Site icon சக்கரம்

வரலாற்றில் தடம் பதித்த ராகுலின் மாபெரும் நடை பயணம்!

-சாவித்திரி கண்ணன்

”இதனால் எந்த நன்மையும் காங்கிரசுக்கு இல்லை! இது வெற்றுப் பயணம்” எனப் பல பத்திரிகைகள் எழுதுகின்றன! இமயமாய் உயர்ந்துள்ளது ராகுலின் இமேஜ்! தேசத்தை அன்பால் பிணைக்கும் காந்த சக்தியாகிவிட்டார்! இந்த நீண்ட, நெடிய நடை பயணம் ராகுல் காந்திக்கு மிக அசாதாரணமான அனுபவங்களை தந்துள்ளது!

அரசியல் லாப கணக்குகளை போட்டுக் கொண்டு – வெறும் ஓட்டு அரசியலைத் தாண்டி வேறெதையும் யோசிக்கவே முடியாத – இந்த காரியக்கார காவிகள் வேறெப்படித் தான் பேச முடியும்? இவர்களின் அறியாமையை என்னென்பது!

ராகுல்காந்தி மக்களை ஓட்டுவங்கியாக கருதி ஒற்றுமைக்கான இந்த நடை பயணத்தை அறிவிக்கவில்லை. வெறுப்பும், துவேஷமும் மண்டிக் கிடக்கும் அரசியல் சூழலில் – நாட்டின் வளத்தையும், பொதுத் துறை நிறுவனங்களின் செல்வத்தையும் ஒரு சில தனியார்களின் காலடியில் கிடத்தி மக்களை துயரக் கடலில் தள்ளிக் கொண்டிருக்கும் இருண்ட காலகட்டத்தில் –  நம்பிக்கையை விதைக்கத் தான் இந்த நடை பயணம்!

140 நாட்கள், 4080 கி.மீ தூரம்! 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியே பலதரப்பட்ட மக்களை சந்தித்த வண்ணம், அவர்களின் அழுகை, கவலை, மகிழ்ச்சி உற்சாகம்..என அனைத்தையும் உள்வாங்கி, பிரதிபலித்து, அவர்களில் ஒருவராக, அவர்களுக்கான ஒருவராக அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இளம்பெண்கள் அவரை அன்புச் சகோதரனாகப் பார்த்தனர். குழந்தைகள் அவரை தங்களை வாரியணைத்துக் கொஞ்சும் மாமாவாக உணர்ந்தனர். தாய்மார்கள் தங்கள் பிள்ளையாக கண்டு ஆரத் தழுவினர். முதியோர்கள் தங்கள் அன்பையும், ஆசிர்வாதத்தையும் ஒருசேர அள்ளிக் கொடுத்தனர். ஆம், குமரி முதல் இமயம் வரை இன்று அனைத்து மக்களாலும் நேசிக்கப்படும் ஒரே தலைவர் ராகுல் காந்தி தான்!

கார்ப்பரேட்டுகளால் வியூகம் அமைத்து கட்டமைக்கப்பட்ட மோடியின் போலி இமேஜ் அல்ல, ராகுலின் இமேஜ். இது உள்ளத்தாலும், உணர்வாலும் ஒன்றிணைந்தது! கால்கடுக்க நடந்து, வியர்வை சொட்டச் சொட்ட ஓடி உழைத்து, தேடிய அன்புச் செல்வம். அழிக்க முடியாத செல்வம்!

அத்வானியின் ரத யாத்திரையால் ஒட்டுமொத்த இந்தியாவும் கதிகலங்கியது அன்று! தலைகள் உருண்டன! இரத்த ஆறுகள் ஓடின! குடியிருப்புகள் எரிந்தன! மக்கள் குலை நடுக்கம் கொண்டனர். அதைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்டது! நாடெங்கும் குண்டு வெடிப்புகள் நடந்தன! எத்தனை பெரிய நீண்ட துயர வரலாறாக அது நீண்டு, கடைசியில் அத்வானியையே தூக்கி எறிந்த மோடியின் வருகைக்கான முன்னோட்டமாக அமைந்தது தான் மிச்சம்!

