Site icon சக்கரம்

காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு: இந்துத்துவத்தின் இரட்டை வேடத்தைப் புரிந்துகொள்வது எப்படி?

-ராஜன் குறை

சென்ற வாரம் செய்திகளில் பெரிதும் அடிபட்டது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தமிழகத்தில் நடத்த விரும்பிய அணிவகுப்புகளும், அதற்கு தமிழ்நாடு அரசு விதித்த தடையும்தான். குறிப்பாக காந்தி பிறந்த நாளில் அவர்கள் அணிவகுப்பு நடத்த கோரியது பரவலாக சர்ச்சையை உருவாக்கியது.

அதற்கு விளக்கமளித்த சிலர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விஜய தசமி அன்று உருவாக்கப்பட்டது; அதையொட்டிய ஞாயிற்றுக்கிழமை என்பதால் அக்டோபர் இரண்டாம் தேதியைத் தேர்ந்தெடுத்தோமே தவிர, காந்தி பிறந்த நாள் என்பதால் அல்ல என்று கூறினார்கள்.

தமிழிசை செளந்திரராஜனோ “காந்தி தேசிய தலைவர், ஆர்.எஸ்.எஸ் தேசிய இயக்கம். காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதில் என்ன தவறு?” என்று கேட்டார். அவர் ஆளுநராக உள்ள புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் பிரதேசத்தில் நேற்று (ஒக்ரோபர் 2) ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்தியுள்ளது.

தற்செயலாக கேட்கப்பட்ட கேள்வி என்று எடுத்துக்கொண்டால் கூட ஆர்.எஸ்.எஸ் எழுபதாண்டுகளுக்கும் மேலாக போட்டுவரும் இரட்டை வேடத்தையே இந்த கேள்வி சுட்டுகிறது.

காந்தீயம் என்ற கருத்தியலை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொள்கிறதா? இந்துத்துவம் என்ற கருத்தியலை ஏற்றுக்கொள்கிறதா? இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன? எந்த அளவு கருத்தியல் முரண்பாடுகள் கூர்மையாக இருந்தால் இந்துத்துவ சித்தாந்தவாதியான நாதுராம் கோட்சே எழுபத்தெட்டு வயதான காந்தியைச் சுட்டுக் கொல்வார்? அந்த சித்தாந்த தொடர்பின் காரணமாகத்தானே காந்தி கொலையுண்டவுடன் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது?

ஒன்றை நாம் வாதத்துக்கு ஏற்றுக்கொள்ளலாம். காந்திக்கு இந்திய மக்களிடையே பேராதரவு இருந்தது. அவர் உண்மையிலேயே ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.

மக்கள் அவரையே நடமாடும் தெய்வமாக நினைத்தார்கள். மகாத்மா என்று கூறி வழிபட்டார்கள். அந்த நேரத்தில் அவரை எதிர்த்து பிரச்சாரம் செய்வது என்பது ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கோ, இந்துத்துவ கருத்தியல் சார்ந்த ஜனசங்கம் என்ற அரசியல் கட்சிக்கோ சாத்தியம் கிடையாது.

அதனால் அவர்கள் காந்தியை நாங்கள் கொல்ல நினைக்கவில்லை என்று நிரூபிக்க அவருடனான கருத்தியல் முரணை வெளிப்படையாக பொதுவெளியில் பேசாமல் இருந்திருக்கலாம். அவர்களுடைய கருத்தியலான இந்துத்துவத்தை உருவாக்கிய சாவர்க்கர் போதிய சாட்சியங்கள் இல்லையென்று காந்தி கொலை சதி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால் சாவர்க்கருக்கு எதிரான சாட்சியங்கள் அரசு தரப்பால் சரிவர முன்வைக்கப்படவில்லை என்பதை சமீபத்தில் இரு ஆய்வாளர்கள் The Murderer, The Monarch and the Fakir: The New Investigation of Mahatma Gandhi’s Assassination (Harper Collins, Noida, 2021) என்ற நூலில் சான்றாதாரங்களுடன் விளக்கியுள்ளனர். காந்தி கொலைக்குப் பின்னாலிருந்த சதியை விசாரிக்க அரசு அறுபதுகளில் நியமித்த கபூர் கமிஷனும் இதைச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதனால் இந்துத்துவ கருத்தியலின் பிதாமகரான சாவர்க்கரின் அணுக்கத் தொண்டர் என்ற முறையில்தான் நாதுராம் கோட்சே காந்தியைக் கொன்றார் என்பதில் எந்த ஐயமும் கிடையாது. ஆனால், காந்தி கொலை ஏற்படுத்திய அனுதாப அலையில் இதை வெளிப்படையாக கூறிக்கொள்ள வாய்ப்பே இருக்கவில்லை. சாவர்க்கர் விடுதலையானால் போதும் என்ற அளவில்தான் நிலைமை இருந்தது.

