Site icon சக்கரம்

ஒரு புரட்சிகர தோழரின் எதிர்பாரா மறைவு!

எஸ்.வி.ராஜதுரை

ஏதேனும் ஒரு முன்னாள் அமைச்சரோ, சட்டமன்ற உறுப்பினரோ,  நாடாளுமன்ற  உறுப்பினரோ, முக்கியக் கட்சித் தலைவரொருவரோ  (அவர்களில் நூற்றுக்கு 90% ஊழல் கறை படிந்தவர்களாக இருப்பார்கள்)  இறந்துவிட்டால்,  அவர்களில் ஒரிருவரைத் தவிர  மற்றவர்களின்  இறப்பைப் பற்றிய செய்தியோ , அஞ்சலிக் குறிப்போ நாளேடுகளிலோ, வார/மாத ஏடுகளிலோ இடம் பெறுவது வழக்கம்.

அவர்களின் இறப்புகள் பெரும்பாலும்,  அவர்களது குடும்பங்களுக்கும் உற்றார்  உறவினர்களுக்கும் அல்லது கட்சிக்காரர்களுக்கும்  துக்கத்தைத் தரலாம். அது மிகவும் இயல்பானது.  

ஆனால், அவர்களில் மிகப் பெரும்பாலோரின் இறப்புகள், மாவோ கூறியதைப் போல ‘ பறவையின் சிறகுகளைப் போல இலேசானவையே’. ஆனால் உழைக்கும் வர்க்கத்தைப்  பொருத்தவரை, அவர்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும்  தங்கள் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த, ஆனால் ‘பாடல் பெறாத’ தோழர்களின் மரணம், மாவோ கூறியதைப் போல ’தாய் (இமய ) மலையைவிடக் கனமானதாகும்’.

அப்படிப்பட்ட ஒரு மரணம்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட் – லெனினிஸ்ட்) லிபரேஷன் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக இருந்த, கட்சி உறுப்பினர்களிடையேயும் ஆதரவாளர்களிடையேயும் ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களிடையேயும் என்.கே.நடராஜன் என அறியப்பட்ட  தோழர் சண்முகராஜுக்கு ஏற்பட்டது.

இயல்பான நாள்களிலும் சரி, அரசு இயந்திரத்தின் கடும் ஒடுக்குமுறைக்கு இலக்கான நாள்களிலும் சரி, மாறாப் புன்னகையுடன் காட்சியளித்துக் கொண்டிருந்த தோழர்களிலொருவர்தான்  என்.கே. நடராஜன்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள அரசபிள்ளைபட்டி கிராமத்தில் கொடாரியப்பர், வள்ளியம்மாள் பெற்றோர்களுக்கு 29-12-1955 இல் பிறந்தார். பள்ளிப்படிப்பை ஒட்டன்சத்திரத்தில் படித்துமுடித்தார். முதுகலைப் பட்டப்படிப்பு வரை பழனி ஆண்டவர் கலை,  பண்பாட்டுக் கல்லூரியில் பயின்றார்.

கல்லூரி நாள்களிலேயே தீவிர தத்துவ, அரசியல் தேடுதலில்  ஈடுபட்டிருந்தார். காந்தியம், விவேகானந்தர் போதனைகள்,  காந்தியப் பொருளியலறிஞர் ஜெ .சி. குமரப்பாவின் கருத்துகள்  ஆகியன குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். 

இந்தியக் கம்யூனிஸ்ட்  கட்சி (மார்க்ஸிஸ்ட்- லெனினிஸ்ட்) கட்சி தோற்றுவிக்கப்பட்டதிலிருந்தே அதில் உறுப்பினராக இருந்த கரட்டுப்பட்டி தோழர் முத்துராஜ் மூலமாக சாரு மஜும்தாருடனும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சியுடனுமான  தொடர்பு கிடைக்கப்பெற்ற அவர்,  1980களின் தொடக்கத்திலேயே  அக்கட்சியின் முழுநேர ஊழியராக உயர்ந்தார். சிறிதுகாலம் இதழியலாளராகவும்  இருந்தார்.

நீலகிரியிலுள்ள மலைவாழ் மக்கள் மத்தியிலும் கோவை ஆலைத் தொழிலாளர் மத்தியிலும் கடுமையான ஒடுக்குமுறை நிலவிய காலத்தில் உயிரைத்  துச்சமெனக் கருதி  உழைத்து வந்தார். 

’சிறு துளி’ என்ற பெயரில் உழைக்கும், ஏழை மக்கள் சிறிது சிறிதாகப் பணத்தை சேமிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தித் தன்னைப் பெரும் சமூக சேவையாளராகக் காட்டிக்கொண்ட ஒரு பெண்மணி உள்ளிட்டவர்களின் உடைமையில் உள்ளதும்,   தொழிலாளர்களைச் சுரண்டுவதிலும் ஒடுக்குவதிலும் ஈவிரக்க முறைகளைப் பயன்படுத்துவதிலும் ‘புகழ் பெற்ற’தும் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளதுமான ‘பிரிக்கால்’ தொழிற்சாலைத் தொழிலாளர்களை அமைப்பாக்கும்  மிகக் கடுமையான பணியில் ஈடுபட்டு அதில்  வெற்றி பெற்றார்.

நாமக்கல், சேலம், தருமபுரி மாவட்டங்களில் நீண்டகாலம் பணியாற்றினார். குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் கணிசமான காலம் பணியாற்றி வந்தபோது, அங்குள்ள விசைத்தறித் தொழிலாளர்களை அமைப்பாக்கி போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துவதில் பெரும் பங்காற்றினார். அவர்களை அரசியல்மயமாக்கி, அவர்கள் மத்தியில் கட்சியைக் கட்டுவதிலும் வெற்றிபெற்றார்.