ஆனால், ராகுல் காந்தியின் நடை பயணத்தால் எங்குமே கலவரம் நடக்கவில்லை. கடைகள் சூறையாடப்படவில்லை. பொதுச் சொத்து நாசமாகவில்லை. யார் தாலியும் அறுபடவில்லை. யார் மண்டையும் உடையவில்லை. சிறு மனமாச்சரியங்கள் கூட எங்கும் நடக்கவில்லை. பெருந்திரளான மக்கள் திரள் சேர்ந்த இடங்களில் கூட கண்ணியக் குறைவான சம்பவங்கள் எதுவுமே நடந்தேறவில்லை. ராலுல் எவ்வளவோ அலட்சியப்படுத்தப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார், எத்தனையோ கேலி, கிண்டலுக்கு ஆளானார். எதற்குமே வன்மமாக எதிர்வினையாற்றவில்லை. மாறாக, அறிவார்ந்த மனிதர்களை பார்க்கும் போது ஆழமான விவாதங்கள் நடந்தன! கலந்துரையாடல்கள் நடந்தன! புதிய புரிதல்களும், தெளிவும் கிடைத்தன! பல்வேறு தரிசனங்களை ராகுல் பெற்றார். பலதரப்பட்ட இந்திய மக்களை கண்டு அளாவளாவும் அரிய வாய்ப்பு அவருக்கு அமைந்தது. அவர்களின் வாழ்க்கைப்பாட்டை புரிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது.

”நான் ராகுல்காந்தியைக் கொன்றேன்” என இறுதியில் ராகுலே சொன்னதில் ஆழமான அர்த்தம் உள்ளது. அது தன்னிடமுள்ள ‘தான்’ என்ற அகங்காரத்தை அவர் கொன்று போட இந்த நடைபயணம் உதவியதாகத் தான் பொருள்படும். அந்த வகையில் ராகுல்காந்தி தன்னை முற்றிலுமாக புதுப்பித்துக் கொண்டுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை அரசியல்வாதிகள் என்பவர்கள் சலவை செய்த வெள்ளைவெளேர் வேட்டி உடுத்திய, முகம் மழுங்க வழித்த வழவழப்பான முகத்திற்கு சொந்தக்காரர்கள், மிகப் பெரும்பாலோர் தலைமுடிக்கு டை அடிப்பவர்கள், ஒரு சிலர் தலைக்கு டோப்பா கூட அணிகின்றனர். அதாவது, பொதுவெளியில் தங்கள் தோற்றத்தை மினுமினுப்பாக, கெத்தாக வைத்துக் கொள்வதில் சினிமா நடிகர்களையும் மிஞ்சியவர்கள் நமது அரசியல்வாதிகள்! ஆனால், ராகுல் இந்த பயணத்தில் முகச் சவரத்திற்கு கூட நேரத்தை ஒதுக்க முடியாமலும், உடை, தோற்றம் போன்றவை குறித்த பெரிய அக்கறை ஏதுமில்லாமலும் நடந்தார்.கிட்டத்தட்ட ஒரு கர்மயோகியாகவே அவர் மாறிப் போனது போலத் தான் தோன்றியது.

பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன், நடிகைகள் சுவர்ணா பாஸ்கர், ரியா சென்!

ஒரு பக்கம் எளிய மனிதர்கள் என்றால், மறுபக்கம் இந்தியாவின் பெரிய பிரபலங்களும் அவரோடு இணைந்து சில மணித்துளிகள் நடந்தனர். கமலஹாசன், பூஜா பட், அமோல் பாலேகர், ரியா சென், ரேஷ்மி தேசாய் போன்ற நடிகர், நடிகைகள் ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றனர். அப்போது கூட இந்த அழகான நடிகைகள் தன்னோடு நடப்பது கருதி சேவிங் செய்து தன்னை டிரிம்மாக வைக்க முயலவில்லை. அடர்ந்த தாடியுடன் தான் நடந்தார்.

‘’ராகுல் காந்தி ஒன்றும் பப்பு அல்ல, அவர் மீது அந்த தோற்றம் விழுந்தது துரதிர்ஷ்டமானது. ராகுல் காந்தி கண்ணியமான மனிதர்’’ என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.

மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்தினார். ‘அது வெள்ளையர்கள் மீது இந்திய மக்களுக்கு இருந்த பயத்தை தெளிவித்து, நம்மாலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்க்க முடியும்’ என்ற நம்பிக்கையைத் தந்தது! நேரு குடும்பத்தை பொறுத்த வரை இந்த நடை பயணம் புதிது! நேருவோ, இந்திராவோ, ராஜீவோ செய்யாதது. அதனால், இது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது! அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நடை பயணம் பேசப்படும். இன்று குழந்தைகளாகவும், சிறுவர், சிறுமியர்களாகவும் இருப்பவர்கள் தங்களின் இளம் வாரிசுகளிடம் தாங்கள் ராகுலை பார்த்துப் பேசி அளவளாவிய அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள்!

மொத்தத்தில் ராகுல் காந்தியின் இந்த நீண்ட, நெடிய நடை பயணம் அவரை இந்திய திரு நாட்டின் மாபெரும் மக்கள் தலைவராக அவரை உயர்த்தி உள்ளது. மக்களுக்கு ஒரு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version