Site icon சக்கரம்

இடது அலையும் தப்பிய அமேசனும்!

எம். பாண்டியராஜன்

மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருந்தபோதிலும் பட்டினியால் அவதியுறும் பிரேசில் மக்களுக்கும் உலக அளவில் இடதுசாரிகள் மற்றும் பசுமைக் காப்பாளர்களுக்குப் பெரும் நம்பிக்கையளித்திருக்கிறார் பிரேசில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா (Luiz Inácio Lula da Silva).

நாடு தழுவிய அதிபர் தேர்தலில் முன்னாள் தொழிற்சங்கத் தலைவரும் ஏற்கெனவே இரு முறை பிரேசிலின் அதிபராக இருந்த இடதுசாரியுமான லூலா, 50.9 சதவிகித வாக்குகளையும் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய அதிபரும் வலதுசாரியுமான ஜெயிர் பொல்சொனாரோ 49.1 சதவிகித வாக்குகளையும் பெற்றனர். 2023 ஜனவரி 1 ஆம் தேதி, நாட்டின் 39-வது அதிபராக லூலா பொறுப்பேற்கவுள்ளார்.

தேர்தலுக்கு முன்பிருந்தே லூலாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அதிபர் பொல்சொனாரோ கூறிவந்த நிலையில் இன்னமும் தோல்வியை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அவரோ அவருடைய ஆதரவாளர்களோ கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், வெற்றி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அமெரிக்க அதிபர் ஜோ பைடனிலிருந்து உலகத் தலைவர்கள் அனைவரும் லூலாவை வாழ்த்தத் தொடங்கிவிட்ட நிலையில், பொல்சொனாரோவுக்கு தோல்வியை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

தேர்தலில் நாடே இரண்டுபட்டுக் கிடந்தபோதிலும், வெற்றி பெற்றவுடன் ஆற்றிய உரையில், “2023 ஜனவரி முதல் நாளில் பிரேசிலின் 21.5 கோடி மக்களுக்குமான அதிபர்தான் நான். எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும்  அல்ல; இரண்டு பிரேசில்களும் இல்லை, நாம் ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரு மாபெரும் தேசம்” என்று குறிப்பிட்டுள்ளார் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா.

யார் இந்த லூலா?

பிரேசிலில் கடந்த 30 ஆண்டுகளாக அனைவரும் அறிந்த பெயர் லூலா. மூன்றாவது முறையாக பிரேசிலின் அதிபர் பொறுப்பேற்கும் லூலா, தொழிலாளர் குடும்பத்திலிருந்து வருபவர். சிறு வயதிலேயே தாய், தந்தையுடன் பெர்னாம்புகோ என்ற நாட்டுப்புறப் பகுதியிலிருந்து சா பாவ்லோ (São Paulo) நகருக்குக் குடியேறிய அவர், பின்னர் உருக்காலைத் தொழிலாளியாக, 1970-களில் தொழிற்சங்கத் தலைவராக வாழ்க்கையைத் தொடர்ந்தவர். பிரேசிலில் இராணுவ சர்வாதிகாரம் ஆட்சியிலிருந்த காலத்தில் 1978 – 1980 காலகட்டத்தில் பெரிய அளவிலான தொழிலாளர் வேலைநிறுத்தங்களை முன்னெடுத்தவரான லூலாவுக்கு 1980-ல் இடதுசாரி தொழிலாளர் கட்சியைத் தொடங்குவதிலும் பெரும் பங்கிருந்தது.

1989-ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு முதல் சுற்றிலேயே தோற்ற இவர், 1994, 1998 தேர்தல்களில் இறுதிச் சுற்றுக்கு வந்தும் தோற்றுவிட்டார். 2002 அதிபர் தேர்தலில் ஜோ ஸேராவை வென்று முதன்முதலில் அதிபரானார். 2003 ஜன. 1-ல் பதவியேற்று  2010 டிச. 31 வரை பதவி வகித்தார். தொடர்ந்து இரு முறை அதிபராக இருந்த இவருடைய ஆட்சிக்காலம், பிரேசிலின் சிறந்த காலம் எனலாம். பிரேசிலியப் பொருள்களின் மதிப்புகள் மிகுந்தன, சீனாவுக்கான ஏற்றுமதிகள் அதிகரித்தன, பொருளாதார வளர்ச்சி வேகம் பெற்றது.

