–கி.பார்த்திபராஜா
தமிழில் நாடகத்துக்கென்று நெடிய மரபு உண்டு. நிகழ்த்துக் கலைஞர்களே தமிழின் புலமைத்துவ மரபின் தொடக்கப்புள்ளிகளாக அமைகிறார்கள். கலைஞர்கள், கலைக் கருவிகள், நிகழ்த்து முறைமைகள் பற்றித் தமிழின் தொல் இலக்கியங்களில் ஏராளமான பதிவுகள் உள்ளன. தமிழ் நாடகத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஆக்கங்களைத் தந்து, அதனைச் சீர்திருத்திய அளப்பரிய பணிகளுக்காகத் ‘தமிழ் நாடகத் தலைமையாசிரியர்’ என அங்கீகரிக்கப்பட்டவர் ‘நாடகத் தந்தை’ ஸ்ரீலஸ்ரீ தூ.தா.சங்கரதாஸ் சுவாமிகள்.
1867இல் காட்டுநாயக்கன்பட்டி என்ற சிற்றூரில் பிறந்த தூத்துக்குடி தாமோதரன் சங்கரன் மிக இளம் வயதிலேயே நாடகத் துறைக்கு வந்துவிட்டார். அரிதாரம் பூசி, கிராமத்து மண் மேடைகளில் நிலமதிரக் குதித்தாடிய சங்கரனார் பெரிதும் ஏற்றவை ‘அசுர’ வேடங்களே. புராண, இதிகாசங்களும் அவற்றின் துணைக் கதைகளுமே நாடக மேடைகளை ஆக்கிரமித்திருந்த காலத்தில் எமதருமன், கடோத்கஜன், இரணியன், இராவணன், சனீஸ்வரன் முதலான அசுர வேடங்களில் அரங்கை நிறைத்தார் சங்கரனார். ‘சத்தியவான் சாவித்திரி’ நாடகத்தில் சங்கரனார் ஏற்ற எமதருமன் வேடம் தந்த அதிர்ச்சியில், பெண் ஒருவரின் கரு கலைந்தது, பக்தப் பிரகலாதனைத் தூக்கி வீசும் காட்சியில் கர்ஜித்த இரணியன் தந்த மிரட்சியில் பெண்ணொருத்தி மூர்ச்சையானாள், ‘நள-தமயந்தி’ நாடகத்தில் விதியின் வடிவமான சனீஸ்வரன் தந்த பேரதிர்ச்சியில் இளம்பெண் ஒருத்தி ரத்த நாளங்கள் வெடித்துச் செத்தாள்’ என்பவை சங்கரனாரின் வேடங்களைப் பற்றிச் சொல்லப்படும் செவிவழிக் கதைகள். நாடக நடிப்பில் உச்சத்திலிருந்த சங்கரனார் நடிப்புக்கு முழுக்குப் போட, இந்த உயிர்ப் பலிகளே காரணங்களாகின.
புத்துயிர் பெற்றார்: தான் முகத்தில் பூசிய அரிதாரம் மக்களை நல்வழிப்படுத்தி மகிழ்விக்கவும் உணர்வுகளை இளக்கி மனதைக் கரைய வைக்கவும் வேண்டும். ஆனால், அப்பாவிப் பெண்களின் உயிரைக் காவு வாங்கிவிட்டதே என்ற வேதனையில் மனம் குமைந்தார் சங்கரனார். தன் பாவத்தைத் தொலைக்க நாடக மேடையை விட்டிறங்கி, காவியுடை உடுத்திக்கொண்டு காசி, ராமேஸ்வரம் என தேசாந்திரியாய் அலைந்து திரிந்தார். இலங்கையிலுள்ள கதிர்காமம் கோயிலுக்குப் போய் தலை மழித்துக்கொண்டு, தனக்குத்தானே பிண்டம் (காரியம்) கொடுத்துக்கொண்டார். பின்னர் சங்கரனார், ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ ஆனார்.
இக்காலகட்டத்தில்தான் புதுக்கோட்டை கஞ்சிரா வித்துவான் மான்பூண்டியார், சுவாமிகளைத் தத்துப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டு, இசைப் பயிற்சி அளித்துத்தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டார். வித்வானிடம் மாணவராக இருந்த தட்சிணாமூர்த்தியோடு நட்புக்கொண்டு, தமிழிசையின் நுட்பங்களை ஐயந்திரிபறக் கற்றார் சுவாமிகள். நடிகர்களின் மனோதர்மத்துக்கேற்ப நடத்தப்பட்டுவந்த நாடகங்கள் அதன் கட்டுக்கோப்பை இழந்திருந்த காலம். நடிகர்களின் போட்டா போட்டிகள், சண்டைகள், சச்சரவுகள் முதன்மையாகி ‘நாடகம்’ பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது. மீண்டும் நாடகத் துறைக்குள் காலடி எடுத்துவைத்தார் சுவாமிகள், நடிகராக அல்ல; நாடகாசிரியராக. அத்துறையைச் சீரமைக்கும் கடினமான பணியைத் தலைமீது போட்டுக்கொண்டு போராடினார். ஒழுங்கற்றுக் கிடந்த நாடக நிகழ்த்துதல்களில் பல ஒழுங்குகளைக் கொண்டுவந்தார். புதிய நாடகங்களை எழுதினார், இலக்கியச் சுவை பொதிந்த பாடல்களை இயற்றினார், இசைக் கருவிகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தார், இசைக் கலைஞர்கள் அமரும் பகுதியை மாற்றினார், நடிப்பு முறைகளில் புதுமைகளைப் புகுத்தினார். இதனால் நாடகத் துறை புத்துயிர் பெறத் தொடங்கியது. கலைஞர்களை நோக்கிய எள்ளல் பார்வை மறையத் தொடங்கியது. நடிகர்களின் ஒழுக்கம் சார்ந்த வசை தேய்ந்து, ‘கலைஞர்கள்’ என்கிற புதுச் சொல்லாடல் வழக்குக்கு வந்தது.