அதனால் விடுதலையான சாவர்க்கரும் நேரடியாக எதுவும் காந்தீயத்தை எதிர்த்தெல்லாம் பொதுவெளியில் பிரச்சாரம் செய்யாமல், நேரடி அரசியலில் ஈடுபடாமல்  அமைதியாகவே பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்து 1966ஆம் ஆண்டு மரணமடைகிறார்.  

இதையெல்லாம் நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால், இன்றைக்கு இந்துத்துவ கருத்தியல் கொண்ட பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்கிறது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சி செய்கிறது. காந்தி உருவாக்கிய காங்கிரஸையே இந்தியாவில் காணாமல் போகச்செய்துவிடுவோம், ”காங்கிரஸ் முக்த் பாரத்” என்று சூளுரைக்கும் அளவு வலுவாக இருக்கிறார்கள்.

இப்போதும் கூட ஏன் அவர்கள் வெளிப்படையாகப் பேசுவதில்லை என்று புதிராக இருக்கிறது. நாங்கள் காந்தீயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கொலையில் எங்கள் இயக்கத்திற்கு பங்கில்லையென்றாலும், எங்கள் இந்துத்துவக் கருத்தியலை கொண்டவர்தான் காந்தியைக் கொன்றார்.

நாங்கள் கொலை செய்ததை ஏற்கவில்லை; ஆனால் அதற்கான காரணங்களை ஏற்கிறோம் என்று துணிவாகப் பேச மறுக்கிறார்கள்.

அதே சமயம் நேர்ப்பேச்சில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக என்னிடம் இந்துத்துவ ஆதரவாளர்கள் பலரும் காந்தியின் கொலை நிகழ்ந்ததற்கான காரணங்களை நியாயப்படுத்தித்தான் பேசியிருக்கிறார்கள். எப்படி காந்தி இந்துக்களின் நலன்களுக்கு எதிராக இருந்தார் என்று கூறியிருக்கிறார்கள். அவர் கொல்லப்பட்டது இந்தியாவைக் காப்பாற்றியது என்று கூட கூறியுள்ளார்கள்.

காந்தீயமும், இந்துத்துவமும் முற்றிலும் முரண்பட்ட கருத்தியல்கள் என்றால் எதற்காக காந்தி பிறந்த நாளில் ஊர்வலம் செல்ல வேண்டும்? எதனால் தமிழிசை செளந்திரராஜன் இரண்டுமே தேசியம்தான் என்று மழுப்ப வேண்டும்? காந்தி கொலைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்று கிளிப்பிள்ளைகள் போல சொல்வதற்கு பதிலாக, கருத்தியல் முரண்பாடு உண்டு என்று வெளிப்படையாக எடுத்துக் கூறலாமே?

மாபெரும் முரண்பாடு: காந்தீயமும், இந்துத்துவமும்….

சாவர்க்கரை குறித்து சமீபத்தில் மிகச் சிறந்த ஆய்வு நூல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்ற ஆண்டு வெளியான விக்ரம் சம்பத் என்ற பத்திரிகையாளர் எழுதிய சாவர்க்கர் வாழ்க்கை வரலாறு போல பொதுவெளியில் ஏன் இந்த நூல் கவனத்தை பெறாது என்பதை புரிந்துகொள்வது கடினமல்ல.

