்லோருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது” என்ற உயரிய கருத்தையும் உள்வாங்கியிருக்கிறார். பின்னர், அதன் தாக்கத்தினால்  உந்தப்பட்டு “போனிக்ஸ்” மற்றும் “டால்ஸ்டாய்” என்ற இரு கூட்டுப் பண்ணைகளை உண்டாக்கி, அதில் தன் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமன்றி தமிழர்கள் உட்பட இந்தியாவின் பலதரப்பட்ட மக்கள்,  ஐரோப்பியர்கள் என பல்வேறு இன மக்கள் அனைவரும் பரஸ்பர அன்புடன் ஒன்றிணைந்து கூட்டாக உழைத்து வாழும் முறையான commune life-ஐ வாழ்ந்து காட்டினார். அவர் தென்னாப்பிரிக்காவிலிருந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய பின்னர் அந்த கூட்டு வாழ்க்கை முறையே சபர்மதியிலும், வார்தாவிலும் ஆசிரம வாழ்க்கையாக இறுதி வரை தொடந்தது.

இன்றைய தேதியில் மனிதர்களை அதிகம் பிளவு படுத்தும் ஒன்றாக மத நம்பிக்கையே உள்ளது.மதம் என்பது பல கிளைகளைக் கொண்ட ஒரு மரமாகும். கிளைகள் என்ற முறையில் பல மதங்கள் இருக்கலாம், ஆனால் மரமாக இருக்கும் மதமோ என்றுமே ஒன்று தான் என்பார் காந்தியடிகள்.

சமய உறவுகளில் ‘சகிப்புத் தன்மை’ என்கிற சொல் காந்தியடிகளுக்குப் பிடித்ததல்ல.‘சமரசம்’ என்கிற சொல்லிலும் ஒருவரின் மதத்தை விட மற்றவரின் மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்துவிடுகிறது. மாறாக நமது சமயத்தின் பால் நமக்குள்ள நன்மதிப்பை மற்ற மதங்களின் மீதும் காட்ட வேண்டும் என்கிறார் காந்தியடிகள்.

இந்த நோக்கில் நம் சமயத்திலுள்ள குறைபாடுகளையும் நாம் ஏற்க வேண்டும். எல்லா மதங்களும் சமமானவை என ஏற்பது சமயங்களுக்கிடையே வித்தியாசங்களை நீக்குவது அல்ல என்கிறார் காந்தி! மற்றவர்களுடைய வித்தியாசங்களையும், கலாச்சாரங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்று அவர்களோடு சமமாக வாழ்வதும், மத விஷயங்களிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்வதும் தான் காந்தி முன் வைத்த மதச்சார்பின்மை! காந்தி வரையறுத்த தேசியத்தில் இந்தியா என்பது இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், மற்றும் பல மொழியினர், சாதியினர் என எல்லோரும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சம உரிமைகளுடன் வாழ உரிமை பெற்றிருப்பர்.

அவரைப் பொறுத்த வரை, உலகின் மதங்கள் அனைத்தும் எப்படி சம அளவில் புனிதமோ, அதே அளவில் அவை அனைத்தும் பூரண உண்மையைக்  கண்டடைவதில் தங்களளவில் குறைபாடுடையனவே என்று நம்பினார். ஏனெனில், அனைத்து மார்க்கங்களும் அவற்றின் நூல்களும், மனிதன் ஆக்கியவையே என்றும், மனிதன் தன்னுடைய வரையறுக்கப்பட்ட புலன் அறிவின் பலத்தைக் கொண்டு, குறைபாடுடைய உண்மையையே கண்டறிய முடியும் என்று பூரணமாக நம்பினார்.

இதே அளவு கோல் உலகின் அனைத்து விஷயங்களுக்கும் பொருந்தும் என்கிறார் காந்தியடிகள்.எனவே, மனிதன் தான் கண்டறிந்த அரைகுறை உண்மைகளுக்காக, தத்துவங்களுக்காக, அரசியல் சித்தாந்தங்களுக்காக வன்முறையில் ஈடுபடுவதை அவர் அறவே தவிர்தார். மேலும், இந்து மதத்தின் உயரிய தத்துவமான அகம் பிரம்மாஸ்மி – அதாவது – நான் இறைவனாக இருக்கிறேன் என்ற வாக்கியத்தின் படி இறைவன் அனைத்து ஜீவ ராசிகளின் உள்ளிருப்பார் எனில் சக மனிதனின் மீது எப்படி வன்முறையை பிரயோகிக்க முடியும் என்றார். இந்தக் காரணங்களுக்காக அஹிம்சையை வாழ்வியல் வழிமுறையாகவே கொண்டிருந்தார்.

