Site icon சக்கரம்

பொறாமை + பொய்கள்+ வன்மம் = பாரதிய ஜனதாக்கட்சி!

-ஆர்.எம்.பாபு

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொழிலாளிகள், விவசாயிகள் மீது வன்மத்துடன் செயல் படுகிறது ! உழைக்கும் வர்க்கம் அரசை எதிர்த்து கேள்வி கேட்டாலோ, சற்றே வளர்ச்சி அடைந்தாலோ  அதைக் கண்டு பொறாமையோடு விமர்சனம் செய்கின்றனர். அண்ணாமலையின் ரபேல் வாட்ச் (Raphael Watch) உண்மை என்ன?

அய்யாக்கண்ணு விவகாரம்

விவசாய சங்க நிர்வாகி அய்யாக்கண்ணு பல நாட்களாக டெல்லியில் மோடி ஆட்சிக்கு எதிராக அற வழி போராட்டங்களை தொடர்ந்த போது அவரை “ஆடி கார் அய்யாக்கண்ணு.  அவர் ஒரு விவசாயியா?” என்று  பா.ஜ.க தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட  பாஜகவினர் தனிப்பட்ட முறையில் விமர்சித்து விவசாயிகளின் போராட்டத்தை கொச்சை படுத்தினார்கள்.

டெல்லி விவசாயிகள் போராட்ட விவகாரம்
பா.ஜ.க கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை எதிர்த்து டெல்லியிலே ஆறு மாத காலம் மன உறுதியுடன் போராடினார்கள். இதி நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அப்படி வெயில், மழை,பனி என்று பாராமல் போராடி வந்த விவசாயிகளைப் பார்த்து “இவர்கள் விவசாயிகள் அல்ல.  தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள்.  இவர்கள் வாஷிங் மெஷின், ஹீட்டர், ஏசி போன்ற சகல வசதிகளோடு உல்லாசமாக இருக்கிறார்கள்” என்று தனிமனித தாக்குதலும் அவர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தினார்கள்.

ராகுல் காந்தி T-SHIRT விவகாரம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் “ஜோடோ யாத்திரையில் அவர் அணிந்திருந்த T-SHIRT விலை ரூ. 37,000/-. இளவரசர் இப்படி அணிந்து செல்கிறார்” என்றும் விமர்சனம் செய்து தனி மனித தாக்குல் தொடுத்தனர் பா.ஜ.கவினர்.

முதல் இரண்டு சம்பவங்களும் விவசாயிகள் சார்ந்த ஒன்று.  இடதுசாரிகளை பொறுத்தவரை நம் விவசாயிகள் மாட மாளிகையில் சகல வசதிகளோடு வாழ வேண்டும் என்பது தான் நோக்கம். விவசாயிகளை வசதியாக வாழ வைப்பதில் தான் ஓர் அரசுக்கான வெற்றி இருக்கிறது.  அப்படி வசதி வாய்ப்போடு வாழ்ந்தால் அதில் என்ன தவறு இருக்கிறது?  அது நம் நாட்டிற்கும், நமக்குமான பெருமை தானே.  இப்படி தான் ராகுல் காந்தி அவரது ஆடைகளை தேர்வு செய்வதில் அவருக்கான உரிமை இருக்கிறது. டிஷர்ட் விலை குறித்த பாஜகவின் தகவல் மிகைப்படுத்தப்பட்ட பொய். அது திருப்பூரில் வாங்கப்பட்டதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்த அடிப்படையில் தான் “நான் ஒரு ஏழை விவசாயி.  எனக்கு சில ஆடுகளும் கொஞ்சம் நிலமும் இருக்கிறது.” என்று அண்ணாமலை சொன்ன போது அதில் விமர்சிக்க எதுவும் இல்லை.  அண்ணாமலையின் தேர்தல் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கு  20.78 ஏக்கர் புன்செய் நிலமானது இன்றைய சந்தை மதிப்பு படி 1 கோடி இருப்பதாக அறிவித்துள்ளர்.  அசையும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 1,21,13,849/- என்று அறிவித்துள்ளார்.  இது நடுத்தர வர்க்கத்தின் சொத்து மதிப்பு தான்.  ஆனால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் சில பத்திரிக்கையாளர்கள் BORN WITH SILVER SPOON என்பதை போன்று அண்ணாமலையை மிகப்பெரிய நிலக்கிழார் என பூதாகரமாக உருவகப்படுத்துவது பொய் என்பதை அவரது தேர்தல் பத்திரம் உறுதி செய்கிறது.

