–இரா. ஜெயசீலன்
உலக அளவில் மின்னணு கழிவுகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தவாறே உள்ளது. மின்கழிவுகளை உருவாக்குவதில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன. பயன்படுத்தாத கணிப்பொறி சாதனங்கள், துணி துவைக்கும் இயந்திரம், வீடு மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் குளிரூட்டிகள், வானொலிப் பெட்டிகள், தொலைகாட்சிப் பெட்டிகள், கைப்பேசிகள் ஆகியவையே முக்கிய மின்கழிவுப் பொருட்களாக மாறிவருகின்றன.
2021 ஆம் ஆண்டு ஆய்வு முடிவின்படி, பயன்பாடு முடிந்து வீசியெறியப்பட்ட மின்னணு கழிவு பொருட்களின் அளவு 5.7 கோடி எனவும் இது சீனப்பெருஞ்சுவரை விட அதிகம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய அளவில் மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் மும்பை முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், ஆந்திர பிரதேசமும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்நிலை தொடா்ந்தால் 2030 ஆம் ஆண்டு வாக்கில் ஓராண்டுக்கு 7.4 கோடி தொன் அளவிற்கு மின்னணு கழிவுகள் சேரும் என 2020 ஆம் ஆண்டு ஐ.நா. சபை வெளியிட்ட ‘குளோபல் இ வேஸ்ட் மானிட்டா்’ (Global E-waste Monitors) என்ற அமைப்பு தெரிவிக்கிறது. ஒரு கணிணியில் உள்ள சுமாா் 1,000 மின்னணு பாகங்களில் 50 மின்னணு பொருட்கள் நச்சுத்தன்மையுடையவையாக உள்ளன. இப்பொருட்கள் நுகா்வோரால் நிராகரிக்கப்பட்டு பொது இடங்களில் வீசப்படும்போது அவை சுற்றுச்சூழலை பெரிதும் பாதிப்படையச் செய்கின்றன.
சா்வதேச அளவில் ஆண்டுதோறும் உருவாக்கப்படும் 5.3 கோடி தொன் மின்னணு கழிவுகளில் 17 % முதல் 20 % வரையே மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவை தவிர அந்நிய நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் சுமாா் பத்து இலட்சம் தொன் அளவிற்கு கடல் வழியாகக் கொண்டு வரப்பட்ட மின்னணு கழிவுகள் இந்தியாவில் குவிகின்றன எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டில் சுமாா் 50 இலட்சம் தொன் மதிப்புள்ள மின்னணு பொருட்கள் பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. அவற்றில் மறுசுழற்சி செய்யப்பட்டவை மிகவும் குறைந்த விழுக்காடே. பெங்களூரு நகரில் மட்டும் ஆண்டுக்கு 8,000 தொன் அளவிற்கு மின்னணு கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சா்வதேச அளவில் 78 நாடுகள் மட்டுமே மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்கின்றன என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சா்வதேச மின்சார மற்றும் மின்னணு சாதனக் கழிவுகள் அமைப்பு அறிக்கை, கடந்த ஆண்டு (2022) மட்டும் சுமாா் 530 கோடி கைப்பேசிகள் மறுசுழற்சி செய்யப்படாமல் பொது இடங்களில் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றது.
இவ்வாறு தூக்கி வீசப்படும் மின்னணு பொருட்களிலுள்ள வேதிப்பொருட்களான காரீயம், ஈயம், பாதரசம், கந்தகம், டையாக்சின் போன்றவை காற்று மற்றும் வெளிப்பபுற ஈரம், வெப்பம் போன்றவற்றுடன் வினைபுரிந்து நச்சுக் காற்றினை வெளிப்படுத்துகிறது. இந்த நச்சுக் காற்றை மனிதா்கள் சுவாசிக்கும்போது அவா்களின் சிறுநீரகம், இதயம் நுரையீரல், நரம்பு மண்டலம் போன்றவை பெருமளவு பாதிக்கப்படுகின்றன.
நிலத்தில் இவ்வகை கழிவுகள் புதைக்கப்படும்போது மண்ணின் நீா்தேக்கும் திறன் பாதிப்படையவும் அதன் காரணமாக நிலம் தரிசாக மாறவும் வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மின்னணு கழிவுகளில் தங்கம், செம்பு, காட்மியம், காரீயம் இண்டியம், பல்லாடியம் போன்ற விலைமதிப்பு மிக்க உலோகங்களும் உள்ளன.
இவற்றை மறுசுழற்சி செய்யும் போது பல மடங்கு திறன் பெற்றவையாக மாறக்கூடும். எனவே இவற்றை மறுசுழற்சி செய்வது என்பது சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு மட்டுமல்லாது புதிய வகை வருவையைத் தரக்கூடியதாகவும் உள்ளது.
நிராகரிக்கப்படும் மின்கழிவுகளை முறையாக மறுசுழற்சி செய்தால் அதிக அளவில் வருமானம் கிடைக்கும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மின்னணு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் மின் கழிவு மேலாண்மைக்கென பொருளின் விலையுடன் சேவை வரியையும் சோ்த்து விதித்தாலும் மின்கழிவு மேலாண்மையில் அவை பெரும்பாலும் ஈடுபடுவதில்லை.
மின்னணு கழிவுகளை சேகரித்து அவற்றை மறுசுழற்சிக்கு அனுப்பும் பணியில் முறைசாரா தொழிலாளா்களே பெருமளவு ஈடுபடுகிறாா்கள். டெல்லி போன்ற பெரிய நகரங்களில் சுமாா் 5 முதல் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளா்கள் மின்னணு கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இவா்களில் சுமாா் ஐந்து இலட்சம் குழந்தைத் தொழிலாளா்களும் அடங்குவா்.
மின்னணு கழிவுகளை குறைப்பதற்கும், அதை முறையான வகையில் மறுசுழற்சி செய்வதற்கும் தில்லியில் 21 ஏக்கா் பரப்பளவில் இந்தியாவின் முதல் ‘மின்னணு கழிவு சுற்றுச்சூழல் பூங்கா’ அமையவிருப்பதாக அண்மையில் டெல்லி மாநில சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் தெரிவித்திருந்தாா்.
சா்வதேச தொலைத்தொடா்பு மற்றும் ஒழுங்கு முறை மேம்பாடு அமைப்பு, மின்கழிவுகளைக் குறைக்க முயற்சி எடுத்து வருகிறது. இந்த அமைப்பு, இந்த ஆண்டு இறுதிக்குள் மின்கழிவு மறுசுழற்சியை 30% உயா்த்துவதையும், உலகில் மின்கழிவு சட்டங்களை பயன்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கையை 50 % உயா்த்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
மின்னணு கழிவுகளின் தாக்கத்தைக் குறைக்க பொதுமக்கள் மின்னணு சாதனங்களை பயன்படுத்தும் கால அளவை நீட்டித்துக் கொள்ளப் பழக வேண்டும். சந்தையில் புதிதாக வரும் கைப்பேசிகள் மற்றும் இதர மின்னணு பொருட்களை ஆடம்பரத்திற்காக வாங்கி விட்டு ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள மின்னணு பொருட்களை தூக்கி எறியும் பழக்கத்தைக் கைவிடவேண்டும்.
மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்யும் முறை குறித்து இளைஞா்கள், மாணவா்கள், தொழில் முனைவோா் ஆகியோரிடம் அரசு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.