அவர் ஒரு ஆழ்ந்த இறைநம்பிக்கையாளர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் இறைவன் உண்மை என்பதற்குப் பதிலாக உண்மையே இறைவன் என்று அவர் அறிவித்தார். உண்மை தான் இறைவனுக்கான சரியான பெயர் என்றும் கூறி வந்தார். அதனடிப்படையில், உண்மை என்னும் ஒற்றை இலக்கை அடைவதையே தன் வாழ்வின் இலட்சியமாக கொண்டு, அதை அடைவதற்காக அஹிம்சையை தேர்ந்தெடுத்தார்.

காந்தியடிகள் தன் தரப்பிலும், குறைவிற்கு இடமிருக்கலாம் என்று நம்பினார், அதனை தன்னோடு மாற்றுக் கருத்துடையோருடன் நடத்தும் உரையாடல் மூலம் சரி செய்து கொள்ள முயன்றார். அவரைப் பொறுத்த வரை எதிரி என்பவர், எதிரியே அல்ல, தன்னுடைய கருத்தில் மாற்றுக் கருத்துடைய நண்பர் ஆவார். காந்தியடிகளின் இந்த அணுகுமுறைதான் உலகிற்கான அற்புதக் கொடை என்றே சொல்லலாம்.

ஆயுதத்துடன் இருக்கும் எதிரியை ஆயுதமின்றி ஆன்ம பலம் ஒன்றையே கவசமாகக் கொண்டு வெல்ல முடியும் என்ற அஹிம்சையான செயலுக்கு அவரது வாழ்க்கையிலேயே பல உதாரணங்கள் இருந்தன.திருமதி.மிலி கிரகாம் போலக்கின் நேரில் கண்ட சம்பவமே இதற்கு சான்று!

ஜோஹென்னஸ்பர்கில் நடந்த மிகப்பெரிய கூட்டமொன்றில் உரையாற்றிவிட்டு காந்தி வெளியே வந்திருக்கிறார். சந்தேகத்திற்குரிய விதத்தில் நின்றிருந்த நபர் ஒருவரிடம் காந்தி தானாகவே சென்று பேசுகிறார். அவரை தனியே அழைத்துச் சென்று உரையாடுகிறார், பின்னர் அந்த நபர் தான் மறைவாக வைத்திருந்த ஒரு பொருளை எடுத்து காந்தியடிகளின் கையில் கொடுத்து விட்டு சென்று விடுகிறார். இதையெல்லாம் தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த திருமதி.போலக் அவர்கள் மிகுந்த அச்சம் கொள்கிறார். பின்னர் திரும்பி வந்த காந்தியடிகள் அந்த மர்ம நபர் தன்னைக் கொல்ல வந்தவர் என்றும், தன் உயிரைப் பறிக்க வந்த அவர் தான் கொண்டு வந்த கத்தியை தன்னிடமே கொடுத்துவிட்டு சென்றுவிட்டார் என்றும் சொல்கிறார். இதைக் கேட்ட திருமதி. போலக் அவர்கள் அந்த மர்ம நபரை போலிசிடம் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிய போது “தேவையில்லை, அப்படி செய்திருந்தால் நான் அவரை எதிரி ஆக்கி இருப்பேன், இப்போது அவர் எனக்கு மற்றுமொரு நண்பர்”,என்றார்

“நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேசவழி”, “நம் எதிர்த் தரப்பினரின் பார்வையை நம் பார்வையாகக் கொண்டால் தான், அவர்களுக்கு நம்மால் முழுமையாக நீதி வழங்க முடியும். இதற்கு விருப்பு வெறுப்பற்ற மனநிலை தேவைப்படுகிறது. அந்த மனநிலையை அடைவது எளிதல்ல. ஆனாலும், ஒரு சத்தியாகிரகிக்கு இந்தமனநிலை ஒரு அடிப்படைத் தேவையாக இருக்க வேண்டும்”, என்கிறார் காந்தி.

