-ஹரி பரந்தாமன்
தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமளி, துமளிகள்! ”அதானி குழுமத்தின் முறைகேடுகள் குறித்து நாடளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை தேவை” என எதிர்கட்சிகள் கேட்கிறார்கள்! உடனே, பாஜகவினர் அதானியை காப்பாற்றும் விதமாக, ”லண்டனில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று பாராளுமன்றத்தை முடக்குகின்றனர்…
ராகுல் காந்தி பேசியது தவறாம்;
இந்தியாவின் பெயருக்கே களங்கமாம்!
இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசினாராம்!
என்ன தான் பேசினார் ராகுல் காந்தி?
”பாராளுமன்றத்தில் அவர் பேசுகையில்அவரது மைக்ரோபோன் நிறுத்தப்படுகிறது” என்றார்.
”பாராளுமன்றம்,நீதித்துறை, ஊடகம், தேர்தல் ஆணையம் என அனைத்தையும் அரசு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளது” என்றார்.
”கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசுகின்ற அவரால் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை” என்றார்.
”கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் மேற்கொண்ட போது காஷ்மீரில் நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்றார்.
”எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் செயல்பட விடாமல் முடக்கப்படுகின்றன” என்றார்.
இதில் எது தவறு? அனைத்தும் உண்மைதானே?
இதோ அடுத்த அம்பாக, ”அதானியை மேன்மேலும் செல்வந்தராக்குவது தான் இந்திய வெளியுறவுக் கொள்கையின் நோக்கமா..”? என வினவியுள்ளார் ராகுல் காந்தி! பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கான நோக்கமெல்லாம் அதானிக்கு வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்ததை வாங்கி தருவதற்காகவா? அவுஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம்.. என எங்கு சென்றாலும் அங்குள்ள ஆட்சியாளர்களை நிர்பந்தித்து வர்த்தக ஒப்பந்தங்களை அதானிக்கு வாங்கித் தருகிறாரே பாரதப் பிரதமர் மோடி! சதா சர்வகாலமும் அதானி நிறுவன வளர்ச்சிக்காக சிந்தித்து, அதானிக்காவே இந்திய பொதுத் துறை நிறுவனங்களை சீர்குலைத்து, இந்திய வங்கிகளின் பணத்தை எல்லாம் அள்ளிக் கொடுத்து வேலை பார்ப்பதற்காக மோடி பிரதமரானார்…’’ என ராகுல் கேட்பதில் நியாயம் இருக்கிறதா? இல்லையா?
அதானிக்கு இந்திய வங்கிகள் எவ்வளவு கடன் கொடுத்துள்ளன எனக் கேட்டால், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏன் பதற்றமடைகிறார்! ”ஆ..அது சிதம்பர இரகசியமாயிற்றே…ரிசர்வ் வங்கி சட்டப்படி சொல்லக் கூடாதே..” என்கிறார்! மக்கள் பணத்தை தனி நபர்கள் கடன் பெற்றால், அதை மக்களுக்கு சொல்ல வேண்டியது அரசின் கடமை! ஆக, பாஜக அரசின் விசுவாசம் என்பது யாரோ ஒரு தனி நபருக்கு தானேயன்றி, அவர்களை ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்காக இல்லை!
பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் இன்றி, சட்டங்கள் இயற்றப்படுவது தானே 2014 முதல் நடந்து கொண்டு உள்ளது. விவசாயிகள் சம்பந்தப்பட்ட சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம், பொருளாதார அடிப்படையில் உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை பறித்த சட்டம், காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றிய சட்டம் என அனைத்தும் விவாதங்கள் இன்றி இயற்றப்பட்ட சட்டங்கள் தானே. பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய பெரும்பான்மையை பயன்படுத்தி சர்வாதிகார முறையில் அல்லவா செயல்படுகிறது மோடி அரசு.
நீதித்துறை மீதான நிர்பந்தங்கள்!
நீதித்துறையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக தொடர்ந்து நீதித்துறை உடன் மோதல் போக்கை அல்லவா கடைப்பிடித்து வருகிறது ஒன்றிய அரசு. ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜும், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீர் தன்கரும் தடித்த வார்த்தைகளால் நீதித்துறையை சாடுவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது! உச்சநீதிமன்றமே ஒன்றிய சட்ட அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை நியமிக்க மறுத்தது அல்லவா மோடி அரசு. வெறுப்புப் பேச்சை பேசிய பிஜேபி மகளிர் அணி தலைவர் வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமித்த மோடி அரசு, கொலீஜியம் திட்டவட்டமாக வலியுறுத்திய வழக்குரைஞர் ஜான் சத்தியனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இதுவரை நியமிக்கப்படவில்லையே. கொலீஜியம் பரிந்துரைத்த வழக்குரைஞர் நீலகண்டன் மற்றும் மாவட்ட நீதிபதி வடமலை ஆகியோரும் இதுவரை நியமிக்கப்படவில்லையே.
