Site icon சக்கரம்

உக்ரைன் போரில் வெற்றி பெற்றது ஆயுத வியாபாரமே!

க்ரைனின் சில பகுதிகளை விடுவிக்கப் போகிறோம் என்று அறிவித்துக் கொண்டு ரஷ்யா மேற்கொண்ட போர் நடவடிக்கையால் இரு  தரப்புக்கும் வெற்றி கிடைக்காமல், இறுதியில் ஆயுத வியாபாரிகளுக்குதான் வெற்றி கிடைத்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய மொழி பேசுபவர்களை உக்ரைன் ஒடுக்குவதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், ரஷ்யா உக்ரைன் மீது போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஓராண்டிற்கும் மேலாக சண்டை நடந்து கொண்டிருக்கிறது. டோனெட்ஸ்க் (Donetsk) பகுதியை மீட்பதில் ரஷ்யா கவனம் செலுத்துகிறது. முக்கியமான நகரங்களை முழுமையாக முற்றுகையிட்டு ரஷ்யப் படைகள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அந்த நகரங்கள் தங்கள் வசம் வந்துவிட்டதாக உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிராக உக்ரைனுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் ஆயுத உற்பத்தியை அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பெருக்கியுள்ளன. அமைதியை உருவாக்குவதற்கான எந்தவித பேச்சுவார்த்தையையும் இந்த நாடுகள் முன்மொழியவில்லை. மாறாக, உக்ரைனின் தலையில் ஆயுதங்களைக் கட்டி விடுகிறார்கள். 40 கோடி அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை அனுப்பப் போவதாக இரண்டு நாட்களுக்கு முன்னதாக அமெரிக்கா அறிவித்திருக்கிறது.  

உலகம் முழுவதும் தொழில் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பங்கு விலைகள் மட்டும் பெரும் அளவில் அதிகரித்துள்ளன. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து நடப்பாண்டு ஜனவரி மாதத்தின் முதல் பாதி வரையில் உக்ரைனுக்கு  அமெரிக்கா அளித்த இராணுவத் தளவாடங்களின்  மதிப்பு 4 ஆயிரத்து 660 கோடி அமெரிக்க டொலராக இருக்கிறது. இது 11 மாதங்களுக்கான செலவாகும். பத்தாண்டு காலம் ஆப்கானிஸ்தானில் நடத்திய ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அமெரிக்காவின் செலவு சராசரியாக ஆண்டுக்கு 4 ஆயிரத்து 340 கோடி அமெரிக்க டொலராக இருந்தது.

“இதற்கு முன்பாக அமெரிக்கா நடத்திய போர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட செலவுகளின் அளவைக் கணக்கிட்டுப் பார்த்தால்தான் எவ்வளவு அதிகமாக உக்ரைனுக்கு செலவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்” என்று ஆய்வாளர்களில் ஒருவரான மார்ட்டின் ஆர்ம்ஸ்ட்ராங் (Martin Armstrong) கூறுகிறார். அமெரிக்கா மேற்கொண்ட இந்த செலவில், அந்நாட்டின் இராணுவத் தலைமையகம் அனுப்பிய 500 கோடி அமெரிக்க டொலர் மதிப்பிலான தளவாடங்களைச் சேர்க்கவில்லை.

மேலும் ஆயுதங்கள்

சீனாவின் 12 அம்ச அமைதித் திட்டத்திற்கு ரஷ்யா ஆதரவளித்த வேளையில், அது பற்றிக் கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுத்துவிட்டது. உக்ரைன் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் மேலும் போரைத் தொடரவே அமெரிக்கா விரும்புகிறது. ஜனாதிபதிக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த ஆயுதங்களுக்கான நிதி திரட்டப்படுகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அன்ரனி பிளின்கன் (Antony Blinken) தெரிவித்துள்ளார்.  இழந்த பகுதிகளை உக்ரைன் மீட்கும் வகையில் அந்நாட்டை தயார்படுத்துவதாக அமெரிக்கா சொல்லிக் கொள்கிறது.

உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் அந்நாட்டில் இறங்கியவுடன் அழித்தொழிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கான ரஷ்யத் தூதர் அனரொலி அன்ரனொவ் (Anatoly Antonov) எச்சரித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா நெருக்கடியில் அமெரிக்கா  நேரடியாகவே தலையிட்டு வருவதாக ரஷ்யா  குற்றம் சாட்டி வருகிறது. அமெரிக்காவின் குடியரசுக்கட்சியினரும் ஆயுதங்களை அனுப்புவதற்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளார்கள். அமெரிக்காவின் நிர்ப்பந்தத்தால் பல ஐரோப்பிய நாடுகளும் ஆயுதங்களை அனுப்பி வருகின்றன. அதே வேளையில், ரஷ்யா மீதான தடை களால் ஐரோப்பிய நாடுகள்தான் நெருக்கடியில் சிக்கியுள்ளன.

Exit mobile version