
இந்திய அரசாங்கம், ஸ்ரான் சுவாமிக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி அவரை சிறையில் அடைத்து வைத்திருந்தது இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: சர்வதேச அளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் பாஸ்டனைத் (Boston) தலைமையகமாகக் கொண்டு, ‘ஆர்சினல் கன்சல்டிங்’ (Arsenal Consulting) என்னும் பெயரில் உள்ள டிஜிடல் தடய அறிவியல் ஆய்வகம், வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, 2017க்கும் 2019க்கும் இடையிலான ஆண்டுகளில் பாதிரியார் ஸ்ரான் சுவாமியின் கணணினியில் அவரைத் “தேச விரோதி” எனக் காட்டுவதற்கான சாட்சியமாக பொய்யான ஆவணங்கள் சேர்க்கப்பட்டதாகக் கூறியிருக்கிறது. பாதிரியார் ஸ்ரான் 2014 இலிருந்து கண்காணிக்கப்பட்டு வந்திருக்கிறார். இந்தக் காலத்தில் அவருடைய கணணினியில் நாற்பது கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கையின்படி இவற்றில் எதுவும் அவரால் பயன்படுத்தப்படவில்லை. பொது வெளியில் வெளியிடப்பட்டிருக்கும் தடய அறிவியல் விசாரணையிலிருந்து தெரிய வரும் அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவெனில், ஸ்ரான் சுவாமியைக் கைது செய்த புனே காவல்துறையினக்குத் தெரிந்தே, கணணினியில் மேற்கண்டவாறு பொய்ச் செய்திகளை மோசடிப் பேர்வழிகள் (ஹேக்கர்கள்) பதிவேற்றம் செய்திருப்பதாகும்.
சிறைக் காவலில் மரணம் கொலைக் குற்றமே!
ஸ்ரான் சுவாமி இறப்பதற்கு ஒரு நாளைக்கு முன்புதான், இந்த மோசடி பேர்வழிகள் (ஹேக்கர்கள்), தங்களுடைய நடவடிக்கைகளை அழித்திட முயற்சித்துள்ளார்கள். இவை எல்லாவற்றிலும் மிகவும் மோசமான விஷயம் என்பது ஸ்ரான் சுவாமிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதாகும். அவருக்குக் குறைந்தபட்ச வசதிகள்கூட அளிப்பதற்கு மறுக்கப்பட்டது. சிறைக்காவலில் அவர் மரணம் என்பது கொலைக் குற்றத்திற்குக் குறைவான எதுவும் கிடையாது. அவரால் எந்தக்காலத்திலும் செய்யப்படாத குற்றத்திற்காக, அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, அவர் சிறையில் மரணம் அடைந்துள்ளார். இவ்வாறு தடய அறிவியல் ஆய்வகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையானது ஐந்தாவதாகும். மோசடிப் பேர்வழிகள் (ஹேக்கர்கள்), தாங்கள் குறிவைத்துள்ள நபர்களுக்கு எதிராகப் பொய்க் கோப்புகளைக் கணணினிகளில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள், (இந்தக் கோப்புகள் குறித்து அந்தக் கணணினிகளைப் பயன்படுத்தி வந்தவர்களுக்கு எதுவும் தெரியாது), என்று தடய அறிவியல் ஆய்வகம் தெளிவாக மெய்ப்பித்துள்ளது.
என்.ஐ.ஏ (NIA), அரசு மறுப்பது கண்டனத்துக்குரியது
இருப்பினும், பீமா கொரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைத்து எதிரிகளுக்கு எதிராகவும், இவ்வாறு பொய்ச் செய்திகள் தான் பிரதானமாக அமைந்திருக்கின்றன. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் அரக்கத்தனமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (‘உபா’ சட்டத்தின்) ஷரத்துக்களின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தடய அறிவியல் ஆய்வகத்தின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள தேசியப் புலனாய்வு முகமை (National Investigation Agency – NIA) மறுப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. இதே போன்றே இந்த அறிக்கைகளை ஏற்பதற்கு, என்.ஐ.ஏ-இன்மீது அதிகார வரம்பெல்லையைப் பெற்றிருக்கும் இந்திய அரசாங்கம் மறுப்பதும், இதற்கிணையாகக் கண்டனத்திற்குரியதாகும்.
ஆதாரம் கிடைக்காவிட்டால் பொய் ஆவணங்கள் திணிப்பது…
சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கையிலிருந்தும், இத்துடன் இதுபோல் முன்பு வெளியாகி இருக்கும் அறிக்கைகளிலிருந்தும், இந்த அரசாங்கமும், அதன் கீழ் செயல்படும் தேசியப் புலனாய்வு முகமையும் தாங்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்று கருதுகிற நபர்களுக்கு எதிராக சாட்சியம் எதுவும் கிடைத்திடாவிட்டால், இதேபோன்று கணணினிகளில் பொய்க் கோப்புகளை மோசமான பேர்வழிகள் (ஹேக்கர்கள்) மூலமாகப் பதிவேற்றம் செய்து அவர்களைச் சிறையில் அடைப்பதை, வழக்கமான நடவடிக்கைகளாகக் (modus operandi) கொண்டிருக்கின்றன. இது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். இன்றைய தினம் பீமாகொரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்கள் இதேபோன்று ஆபத்தான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். நாளை, இந்த ஆட்சிக்கு எதிராக இருக்கும் எவர் வேண்டுமானாலும் இதே போன்று குறிவைக்கப்படக் கூடும்.
நியாயமான மறு விசாரணை செய்க!
பீமா கொரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் பிணை மனுக்களோ, அல்லது, அவர்கள் மீதான குற்றச்சாட்டு ஏதும் இல்லை எனக்கூறி அவர்களை விடுவித்திட வேண்டும் என்று கோரும் (டிஸ்சார்ஜ்) மனுக்களோ நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வரும்போது, தேசியப் புலனாய்வு முகமை அந்த விண்ணப்பங்கள் மீது ஆட்சேபணைகள் கூறக்கூடாது என்றும், வெளிவந்திருக்கும் தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கைகளின்கீழ் ஒரு வல்லுநரைக் கொண்டு, குறிப்பிட்டக் காலவரையறைக்குள், நியாயமான மறு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கோருகிறது.