-சாவித்திரி கண்ணன்
குள்ளநரிக் கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு, அதில் வெல்லற்கரிய சிங்கம் போல தோற்றம் காட்டிய ஜெயலலிதாவை எப்படியெல்லாம் திட்டம் போட்டு தீர்வை நோக்கி நகர்த்தியுள்ளனர், அவரது கூட்டாளிகள்! அதிர வைக்கும் உண்மைகளை தோலுரித்து காட்டிய நேர்மையான நீதிபதி ஆறுமுகசாமிக்கு சல்யூட் !
மிக நேர்மையோடும், சமரசமின்றியும், உண்மைக்கான தேடுதலைக் கொண்டும் நீதிபதி ஆறுமுகசாமி செயல்பட்டார் என்பதை அவரது விசாரணை போக்கில் இருந்தே, அப்போதே நாம் யூகித்தோம்! இந்த உண்மை அவரது அறிக்கையில் ஒளி வீசுகிறது. அவரது நேர்மையான விசாரணை அணுகுமுறையை அதிமுக ஆட்சியாளர்களே விரும்பவில்லை. ஆகவே விசாரணை கமிஷன் அமைத்த ஆட்சியாளர்களே அவருக்கு ஒத்துழைப்பு தராமல் இழுத்தடித்ததின் விளைவாக ஆறுமாத அவகாசத்தில் முடிக்க திட்டமிட்ட ஆணையத்தின் வேலையை 60 மாதங்களுக்கு நீட்டிக்க வைத்து விட்டனர். ‘ஏதோ ஒரு கண் துடைப்புக்காக தாங்கள் அமைத்த விசாரணை ஆணையம் தங்களையே காவு கேட்கும்’ என அதிமுக ஆட்சியாளர்கள் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள்!
அனைவரையும் அஞ்சி நடுங்க வைக்கும் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெயலலிதா அதி மோசமாக அவரை சுற்றி இருந்தவர்களாலே மரணத்தை தழுவினார் என்ற உண்மையை உணரும் போது மெய் சிலிர்க்கிறது!
தாய், தகப்பன், கணவன், பிள்ளைகள்..போன்ற உற்ற உறவுகள் இல்லாத சூழலோடு, அவரோடு இருந்தவர்களின் நீண்ட நாளைய அதிகாரப் பசியும் சேர்ந்து கொண்ட நிலையில் தனிமைப்பட்டு விட்ட அவரை யாராலும் காப்பாற்ற முடியவில்லை.
ஜெயலலிதா நோய்வாய்ப்பட்டு வீழ்ந்த நிலையில் சசிகலாவின் அதிகாரத்தின் கீழ் தான் அன்றைய தமிழக அரசின் முழு அதிகாரமும் சென்றுவிட்டது! நீண்ட நெடுங்காலமாக ஜெயலலிதா பின்னணியில் இருந்து அமைச்சர்களையும், அதிகாரிகளையும் ஆட்டுவித்து பழக்கப்பட்டு இருந்த சசிகலா, நேரடியாக அதிகாரத்தை செலுத்தி பார்க்கும் தருணமாக அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட காலகட்டம் அமைந்து விட்டது. அனைவருக்குமே அதிகாரப் பசி இருந்த காரணத்தால் அவரோடு உடன்பட்டுவிட்டனர்!
