–ச.அருணாசலம்
சமீபத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் ‘இந்திய சீன எல்லை மோதல்’ தொடர்பாக அனல் பறந்தது! வெளிப்படையான விவாதங்களின்றி உண்மைகளை மறைத்து, ”ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டுத் தரமாட்டோம்” என ஜம்பம் பேசியது பாரதிய ஜனதாக்கட்சி அரசு! ஆனால், உண்மை நிலையோ கவலையளிக்கிறது!
பா.ஜ.க அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், அவையில் விவாதம் செய்ய பா.ஜ.க அரசு சம்மதிக்காததை கண்டித்தும் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன!
1962 இல் நடந்த இந்திய – சீன மோதலின் போது பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராயிருந்தார்.
சண்டை நடந்து கொண்டிருந்த போதே நாடாளுமன்றம் அவ்விவிவகாரம் பற்றி விலாவாரியாக விவாதம் நடத்தியது. ஒக்ரோபர் 20, 1962 அன்று சீன தாக்குதல் தொடங்கியது. ஒக்ரோபர் 26ந் திகதி நிலைமையை சமாளிக்க போரை எதிர் கொள்ள நேரு தலைமையிலான ஒன்றிய அரசு “தேசிய அவசர நிலை” பிரகடனம் செய்தது.
இந்த யுத்தம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே முதன்முறையாக நாடாளுமன்ற மேலவை (ராஜ்ய சபை) க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனசங்க கட்சியை சேர்ந்த அடல் பிகாரி வாஜ்பாய் மோதல் பற்றி அவையில் விவாதிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். உடனடியாக அக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர் நேரு, விவாதத்திற்கு முன் வந்தார். அன்று வாஜ்பாய்க்கு வயது 36, அன்றைய பிரதமர் நேருவுக்கோ வயது 72.
ஆனால், இன்று ஏன் பா.ஜ.க அரசும், 56 இன்ச் மார்புடைய “பிரதமரும் ” விவாதத்தை கண்டு அஞ்சி ஓடி ஒளிகின்றனர்? எடுத்ததற்கெல்லாம் நேருவை “வசை” பாடும் இன்றைய ஆட்சியாளர்கள் ஏன் நேரு காட்டிய, கட்டி பாதுகாத்த, ஜனநாயக மாண்பை கடைபிடிக்கவில்லை?
உண்மையில் நடந்தது என்ன?
டிசம்பர் 9ந் திகதி வெள்ளி கிழமை இந்திய சீன படைகளிடையே மோதல் நடைபெற்றுள்ளது.
இம்மோதலில் இந்திய படைகளுக்கு 35 பேருக்குமேல் காயம் , 7 படைவீர்ர்கள் படுகாயமடைந்து உயிர் காப்பு சிகிச்சைக்காக அசாமில் உள்ள உயர் நிலை மருத்துவமனைக்கு வானூர்தி மூலம் எடுத்து செல்லப்பட்டனர் என்ற செய்தி உலகெங்கிலும் பரவியது. இந்திய அரசு மூச்சு விடவில்லை! இந்திய இராணுவமும் அறிக்கை ஏதும் வெளியிடவில்லை!
ஆனால், திங்கட்கிழமை காலை ” தி இந்து” நாளிதழ் இந்த மோதல் பற்றிய செய்தியை வெளியிட்டவுடன் திங்கட்கிழமை மாலை இந்திய இராணுவம் ஒரு அறிக்கை வெளியிட்டது.
அருணாச்சல் பிரதேசில் உள்ள யாஙட்சீ (Yangtze) பகுதியில் சீன ரோந்து படைகளுக்கும், இந்திய ரோந்து படைகளுக்கும் இடையே மோதல் வெடித்ததாகவும் அதில் 20 இந்திய இராணுவத்தினர் காயமடைந்ததாகவும், அதைவிட அதிக அளவு சீன படையினர் காயமுற்றதாகவும் அறிவித்தது.
இரு தரப்பும் மோதலை தவிர்த்து கொமாண்டர்களுக்கிடையிலான கொடி சந்திப்பை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இருதரப்பினரிடமும் எல்லைக்கோடு பற்றிய புரிதலில் வேறுபாடுகள் இருப்பதால் இத்தகைய மோதல்கள் 2006 முதல் நடைபெற்ற வண்ணம் உள்ளன, இதை, ”ஜொயின்ட் ஒர்க்கிங் குரூப் (Joint Working Group – JWG) பேச்சுவார்த்தைகள் மூலம் சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும்” என்று அறிவித்தது.