இவருடைய ஆட்சிக் காலத்தில் ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்து, அவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளுக்குக் குழந்தைகள் வருவதைப் பொருத்து அவர்கள் குடும்பத்தினருக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தால் ஏழை எளிய பிரேசிலியர்களிடையே இவர் பெரும் செல்வாக்குப் பெற்றார்.

இவருடைய ஆட்சிக்காலத்தில்தான் ஐ.நா. அவையின் பட்டினிப் படத்திலிருந்து வெளியே வந்தது பிரேசில். கடன்கள், பண வீக்கம் குறைந்தன. கோடிக்கணக்கானோர் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

2017-ல் லூலா மீது லஞ்ச – ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணை நடைபெற்றது. லஞ்சமாக சொகுசு அபார்ட்மென்ட் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட அவருக்கு 9 ஆண்டுகளுக்கும் கூடுதலான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டதெனத் தொடர்ந்து லூலா மறுத்துவந்தார் (இவருக்கு சிறைத் தண்டனை விதித்த நீதிபதியோ பின்னர் அதிபர் பொல்சொனாரோவிடம் நீதித் துறை அமைச்சராகச் செயல்பட்டார்!).

மேல் முறையீட்டில் 2021-ல் பிரேசில் உச்ச நீதிமன்றம், நியாயமான விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவித்து, லூலாவுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்தது. 2022 அதிபர் தேர்தலில் பொல்சொனாரோவுக்கு எதிராகப் போட்டியிடவும் அனுமதித்தது.

எவ்வாறு வெற்றி பெற்றார்?

கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அதிபர் பொல்சொனாரோவின் அணுகுமுறையும் பிரேசிலின் ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல்களும் பெரிய அளவில் அவருக்கு எதிரான சக்திகளை ஒன்றுதிரட்டுவதில் லூலாவுக்கு உதவியாக இருந்தன. 2006-ல் லூலாவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்ற, மிதமான வலதுசாரியான முன்னாள் சா பாவ்லோ ஆளுநர் ஜெரால்டோ அக்மின், இப்போது இவருடைய அணியில் இருப்பதுடன் துணை அதிபராகவும் பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரேசிலை மீண்டும் கட்டியெழுப்புவதாக உறுதியளித்து வெற்றி பெற்றுள்ள லூலாவின் முன் நிறைய சவால்கள் இருக்கின்றன – ஆண்டுக்கணக்கில் அரசு ஆதரவின்றி நசித்துப்போன பொதுத் துறை சேவைகளை மீட்டெடுக்க வேண்டும், உள்ளூர் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த படிவு ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக உணவுப் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கும் பல இலட்சக்கணக்கான பிரேசிலியர்களைக் காப்பாற்ற வேண்டும்.

அமேசன் காடுகள் தப்பின!

மிக வெளிப்படையாகக் கடந்த நாலாண்டுகளில் சுற்றுச்சூழல் குற்றங்களை ஆதரித்தும் ஊக்குவித்தும் வந்தது அதிபர் பொல்சொனாரோவின் அரசு. லூலாவின் வெற்றியானது, இந்தப் பிராந்தியத்துக்கு மட்டுமல்ல, மனித நேயத்துக்கும் வாழ்வுக்குமான வெற்றி என்று கொண்டாடுகிறார்கள் சூழலியலாளர்கள். கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அமேசான் மழைக் காடுகளை அழிப்பதில் முன்னிலையிலிருந்த பொல்சொனாரோ, சூழல் ஒழுங்குமுறை அமைப்புகளையெல்லாம் உருக்குலையச் செய்தார். பொல்சொனாரோ ஆட்சிப் பொறுப்பேற்ற 2019-ல் இருந்த நிலைமையைவிட தற்போது 75 சதவிகிதம் மோசமாக அமேசன் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. 2021-ல் 13 ஆயிரம் ஹெக்டேர் வனப் பரப்பு இழக்கப்பட்டிருக்கிறது. 2008-லிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் இதுவே மிக அதிகம். மாறாக, லூலாவின் ஆட்சிக்காலத்தில் காடழிப்பு 72 சதவிகிதம் குறைந்திருந்தது. அமேசன் காடுகளைப் பாதுகாப்போம் என்பதும் லூலாவின் தேர்தல் பிரசாரங்களில் ஒன்று. அமேசனிலிருந்து சட்ட விரோத கனிம சுரங்க நிறுவனங்களையும் பண்ணைகளையும் வெளியேற்றுவோம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