நீதித்துறையில் மோடி அரசு தொடர்ந்து எவ்விதம் தலையிட்டு வருகிறது என்பதை பற்றித் தனியாகவே ஒரு தொடர் கட்டுரை எழுதலாம்.
ஒடுக்கப்படும் ஊடகங்கள்’
ஊடகங்களை எவ்வாறு ஒன்றிய அரசு ஒடுக்குகிறது என்பதற்கு பல உதாரணங்களை கூற முடியும். உத்தரப்பிரதேசம் ஹத்ராசில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது உடலை கூட காவல்துறையே எரியூட்டிய போது அங்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் சித்திக் காப்பன் பல ஆண்டுகள் சிறையில் இருந்தார். ஊடகவியலாளர் வினோத் துவாவின் பேரில் பல வழக்குகளை போட்டு அச்சுறுத்துகிறது மோடி அரசு. அதிர்ஷ்டவசமாக டெல்லிஉயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தலையிட்டத்தின் பேரில் அவர் கைது செய்யப்படுவதில் இருந்து காப்பாற்றப்பட்டார். Alt News என்ற ஊடகத்தின் உரிமையாளர்களில் ஒருவரான முகமது ஜுபைர், பல ஆண்டுகளுக்கு முன் செய்த ட்விட்ட்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். BBC-இன் ஆவணப்படத்தை தடை செய்த மோடி அரசின் செயலை உலகமே கண்டித்தது. இது போல் எண்ணற்ற உதாரணங்களை அடுக்க முடியும்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை செயல்பட விடாமல் முடக்குவதே டெல்லி அரசின் வேலையாகிவிட்டது. தெலுங்கானா மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி செப்டம்பர் 2022 முதல் மாநில சட்டசபை இயற்றிய சட்டங்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் என்று கூறி உரிய உத்தரவை அளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகி உள்ள செய்தி ஜனநாயகத்தில் பற்றுடையோரை அதிரவைத்துள்ளது. இதே கதை தான் தமிழ்நாட்டில். தமிழக சட்டசபை நிறைவேற்றும் பெரும்பாலான சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறார் தமிழ்நாட்டு கவர்னர் ஆர்.என்.ரவி!
இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும் அல்லது எந்த கல்லூரியிலும் ராகுல் காந்தி பேசுவதை டெல்லி அரசு அனுமதிப்பதில்லை. 2019 தேர்தலின் போது, சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கு கொண்டதற்காக, அப்போதைய அதிமுக அரசு அந்த கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்தது. அதிமுக அரசின் இந்த செயல் டெல்லி அரசின் நிர்பந்தத்தால் என்பதை எவரும் யூகிக்க முடியும். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உட்பட அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது பற்றி பல செய்திகள் ஊடகங்களில் வருகிறது.
எனவே, ராகுல் காந்தி இலண்டனில் பேசியது உண்மையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. உண்மையை பேசுவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிஜேபி கோரி பாராளுமன்றத்தை முடக்குவது அதானியை காப்பாற்றுவதற்கான செயலே. பங்குச் சந்தையில் அதானி குடும்பம் செய்த முறைகேடுகள் சம்பந்தமாக கூட்டு பாராளுமன்ற விசாரணை தேவை என்ற கோரிக்கையை வலுவிழக்க செய்வதே பிஜேபியின் நோக்கம்!
இந்த நேரத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகர் நோம் சோம்ஸ்கி 2001 ஆம் ஆண்டில் சென்னையில் ஈராக் நாட்டின் மேலும் ஆப்கானிஸ்தான் மேலும் அமெரிக்கா எடுத்த நடவடிக்கை பற்றிபேசும் போது ”அமெரிக்க அரசு தான் பயங்கரவாத அரசு என்றும் அமெரிக்க ஜனாதிபதிதான் பயங்கரவாதி” என்றும் கூறினார். ”இவ்விதம் அவர் பேசிவிட்டு அமெரிக்கா சென்றால், அவருக்கு அமெரிக்க அரசால் அச்சுறுத்தல் இருக்காதா” என்று ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டபோது, பேசுவதற்கு உள்ள அவரது உரிமையை அமெரிக்க அரசால் பறிக்க இயலாது என்றும், ஏனென்றால் அமெரிக்க சிவில் சமூகம் மிக பலமானது” என்றும் கூறினார் அவர்.