சசிகலா சொல்லுக்கு கட்டுப்பட்டவர்களாக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர், அன்றைய பொறுப்பு முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை அனைவரும் இருந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகான நான்கு வருட ஆட்சி அதிகாரத் தலைமையை கைப்பற்றுவதில் சசிகலா செய்து வரும் சூழ்ச்சியை அறிய வந்த நிலையில், அந்த சூழலை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுத் தான் அப்போதே ஒ.பி.எஸ்சை கையில் எடுத்துக் கொண்டது பாஜக தலைமை! பாஜக வசம் ஒ.பி.எஸ் நகர்ந்து சென்றுவிட்டதை அறிந்து பதட்டமான நிலையில் தான் சசிகலா எடப்பாடி பழனிச்சாமியை கையில் எடுத்துக் கொண்டார். இந்தச் சூழலில் தான் கொடநாடு கொள்ளைக்கு இவர்கள் திட்டமிட்ட விவகாரத்தை கொடநாடு கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் போட்டு உடைத்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
ஜெயலலிதாவை யாரும் சந்திக்கவிடாதபடி தடுக்கும் அதிகாரத்தை சசிகலா தானே கையில் எடுத்துக் கொண்டார்! அமெரிக்க மருத்துவரின் ஆலோசனையை நிராகரித்து உள்ளார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை கொடுக்காமல் தடுத்துள்ளார்! அப்பல்லோ நிர்வாகத்தின் தவறான சிகிச்சைக்கு துணை போயுள்ளார். அப்பல்லோ நிர்வாகமும் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை வேண்டுமென்றே அகற்றி உள்ளது. ஆறுமுகச்சாமி ஆணைய விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமலும் போக்கு காட்டி உள்ளார் சசிகலா!
ஒ.பி.எஸ்சை பொறுத்த வரை ஒரு திறமையும் இல்லாத தன்னை முதல்வராக்கி அழகு பார்த்த ஜெயலலிதா படுக்கையில் வீழ்ந்ததும், ஜெயலலிதாவைவிட பவர்புல்லான மத்திய பாஜகவின் அதிகார மையத்திற்கு தன் விசுவாசத்தை மாற்றிக் கொண்டார். அப்பல்லோ மருத்துவமனைக்கு நாளும்,பொழுதும் சென்று வந்த அந்த காலகட்டத்தில் எல்லாம் வாய் மூடி மவுன சாட்சியாகத் தன் தலைவிக்கு இழைக்கபடும் அநீதியைப் பார்த்தும் தடுக்காமால் விட்டுவிட்டு தன் முதல்வர் பதவி பறிக்கப்படும் வரையில் அமைதி காத்து பிறகு தர்மயுத்தம் என்று பேசி ஜெயலலிதாவின் மரணத்தை கேள்விக்கு உட்படுத்தி அரசியல் ஆதாயம் அடைந்து கொண்டார்!
ஆறுமுகச் சாமி ஆணையம் ஒன்பது முறை சம்மன் அனுப்பியும் போகாதவராக போக்கு காட்டி வந்ததில் இருந்தே ஒ.பி.எஸ்சின் குற்றமுள்ள மனசு குறுகுறுத்து அவரை தடுத்துள்ளதை நாம் அறியலாம்! எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக் கூடிய உச்சபட்ச அதிகாரத்தில் இருந்த ஒ.பி.எஸ் ஆணையம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தெரியாது,தெரியாது என ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிய விதத்திலேயே இவர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் என ஆறூமுகச்சாமி அவர்கள் கண்டுபிடித்துள்ளார். அடுத்த முதல்வாரக அமர்வதற்கான தவிப்பிலும், தயாரிப்பிலும் தான் பன்னீர் இருந்துள்ளார் என்பதையும் ஆறுமுகச்சாமி ஆணையம் பட்டவர்த்தனமாக அறிவித்து உள்ளது! நல்லவனாகத் தோற்றம் காட்டி, நயவஞ்சகமாகவே வாழும் கலையில் உலகமகா வித்தகர் ஒ.பி.எஸ் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் இந்த அறிக்கையாகும்!
அன்றைய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மருத்துவராக இருந்தும், தன் தலைவிக்கு இழைக்கப்பட்ட மருத்துவ அநீதிக்கு துணை போயுள்ளார்! சுகாதாரத் துறை செயலாளரான ராதாகிருஷ்ணனும் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேர்ந்த அனைத்து மருத்துவ அத்துமீறல்களுக்கும் மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு துணை போயுள்ளார்! தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் பற்றி கேட்கவே வேண்டாம், தன் பதவி காலம் முழுமைக்கும் காசு பார்ப்பதில் தான் கண்ணும்,கருத்துமாக இருந்தார்! இவர்கள் அனைவருமே சேர்ந்து ஜெயலலிதாவின் மரணத்திற்கு துணை போனதோடு, அவரது மரணத்தையே ஒரு நாள் முழுக்க தள்ளிப் போட்டு அறிவித்துள்ளனர்!