ஏனெனில் இது சாவர்க்கரின் கருத்தியலை, அது உருவான விதத்தை விரிவாக ஆராயும் நூல். விநாயக் சதுர்வேதி என்ற கலிஃபோர்னியா இர்வைன் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் எழுதியது. Hindutva and Violence: V.D.Savarkar and the Politics of History (Permanent Black, Ranikhet in association with Ashoka University, 2022) என்பது அதன் பெயர்.

அந்த நூலில் சதுர்வேதி 1909ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற விஜயதசமி கொண்டாட்டத்தில் காந்தியும், சாவர்க்கரும் பங்கேற்றதை விரிவாக விவரிக்கிறார். அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட ஒரே நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கக் கூடும். வெளிப்படையாக அரசியல் பேச முடியாத நிலையிலும் இதிகாச, புராணக் கதைகளை முன்வைத்து பேசுகிறார்கள்.

அன்றைய தினம் காந்தி சாவர்க்கரின் போக்குடன் தான் முரண்படுவதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறார். வன்முறை பாதை என்பது மிகவும் தவறானது என்று கூறுகிறார். பத்து தலை ராவணன் தீமையின் உருவகம் என்றால் அது நமக்குள்ளே இருப்பது; நம் மனதை தூய்மைப்படுத்துவதே முக்கியமானது, புறவுலகில் வன்முறையில் ஈடுபடுவது அல்ல என்று கூறுகிறார்.

அவரை கடுமையாக மறுத்துப் பேசிய சாவர்க்கர், ராமன் இலங்கைக்குப் படையெடுத்து சென்றது கற்புக்கரசி சீதையை மீட்பதற்கு என்று கூறி சீதை நம் இந்திய சுதந்திரத்தின் உருவகம் என்கிறார். வன்முறையின்றி அது சாத்தியமில்லை என்பதே சாவர்க்கரின் நிலைப்பாடு.

லண்டனிலிருந்து கிளம்பிய காந்தி கப்பலில் பயணம் செய்யும்போதுதான் தன் புகழ்பெற்ற “இந்து சுயராஜ்யம்” என்ற நூலை எழுதுகிறார். அதில் சாவர்க்கர் பெயர் குறிப்பிடாமல் அவரைப் போன்ற வன்முறை  நோக்குள்ளவர்களுக்கு பதில் கூறுகிறார். கண்டிக்கிறார்.  

உலகெங்கும் காந்தீயம் கொண்டாடப்படுவது அகிம்சை என்ற அதன் அடிப்படை கருத்தாக்கத்துக்காகத்தான். இந்துத்துவம் அகிம்சை இந்துக்களை காயடித்துவிடும். ஆண்மை நீக்கம் செய்துவிடும் என்று கூறுகிறது. சாவர்க்கர் இந்தக் கருத்திலிருந்து இறுதிவரை மாறவேயில்லை.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான வன்முறையில் தொடங்கிய போக்கு, அவர் சிறைவாசத்துக்குப் பிறகு இஸ்லாமியர்களை நோக்கி திரும்பியது. ஜெர்மனியில் யூதர்கள் வகிக்கும் பாத்திரத்தைத்தான் இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக் அமைப்பினர் வசிக்க வேண்டி வரும் என்று 1938ஆம் ஆண்டு அவர் பேசியதை விநாயக் சதுர்வேதி சுட்டிக்காட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து இந்து மகாசபா தலைவர் பாய் பரமானந்தர் அவரது உரையை இந்தியாவுக்கான மெயின் காம்ப் நூலாகவும், சாவர்க்கரை ஃபெரூர் என்றும் வர்ணித்ததையும் சதுர்வேதி பதிவு செய்கிறார்.  

இந்துத்துவம் என்பதுதான் என்ன?