இடதுசாரிகளின் வெற்றி

இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தற்போது தொடர்ச்சியான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்தப் பகுதியில் கடந்த இருபதாண்டுகளாக இருந்துவந்த வலதுசாரி, அடிப்படைவாத அரசுகள், ஒவ்வொன்றாகக் கடந்த 4 ஆண்டுகளாக, மக்களால் அகற்றப்பட்டு சோசலிச அல்லது சமூக ஜனநாயக சக்திகள் ஆட்சிக்கு வரத் தொடங்கியுள்ளன.

கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதத்தில் ஏப்ரல் இயக்க ஆயுதக் குழுத் தலைவரான கஸ்தோவா பெட்ரோ (Gustavo Petro) அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிலியில் 2021 டிசம்பரில் இடதுசாரித் தலைவரான கேப்ரியல் போரிக் (Gabriel Boric) அதிபராக வெற்றி பெற்றார். அதற்கு ஒரு மாதத்துக்கு முன், ஹோண்டுராஸில் இடதுசாரி தலைவரான ஸியாமாரோ கேஸ்ரோ (Xiomara Castro) ஆட்சியைக் கைப்பற்றினார்.

2021 ஜூனில் பெருவில் ஆசிரியரும் தொழிற்சங்கத் தலைவருமான பெட்ரோ காஸ்டில்லா (Pedro Castillo) அதிபர் தேர்தலில் வென்றார். 2020-ல் பொலிவியாவில் சோசலிச இயக்கத் தலைவரான லூயிஸ் ஆர்ஸ் (Luis Alberto Arce Catacora) வெற்றி பெற்று அதிபர் பொறுப்பேற்றார்.

2019-ல் ஆர்ஜென்டினாவில் இடதுசாரி ஆதரவு கூட்டணியின் ஆதரவு பெற்ற அல்பெர்தோ பெர்னாண்டஸ் ஆட்சிப் பொறுப்பேற்றார். 2018-ல் மெக்சிகோ பொதுத் தேர்தலில் இடதுசாரியான ஆண்ட்ரூஸ் மானுவல் லோபஸ் ஆப்ரடார் (Andrés Manuel López Obrador) பெரும் வெற்றி பெற்றார்.

தற்போது பிரேசிலில் இடதுசாரியும் தொழிற்சங்கவாதியுமான லூலா வெற்றி பெற்றிருக்கிறார்.

இதற்கு முன்னர் இந்த நாடுகளில் பெரும்பாலானவற்றில் இருந்த அமெரிக்க ஆதரவு – வலதுசாரி அரசுகள் முற்றிலுமாக மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன என்பதுடன் புதிய தலைமுறையினர் தங்கள் நாடுகளில் அமெரிக்காவின் தலையீட்டை விரும்பவில்லை என்றும் அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக இந்த நாடுகளின் மக்கள் எல்லாம் இடதுசாரி ஆதரவாளர்களாகிவிட்டார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. இந்த நாடுகளில் இருந்த அரசுகள் கொரோனா காலத்தை மிக மோசமாகக் கையாண்டதும் மக்கள் நலனைக் கொஞ்சமும் கருத்தில் கொள்ளாததுமே ஆட்சியாளர்கள் பெருந்தோல்வியைச் சந்திக்கக் காரணம் என்ற கருத்தும் நிலவுகிறது.

எப்படியிருப்பினும் இந்த பிராந்தியத்தில் இடதுசாரிகளின் செல்வாக்கை  நிலைநிறுத்தியதுடன், அமேசான் காடுகள் காப்பாற்றப்படும், பிரேசிலும் புது வாழ்வு பெறும் என்பதைத் தன் வெற்றியின் மூலம் உறுதி செய்திருக்கிறார் லூலா.

Exit mobile version