டோங்சிங் பகுதியில் (தவாங் (Tawang) ஏரியாவில் ஒரு பகுதி) இந்திய படைகள் சீனப் பகுதியில் அத்துமீறி நுழைந்ததை சீனப்படைகள் முறியடித்தன என்று கூறியுள்ளது. யார் கூறுவதில் உண்மை உள்ளது ? யார் அத்து மீறினர்? யார் அமைதியை நிலைநாட்டியது?
போன்ற கேள்விகள் அனைவரது மனதில் எழும்பினாலும், ஒரு அரசு வெளிப்படையாக தகவல்களை பரிமாறிக் கொண்டாலே, உலகினரை மட்டுமல்ல, உள் நாட்டு மக்களின் நம்பிக்கையையும் பெற இயலும் . இது ஒன்றே வெளிப்படைத் தன்மையுடன் அரசு நடந்து கொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. ஆனால், ஆளும் பா.ஜ.க அரசோ நாட்டு மக்களிடம் – நாடாளுமன்றத்திலும்,எதிர்கட்சிகளுடனும் விவாதங்கள் வாயிலாக- உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்பதே உண்மை. இதனால் -இந்த நடைமுறையால்- ஒரு அரசு ஒரு போதும் வெற்றி கொள்ள இயலாது. அது சண்டையானாலும் சரி, சமாதான முயற்சி ஆனாலும் சரி.
உண்மை நிலவரங்களை எடுத்தியம்பி தன்பக்க நியாயங்களை முன்வைப்பதன் மூலமே ஒரு நாடு வலுப்பெற முடியும். பொய்மையான தோற்றங்களையும், போலியான வாதங்களையும் கையிலெடுக்கும் அரசு உள்நாட்டிலும், வெளிநாட்டரங்கிலும் வெற்றி பெற முடியாது.
உண்மையான கள ஆய்வும், உறுதியான எதிர்வினையும் ஒரு நாட்டின் அடிப்படையான பலமாக மாறுவதற்கு வெளிப்படைதன்மையும், விவாதமும் அரசியல் சமூக அரங்குகளில் தேவை. ஆனால் இதிலெல்லாம் பா.ஜ.க அரசுக்கு அக்கறை இருப்பதாக தெரியவில்லை. எப்படியாவது தனது உறுதியான பொய்த் தோற்றத்தை குலையவிடாமல் பாதுகாக்க முயல்கிறது, அதனால், ஏற்படும் பின்விளைவுகளை பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.
சூழல் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை
2020 கல்வான் மோதலுக்குப்பின் இந்தியா பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை பறி கொடுத்துள்ளது என்று விவரமறிந்தவர்களும், முன்னாள் இராணுவத்தினரும், வெளிநாட்டு பத்திரிக்கைகளும் கூறினாலும் “யாரும் யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை, இந்தியா ஒரு இன்ச் இடத்தை கூட விட்டுக் கொடுக்காது” என்று முழங்கிய மோடி, நாடாளுமன்ற விவாதத்திற்கு மட்டும் அன்றும் முன்வரவில்லை இன்றும் வரவில்லை.
எல்லையில் நிலைமைகள் சுமுகமாக இல்லை, இந்தியாவுக்கு சாதகமாகவும் இல்லை.
சீன அரசு தனது படைபலத்தை, இராணுவ அமைப்புகளை, தளவாடங்களை, தங்களது தயார்நிலையை மேம்படுத்தி வழுகிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. 1962 இல் இருந்த சீனமல்ல, 2022 இல் உள்ள சீனம் என்பதை உலகம் மட்டுமல்ல, இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மைகள் சுடும் என்றாலும், அதை எதிர்கொள்வதன் மூலம் நம்மை தேற்றிக் கொள்ள முடியும் .