சாவர்க்கர் எப்படி அவர் கருத்தியலை விளக்கினார் என்பதை பல ஆய்வாளர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர். அவர் என்ன கூறினார் என்றால் இந்தியா இந்துக்களின் தேசம். அரசு இந்து ராஷ்டிரம். இந்து என்பது யார் என்றால் இந்தியாவை தந்தை பூமியாகவும், தாய் பூமியாகவும், புனித பூமியாகவும் கொள்பவர் எவரோ அவரே இந்து.

இதன்படி ஒருவர் சீக்கியராக இருந்தாலும், சமணராக இருந்தாலும், பெளத்தராக இருந்தாலும்கூட அவர்கள் அரசியல் ரீதியாக இந்துவாக இருக்க முடியும். ஏனெனில் அவர்களது புனிதத் தலங்கள் இந்தியாவிற்குள் உள்ளன.  

யூதர்களும், கிறிஸ்துவர்களும்,.முஸ்லிம்களும் பிரச்சினைக்குரியவர்கள். யூதர்கள் எண்ணிக்கையில் மிக, மிகக் குறைவாக இருப்பதால் பிரச்சினையில்லை. கிறிஸ்துவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதுடன் பெருமளவில் இந்திய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டுவிட்டதால் ஓரளவு பரவாயில்லை; ஆனாலும்கூட அவர்கள் வாடிகனுக்கு கட்டுப்பட்டிருந்தால் பிரச்சினை.

முஸ்லிம்கள் மிகத் தீவிரமான பிரச்சினை. அவர்கள் இந்துக்களிடமிருந்து பெரிதும் மாறுபடுவதுடன், மெக்காவையே புனிதத்தலமாக கொள்பவர்கள். கணிசமான எண்ணிக்கையுள்ளவர்கள் வேறு.

அப்படியானால் என்ன செய்வது? இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே தேசமாக இருக்கவே முடியாது என்றால் தனித்தனி தேசமாகத்தானே மாற முடியும்? அதனால், சாவர்க்கர்தான் முதலில் தேச பிரிவினையை முன்மொழிந்தார் எனக் கருதப்படுகிறது.

விநாயக் சதுர்வேதி என்ன கூறுகிறார் என்றால் சாவர்க்கர் முஸ்லிம்கள் தனி தேசமாக இருக்கலாம், ஆனால் இந்து ராஷ்டிரத்துக்கு அதாவது இந்து அரசாட்சிக்குக் கட்டுப்பட்ட தேசமாக இருக்க வேண்டும் என்று கருதினார் என்று கூறுகிறார். அதாவது பழங்கால மன்னராட்சி சாம்ராஜ்யத்தில் கப்பம் கட்டும் சிற்றரசு போல இருக்க வேண்டும் என்று கருதினார் என்று யூகிக்கிறார்.

அதனால்தான் இந்துக்களின் பூர்வீக பூமியின் ஒரு பகுதியில் முஸ்லிம்களுக்கு இறையாண்மையுள்ள தனி தேசிய அரசாக பாகிஸ்தான் உருவானதை இந்துத்துவர்கள் ஏற்கவில்லை என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதிலிருந்துதான் அகண்ட பாரத முழக்கம் தோன்றுகிறது.

ஆண்மை நீக்கமே தெய்வீகம் என்ற காந்தி

எவ்வளவு முயன்றும் இரு தேசிய அரசுகளாகப் பிரிந்து விடுதலையடைவதை காந்தியால் தடுக்க முடியவில்லை. அதை ஒட்டி நடந்த கலவரங்களை, தீயாக பரவிய வன்முறையைத் தடுக்க அவர் கடும் பயணங்களை, முயற்சிகளை மேற்கொண்டார்.

அகிம்சை இந்துக்களை காயடித்துவிடும் என்று இந்துத்துவர்கள் ஆண்மையவாதம் பேசினார்கள். ஆர்.எஸ்.எஸ் ஆண்களுக்கு மட்டுமே ஷாகா என்ற பெயரில் உடற்பயிற்சியும், ஆயுதப் பயிற்சியும் வழங்கியது.  