தலைகீழ் மாற்றம்: சுவாமிகளின் சொல்லுக்குத் தலையாட்டும் நடிகமணிகள், மேடைக்குப் போனதும் தங்கள் சுயரூபங்களைக் காட்டினர். தான்தோன்றித்தனமாகப் பாடுவதும் வசனம் பேசுவதும் சண்டையிடுவதுமாக நாடக மேடை பழைய பாதைக்குத் திரும்பியது. இதனால் சிறுவர்களை நாடகத் துறைக்குக் கொண்டுவந்து, நடிப்புப் பயிற்சியளித்து மேடையேற்றத் துணிந்தார் சுவாமிகள். சிறுவர்களைக் கொண்டு சுவாமிகள் உருவாக்கிய நாடகக் குழு முறைமையே ‘பாலர் சபா’ என்னும் புதிய வடிவம். ‘பாலர் சபா’வில் பயிற்சிபெற்ற பலர் பிற்காலத்தில் நாடகத் துறையிலும் திரைத் துறையிலும் பெருங்கலைஞர்களாக மிளிர்ந்தனர். டி.கே.சண்முகம், டி.கே.பகவதி, எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.ஆர்.கோவிந்தசாமி எனப் பெரும் நடிகர் பட்டாளம் சங்கரதாஸ் சுவாமிகளிடமிருந்து புறப்பட்டது.
‘வள்ளித் திருமணம்’, ‘பவளக்கொடி’, ‘பக்தப் பிரகலாதா’, ‘லவகுசா’, ‘அரிச்சந்திரா’, ‘கோவலன் கதை’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி, இசை நாடக இலக்கியத்துக்கு வளம்சேர்த்தார் சுவாமிகள். கையெழுத்துப் படிகளாகவும் சிறு அச்சு நூல்களாகவும் புழக்கத்திலிருந்த சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களில், 16 நாடகங்கள் மட்டுமே இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இசைப் பேரறிஞர் அரிமளம் சு.பத்மநாதன், பேராசிரியர் வீ.அரசு ஆகியோர் இந்நாடகங்களைத் தொகுத்தளித்திருக்கிறார்கள். ஈராயிரம் ஆண்டு இலக்கிய நெடுமரபைக் கொண்ட தமிழில் ஏன் நாடக இலக்கியங்கள் இல்லை? தமிழ் நாடகங்கள் முதன்மையாக எழுத்துப் பனுவலாக (Written Text) அல்லாமல், நிகழ்த்துப் பனுவலாக (Performing Text) உருவாக்கப்பட்டமையே இதற்குக் காரணம்.
புறமொதுக்கும் மனோபாவம்: நாடகக் கட்டமைப்பு, ஒழுங்கமைப்பு, நேர்த்தி, அழகு, சுவையெனக் கற்குந்தோறும் புதியன தரும் இலக்கிய ஊற்றாக விளங்குபவை சுவாமிகளின் நாடகங்கள். தமிழ் மரபின் நாடக நுட்பங்களைக் கொண்டு விளங்கும் சுவாமிகளின் படைப்புகள் பொது வாசிப்புக்குக் கொண்டுவரப்படவில்லை. அவற்றின் இலக்கியச் சுவை எடுத்து மொழியப்படவில்லை, இலக்கியத் தரம் மதிப்பிடப்படவில்லை. சுவாமிகளின் நாடகங்கள் ‘இலக்கியமாக’ வரவு வைக்கப்படாமைக்குத் தமிழ் இலக்கியங்களை உரைகல்லில் உரைத்துப் பார்த்து மதிப்புச் சொல்லும் மதிப்பீட்டாளர்களின் ‘தீண்டாமை’ மனோபாவமே காரணமாகும். வாழ்வின் இறுதிக் காலத்தில், பக்கவாதத்தால் தாக்குற்று, பேச்சு வராமல் துன்புற்ற சுவாமிகள், அந்நிலையிலும் நாடக அரங்கின் பக்கவாட்டுத் தட்டி மறைப்பில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தபடி நாடக நிகழ்வுகளைக் கண்டு நடிகர்களின் நடிப்பைத் திருத்தினார். தமிழ் நாடகத் துறையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சங்கரதாஸ் சுவாமிகள், 1922 நவம்பர் 13 அன்று இயற்கை எய்தினார். புதுச்சேரியின் கருவடிக்குப்பம் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட சுவாமிகளின் நினைவுநாளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாடக நடிகர்கள் வந்து குழுமி, தங்களின் ‘நாடகத் தந்தை’க்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்து நூறாண்டுகள் ஆகின்றன. சுவாமிகளின் நாடக ஆக்கங்கள், நிகழ்த்தல்கள், உரையரங்கங்கள், நூலாக்கங்கள் என பெருங்கொண்டாட்டங்களோடு அவர் நினைவுகூரப்பட வேண்டும். தமிழகத்தின் கலைசார் சறுக்கல்களை, சுவாமிகளின் நினைவுக் கொண்டாட்டங்கள் வழியாகவே சரிசெய்ய முடியும்.
சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்து நூறாண்டுகள் ஆகின்றன. சுவாமிகளின் நாடக ஆக்கங்கள், நிகழ்த்தல்கள், உரையரங்கங்கள், நூலாக்கங்கள் என பெருங்கொண்டாட்டங்களோடு அவர் நினைவுகூரப்பட வேண்டும்!