அங்கு பணியாற்றியபோது தனது இணையரையும் தேடிக் கொண்டார். புரட்சிகரத் தொழிற் சங்கமான ஏ.ஐ.சி.சி டி-யு வின் (AICCTU)  வின் மாநில பொதுச் செயலாளராகவும் அகில இந்தியத் தலைவர்களுள் ஒருவராகவும் பணியாற்றினார். 

நீண்டகாலம்  லிபரேஷன் கட்சியின்  மாநிலக் குழு  உறுப்பினராக இருந்த தோழர் என். கே . நடராஜன், 2019ல் அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். 2020இல் அக்கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியாவின் பிற மாநிலங்களிலுள்ள புரட்சிகரச் சக்திகளுடன் அவருக்குக் கிடைத்த உறவுகள் அவரை இன்னும் உறுதியான , மேலும் அர்ப்பணிப்பு மிக்கத்   தோழராக மலர வைத்தன.  2022 நவம்பர் 26,27 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற அக்கட்சியின்  மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அக்கட்சியை 28 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவதிலும் இடதுசாரி ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்பதிலும் அயராது உழைத்துவந்த தோழர் நடராஜன்,   2019ஆம் ஆண்டிலிருந்தே இடதுசாரி, ஜனநாயக, முற்போக்குச் சக்திகளை   ஒரு பாசிச- எதிர்ப்பு மேடையில் கொண்டு வருவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார். 

அண்மையில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு மாநாட்டில் எல்லா இடதுசாரிக் கட்சிகளின், ஜனநாயக சக்திகளின் தலைவர்கள், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த போராளிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோரை ஒரே மேடையில் சங்கமிக்க வைத்தார்.

2023 பிப்ரவரியில் பாட்னாவில் நடைபெற இருக்கும் கட்சிக் காங்கிரசை வெற்றி பெறச் செய்ய மாநிலம் முழுவதும்  சுழன்று சுழன்று பணியாற்றினார்.  இருதயக் கோளாறு கொண்டிருந்த அவர், தோழர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகும் உரிய மருந்துகள் எடுத்துக் கொள்வதைவிட உழைக்கும் மக்களுக்காக உழைப்பதிலேயே தன் நேரத்தைச் செலவிட்டு வந்தார்.

கடந்த ( 2022)  டிசம்பர் 10  அன்று (மனித உரிமை நாளில்) கட்சியின் திண்டுக்கல் மாவட்டக் குழுக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் போதே, அவருக்கு  மூச்சுத் திணறல் ஏற்பட்டது.  முதல் உதவி சிகிச்சைக்குப் பின் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். மூச்சுத் திணறல் தீவிரமடைந்ததால், அங்கேயே அவரது இறுதி மூச்சும் அடங்கியது. 

11-12-2022 அன்று பிற்பகல் 4 மணி அளவில் அவரது சொந்த ஊரான அரசப்பள்ளப்பட்டியில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.  லிபரேஷன் கட்சியின் மாநிலத் தலைவர்களும் ஊழியர்களும் இடதுசாரி, முற்போக்கு ஆளுமைகளும் அஞ்சலி செலுத்தினர்.

வரும்  (டிசம்பர் 2022) 22ஆம் நாள் கோவை நகரில் அவரது அஞ்சலிக் கூட்ட நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் உள்ளிட்ட பல இடதுசாரித் தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களின் உள்ளத்தில் அவர் என்றென்றும் உயிரோடுதான் இருப்பார் என்பது உறுதி.

சிபிஐ(எம்-எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் மறைவு

ஒட்டன்சத்திரம் அரசப்பபிள்ளைபட்டியில்  வைக்கப்பட்டியிருந்த தோழர் என்.கே.நடராஜன் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செவ்வணக்கம் செலுத்தினார். 

சென்னை, டிச.11- சிபிஐ(எம்-எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயற்குழு  இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் (67), திண்டுக்கல் நகரத்தில் கட்சி கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.

தோழர் என்.கே.நடராஜன், கல்லூரி காலத்திலேயே மார்க்சியத்தின்பால் ஈடுபாட்டுடன் இருந்தவர். சாருமஜூம்தார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டு தன்னை சிபிஐ(எம்-எல்) விடுதலை கட்சியில் இணைத்துக் கொண்டவர். 1980 களில் கட்சியின் முழுநேர ஊழியராக ஆன அவர், நீலகிரியில் உள்ள மலைவாழ் மக்க ளுக்காக போராடியவர். கோவை மாவட்ட ஆலைத் தொழிலாளர்களையும் மற்றும் குமாரப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதி களில் உள்ள விசைத்தறி தொழி லாளர்களையும் ஒருங்கிணைத்து சங்க மாக்கி பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். 2019 இல் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட அவர், 2022 இல் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டிலும் மீண்டும் செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இடதுசாரி ஒற்றுமையை கட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர். இடதுசாரிக் கட்சிகள்  சார்பில் கூட்டு இயக்கங்கள் நடத்துகிற பொழுது, தவறாமல் அதற்கான கூட்டங் களில் கலந்து கொள்வதுடன், மாநிலம் முழு வதும் அவரது கட்சித் தோழர்களை கலந்து கொள்ளச் செய்வார். அவரது மறைவு இடதுசாரி இயக்கத்திற்கு பேரிழப்பாகும். அவரது இழப்பால் வாடும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கும் கட்சித் தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

அஞ்சலி 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசப்பபிள்ளைபட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தோழர் என்.கே.நட ராஜன் உடலுக்கு மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட தோழர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version