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் அடங்கிய முக்கிய அம்சங்கள்:
- 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாகவே ஜெயலலிதாவுக்கு அதிக காய்ச்சல் இருந்துள்ளது. மருத்துவர் சிவக்குமார் பரிந்துரையின்படி பாராசிட்டமால் எடுத்துக் கொண்டுள்ளார். போயஸ் கார்டனில் மயங்கி விழுந்த ஜெயலலிதாவை தாங்கிப் பிடித்த சசிகலாவும், பணியாளர்களும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
- ஜெயலலிதாவுக்கு கட்டுப்பாடற்ற நீரழிவு நோய், மாறுபட்ட ரத்த அழுத்தம், தைராய்டு, உடல் பருமன், எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி போன்ற உபாதைகள் இருந்துள்ளன.
- 2016 செப்டம்பர் 27-ஆம் தேதி காவிரி நதிநீர்க் கூட்டம் நடைபெற்றபோது புகைப்படம் எடுக்க ஜெயலலிதா அனுமதித்த போதும், ராமலிங்கம் IAS அதனை தடுத்துள்ளார். அன்று இரவே ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 2016 அக்டோபார் 11-ம் தேதி அமெரிக்க மருத்துவர் ஸ்டூவார்ட் ரஸ்ஸலால் பரிந்துரைக்கப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை ஜெயலலிதாவுக்கு செய்யப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஆஞ்சியோகிராம் செய்வதற்கு அடிப்படைத் தேவையான ரத்தத்தில் கிரியேடினின் அளவு சரியாக இருந்தும், ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்ற காரணத்தை விளக்கவில்லை.ஆஞ்சியோவை ஒத்திவைக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீகே தொலைபேசியில் பரிந்துரைத்ததாகவும், மருத்துவர் பாபு ஆபிரகாம் முரண்பட்ட தகவலை ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த முடிவை மாற்றுவதற்கான உரிமை அமெரிக்கா மருத்துவரைத் தவிர, ஆர்.1-ன்னும் (சசிகலா ) பெற்று இருந்தார்.
- நெருக்கடியின் போது முடிவு எடுக்கும் திறன் பெற்றவர்கள், கார்டியோ அறுவை சிகிச்சையை தொடராமல் தவறு இழைத்து இருக்கலாம். இது அமெரிக்கா மருத்துவரின் கருத்துப்படி மறைந்த முதல்வரின் உயிரை காப்பாற்றும் விளைவை ஏற்படுத்தி இருக்கலாம்.
- சசிகலா வெளியேற்றப்பட்டு, 2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து அவர்கள் இருவருக்கும் இடையே சுமுக உறவு இல்லை. சசிகலாவைக் குற்றம்சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.
- ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் 5 ஆம் தேதி இரவு 11.30 என மருத்துவமனை அறிவித்தது. ஆனால் அவர் இறந்த நேரம் 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.50-க்குள் இருக்கும். 2016 டிசம்பர் 4 ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவை ஜெயலலிதாவின் மருமகன் ஜெ தீபக் அனுசரித்துள்ளார்.
- வி.கே.சசிகலா, சிவக்குமார், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து, அவர்கள் 4 பேரையும் விசாரணைக்கு உட்படுத்த உத்தரவிட வேண்டும்.
- மருத்துவர் பாபு ஆபிரகாம் ஆஞ்சியோ தொடர்பாகவும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகள் தொடர்பாகவும் முரண்பட்ட தகவலை பதிவு செய்திருப்பதால் அவர் விசாரிக்கப்பட வேண்டும்.
- அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாட்களில் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதை குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும்.
- ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும்.