Site icon சக்கரம்

காந்தி கொலையும், ராமர் கோயிலும்: ஒரு கருத்தியலின் இரு வெளிப்பாடுகள்!

-ராஜன் குறை

காந்தி ராமர் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவருடைய விருப்பத்துக்குரிய இறை வணக்கப் பாடல் “ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்” என்ற பாடலாகும். அதில் அவர் “ஈஷ்வர் அல்லா தேரோ நாம்” என்ற வரியையும் சேர்த்துக்கொண்டார். அதாவது ஈசுவரன், அல்லா போன்ற பெயர்களும் உனக்கு உண்டு என்று கூறினார்.

இறைமையை ஒரு குறிப்பிட்ட கடவுளாக சுருக்கி, அந்த கடவுளுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு, பிற கடவுள்களை வழிபடுபவர்களை விரோதிகளாகப் பார்க்கும் மத அடையாளவாதத்தை அவர் முற்றிலும் மறுத்தார்.

அதனால்தான் இந்து மகாசபா, ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளால் உருவாக்கப்பட்ட இந்து அடையாளவாதம், சாவர்க்கரின் இந்துத்துவ சித்தாந்தம், அவரை கொன்றது. அதாவது அந்தக் கருத்தியலினால் உருவான நாதுராம் கோட்ஸே அவரை கொன்றார். அவரை கொன்றதன் மூலம் தன்னுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடை என்று அது நம்பிய இறை நம்பிக்கையாளரை அது அகற்றியது.

காந்தி கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 78. மேலும் ஒரு பத்து, பதினைந்து ஆண்டுகள் அவர் வாழ்ந்திருந்தால் சுதந்திர இந்தியாவின் வரலாறு வேறு மாதிரியாக வடிவமைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் தந்தை பெரியார், அவர் இறந்த பிறகு இந்திய நாட்டிற்கு “காந்தி தேசம்” எனப் பெயரிட வேண்டும் என்று கூறினார்.

ஆனால், காந்தி கொலை இந்து மகாசபா உள்ளிட்ட அமைப்புகளுக்கு மக்களிடையே செல்வாக்கைப் பெற்றுத் தரவில்லை. காந்தியின் வெகுஜன செல்வாக்கு அளப்பரியது. அதனால் இந்த அமைப்புகள் கணிசமாக பலவீனப்பட்டு போயின. எப்படி மீண்டும் வலுப்பெற்று எழுவது என்று யோசித்த போதுதான் அவர்கள் பாபர் மசூதிக்குள் ராமர் சிலையை கொண்டுபோய் வைத்து அதை ராம ஜென்ம பூமி என்று கூறும் திட்டத்தை வகுத்தார்கள்.

காந்தி கொலை செய்யப்பட்ட நாள் சரியாக எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஜனவரி 30, 1948. அதற்கு அடுத்த ஆண்டு டிசம்பர் 22, 1949 அன்றுதான் நள்ளிரவில் ராமர் சிலையை பாபர் மசூதிக்குள் எடுத்துக்கொண்டு போய் வைத்தார்கள். விடிவதற்குள் ஒரு கூட்டத்தை திரட்டி மறுநாள் காலையே ஒரு அற்புதம் நிகழ்ந்துவிட்ட து, ராமர் தானாகவே மசூதிக்குள் தோன்றிவிட்டார் என்ற செய்தியைப் பரப்பினார்கள். ஆனால் ஜவஹர்லால் நேரு அரசாங்கம் இந்தப் புரளியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, அந்த வளாகத்திற்கு பூட்டு போட்டுவிட்டது.

ஆனால் அன்று விதைத்த விதை, நாற்பதாண்டுகள் கழித்து மீண்டும் ராமஜென்ம பூமி இயக்கமாக உருவானது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி கரசேவை என்ற பெயரில் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடத்தில் இப்போது அரசின் மேற்பார்வையில் மிகப்பெரிய ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் அது வழிபாட்டுக்குத் திறக்கப்படும்.

