Site icon சக்கரம்

புதையும் ஜோஷிமத் நகரம்!

-த. நிவேதா

லைகளின் நகரமாகக் கருதப்படும் `ஜோஷிமத்’ உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. இது சரியாக, கடல் மட்டத்திலிருந்து 1,875 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இமயமலையில் ஏறுவதற்கு நுழைவு வாயிலாகவும், புனிதத்தலமான `பத்ரிநாத்’ கோயிலுக்குச் செல்லும் வழியிலும் இந்த ஊர் அமைந்திருக்கிறது.

இந்த நிலையில், அண்மையில் ஜோஷிமத் நகரத்தில் பல கட்டடங்களிலும், நிலத்திலும் விரிசல் ஏற்பட்டது. மக்கள்தொகை அதிகம்கொண்ட மற்றும் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை தரும் இந்த நகரம் தற்போது பூமிக்குள் புதையும் ஆபத்தில் இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில் 678 கட்டுமானங்களில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அந்தக் கட்டடங்களில் குடியிருந்த 169-க்கும் அதிகமான குடும்பங்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.

இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்திருக்கிறார் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. மேலும், அவர்களை மறுகுடியமர்த்த இரண்டு தனிக்குழுக்களை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இது குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழு, பாதிக்கப்பட்ட கட்டடங்களை மொத்தமாக இடிப்பதற்குப் பரிந்துரை செய்திருக்கிறது. அதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. ஒருபுறம், மாநிலப் பேரிடர் மீட்புப்படை சார்பாக எட்டுக்குழுக்கள் ஜோஷிமத்துக்கு விரைந்திருக்கின்றன. அந்தப் பகுதியிலிருக்கும் கட்டடங்களை இடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இந்தப் பணிகளை மேற்கொள்ள ரூ.2.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடன் தேசியப் பேரிடர் மீட்புப்படையும் இணைந்து பணிகளை முடுக்கியிருக்கிறது. ஆனால், வானிலை சரியில்லாத காரணத்தால் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. மறுபுறம், இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்.டி.பி.சி.எல் (National Thermal Power Corporation Limited) எனக் கூறி, மக்கள் அதற்கு எதிராக தங்கள் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

ஜோஷிமத்துக்கு ஏன் இந்த நிலை?

பருவநிலை மாற்றம், அதிகரித்த சுற்றுலாப்பயணிகளின் வருகை, அதனால் அதிகரித்த கட்டுமானப் பணிகளின் விளைவாக இந்தப் பாதிப்புகள் பெரும் அளவில் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மத்திய அரசால் தொடங்கப்பட்ட நீர்மின் நிலையம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த அமைக்கப்படவிருக்கும் 900 கி.மீ சாலைத் திட்டமும் இந்தப் பேரழிவுக்கான முக்கிய காரணமெனச் சொல்கிறார்கள். இந்த நிலையில்தான், மக்கள் அனைவரும் இந்த நீர்மின் நிலையம் அமைக்கும் என்.டி.பி.சி.எல்-க்கு எதிராகப் போராட்டத்தையும் நடத்திவருகின்றனர்.

ஜோஷிமத் பகுதியில் விரிசலடைந்த வீடுகள்

என்.டி.பி.சி.எல்-ன் நீர்மின் நிலையம் காரணமா?

