–டி.வி.பரத்வாஜ்
உலகம் முழுவதும் பிரேசில் அதிபர் தேர்தலை இந்த முறை உற்று கவனித்தது. ஏன்? அமெரிக்காவுக்கு டிரம்ப், பிரேசிலுக்கு போல்சொனாரோ, இந்தியாவுக்கு மோடி என்று வரிசைப்படுத்தப்பட்ட உறுதியான வலதுசாரி தலைவர்களின் பட்டியலில் முக்கியமான ஒருவராகப் பார்க்கப்பட்டவரை சென்ற தேர்தலில் அதிபராகத் தேர்ந்தெடுத்திருந்தது பிரேசில். சென்ற ஐந்தாண்டுகளில் உள்நாட்டில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக போல்சொனாரோ திகழ்ந்தார். கூடவே சர்வதேச அளவில் பேசப்படும் தலைவராகவும் அவர் இருந்தார். அதேசமயம், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் மீது கடும் விமர்சனங்கள் இருந்தன. இந்தச் சூழலில்தான் மீண்டும் அதிபர் தேர்தலைச் சந்தித்தது பிரேசில். போல்சொனாரோ வீழ்த்தப்பட்டு லூலா அதிபர் ஆகியிருக்கிறார். அதேசமயம், லூலாவுக்கு இது நூலிழை வெற்றிதான். போல்சொனாரோ, லூலா ஆகியோரை அறிந்துகொள்வதுடன் பிரேசில் அரசியல் சூழலை அறிந்துகொள்ளவும் இந்தக் கட்டுரை வழிவகுக்கிறது.
மக்களுக்காகத் தொண்டாற்றும் தலைவர்களை மக்கள் என்றும் கைவிடுவதில்லை. பிரேசிலின் அதிபராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா (Luiz Inácio Lula da Silva) இதில் சமீபத்திய உதாரணம். லூலா ஏற்கெனவே 2003-2006 மற்றும் 2007-2011 ஆண்டுகளில் இரண்டு முறை அதிபராக இருந்திருக்கிறார். அந்த நாட்டு அரசமைப்புச் சட்டப்படி அதிபராக ஒருவர் இரண்டு முறைக்கு மேல் அடுத்தடுத்து பதவி வகிக்க முடியாது. இதில் அமெரிக்காவைப் பார்த்து பின்பற்றியிருக்கிறார்கள். அதன் விளைவு மக்கள் நலனில் அக்கறையுள்ள நல்ல தலைவரால் மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சிக்கு வர முடியவில்லை. பன்னிரெண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் வந்திருக்கிறார் லூலா. இந்தத் தேர்தலில் லூலா 50.90% வாக்குகளும் போல்சொனாரோ (Bolsonaro) 49.10% வாக்குகளும் பெற்றுள்ளனர்.
வியப்பூட்டும் லூலாவின் வாழ்க்கை
லூலாவின் கதையைக் கேட்டால் நாட்டின் தலைவர்களுக்கு இப்படிப்பட்ட ஆரம்ப வாழ்க்கைக்கூட இருந்திருக்குமா என்று வியக்கத் தோன்றும். மக்கள் இடையே ஆதரவைப் பெற்ற அவர், 10 வயது வரையில் எழுதவோ, படிக்கவோ தெரியாதவராகத்தான் இருந்தார். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு அந்தப் படிப்பையும் நிறுத்த வேண்டிய சூழல் வீட்டில் ஏற்பட்டது. எனவே உலோக ஆலையில் முழு நேரத் தொழிலாளியாக இளம் வயதிலேயே சேர்ந்துவிட்டார்.
பிறகு தொழிற்சங்க நடவடிக்கைகளில் காட்டிய தீவிரம் காரணமாக 1975இல் தொழிற்சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லூலூ. பிரேசிலை ராணுவம் ஆண்ட காலத்தில் நடந்த மிகப் பெரிய வேலைநிறுத்தத்துக்கு அவர் தலைமை தாங்கினார். தோழர்களுடன் சேர்ந்து தொழிலாளர் கட்சியை (பி.டி.) தொடங்கினார். அந்தக் கட்சி நாளடைவில் நாட்டின் மிகப் பெரிய அரசியல் இயக்கமாக மக்கள் இடையே வளர்ந்தது.
1986இல் பிரேசில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002இல் நாட்டின் அதிபர் ஆனார். 2010இல் அவர் அதிபர் பதவியை விட்டு விலகியபோது நாட்டு மக்களில் 90% பேர் அவரைச் சிறந்த தலைவர் என்றே மதிப்பிட்டிருந்தனர்.