ராமருக்கு கோயில் கட்டுவது தவறல்ல; நாட்டில் பல ராமர் கோயில்களும், ஏராளமான அனுமார் கோயில்களும் உள்ளன. பாபர் மசூதியை இடித்து அந்த இடத்தில் கோயில் கட்டுவதை இந்து அடையாளவாத அரசியலின் வெற்றியாக பார்ப்பதுதான் பிரச்சினை. காந்தி கொலையை ஆதரிக்காத இந்திய மக்கள், இந்திய அரசியல் குறியீடான கோயிலை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதற்கு காலம்தான் பதிலளிக்க வேண்டும்.

கொலைக்கும், கோயிலுக்கும் இணைப்புக் கண்ணி: மஹந்த் திக்விஜய் நாத் (1894-1969)

காந்தி கொலையையும், ராமர் கோயிலையும் நேரடியாக இணைக்கும் கண்ணியாக இருப்பவர் மஹந்த் திக்விஜய் நாத். இந்து மகாசபையின் உத்தரப்பிரதேச தலைவராக இருந்த இவர், காந்தி கொலையுறுவதற்கு மூன்று நாள் முன்பு ஜனவரி 27ஆம் தேதி டில்லி கனாட் பிளேசில் நடந்த கூட்டத்தில் காந்தி கொல்லப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். அதனால் காந்தி கொலை செய்யப்பட்ட பின்பு கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு சதியில் தொடர்பிருந்தது என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் கிடைக்காததால் ஒன்பது மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.

அவ்வாறு விடுதலையான பிறகு திக்விஜய் நாத்தின் முன்முயற்சியில்தான் பாபர் மசூதிக்குள் ராமர் சிலையை கொண்டு வைக்கும் சதித்திட்டம் உருவாகி, நிறைவேற்றப்பட்ட து என்பதை விரிவான தரவுகளுடன் எடுத்துரைக்கிறார்கள் கிருஷ்ணா ஜா மற்றும் திரேந்திர கே.ஜா தங்களது Ayodhya: The Dark Night, The Secret History of Rama’s Appearance in Babri Masjid (2012) என்ற நூலில்.

திக்விஜய் நாத் கோரக்பூரில் உள்ள கோரக்ஷ நாதர் பீடத்தின் மஹந்த். அதுவரை உத்தரப்பிரதேச இந்து மகாசபா தலைவராக இருந்த அவர், மசூதிக்குள் ராமர் சிலையை கொண்டு வைக்கும் செயலை செய்து முடித்தபின் இந்து மகாசபையின் அகில இந்திய பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1967ஆம் ஆண்டு ஜனசங்க வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.

திக்விஜய் நாத் 1969ஆம் ஆண்டு மரணமடைந்த பின், அவருக்குப்பின் மஹந்த்தாகப் பொறுப்பேற்ற அவைத்திய நாத்தும் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கினார். அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைய மஹந்த்தான யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முதல்வராக இருக்கிறார். கோரக்பூர் மடத்தை இவ்வாறு இந்துத்துவ அரசியலின் முக்கிய கேந்திரமாக மாற்றியவர் திக்விஜய் நாத்.

காந்தியைக் கொன்றபோது கோட்சே இந்து மகாசபா உறுப்பினராக இருந்தாரா, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்தாரா என்றெல்லாம் தொலைக்காட்சிகளில் விவாதிப்பவர்கள் இது போன்ற தொடர்புச் சங்கிலிகளை விவாதிப்பதில்லை. காந்தி கொல்லப்படவேண்டும் என்று திக்விஜய் நாத் பொதுக்கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியது, காந்தி கொலையை ஆராய்ந்த நீதியரசர் ஜீவன் லால் கபூர் விசாரணை கமிஷன் ஆய்வறிக்கையில் பதிவாகியுள்ளது.

அப்படிப் பேசியவர்தான் இந்து மகாசபை தேசிய பொதுச்செயலாளர் ஆகிறார். ஜனசங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிறார். அவரைத்தொடர்ந்து கோரக்பூர் மஹந்துகள் இந்துத்துவ அரசியலில் முக்கிய பதவிகளை வகித்து வருகிறார்கள். கோரக்பூரிலிருந்து நூற்று முப்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயிலை கட்ட வித்திட்ட திக்விஜய் நாத்தின் பெருமையும் இந்தத் தொடர்ச்சிக்கு முக்கிய காரணமென யூகிக்கலாம்.

