-ச.அருணாசலம்
‘பேர்னிங் த மிட் நைட் ஒயில்’ (burning the midnight oil) என்பது விடிய விடிய கண்விழித்து பணியாற்றுவதை குறிக்கும் ஒரு பிரபலமான குறியீடாகும்! பா.ஜ.க அரசு விடிய, விடிய கண் விழித்து செய்த சாதனைகள் என்னென்ன..? எனப் பட்டியலிட்டால் விதிர்விதித்துப் போகிறது! இருக்கின்ற இந்தியாவை இல்லாதொழிக்க, வகுக்கின்ற திட்டங்களின் வரிசையை பார்ப்போமா..?
என்ன காரியத்திற்காக இத்தனை மெனக்கிடுதல் என்பது அவரவர் இலக்கை பொறுத்து ஒருவர் அறிய முடியும் . கள்வன் முதல் தலைவன் வரை தங்களது திட்டங்களை இப்படியாக கண் துஞ்சாது கருமத்தை முடிப்பதற்கு திட்டமிடுவார்கள்.
பா.ஜ.கவினர் கூட தங்களது தலைவர் ஒரு நாளில் மூன்று மணி நேரம் தவிர மீதியுள்ள நேரங்களில் ” நாட்டிற்காக” உழைக்கிறார் என்று மோடி பெருமை பேசுவதை பார்க்கிறோம்.
ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கும் வாய்ப்பு என்பது இந்தியாவிற்கு வரிசை பிரகாரம் வந்த வாய்ப்பாகும்! ஆனால், அதை ஏதோ சாதனையாக ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டம் போட்டுள்ளது பாஜக அரசு!
இது என்ன சுய தம்பட்டம்? என்று கேள்வி கேட்டால், கேட்பவன் தேச விரோதி என்பதைத் தவிர வேறென்ன?
இந்த ‘அமிர்த காலத்தில் ‘, நயா இந்தியாவாக அடியெடுக்கத் தொடங்கிய காலத்தில் ஜி 20 நாடுகளின் மாநாட்டிற்கு “தலைமை” ஏற்க, நம்நாடு அழைக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய பெருமை அல்லவா? அப்பெருமை விஸ்வ குரு மோடியினால் தானே சாத்தியமாயிற்று?
சென்ற வருடம் இந்த மாநாடு இந்தோநேஷியா தலைநகரான பாலி மாநகரத்தில் நடந்ததே, இந்தோநேஷியா நாட்டிற்கு அந்த ஆண்டிற்கான தலைமை பொறுப்பு என்ற ‘பெருமை’ கிடைத்திருந்ததே, அங்கே இது போல கொண்டாட்டங்கள் இல்லையே…? என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்க கூடாது. அவ்வாறு கேட்டால் அது தேச விரோதம்.
இது ஏதோ மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் அவர் முயற்சியால் இந்தியாவிற்கு கிடைத்த பெருமை போல நாடகமாடுவதும், இம்மாநாட்டை வைத்து 2024 தேர்தலையே வென்று விடலாம் என திட்டமிட்டு அனைத்து மாநிலங்களிலும் ஜி-20 தலைவர்களை அழைத்து விழா போல மாநாடு நடத்தலாம் என்ற எண்ணத்தில் போடப்பட்டது இத் திட்டம்.
எந்த அளவுக் குறியீட்டின் படி இந்தியா தலைமையிடத்திற்கு வந்துள்ளது?
அரசியல் முதிர்ச்சியா? அல்லது பொருளாதார வலிமையினாலா? , ஜனநாயக செயல்பாட்டிலா?, அல்லது மக்களின் உரிமைகள் பேணி பாதுகாக்க படுவதாலா? அல்லது விஞ்ஞான வளரச்சியில் இந்தியா சிகரத்தை தொட்டதாலா..? என்ற பல்வேறு கேள்விகள் இந்திய மக்களின் மனதில் தோன்றுவதில் தவறில்லை.
ஆனால், பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரத்தில் மோடியின் செயல்பாட்டை கேள்வி கேட்கும் விதமாக ஆவணப்படும் வெளியிட்ட போது, அரசியல் முதிர்ச்சியற்று அந்த ஆவணப்படத்தை தடை செய்ததோடல்லாமல், பி.பி.சி. நிறுவனத்தில் வருமான வரி “ரெய்டு” நடத்தியது.
உள்நாட்டில் உள்ள பத்திரிக்கைகளையும், பத்திரிக்கையாளர்களையும் மிரட்டுவதும், விலைக்கு வாங்குவதும், எதிர்த்தால் சிறையிலடைப்பதையும் செய்து தனது “ஜனநாயக” பண்பை பறைசாற்றிய மோடி அரசு, இதே ஆயுதத்தை பி.பி.சி. நிறுவனத்திடமும் காட்டியது வெளிநாட்டினருக்கு மோடியை நன்கு அடையாளம் காட்டிவிட்டது.