21 ஏக்கர் புன்செய் நிலம் கொண்டவரால் 7 லட்ச ரூபாய் பெறுமானம் உள்ள கைக்கடிகாரம் கட்டுவது பெருமையே! இப்படி எல்லா விவசாயிகளும் மேன்மை அடையவேண்டும் என்பது தான் எங்கள் கனவும் ஆசையும்.

அண்ணாமலை அணிந்திருக்கும் அந்த கைக்கடிகாரம் பற்றிய விவகாரம் பூதாகரமாகி இருக்கிறது.  இந்த அளவுக்கு சர்ச்சை ஆகி இருப்பதற்கு காரணம் அண்ணாமலையின் தான் தோன்றித்தனமான முதிர்ச்சி அற்ற பேச்சும், செயல்களுமே!  இந்த கைக்கடிகாரம் பற்றி பேசவேண்டுமானால் RAPHAEL பற்றியும் பேசி ஆக வேண்டி இருக்கிறது.

RAPHAEL கைக்கடிகாரம்
Raphaelஎன்பது DASSAULT AVIATION எனும் பிரெஞ்சு நாட்டின் நிறுவனம். இந்த விமானங்களை வாங்குவதில் பா.ஜ.க செய்த ஊழல்கள் ஊரறிந்த உண்மையாகும். இந்த DASSAULT AVIATION நிறுவனம் தனது 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு BR0394-RAFALE-CE எனும் பெயரில் பிரத்தியேகமாக வடிவமைத்து 500 கடிகாரங்களை மட்டும் சந்தைக்கு 2015 ஆம் ஆண்டு கொண்டு வந்தது.  அதன் அன்றைய விலையாக $ 6,205/- (1$ = 59 – 2015) ரூ. 3.6௦ லட்சத்திற்கு விற்கப்பட்டது.  500 கைக்கடிகாரங்களும் 2017 ஆம் ஆண்டு விற்று தீர்ந்து விட்டது.

பா.ஜ.க அண்ணாமலையும், அறிவற்ற பேச்சுக்களும்
தமிழக பா.ஜ.கவில் சமீப காலமாக உட்கட்சி பிரச்சினையில் பல்வேறு நபர்கள் மீதான விதமான காணொளிகளும், உரையாடல்களும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் கையில் இருக்கும் BR0394-RAPHAEL-CE விலை உயர்ந்த கடிகாரத்தின் மூலமாகவும் மற்றவர்கள் பேசுவதை பதிவு செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இந்த கைக்கடிகாரத்தை அவர் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார் என்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் கசிந்தது.  அந்த அடிப்படையில் தான் இவ்வளவு விலை உயர்ந்த கடிகாரத்தை அண்ணாமலை தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்யவில்லை என்ற செய்தியும் சமூக ஊடகங்களில் கசிய துவங்கியது.  இந்த கைக்கடிகாரத்தின் ரசீது இருந்தால் அதை சமர்ப்பிக்க சொல்லி அமைச்சர் செந்தில் பாலாஜி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

அண்ணாமலை தனது மார்ச்-18, 2021 தேதியிட்ட தேர்தல் பிரமாண பத்திரத்தில் இந்த கைக்கடிகாரத்தை பற்றிய தகவல் தாக்கல் செய்யவில்லை.  அதோடு, இந்த கைக்கடிகாரத்தை அவர் பணியில் இருந்த காலத்திலேயே அணிந்து வந்ததாக அவரது நெருங்கிய பெங்களூர் நண்பர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள்.  அவரது அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவின.

இதற்கிடையில் பத்திரிகையாளர்களிடம் அண்ணாமலை, ரபேல் எனும் நிறுவனம் தயாரித்த 500 கடிகாரங்களில் தனது கைக்கடிகாரம் 149 வது என்றும், இது ரபேல் விமானத்தின் பாகங்களால் செய்யப்பட்டது என்றும் தேசபக்திக்காக வாங்கப்பட்டது என்றும், இது மே – 2021 லே வாங்கப்பட்டது என்றும் சொன்னார்.