வழக்கறிஞரான காந்தி இந்திய வம்சாவழியான அப்துல்லா சேத்தின் வியாபாரம் தொடர்பான வழக்கில் அவருக்கு உதவுவதற்காகவே தென்னாப்பிரிக்கா செல்கிறார். தாதா அப்துல்லா சேத்திற்கும் அவரது உறவினரான தயாப்சேத்திற்கும் இடையேயான வர்த்தகத்தில் ஏற்பட்ட பண விவகாரம் தொடர்பான வழக்கிற்காக இரு தரப்பினரிடமும் பேசுகிறார். இந்த வழக்கு இரு சாராருக்குமே எவ்வளவு இழப்பை உருவாக்கும் என்று விளக்குகிறார். ஒவ்வொருவரும் சற்றேவிட்டுக் கொடுத்தால் வழக்கை எப்படி எளிதாக முடித்துக் கொள்ளலாம் என்று புரியவைக்கிறார். இரு தரப்பினருமே சமரசத்திற்கு ஒப்புக் கொண்டு, வழக்கினை நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகமாக தீர்த்துக் கொள்கிறார்கள். இதன் விளைவாக இரு தரப்பினரும் நிரந்தர நண்பர்களாகிறார்கள். இந்த வழிமுறைதான் அவர் நடத்திய வழக்குகள் மட்டுமல்ல அவர் நடத்திய பல போராட்டங்களிலும் இருந்தது.

காந்தியின் அரசியல் இப்படித்தான் அமைந்திருந்தது. ஒற்றுமை மூலம், பரஸ்பர அன்பின் மூலம், நம்மை நாம் மேம்படுத்திக் கொண்டு எதிர்தரப்பினருடன் பல்வேறு அஹிம்சை அடிப்படையிலான சத்தியாகிரகத்தின் வழியே தொடர்ச்சியான பேச்சுவார்த்தை நிகழ்த்துவதையே அவர் போராட்டம் என்று சொன்னார்.

அகமதாபாத் மில் தொழிலாளர்கள் கூலி உயர்வுக்காக நடத்திய போராட்டம் மிக முக்கியமான ஒன்று. தொழிலாளர்கள்  கூலி உயர்வு தொடர்பாக மில் நிர்வாகத்தினருடன் தொழிலாளர்கள் தரப்பிலிருந்து காந்தியடிகள் நடத்திய பேச்சுவார்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு சொன்னார் .மேலும், அவ்வேலை நிறுத்தத்தின் போது தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளை காந்தியடிகள் வகுத்துத் தந்தார். அந்நெறிமுறைகளில் குறிப்பிடத்தக்கது “கட்டுப்பாட்டை மீறி வேலைக்கு செல்பவர்களை தொந்தரவு செய்யக் கூடாது” என்பது தான். அதாவது, நம்மைச் சேர்ந்தவர்களே நம்மோடு ஒத்துழைக்க மறுக்கும் போது அதற்கான சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்பது தான் அது.

ஆந்திராவைச் சேர்ந்த தீவிர நாத்திகரான கோரா என்கிற கோபராஜு ராமச்சந்திர ராவ் இறை நம்பிக்கையாளரான காந்தியடிகளுடன்  ஆத்திகம் மற்றும் நாத்திகம் குறித்து உரையாட வந்தார். அந்த உரையாடலின் இறுதி வரை இருவரும் தங்கள் கருத்திலிருந்து இறங்கவில்லை.

இறுதியாக காந்தியடிகள், கோராவிடம் “கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைப் பற்றிய விவாதமெல்லாம் இருக்கட்டும். நீங்கள் என்ன பணி செய்துகொண்டிருக்கிறீர்கள் அதைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்க,

”தாழ்த்தப்பட்டவர்களுக்கான முன்னேற்றத்தில் என் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறேன்” என கோரா  சொன்னவுடன், காந்தியடிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடனே அவரிடம் அது குறித்து தீவிர உரையாடலில் இறங்கிவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து இரண்டு விஷயங்களை நாம் அறியலாம்; ஒன்று காந்தியடிகளுக்கு ஒருவர் என்ன கருத்தை கொண்டிருக்கிறார் என்பதைவிட அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதே முக்கியம். மற்றொன்று, கருத்து மாறுபட்டவருடன் உடன்படுவதற்கான புள்ளியைக் கண்டடைவதில் அவருக்குள்ள அக்கறையும், ஈடுபாடும் ஆகும்.

இப்படி காந்தியடிகளின் வாழ்வின் வழியே பல உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அவர் வாழ்க்கையே நமக்கான செய்தி தானே!

(மகாத்மா காந்தியின் 153வது பிறந்த நாள் இன்று)

Exit mobile version