ஜோஷிமத் நகரத்துக்கு அருகில் இயங்கிவரும் தேசிய அனல்மின் நிலையமான என்.டி.பி.சி.எல்-ஆல் கொண்டுவரப்பட்ட நீர்மின் நிலையத்தால் இந்த அழிவு ஏற்பட்டிருக்கிறது என்ற மக்களின் குற்றச்சாட்டை உறுதிசெய்யும் வகையில், இந்த விவகாரத்தில் புவியியலாளர்களும் அதே கருத்தை முன்வைக்கின்றனர். ஜோஷிமத்திலிருந்து சுமார் 12 – 15 கி.மீ தொலைவில் இந்த நீர்மின் நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடந்துவருகின்றன. குறிப்பாக, நிலையத்துக்காக தபோவன்-விஷ்ணுகட் இடையே அமைக்கப்படும் சுரங்கப்பாதையால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜனிடம் பேசினோம். “இமயமலை எளிதல் உடையக்கூடிய பாறைகளால் உண்டானது. அது மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள பாறைகளைப்போல் உறுதியாக இருக்காது. அதனால், அங்கு அடிக்கடி நிலச்சரிவு, நிலநடுக்கம் ஏற்படும். அவ்வாறு, 1,000 ஆண்டுகளுக்கு முன்பு நிலச்சரி ஏற்பட்டு அதன்மீது உருவான ஒரு நகரம்தான் ஜோஷிமத். ஜோஷிமத் போன்ற இயற்கை அமைப்புகொண்ட இடங்களில் மின்நிலையங்கள் சார்ந்த திட்டங்களைக் கொண்டுவரக் கூடாது. இந்த வகையான நிலப்பரப்பில் தோண்டி வேலை செய்தால், சில நாள்களில் அது மொத்தமாக மண்ணில் புதைந்துவிடும். எடுத்துக்காட்டாக, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பச்சையப்பன் கல்லூரி சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அது ஏற்பட முக்கியக் காரணமாக இருந்ததே, முன்பு தோண்டப்பட்ட மெட்ரோ பணிக்கான குழிகள்தான். இதே நிலைதான் ஜோஷிமத் நகரத்துக்கு இயற்கையாக அமைந்த தன்மை. இதனால் அங்கு தோண்டி சுரங்கம் அமைப்பது பெரும் பாதிப்புகளை உண்டாக்கும்.

கடந்த 2021-ம் ஆண்டு சமோலி பகுதியிலிருந்த பனிப்பாறைகள் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். அங்கு நீர்மின் கட்டுமானமும் அடித்துச் செல்லப்பட்டது. ஜோஷிமத்-மலாரி பகுதியிலிருந்த 90 மீட்டர் பாலமும் அடித்துச் செல்லப்பட்டது. இதற்கும், தற்போது நடந்த நிகழ்வுக்கும் தொடர்பில்லை என்றாலும், இவை அனைத்தும் நடந்திருப்பது இயற்கை அழிப்பு என்னும் ஒரு தளத்தில்தான். இதனால் அனைத்துத் திட்டங்களையும் சுற்றுச்சூழல் பார்வைகொண்டு பார்க்க வேண்டும். ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மொத்தமாக ஊரையே அழிக்கின்றனர்.

இது அந்த ஊரோடு நிற்காது. அடுத்ததாக, டேராடூன் மற்றும் அதற்கு அருகிலிருக்கும் அனைத்து ஊர்களும் இன்னும் சில ஆண்டுகளில் மொத்தமாக அழியும் சூழல் உருவாகும்.

அதிலும் அதிகமாக நிலநடுக்கம், மண்சரிவுகளைச் சந்திக்கும் பகுதிகளில் இது போன்ற திட்டங்களைக் கொண்டுவருவது மிகவும் ஆபத்தானது. இனி அங்கு ஏற்படும் அழிவுகளெல்லாம் இயற்கையாக உருவானதாக இருக்காது. மனிதனால் உந்தப்பட்ட நிலநடுக்கங்களாக (Human Induced Earthquakes) மட்டுமே இருக்கும்” என்றார்.

பல ஆண்டுகளாகவே, ஜோஷிமத் நகரத்தில் இது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து பேசிவருகிறார்கள். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கட்டுமானத்துக்கு அனுமதி வழங்கி, சுற்றுலாத்துறையை மேம்படுத்த சாலைகளை அமைத்தது உத்தரகாண்ட் அரசு. “இப்படித் தொடர்ந்து வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டதே இந்த அழிவுக்கான காரணம். ஒரு திட்டத்தைக் கொண்டு வரும்போது மக்கள் நலன், பொருளாதார நலன் என்பதைக் கடந்து, இயற்கைக்கு என்ன பயன் என்பதை உற்றுநோக்க வேண்டும். அதை தீவிரமாகச் செயல்படுத்தவேண்டிய கட்டாயமும் கடமையும் அரசுகளுக்கு இருக்கின்றன” என்கின்றனர் சூழலியல் செயற்பாட்டாளர்கள்.

என்.டி.பி.சி.எல் அமைந்திருக்கும் பகுதி
Exit mobile version