மேலும், இதுவரை யாரும் செய்திடாத வண்ணம் அவர் அரசுப்பணியில் சேர்ந்தது முதல் இன்றைய நாள் வரை தனது வங்கி பரிவர்த்தனைகளையும் தனது மனைவி தன்னை விட 7 மடங்கு வருமானம் ஈட்டுவதாகவும் அவரது வங்கி கணக்கையும் தான் பாத யாத்திரை புறப்படும்போது சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.  அதோடு, இதே போல ஒவ்வொரு சட்ட மன்ற உறுப்பினரும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.  மேலும் தான் அரசியலுக்கு வந்த பின்னர் தனது மனைவியோடு எங்கும் செல்வதில்லை என்றும், தனது மீது சேறு வீசுபவர்கள் மனைவி மீதும் வீசுவார்கள் என்பதால் அப்படி செல்வதில்லை என்று காரணமும் சொல்லி இருந்தார். அண்ணாமலை அவர்கள் காவல்துறையில் பணியாற்றியவர். அவரின் இந்த பேட்டியின் மூலம் நமக்கு எழும் கேள்விகள்:-

# பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் கடிகாரத்தை அணிவது எப்படி தேசபக்தியாகும்?

#  ஒவ்வொரு அதிகாரியும் வருடா வருடம் தனது வரவு செலவு, தனது மற்றும் தனது குடும்பத்தார் பெயரில் இருக்கும் அசையும், அசையா சொத்துக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி என்பது திரு அண்ணாமலை அவர்களுக்கு தெரியாதா?  ஏதோ இதுவரை இல்லாத ஒன்றை இவர் தான் புதியதாக கடைபிடிக்க போவதை போன்று பிதற்றுவது எதற்காக?

#  ஒவ்வொரு ஆண்டும் வருமான வரித்துறையில் தனது வருமான விபரங்களை வருமான வரி வரம்புக்கு உட்பட்ட அனைவருமே தாக்கல் செய்கிறார்கள்.  சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களும் தாக்கல் செய்கிறார்கள்..  இதுவும் அண்ணாமலைக்கு தெரியாதா?  அப்படி தாக்கல் செய்யும் கணக்கு வழக்குகள் மீள் பரிசோதனைக்கு எட்டு வருட காலம் வரை உட்பட்டது என்பது அண்ணாமலை அவர்களுக்கு தெரியாதா?

#  நாகரீகமான அரசியலில் இருக்கும் தமிழகத்தை, தமிழக மக்களை நோக்கி சேறு வாரி இறைப்பது போல தனது குடும்பத்தார் மீதும் இறைப்பார்கள் என்று பேசி இருப்பது தமிழக மக்களை அவமதிப்பது ஆகாதா?  இந்த நாட்டிலே பெண்கள் அரசியலுக்கு வருவதும் பிரகாசிப்பதும் சம உரிமைகள் வழங்கும் பழக்கமும் உள்ள தமிழகத்தில் பிற்போக்கு தனமான வாதங்களை வைப்பது அண்ணாமலைக்கு இழுக்காக தெரியவில்லையா? ஒருவேளை தன் கட்சிக்காரர்களின் மீதுள்ள பயத்தால் அண்ணாமலை இப்படி பேசியிருக்க கூடுமோ, என்னவோ?

#  யாரும் அவரது மனைவியின் வருமானத்தை பற்றி பேசாத பொழுது அந்தம்மாவையும் வீம்பாக இழுத்து, அவங்க அனுமதி இன்றி பேசியதோடு, தன்னை விட ஏழு மடங்கு அதிகமாக ஈட்டுவதாக கூறியுள்ளாரே , அதை தேர்தல் பத்திரத்தில் காட்டவில்லையே! எனில், அவரது தேர்தல் பத்திரத்தில் காட்டப்பட்டு இருக்கும் தரவுகளை மீறி பொய்யாக பேசுகிறாரா? இது அண்ணாமலைக்கு அவமானமாக இல்லையா? அவர் சொல்லும் 7 மடங்கு வருவாய் என்பது கூட அவரது தேர்தல் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் பொய்யானது என்பது நிரூபணமாகிறது.