டென்னிஸ் விளையாட்டும், ராமஜென்ம பூமியும்

திக்விஜய் நாத் என்ற மஹந்த், பல்ராம்பூர் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த பிரசாத் சிங், கோண்டா மாவட்ட நீதிபதி மற்றும் உதவி கமிஷனராக இருந்த கே.கே.கே.நாயர் ஆகிய மூவரும்  டென்னிஸ் விளையாட்டில் ஆர்வமுடையவர்கள். டென்னிஸ் விளையாட்டில் இவர்களுக்குள் உருவான நட்புதான் திக்விஜய் நாத் கே.கே.கே. நாயர் உதவியுடன் ராமர் சிலையை மசூதிக்குள் நிறுவும் சதியை நிறைவேற்ற காரணமாக இருந்தது என்கிறது “ஆயோத்தியா: இருண்ட இரவு” நூல். இவர்கள் மூவரையும் அறிந்துகொள்வது அவசியம்.

மஹந்த் திக்விஜய் நாத்தின் இயற்பெயர் நன்னூ சிங். இவர் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் பிறந்தவர். இவர் சிறுவனாக இருக்கும்போதே பெற்றோர்கள் இறந்துவிட்டனர். இவருடைய சிறிய தந்தை இவரை தேசாந்திரியான நாத் பந்த் சன்னியாசியிடம் கொடுத்துவிட்டார். அந்த சன்னியாசிதான் சிறுவன் நன்னூ சிங்கை கோரக்பூரில் உள்ள கோரக்நாதர் கோயிலுக்கு அழைத்து வந்தார். அங்கே கோரக்ஷபீடத்தில் வளர்க்கப்பட்ட அவர் பள்ளி, கல்லூரி படிப்பினை மேற்கொண்டார். ஆனால் 1920ஆம் ஆண்டு அரசியலில் ஈடுபாடு கொண்ட அவர் 1922ஆம் ஆண்டு நடந்த செளரி-செளரா கலவரத்தில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதுதான் இவர் டென்னிஸ் விளையாடப் பழகினார். 1933ஆம் ஆண்டு இவர் குருவான மஹந்த் பிரம்ம நாத்தால் இவர் சன்னியாசம் வழங்கப்பட்டு திக்விஜய் நாத் என்று பெயரிடப்பட்டார். 1935ஆம் ஆண்டு மஹந்த்தாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து 1939ஆம் ஆண்டு இந்து மகாசபையில் இணைந்தார்.

மகாராஜா பிரசாத் சிங் 1914ஆம் ஆண்டு பிறந்தவர். பிரிட்டிஷ் அதிகாரி கர்னல் ஹான்சனால் வளர்க்கப்பட்டவர். அஜ்மீரில் கல்லூரியில் படிக்கும்போது டென்னிஸ் விளையாட்டில் விற்பன்னரானார்.

கே.கே.கே. நாயர் கேரள மாநிலத்திலுள்ள ஆலப்புழாவில் 1907ஆம் ஆண்டு பிறந்தவர். ஐ.சி.எஸ் அதிகாரியாகப் பணி நியமனம் பெற்று, கோண்டா மாவட்டத்துக்கு வந்தவர். அப்போதுதான் மகாராஜாவுடனும், மஹந்த் திக்விஜய் நாத்துடனும் டென்னிஸ் விளையாடும் நண்பரானார். இவர் ஜூன் 1949 முதல் மார்ச் 1950 வரை அயோத்தி அமைந்திருந்த ஃபைசாபாத் மாவட்ட அதிகாரியாக (கலெக்டர்/ மாஜிஸ்டிரேட்) விளங்கியதுதான் ராமர் சிலையை மசூதியில் வைக்கும் திட்டம் நிறைவேற முக்கிய காரணமாக விளங்கியது எனலாம்.