இந்த அதிர்வலைகள் ஓய்வதற்கு முன்னரே, அடுத்த குண்டு மோடியின் அடிமடியில் வந்து விழுந்தது. ஓம், அமெரிக்காவைச் சார்ந்த ஹிந்தன்பர்க் என்ற நிறுவனம் அதானியின் தில்லுமுல்லு வேலைகளை தோலுரித்து, அதற்கு உறுதுணையாக இருந்த இந்திய அரசின் கண்காணிப்பு நிறுவனங்களையும் அம்பலப்படுத்தியது.
விளைவு? அதானியின் சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியது. முட்டுக் கொடுத்த மோடியின் வேஷமும் கலையத் தொடங்கியது. ஆரம்ப கால முதலே அதானிக்கு குஜராத் மாநில வளங்களை தாரை வார்த்து, பின் அதானியின் தாராளத்தால் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்ற மோடி , பிரதமர் ஆன பின்பு இந்திய நாட்டின் பொது சொத்துக்கள் அனைத்தையும் அதானிக்கு வாரி வழங்கினார். இதற்காகவே வளைக்கப்பட்ட சட்டங்கள் எத்தனை? திருத்தப்பட்ட விதிகள் எத்தனை?
விதிகளை மாற்றி, சட்டங்களை திருத்தி சுரங்கங்களும், கனிம வளங்களும், துறைமுகங்களும் அதானிக்கு கொடுக்கப்பட்டன. அதானியின் திருட்டையும், தில்லுமுல்லுகளை கண்டு பிடித்தாலும் வழக்கு போட விடாமல் மோடி பார்த்துக் கொண்டார்.
விமான தளங்கள் அதானிக்கு ஒதுக்கப்பட்டன. அதானிக்கு அனுபவம் இல்லாவிட்டாலும், மாநில அரசுகள் எதிர்த்தாலும், நிதி ஆயோக் எச்சரிக்கை செய்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளி விமான நிலையங்கள் அதானிக்கு தாரை வார்க்கப்பட்டன.
இந்த பகாசுர நிறுவனம் வெளிநாட்டு மூலதன நிறுவனங்களையும் பதம் பார்த்த வேளையில் ஹிந்தன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அதானிக்கு. இது அதானிக்கு மட்டுமல்ல, மோடிக்கும் கூட அதிர்ச்சியை கொடுத்ததில் ஆச்சர்யமில்லை.
நிதானமிழந்த சண்டியனைப் போன்றே மோடியும், தனது அடிவருடிகளை வைத்து உலகத்தாரின் வாயை மூட முயலுகின்றார். கோடி மீடியா, சபாநாயகர், ராஜ்ஜிய சபா தலைவர், சீல்டு கவர் என பல வழிகளின் மூலமும் முயற்சிகள் நடக்கின்றன. விழுந்த மானம் விழுந்ததுதான் என்று அவர்களுக்கு இன்னும் புரியவில்லை.
இதற்கிடையில் அயல்நாட்டு தலைவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்வதன் மூலம் இழந்த பிம்பத்தை சரிகட்ட நினைக்கிறார் மோடி.! ஆஸ்திரேலிய அதிபருடன் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதும், டெஸ்ட் போட்டி நடக்கும் மைதானத்தையே அரசியல் களமாக மாற்ற மோடி முயல்வது பெருமையா? அல்லது சிறுமையா?
ஜி-20 மாநாட்டு அரங்குகளில், விவாத அரங்குகளில் மோடியின் பெருமை பற்றியும் அவரது ஆளுமையின் மேன்மை பற்றியும் அதிகாரிகள் பேச பணிக்கப்பட்டுள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றதால் , அவ்வாறு வெற்றி பெற்றவர்கள் செய்வதெல்லாம் நியாயமானவைகளே அவற்றை எதிர்ப்போர் ஜனநாயக எதிர்ப்பாளர்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது, ஒரு மாயை கட்டியெழுப்ப படுகிறது.
தேர்தலில் 37% வாக்குகள் பெற்று ஆட்சியிலிருப்பவர்கள் வாக்களிக்காத 63% மக்களின் கருத்துகளை செவிமடுத்தே ஆட்சி நடத்துதல் வேண்டும் அதுவே, உண்மையான ஜனநாயகம்.
தேர்தலில் வென்றவர்கள் நீதி மன்றங்கள், நாடாளுமன்றம், சுயாதீனம் பெற்ற நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ்தான் ஆட்சி செய்ய வேண்டுமேயன்றி, தான்தோன்றித் தனமாக நினைத்ததை நடத்த முடியாது,கூடாது.
