-அ.பாக்கியம்
தென் அமெரிக்கா நாடான பெருநாட்டில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடதுசாரி சிந்தனையாளரும், விவசாயிகளுடைய தலைவரும், ஆசிரியருமான பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo) ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டு, ஜூன் மாதம் பதவியேற்றுக்கொண்டார்.
தென் அமெரிக்க நாட்டில் இடதுசாரி மற்றும் முற்போக்காளர்களின் எழுச்சியின் தொடர்ச்சியாக பெருநாட்டிலும் இந்த மாற்றம் ஏற்பட்டது. மக்கள் தலைவராக, போராட்ட களத்திலிருந்து காஸ்டிலோ வெற்றி பெற்றார். ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிட அனைத்து முயற்சி களையும் செய்தார்.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினுடைய எதிர்ப்பினை எதிர்கொண்டுதான் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை செய்தார். அவரது முயற்சிகளுக்கு பெரும்பான்மை பலத்துடன் இருந்த வலதுசாரி பாராளுமன்றம் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தது.
காஸ்டிலோ எடுத்த முயற்சிகள்
- கல்வியறிவின்மையை போக்குவதற்கு உள்நாட்டு உற்பத்தியில் 10% வரை கல்விக்கான முதலீட்டை அதிகப்படுத்தினார். இதற்கான சமூகத் திட்டங்களை அமல்படுத்தினார்
- 2.2 மில்லியன் சிறு விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தைகொண்டு வந்தார்.
- விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிக்கான திட்டங்களை உருவாக்கி அமல்படுத்தினார்
- 300 க்கும் மேற்பட்ட விவசாய கூட்டுறவு அமைப்புகளை உருவாக்கி கிராமப்புற கூட்டுறவு சட்டத்தின் கீழ் கொண்டு வந்தார்.
- பெரும் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 350 இடங்களில் 13 மில்லியன் மக்கள் பயனடையும் முறையில் 84 கோடி டொலர் ஒதுக்கி நிதி உதவி செய்தார்.
- சமையல் எரிவாயு விலையை 2.8 டொலராக குறைத்து வழங்கினார்.
- அரசியல் அமைப்பை திருத்தி அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.
- ஜனாதிபதியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அடிப்படை விதியாக அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த “தார்மீக இயலாமை“ என்ற வார்த்தையை நீக்குதல்,
- மக்களால் தேர்வுசெய்யப்பட்ட ஜனாதிபதியை வலது சாரிகள் பெருபான்மை என்ற பெயரால் பதவி நீக்கம் செய்யும் முறையை மாற்றிட திருத்தங்களை கொண்டுவந்தார்.
இவற்றையெல்லாம் சொத்துடைமை வர்க்கத்தால் சகித்துக் கொள்ள முடியுமா?
தார்மீகமற்ற தாக்குதல்
காஸ்டிலோவிற்கு பெரும்பான்மை இல்லாத சூழலை பயன்படுத்தி அடிக்கடி கவிழ்க்க முயன்றனர். அமெரிக்கா தலைமையிலான சுரங்க முதலாளிகளும், ஆலை முதலாளிகளும், ராணுவமும், ஆயுதப்படைகளும், கத்தோலிக்க தேவாலயங்களும், இடதுசாரி ஜனாதிபதி காடிலோவை நீக்குவதற்கான ‘இம்பீச்மென்ட்’ (impeachment) அதாவது “தார்மீக இயலாமை” முறையை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தனர்.
பல நேரங்களில் இந்த பெரும்பான்மையை எதிர்கொள்வதற்காக தனது மந்திரிகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக நிரந்தர தார்மீக இயலாமை என்ற தீர்மானத்தை கொண்டு வந்து தோற்கடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள்.
அதிகார துஷ்பிரயோகம் செய்வது, சட்டம் இயற்றுபவர்களை பதவிநீக்கம் செய்வது, அரசியல் சட்டத்திற்கு விரோதமாக பாராளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது, ஊழல், கருத்து திருட்டு, கிளர்ச்சியை தூண்டி விட்டது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி கைது (07.12.22) செய்து சிறையில் அடைத்துள்ளனர். காஸ்டிலோவை ஆதரித்த முன்னால் பிரதமர் அணிபால் டோரஸ் (Anibal Torres) இந்த குற்றச்சாட்டுக்காகவே இவரை 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கலாம் என்று அவர்களின் சட்டம் கூறுகிறது.