சிலை மசூதி வளாகத்தினுள் இரவு நேரத்தில் வைக்கப்பட்டதும், மறுநாள் காலை கே.கே.கே. நாயரின் மனைவி சகுந்தலா நாயர்தான் கூட்டத்தைக் கூட்டி அங்கே கீர்த்தனங்களை பாட வைத்தார். சகுந்தலா நாயர் முதல் பொதுத் தேர்தலிலேயே 1952ஆம் ஆண்டு இந்து மகா சபா வேட்பாளராக நாடாளுமன்றத்திற்கு கோண்டா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். கே.கே.கே. நாயர் பாபர் மசூதி விவாகரத்தில் நடந்து கொண்ட விதத்துக்காகப் பதவி விலக நேர்ந்தது. ஆனால் அதற்குள்ளாகவே அவர் நிறைய நிலங்களை வாங்கியிருந்தார். பின்னர் இவரும் 1967ஆம் ஆண்டு ஜனசங்கத்தின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

அயோத்தியில் நடந்தது என்ன?    

அயோத்தி என்ற ஊர் ராமாயணத்தில் ராமர் வாழ்ந்த, அரசாண்ட நகரம் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது. ஆனால் அந்த நகரத்தில் ராமர் எங்கே பிறந்தார் என்பதெல்லாம் யாராலும் திட்டவட்டமாகக் கூறப்படவில்லை. உள்ளபடியே சொன்னால் ராமாயணத்தை வட நாட்டில் அனைவரும் அறியும்படி அவதி மொழியில் ராமாயணம் எழுதிய துளசிதாசர் அயோத்தியில்தான் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார். அங்கே ராமர் பிறந்த இடத்தில் கோயில் இருந்ததற்கோ, அது இடிக்கப்பட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதற்கோ எந்த வாய்மொழி கதைகளும் துளசிதாசர் குறித்த வரலாற்றில் இடம்பெறவில்லை.

பின்னர் 1857ஆம் ஆண்டு  நிகழ்ந்த கலவரங்களில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக இருந்ததனால் அயோத்தியில் இருந்து ஹனுமான் கர் சன்னியாசிகள் குழுவினருக்கு ஆங்கிலேயர்கள் அனுசரணையாக இருக்கத் தொடங்கினார்கள். இதனை ஒட்டி, பாபர் மசூதி வளாகத்தின் வெளிப்புறப் பகுதியில் ஒரு மேடையொன்றை அமைத்து ராமர் சிலைகளை வைத்து அந்த சன்னியாசிகள் வழிபடத் துவங்கினார்கள். அதுதான் ராமர் பிறந்த இடம் என்று சொல்லி அங்கே கோயில் கட்டிக்கொள்ள அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்தார்கள். அனுமதி கிடைக்கவில்லை.

மஹந்த் திக்விஜய் நாத்தும், இந்து மகாசபாவும் தலையிடும் வரை பிரச்சினை பாபர் மசூதிக்கு வெளிப்புற பகுதியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையாகத்தான் இருந்தது. திக்விஜய் நாத் திட்ட த்தில்தான் முதல் முறையாக மசூதியையே முழுமையாக கைப்பற்றி கோயிலாக மாற்றும் எண்ணம் உருவானது. இந்தத் திட்ட த்தை நிறைவேற்றத்தான் அவர்கள் முதலில் வெளிப்புறமிருந்த மேடையில் ராமர் விவாகத்தை கொண்டாடுகிறோம் என்று நிகழ்ச்சியை துவங்கினார்கள். பின்னர் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான மன நிலையைப் பிரச்சாரம் செய்தார்கள்.

முத்தாய்ப்பாக அவர்கள் ஏற்பாடு செய்திருந்தபடி அபிராம்தாஸ் என்ற சாது, இந்து மகாசபா ஊழியர், ராமர் சிலையை  நள்ளிரவில் சுவரேறி குதித்து மசூதிக்குள் கொண்டு போய் வைத்தார். அன்று விதைத்தது இன்று கோயிலாக மாறியுள்ளது. மஹந்த் திக்விஜய் நாத்தின் விருப்பப்படியே காந்தி கொல்லப்பட்டார், ராமர் கோயிலும் கட்டப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும். முதல் நிகழ்வுக்கும், இரண்டாம் நிகழ்வுக்கும் இடையில் சுதந்திர இந்தியாவின் எழுபத்தைந்து ஆண்டு கால வரலாறு அங்கேறியுள்ளதை சிந்திப்பது அவசியம்.    

Exit mobile version