அரசியல் இணக்கம், சட்டத்தின் ஆட்சி, தனிநபர் மற்றும் எழுத்துரிமை பேச்சுரிமை ஆகியவற்றிற்கெல்லாம் வேட்டு வைத்துள்ள இந்த ஆட்சி, வளர்ந்து வரும் வேலையின்மையையும், விலையேற்றத்தை பற்றியும் பேசாது பழம்பெருமை , புராதன கலாச்சாரம் என்று பேசி வருகிறது. அதற்கு ஸ்மிருதிகளையும் உபநிடதங்களையும் துணைக்கு அழைக்கிறது. இவற்றை அடிப்படையாக கொண்ட ‘சனாதன தர்மமே’ இந்த நாட்டின் புராதன சொத்து , வழிகாட்டி என்கின்ற இந்த கும்பல் இந்திய அரசியல் சாசனத்தை தூக்கிபிடிப்பதில்லை.
இந்துக்கள் என கூறிக்கொள்வோரில் ஒரு சிறிய மேலாதிக்க சாதிகளின் விருப்பங்களையே விதிகளாக, ஸ்மிருதிகளாக சட்டவழிமுறையாக ஆக்கி அதையே ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பொதுவான சட்டமாக , வழிமுறையாக முன்னிறுத்தும் இந்த சிறு பான்மையினர் மதத்தின் பெயரால் தங்களை இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று கூறி வருகின்றனர்.
மனிதர்களை சாதிகளாக பிரித்து ,பெண்களை அடிமைப்படுத்தி, தீண்டாமையை ஏற்படுத்தி, தங்களை தவிர பிற சாதியினர்க்கு கல்வியை மறுத்த இந்த கும்பலின் தர்மமே சனாதன தர்மமாகும்.
இந்த அக்கிரமங்களை துடைத்தெறிய ஈராயிரம் ஆண்டுகளாக ஊறிப்போன இந்த பழமையை மாற்றியமைக்க இந்திய மக்களின் கையில் உள்ள ஒரே ஆயுதம் இந்திய அரசியல் சாசனம் மட்டுமே! இந்த அரசியல் சாசனத்தை குறி வைத்துதான் -அதை நீர்த்து போக விடுவதை நோக்கிதான்- இன்றைய ஆட்சியாளர்களின் காய் நகர்த்தல்கள் நடைபெறுகின்றன.
இதற்காகவே கண்துஞ்சாது விடிய விடியத் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. புதிய கல்வி கொள்கையும் இதை நோக்கி பயணிக்க அமைக்கப்பட்ட ராஜ பாதையே ஆகும்.
ஹத்ராஸ் தலித் பெண் கற்பழிப்பு வழக்கின் திசைவழிப்பாதை உத்திரபிரதேச ஆட்சியின் காட்டு தர்பாருக்கு சாட்சியாகிறது!
ஆஸ்திரேலியாவை சாரந்த ஆஸ்திரேலியா ஸ்டேரட்டஜிக் பாலிசி இன்ஸ்டிடியூட் ASPI என்ற ஆலோசனைக் குழு ஓர் அரிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்றைய உலகில் விஞ்ஞானம் மற்றும், தொழில் நுட்ப துறைகளில் அதுவும் குறிப்பாக அதி முக்கிய (Critital technologies) தொழில்நுட்பங்களில் சீனா , (அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளை பின்னுக்கு தள்ளி ) முன்னணியில் இருக்கிறது. எதிர்காலத்தை வென்றெடுக்கும் 44 முக்கிய தொழில்நுட்பங்களில் சீனா 37 துறைகளில் முதன்மையாக உள்ளதென்றும் அமெரிக்கா 7 துறைகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா 1990 களில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளரச்சியில் சீனத்திற்கு இணையாக திகழ்ந்த காலம் மலையேறிப் போய் இன்று இத்துறைகளில் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பது இந்த சார்ட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இந்திய பல்கலைகழகங்களின் பாட திட்டங்களிலும் அதன் ஆராய்ச்சி நிறுவனங்களின் செயல்பாட்டிலும் தலையிட்டு ஒருதலைபட்சமான திட்டங்களையும் விஞ்ஞானத்திற்கு எதிரான அணுகுமுறைகளை ஆராய்ச்சி கூடங்களில் திணித்தும் புளகாங்கிதம் அடையும் மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை மாணவர்களை அறிவுப் பாதையில் பயணிக்க முட்டு கட்டை போடுகிறது.