“நிரந்தர தார்மீக இயலாமை” என்பது 180 ஆண்டுகளுக்கு முன்பு பெரு நாட்டு அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்ட ஒரு விதி. இந்த விதிக்கு புறநிலை வரையறை எதுவும் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள். 19-ம் நூற்றாண்டில் இதை பைத்தியக்காரத்தனம் என்று கருதினார்கள். இப்போது இடதுசாரி ஜனாதிபதி இதை நீக்குவதற்கு எடுத்த முயற்சிகளை தடுத்து ஊழல் குற்றச்சாட்டை இதன் மூலம் சுமத்தி ஏகாதிபத்திய முதலாளிகள் ஆட்சியை கவிழ்த்து இருக்கிறார்கள்.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகள் 18 மாத காலம் போட்ட சதி திட்டத்தை இப்பொழுது நிறைவேற்றி இருக்கிறார்கள். கார்டிலோ ஓ.ஏ.எஸ் (OAS-ORGANISATION OF AMERICAN STATES) என்ற அமைப்பிலும் முறையிட்டார்.
பயனில்லை.
வாஷிங்டனுக்கு ஒரு நிலையற்ற உலகம் இருந்தால் தான் தனது மேலாதிக்கத்தை செலுத்த முடியும். பெருநாட்டில் 2016 ம் ஆண்டுகளிலிருந்து அடுத்தடுத்து 5 ஜனாதிபதிகள் மாற்றப்பட்டு கொண்டே இருந்தநிலை அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. காஸ்டிலோ பதவிக்கு வந்த பிறகு எங்கே ஒரு நிலைத்தன்மை உருவாகி விடுமோ என்ற அச்சத்தில் பெரு நாட்டை நிலையற்ற தன்மைக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற சுயநலத்தால் அமெரிக்க தூதரகம் அனைத்து உதவிகளும் செய்து ஆட்சியை கவிழ்த்தது.
துணை அதிபராக இருந்த திருமதி டினா போலுவார்டெ (Dina Boluarte) உடனடியாக அதிபராக பதவி ஏற்க சொல்லி அவரை அங்கீகரித்து காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஆதரித்தது.
டினா போலுவார்ட்டின் நியமனத்தை பெரு அரசாங்கம் கொண்டாடுகிறது என்று அமெரிக்க வெளியூர் துறை செய்தி தொடர்பாளர் கூறுகிறார். ஜனநாயக ஸ்திர தன்மையை உறுதி செய்ததற்காக பெரு நாட்டின் சிவில் நிறுவனங்களையும், அதிகாரிகளையும், வெள்ளை மாளிகை பாராட்டியது என்றால் அவர்களை தவிர இந்த ஆட்சி கவிழ்ப்புக்கு வேறு யாரு அடித்தளமாக இருந்திருக்க முடியும்.?
உலகம் எதுவும் சொல்லாது அனைவரும் அமைதியாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள். இது அமெரிக்காவால் தூண்டப்பட்ட மற்றொரு சதி. இந்த ஆட்சிக் கவிழ்ப்பு லத்தீன் அமெரிக்காவின், இடது சக்திகளின் முன்னேற்றத்திற்கு எதிராக நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ தாக்குதல். இந்த தாக்குதல், தந்திரங்கள், பொய்கள் நிறைந்த, ஒரு உண்மையான போரின் துவக்கமாகும் என்று வெனிசுலாவின் தேசிய அரசியல் அமைப்பு சபையின் தலைவர் டியோஸ்டாடா கப்பல்லோ கூறினார்.
மெக்சிக்கோ நாட்டு ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஓப்ராடோர் பொருளாதார மற்றும் அரசியல் உயர் அடுக்கு பிரிவினர் திட்டமிட்டு காஸ்டிலோவை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்யவைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டியதோடு மட்டுமல்லாமல், காஸ்டிலோவுக்கு மெக்சிகோ அரசியல் புகலிடம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்தார்.
பொலிவியா நாட்டு ஜனாதிபதி லூயிஸ் ஆர்சின், காஸ்டிலோவின் பதவி நீக்கத்தை ஏற்கவில்லை என்றும், இது போன்று பொலியாவில் இரண்டு முறை முயற்சித்ததையும் ஓ. ஏ.எஸ் அமைப்பு மீண்டும் தவறான மதிப்பீடு செய்து, பெரு நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணை போயிருக்கிறது என்று கண்டித்தார்.