இந்திய சீன எல்லை பிரச்சினை என்பது இவ்விரு நாடுகளின் மையப்பிரச்சினை. இதை தவிர்த்து உறவுகள் மேம்பட முடியாது என்பதையே இம்மோதல்கள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்தியாவிற்கும், சீனாவிற்குமான எல்லைத் தகராறு (தாவா) இந்தியா விடுதலை அடைந்த நாளிலிருந்தே இருந்து வருகிறது. இந்தியா சுதந்திரமடைந்த ஆண்டு 1947. சீனாவில் மா சே துங் தலைமையில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி 1949 ஆம் ஆண்டு தொடங்கியது.
அந்தக் காலமுதலே இரு நாடுகளுக்கும் இந்திய சீன எல்லையில் ஒத்த கருத்து இல்லை. சீனம் புதிய எல்லை பகிர்வை கோரினாலும், இந்தியா தமக்கு பிரிட்டிஷார் கொடுத்த எல்லை வரைமுறைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு , மாறுதலையோ , புதிய எல்லை பகிர்வையோ மறுதலித்தது.
மக்மோகன் எல்லை கோடு (McMahon Line) குறித்து மறுபரிசீலனை தேவை!
பிரிட்டிஷார் கொடுத்த மக் மோகன் எல்லைக் கோட்டை இந்தியா அட்சரம் பிசகாமல் ஏற்றுக் கொண்டது. ஆனால், சீனமோ மக் மோகன் எல்லைக் கோட்டை முற்றிலுமாக நிராகரித்தது. அதை “அடிமை சாசன வரைகோடு” என வெறுத்தொதுக்கினர்.
இதற்கு, திபெத் பிரச்சினையின் போது, இந்தியா எடுத்த நிலைபாடு மேலும் தூபமிட்டது எனலாம். சீனம் எல்லை பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க எடுத்த முயற்சிகளுக்கு இந்தியா செவி மடுக்கவில்லை. தெளிவில்லாத ‘மக்மோகன் வரைகோட்டை’ இந்திய முழுமையாக சார்ந்திருந்ததும் சீனம் முற்றிலுமாக அவ்வரைகோட்டை நிராகரித்ததும் பிரச்சினையை தீர்க்கவில்லை, மேலும், வளர்த்தது என்பதை நாம் மறக்கலாகாது.
நேரு தலைமையில் அமைந்த இந்திய அரசு ‘முன்னோக்கி நகர்தல்’ என்ற (Forward Policy) கொள்கையை கடைபிடித்தது. தீர்க்கப்படாமலிருந்த சர்ச்சைக்குள்ளான ஆனால், அதே சமயம் ஆள் நடமாட்டம் அற்ற பரந்த எல்லை பகுதிகளை தனது வசம் கொண்டு வருவதே இந்த முன்னோக்கி நகர்தல் கொள்கையின் சாராம்சம்.
இதை பொறுக்காத சீனம் 1962 ஒக்ரோபர் 20-ந் திகதி இந்திய படைகளை விரட்டி அடித்து முன்னேறியது. ஒரு மாதத்திற்கு பின் 1962 நவம்பர் 21 அன்று சீனப்படைகள் தன்னிச்சையாக போர்நிறுத்தம் செய்து 1962 ஒக்ரோபரில் இருந்த நிலைக்கு பின் சென்றது.
அன்று முதல் இந்தியாவின் முன்னோக்கி நகர்தல் கொள்கை மூடுவிழா கண்டது. ஆனால், எல்லை பிரச்சினை தீர்க்கப்படவில்லை. இரு நாடுகளிடையே ராஜாங்க தொடர்பு அறுபட்டது.
நீண்ட இடைவெளிக்குப்பின் 1985 இல் ராஜீவ் காந்தி காலத்தில் மீண்டும் உறவுகள் புதுப்பிக்கப்பட்டன. எல்லை தகறாரை தீர்க்க வழிமுறைகள் ஆராயப்பட்டன. எல்லை மோதல்கள் எதிர்பாராவண்ணம் நிகழ்வதை தடுக்க உயிர் சேத்த்தை தவிர்க்க வழிமுறைகள் காணப்பட்டன. அந்த வழிமுறைகளில் ஒன்றுதான் ‘ஜொயின்ட் ஒர்க்கிங் குரூப்’ (JWG) சந்திப்புகள்.