புற்றுநோய் பாதிப்பு
அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் பிரேசிலுக்கு மட்டுமல்ல; லூலாவுக்கும் சோதனைக் காலம் ஆனது. தொண்டையில் ஏற்பட்ட புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டார். அவருக்கு அடுத்த அதிபரான தில்மா ரூசஃப் 2016இல் நாடாளுமன்றத் தீர்மானம் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அரசுத் துறை பெட்ரோலிய எண்ணெய் நிறுவனமான ‘பெட்ரோபிராஸ்’ ஊழல் வழக்கில் குற்றவாளியாக்கப்பட்டார் லூலா. அவர் மீது சட்ட விரோத பணப் பரிமாற்றச் சட்டத்தின்படியும் வழக்கு போடப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்டார். 2018 ஏப்ரல் முதல் 12 ஆண்டு காலச் சிறைவாசத்தை அனுபவிக்கத் தொடங்கினார் லூலா. ஆனால், மார்ச் 2021இல் பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்றம் லூலா மீதான தீர்ப்பை ரத்து செய்தது. தொடர்ந்து 580 நாள்கள் சிறையில் இருந்த லூலா மீண்டும் அரசியல் களத்துக்கு வந்தார்.
லூலா பதவியில் இருந்தபோது இந்தியாவுடன் பிரேசில் சுமுக உறவைக் கொண்டிருந்தது. 2004இல் இந்தியக் குடியரசு தின நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகவே லூலா கலந்துகொண்டார். அவர் அதிபராக இருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் பிரேசில் நாட்டுக்கு அரசு விருந்தினர்களாகச் சென்றுள்ளனர். ரஷ்ய நாட்டில் ‘பிரிக்’ (BRIC: Brazil, Russia, India, and China) அமைப்பின் முதலாவது மாநாடு 2009இல் நடந்தபோது பிரேசிலில் லூலா அதிபராகப் பதவி வகித்தார். அப்போது தென்னாப்பிரிக்கா (South Africa) ‘பிரிக்’ அணியில் சேரவில்லை.
போல்சொனாரோ தோற்றது ஏன்?
போல்சொனாரோவின் வலதுசாரிக் கொள்கை தொழிலதிபர்களுக்குச் சாதகமாக மட்டும் இருந்தது. நாட்டு மக்களுடைய நலனை மட்டுமல்ல; சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்பதைக்கூட அவர் பெரிதாக நினைக்கவில்லை. இருந்தும் செல்வாக்குள்ளவர்களின் ஆதரவும் வலதுசாரி கட்சிகளுக்குள்ள தொண்டர் பலமும் அவருக்கு வலுவாகவே தொடர்ந்தது. அதனால்தான் தேர்தல் முடிவு பரபரப்பானது. ‘கோவிட் 19’ பெருந்தொற்றின்போது நாட்டு மக்களைக் கிட்டத்தட்ட அவர் நட்டாற்றில் விட்டுவிட்டார்.
பிரேசில் மக்கள் வேலை, வருமானம் இழந்து திண்டாடினர். அதேசமயம் அமேசான் காடுகளில் மரங்களை வெட்டி காட்டை அழிக்கும் வேலையை ஒப்பந்ததாரர்கள் உதவியுடன் விரைவாக நடத்தினார். செயற்கைக்கோள் படங்கள் மூலம் காடழிப்பைப் பார்த்து சூழலாளர்கள் பதைபதைத்தனர். நாட்டின் வருமானத்தைப் பெருக்க வேறு வழியில்லை என்ற போல்சொனாரோ, காடுகளை வெட்டுவதால் மழைப் பொழிவு குறையாது என்றும் கூறினார்.
பிரேசிலின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்தது. மக்கள் உணவுக்குத் திண்டாடினர். அரசின் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவேன், தனியாரிடம் அனைத்தையும் ஒப்படைப்பேன், உங்களுடைய துயரங்கள் குறைந்துவிடும் என்றார் போல்சொனாரோ. ஆனால், லூலாவோ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் ஏழைகளுக்கு குடியிருக்க வீடு கட்டிக்கொடுத்தார், உணவு தானியங்கள் கிடைக்க வழி செய்தார்.
பிரேசிலில் மட்டுமல்ல; லத்தீன் அமெரிக்க அல்லது தென்னமெரிக்க நாடுகளில் இப்போது மக்கள் இடையே இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவு தருவது தொடர்கிறது. 2018இல் மெக்ஸிகோ நாட்டில் ஆந்த்ரேஸ் மேனுவல் லோபஸ் ஓப்ராடோ அதிபரானார். அடுத்து, ஆர்ஜென்டீனாவில் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் அதிபரானார். பிறகு சிலே நாட்டில் காப்ரியேல் போரிச் வெற்றி பெற்றார். பெருவில் பெத்ரோ காஸ்டீலியோ, கொலம்பியாவில் குஸ்தாவ் பெத்ரோ ஆகியோர் வென்றனர்.
அதாவது, நம்பகத்தன்மையைக் கொடுக்கும், ஒரு மாற்றை முன்வைக்கும் தலைவர்கள், கட்சிகளோடு மக்கள் எப்போதும் தங்களை இணைத்துக்கொள்கிறார்கள்!