“காயத்ரி ரகுராம், குஷ்பு ஆகியோர் என்னை சந்திக்க வரும்போது நான் எனது அறைக்கதவுகளை திறந்து வைத்து தான் சந்திப்பேன்” என்பதுவும், “காயத்திரி ரகுராம் துபாய் ஹோட்டல் அறையிலே என்ன செய்தார் என்பது எனக்கு தெரியும்” என்பதுவும் பெண்களை இழிவுபடுத்துவதாகவும், தனி நபரின் படுக்கை அறைக்குள் எட்டி பார்க்கும் அவலமான செயல் என்பது அண்ணாமலை உணரவில்லையே?

அண்ணாமலையும் ரபேல் கைக்கடிகார சிக்கல்கள்;
இந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அண்ணாமலை அவர்கள் 2016 லிருந்தே பயன்படுத்தி வந்ததாக அவரது நெருங்கிய நண்பர்கள் காணொளி வாயிலாகவும் புகைப்படங்கள் வாயிலாகவும் ஆதாரங்களை பகிர்ந்து வருகிறார்கள்.  அப்படி அண்ணாமலை அவர்கள் இதை வாங்கி இருந்தால் கீழ்க்கண்ட சட்ட பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

# பணியில் இருக்கும் காலத்தில் அன்பளிப்பாக வாங்கி இருந்தால், அந்த தகவலை அரசுக்கு தெரிவித்து இருக்க வேண்டும். அனுமதியை பெற்று இருக்கவேண்டும். அதோடு, அவரது ஆண்டு அறிக்கையில் இதற்கான மதிப்பை தாக்கல் செய்திருக்க வேண்டும். செய்யவில்லை.

#  பணியில் இருக்கும் காலத்தில் விலைக்கு வாங்கி இருந்தால், அதற்கான இறக்குமதி வரியை கட்டி இருக்கவேண்டும். அந்த ரசீது அவரிடம் இருக்கவேண்டும்.  அவரிடம் இல்லை.

#  மே மாதம் 2021 லே தேர்தலுக்கு பின்னர் தான் வாங்கியதாக சொல்லும் அண்ணாமலை, அவர் என்ன விலைக்கு இறக்குமதி செய்தார்.  இறக்குமதி செய்யும்போது அவர் கட்டவேண்டிய இறக்குமதி வரி, சுங்க வரி அனைத்தும் கட்டி அதன் இன்றைய மதிப்பீட்டிற்கு அவரது வருமான வரி மார்ச்-31, 2022 வரைக்குமான அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கவேண்டும்.  அதை அவர் குறிப்பிடவில்லை.

#  இவர் வாங்கியதாக சொல்லும் 149 வது கைக்கடிகாரம் விற்கப்பட்ட ஆண்டு 2016.  5 ஆண்டுகள் கழித்து அண்ணாமலை கைகளில் எப்படி வந்திருக்கும்? அவர் நேரடியாக வாங்கியதாக அறிக்கை விடுகிறார். இதுவும் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது.

#  இந்த கை கடிகாரத்தை யார் வாங்கி இருந்தாலும் அவர்கள் அதற்குரிய பணத்தையும் வரியையும் கட்டிய ரசீதை சமர்ப்பித்தாக வேண்டும்.  அவை இரண்டும் அண்ணாமலையிடம் இல்லை என்பது நமக்கு கிடைத்த தகவல்கள்.

தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக, பொய்களால் மட்டுமே அரசியல் செய்யும் அண்ணாமலையின் மலிவு அரசியலை தமிழக மக்கள் புரிந்து கொண்டார்கள்.  தமிழக மக்களை இன்னும் முட்டாள்கள் என்று நினைத்து இதே நடவடிக்கையை தொடர்ந்தால் அண்ணாமலை அரசியல் களத்தில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்பது உண்மை.  ஆகவே, பரிதாபத்திற்கும், பச்சாதாபத்திற்கும், உணர்ச்சி வயப்படுதலுக்கும் தமிழக மக்கள் மயங்கிவிட மாட்டார்கள் என்பதை மனதில் கொண்டு, ஆரோக்கியமான பண்பட்ட அரசியலை அண்ணாமலை முன்னெடுக்க வேண்டும்.

Exit mobile version