சுய சார்பை மறந்து, சுய முயற்சியை நிராகரித்து, பல்கலைகழகங்களையும் உயர் கல்வித் துறையையும் ஆட்டு மந்தைகளாக மாற்றும் பெருமை பாஜகவையே சாரும் . வெளிநாட்டு புகழ்பெற்ற பல்கலைகழகங்களை இங்கு கிளைகள் தொடங்க அனுமதிப்பதன் மூலம், நம்நாட்டில் உள்ள திறமையான மாணவர்களை அன்னிய மூலதனத்திற்கு ஒப்படைக்கிறோம். மாணவர்களுடைய திறமைகளை வளர்த்தெடுக்க அவற்றை நமது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த இன்றைய பல்கலைகழக சூழலும் பாட அணுகுமுறையும் வழி வகுக்கவில்லை.
பாதுகாப்பு மற்றும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்பம் , அணுசக்தி மற்றும் ஹைப்பர்சானிக் ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் ஆகிய துறைகளில் உலகின் தலைவராக முன்னணியில் திகழ்கிறது சீனா. ஆனால், இந்தியா தனது வருங்கால சந்ததிகளைமுன்னேற்ற பாதையில் இட்டுச்செல்ல ஆர்வம் காட்டவில்லை!
இங்கு மிட்நைட் ஆயில் எதிர்கட்சிகளை -ராகுல் காந்தி,மணிஸ் சிசோடியா, தேஜஸ்வி யாதவ், தெலுங்கானா கவிதா..என அனைவரையும் – அடக்கி ஒடுக்க அரசு எந்திரங்களான சி.பி.ஐ. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகியவற்றை எவ்வாறு உபயோகிக்கலாம் என திட்டமிடுவதில் செலவழிக்கப்படுகிறது.
யாரையெல்லாம் வேவு பார்க்க வேண்டும் என்பதிலும் அவர்களது உரையாடல்களை ஒட்டு கேட்பதி லும் செலவழிக்கிறது.
அரசுக்கு எதிரான கருத்துக்களை, மக்களின் பிரச்சினைகளை ஊடகங்கள் வெளிக்கொணராமல் கண்காணிப்பதில் அடக்கி வைப்பதில் செலவழிக்கிறது.
நாடாளுமன்றங்களில் எதிர்கட்சிகளின் குரலை முறியடிக்க என்ன செய்யலாம் என்று சிந்திப்பதில் செலவழிக்கப்படுகிறது.
நீதி மன்றங்களும் தேர்தல் ஆணையமும் தன்னிச்சையாக , சுதந்திரமாக செயல்படுவதை தவிர்க்க யாரை நியமிக்கலாம் யாரை ஒதுக்கலாம் என அளவெடுத்து முடிவெடுப்பதில் செலவழிக்கிறது.
இந்திய நாட்டின் பொது சொத்துக்களை எல்லாம் எப்படி தனது நண்பனுக்கு தாரை வார்க்கலாம் என திட்டமிடுவதில் செலவழிக்கிறது.
”மதர் ஆப் டெமாக்ரசி” என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் முரடராக மோடி இருக்கையில், அவரை உலகின் தலைசிறந்த அறிவாளியாக சித்தரிப்பதில் காலத்தையும் பணத்தையும் விரயம் செய்கிறது.
இத்தனை களேபரங்கள் மத்தியிலும் “அந்தமான் நிக்கோபார் தீவுகள் பூரண வளர்ச்சி” என்ற பெயரில் 72,000 கோடி செலவில் அவசர அவசரமாக , எந்தவித ஆய்வோ , ஆலோசனையோ இன்றி அந்தமான் தீவுகளின் பயோடைவர்சிட்டியை அழிக்கும் வகையில் அரிய, நுண்ணிய தாவரங்கள் உயிரினங்களை காவு கொடுக்கும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 166 சதுர கி.மீ மழைக்காடுகளை அழித்து , 8.5 லட்சம் மரங்களை அப்புறப்படுத்தி சர்வதேச போக்குவரத்து துறைமுகம், விமான நிலையம், மின் உற்பத்தி நிலையம் மற்றும் சிறப்பு பொருளாதார பகுதி ஆகியவை அமைக்க திட்டமிடப்பட்டு அத்திட்டத்தை அதானிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இதை கேள்வி கேட்போருக்கு எந்தவித முறையான பதிலும் அரசு கோடுக்கவில்லை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு “பாதுகாப்பு” நலன் கருதி பதிலளிக்க இயலாது என்று அரசு கூறுகிறது.
இத்தகைய கேவலங்களுக்காகத்தான் ‘மிட்நைட் ஒயில்’ எரிக்கப்படுகிறதே ஒழிய இந்திய மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கும், இந்திய நாட்டின் வளர்ச்சியையும் தகுதியையும் மேம்படுத்த நமது ஆட்சியாளர்கள் கண்விழித்து கடமையாற்றவில்லை என்பது கசப்பான உண்மை.