இத்தகைய JWG சந்திப்பு 1995 ஓகஸ்ட்டில் நடந்த பொழுது சர்ச்சைக்குரிய 12 இடங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் இரண்டு இடங்கள் லடாக்கின் கிழக்கு பகுதியிலும், நான்கு இடங்கள் மத்திய பகுதியிலும் ஆறு இடங்கள் கிழக்கு பகுதி-Eastern Sector- யிலும் உள்ளதாக கண்டறியப்பட்டன.
இந்த ஆறு இடங்களில் ஒரு பகுதிதான் தற்பொழுது மோதல் நடைபெற்ற யாங்சீ பகுதியாகும். மற்றொரு பகுதியான நம்கா சூ -Namka Chu – என்ற பகுதியில்தான் 1962 இல் யுத்தம் ஆரம்பித்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
இந்த யாங்சீ (அருணாச்சல் பிரதேஷ்) பகுதியில் 1999 முதலே அத்துமீறல்கள் பரஸ்பரம் நிகழ்ந்து வருவதாக இராணுவத்தினர் கூறுகின்றனர். 1999 கார்கில் யுத்த சமயத்தில் சீனப்படைகள் இப்பகுதியில் 40 நாட்களுக்கும் மேலாக இருந்து, பிறகு பின் வாங்கி சென்றதாக சொல்லப்படுகிறது. மீண்டும் 2016, 2021 ஆண்டுகளிலும் இத்தகைய அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளன.
மோசமடையும் நிலைமை
ஆனால், தற்பொழுது நிலைமை மோசமாக தெரிவதற்கு இரண்டு காரணங்களை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
ரோந்து செல்லும் படைகளின் எண்ணிக்கை பெரும்பாலும், ஒரு பிளட்டூன் அளவே (50 முதல் 60 வீர்ர்கள் அடங்கிய அணி) இருக்கும். ஆனால், டிசம்பர் 9 அன்று இந்திய படைகள் எதிர் கொண்டதோ 600 க்கும் மேற்பட்ட சீனப்படைகள் (ஒரு பட்டாலியன் அளவு) என்பது சற்று வித்தியாசமான ஆனால், கலவரமூட்டும் உண்மை.
”இரண்டு சீனப்படைகளின் மேம்பட்ட தளங்கள் மற்றும் தளவாடங்கள் ஆகும். இதனுடன் அவர்களது தயார்நிலையும் நாம் மறப்பதற்கில்லை” என்கின்றனர் விவரமறிந்தோர்.
இன்றைய சீனத்தின் பலமும், அதன் ஆளுமையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நல்லெண்ணத்தின் அடிப்படையிலும், நமது நலன்களின் தேவையிலும், நமது உறவை நாம் வளர்த்தெடுக்க வேண்டும் . கொம்பு சீவி விடுபவர்களின் வலையில் வீழாமல், தனது நலன்களை மேம்படுத்த நிலைநாட்ட இந்தியா முற்பட வேண்டும்.
இதற்கு பிரச்சினையின் ஆழமும், ஆதி முதலும் அறிந்திருக்க வேண்டும் . வீண் ஜம்பங்களை விடுத்து, வெளிப்படையான விவாதங்கள் மூலம் நிறைகுறைகளை சீர்தூக்கி நியாயமான அணுகு முறையை இந்தியா கடைபிடிக்க வேண்டும் . இதற்கு பாஜக அரசு தயாராக உள்ளதா?
அதற்கான அறிகுறி ஏதும் இல்லை. வெட்டி பந்தாக்களும், வீண் ஜம்பங்களும் நமக்கு வலு சேர்க்கப் போவதில்லை. சீனம் தமது அண்டை நாடுகளுடனான எல்லை பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துள்ளது என்பதும், எஞ்சியிருப்பது இந்தியாவுடனான எல்லை பிரச்சினை ஒன்றே என்பதையும் நாம் மறக்கலாகாது. ‘எதிரிக் கெதிரி நண்பன்’ என்ற வகையில் அணி மாறி சேருவது தீர்வாகாது. அதே சமயம் ”யுத்தம் வரப்போகிறது” என்ற படபடப்பும், பயமும் இந்தியாவிற்கு தேவையில்லை. எதிர்கட்சிகளும் இதில் கவனமாக இருக்க வேண்டும்.