அதற்கு நேர் எதிராக, ஆண்மையே வன்முறையின் ஊற்றுக்கண் என்று நினைத்த காந்தி தன் உடலில் ஆண் தன்மை நீங்கிவிட்டதா என்று ஆத்ம பரிசோதனை செய்துகொண்டார். ஆண்மை நீங்கி பாலிலியாக மாறுவதே தெய்வீக நிலை என்று கூறினார்; ஆங்கிலத்தில் God’s eunuch என்று பெயரிட்டார்.

காந்தி இறைவனை நம்பினார். இறையாண்மையை நம்பவில்லை. மக்கள் அனைத்து நிலைகளிலும் சுயாட்சி பெற்றவர்களாக இருப்பதே விடுதலை என்று நினைத்தார். கிராம அளவிலேயே சுயாட்சி நிலவ வேண்டும் என்று நினைத்தார்.

இந்துத்துவமோ வல்லரசை, இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்க விரும்பியது. உலகின் பிற வல்லரசுகளைப் போல, ராணுவ வலிமையும், பெருமுதலீட்டிய வளர்ச்சியும் பெற வேண்டும் என்று விரும்பியது.

காந்தி உற்பத்திக்குவிப்பு, நுகர்வுப் பெருக்கம் ஆகியவற்றை வெறுத்தார். தேவைகளைக் குறைத்துக்கொண்டு எளிய வாழ்க்கையை மேற்கொள்வதை வலியுறுத்தினார். இந்துத்துவம் மேற்கத்திய நாடுகளுடன்  நுகர்வுப் பெருக்கத்தில் போட்டியிடவே விரும்புகிறது.

காந்தி இறையுணர்வுள்ள அனைத்து மதத்தினரும் இணக்கமாக வாழ முடியும் என நம்பினார். இறையுணர்வை இருப்பின் தார்மீக அடித்தளமாகக் கருதினார். அதற்கு நேர் மாறாக இந்துத்துவம் இந்து மத அடையாளத்தை இறையாண்மையின் அடித்தளமாக கூறியதே தவிர, இறைமையை நோக்கிய வழிபாடாக, வாழ்க்கை நெறியாக நினைக்கவில்லை.

அதனால்தான் இன்றுவரை மக்களெல்லாம் முருகனுக்கு காவடி எடுத்துக்கொண்டு, அலகு குத்திக்கொண்டு சென்றால், இவர்கள் வேல் யாத்திரை என்று புதிதாக வேலை தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். ஏனெனில் பாமர மக்களின் பக்தியிலிருந்து வேறுபட்ட அரசியல் அடையாளமாகவே அவர்கள் இந்து அடையாளத்தை மாற்ற விரும்புகிறார்கள்.

இனியும் ஏன் இரட்டை வேடம் போடுகிறது இந்துத்துவம்?

எல்லா வகையிலும் காந்தீயத்திற்கு எதிரான இந்துத்துவம் ஏன் காந்தீய முகமூடி அணிய நினைக்கிறது? ஏன் காந்தியும் தேசியவாதி, நாங்களும் தேசியவாதி என்று பசப்புகிறது?

எவ்வளவு தீவிரமான முரண்பாடு இருந்தால் இந்து மகாசபாவில் பல பதவிகளை வகித்த, ஹிந்து ராஷ்டிரம் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்த, சாவர்க்கரின் நெருக்கமான தொண்டராக இருபத்தைந்து ஆண்டுகள் அவரைப் பின் தொடர்ந்த நாதுராம் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றிருப்பார்? கோட்சே தன் கருத்தியலை மறைக்கவில்லையே?

காந்தி கொலை ஒன்றும் தனிப்பட்ட இழப்பல்ல. இந்திய வரலாற்றையே திசை திருப்பிய நிகழ்வு எனலாம். அவர் கொல்லப்படாமல் மேலும் ஒரு பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் சுதந்திர இந்தியாவின் வரலாறு எப்படி அமைந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்த்தால் புரியும்.

இந்துத்துவத்தின் குண்டுகள் இந்தியாவின் ஆன்மாவைக் கொன்றன. அதை இந்துத்துவம் இனியும் மூடி மறைக்க முடியாது.

Exit mobile version