பெருவின் தலைநகரில் மிகப்பெரும் போராட்டங்கள் காஸ்டிலோவிற்கு ஆதரவாக நடைபெற்று வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் அதிகாரத்திற்கு வருவதும், அவற்றை அமெரிக்க ஏகாதிபத்திய தலைமையிலான பெரும் முதலாளிகள் ஆட்சியை கவிழ்ப்பதும் 1971-ம் ஆண்டு சிலி நாட்டில் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இருப்பினும் ஏகாதிபத்திய முதலாளித்த சுரண்டலுக்கு எதிராக மீண்டும் மீண்டும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு கொண்டு இருக்கிறது.
பெரு நாட்டிலும் காஸ்டிலோ சில நேரங்களில் சமரசம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர் சார்ந்திருந்த கட்சி பெரு லிப்ரே(Free Peru) பல நே
ரங்களில் அவருடன் இணைந்து இருக்கவில்லை. 130 பாராளுமன்ற பிரதிநிதிகளில் 101 பேர் காஸ்டிலோ எதிராக வாக்களித்தனர். பெரு லிப்ரா கட்சியின் உறுப்பினர்கள் 37 பேர்களும், ராஜினாமா செய்த அமைச்சர்களும் இவருக்கு எதிராக வாக்களித்து உள்ளனர்.
இவற்றை காஸ்டிலோ அறிந்த போதிலும் வலதுசாரிகளின் கையில் அகப்பட்டு இருக்கக்கூடிய பாராளுமன்றத்தை கலைத்தால் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்பிக்கையில் முன் முயற்சி எடுத்தார்.
தொழிலாளர்களும் விவசாயிகளும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கலாம், ஆனால் நாட்டை ஆள்பவர்கள் பொருளாதார பலம் கொண்டவர்கள், ஊடகங்கள் மற்றும் அரசு எந்திரத்தை கட்டுப்படுத்துபவர்கள். அரசாங்கத்தை மாற்றினால் மட்டும் போதாது, அமைப்பின் அடிப்படை மாற்றத்திற்காக நாம் போராட வேண்டும். ஆனால் அங்கு செல்வதற்கு ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்பும், அணி திரட்டலும், நாம் கட்டியெழுப்ப வேண்டிய ஒரு புரட்சிகர தலைமையும் தேவை என்பதை இன்றைய சூழல் கோருகிறது.
பெரும்பான்மை ஆதரவு இல்லை என்று தெரிந்தும் காஸ்டிலோ மக்களை தெருக்களில் இறக்குவதற்கான முயற்சிகளை ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து எடுத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது.
பல நேரங்களில் பெரும்பான்மை இல்லை என்ற நிலைமையில் சமரசப் போக்கில் நடத்துவதற்கு முயற்சி செய்தாலும், முதலாளித்துவ வர்க்கம், தங்கள் வகுப்பைச் சேராத ஒருவரை, சாதாரண மக்களிடமிருந்து வந்த ஒருவரை, தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு அனுமதிக்காது என்ற வரலாற்று அனுபவம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது.
பெருவின் அரசியல் நிலை நெருக்கடியாக உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகள் முழுவதும் உள்ள இடதுசாரிகளை முற்போக்காளர்களை ஒழித்துக் கட்டுவதற்கான திட்டத்தோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் அடுத்தடுத்த முயற்சிகளை செய்து கொண்டே இருக்கிறது. அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளின் அனுபவம், காலம் மாறிவருவதைக் காட்டுகிறது.
அமெரிக்கசதியால் கவிழ்க்கப்பட்ட பிரபலமான அரசியல்வாதிகளை மீண்டும ஆட்சிக்கு திருப்பி அனுப்புகிறார்கள். புதிய தாராளமயப் பொருளாதாரத்தில் ஏமாற்றம் அதிகரித்து வருகிறது, அமெரிக்காவால் இதில் எதுவும் செய்ய முடியாது. வாஷிங்டன் பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளில் அதன் கைப்பாவை தலைவர்களை கொண்டு எடுபுடி அரசை நிறுவும் வாய்ப்பை கூடிய விரைவில் இழக்கும்.
அரசியல் போராட்டத்தின் அடுத்த கட்டமாக தொழிலாளர்களும் விவசாயிகளும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமல்ல, உண்மையான சக்தி தொழிலாள வர்க்கம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட, புரட்சிகர ஏழை விவசாயிகளின் அணி திரட்டலை நிரூபிக்கும் வகையில் அடித்தளத்தை அமைக்க வேண்டும்.
தென் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி தலைவர்கள் மக்கள் போராட்டத் தலைவர்களாக இருக்கிறார்கள். மக்களிடமிருந்து அன்னியபட்டவர்களாக இல்லை. களப்போராட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் போராட்டம் வெல்லட்டும்.