Site icon சக்கரம்

சீனாவில் தமிழ் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சீனப்பேராசிரியர்

-வி.ரி. சகாதேவராஜா

கிகி ஜாங்

கிகி ஜாங் என்ற தனது பெயரை ‘நிறைமதி’ என்று மாற்றிக் கொண்ட பல்கலைக்கழக பெண் அறிஞர்

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளார் பற்றி அகில உலகமும் அறியும். அவர் பிறப்பால் ஓர் இந்து. ஒரு தமிழர். தாய்மொழி தமிழ். ஆரம்பக் கல்வியும் தமிழில் கற்றவர். தமிழில் ஆய்வுகள் மேற்கொண்ட உலகப் பேரறிஞர் அவர்.

ஆனால் இந்தப் பின்புலம் ஒன்றுமே இல்லாமல் சீனப்பெண் ஒருவர் தமிழில் காதல் கொண்டு தமிழைக் கற்று தமிழ் பேராசிரியராக, பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவராக உயர்ந்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

சீன மக்கள் தற்போது தமிழ்மொழியை கற்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சீன பல்கலைக்கழகங்களில் தமிழ்மொழிக்கென தனியான துறைகள் காணப்படுகின்றன.

இந்த நிலையில் சீனாவின் யுனான் மிஞ்சு பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி உலகளவில் வளர்ச்சி அடைந்து வருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த உலக அளவில் தமிழ்மொழிக்கு சீன மக்கள் பெரும் சேவையை ஆற்றி வருகின்றனர் என்றால் அது மிகையாகாது.

தமிழ்மொழி மீது கொண்ட பற்று காரணமாக தனது சீனப் பெயரையும் இவர் தூய தமிழில் ‘நிறைமதி’ என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கான தனியான துறைகள் காணப்படுவதுடன், தமிழ்மொழித் துறையின் தலைவராக நிறைமதி என்னும் சீனப்பெண் விளங்குகின்றார். இவர் ஒரு பேராசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இவரது தமிழ்மொழித் துறையில் தமிழ்ப் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றமை விசேட அம்சமாகும். கடந்த காலங்களில் இந்த தமிழ்த் துறையில் தைப்பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.

இவரிடம் தமிழ்மொழி பயின்ற சீன மாணவர்கள் உலக அளவில் தமிழ் பணி ஆற்றுகின்றனர். ‘மலைகள் தாண்டி மதுரை பயணத்தில் சீனப் பெண்ணின் பண்பாட்டு தேடல்’ என்னும் தமிழ் நூலையும் நிறைமதி எழுதியுள்ளார்

சீன- இலங்கை நட்புறவின் பின்னர் சீனர்கள் தமிழ்மொழியை கற்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக காணப்படுகின்றனர். இந்த வகையில் சீனப் பெண் ஒருவர் தமிழ் அறிஞராக, பேராசிரியராக மாறியுள்ளதுடன் தமிழ்த்துறை தலைவராக யுன்னோன் மிஞ்சு பல்கலைக்கழகத்தில் (Yunnan Minzu University) பணியாற்றி வருகின்றார்.

அவரது நூல் இந்தியாவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழ்த்துறைப் பேராசிரியர் நிறைமதியுடனான செவ்வி இதோ…

கேள்வி: தமிழ்மொழி மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

பதில்: தமிழ்மொழி எனது பல்கலைக்கழகத்தின் இளங்கலை பட்டம். நான் அயல்நாட்டு மொழி படிப்பதில் ஆர்வம் கொண்டவள். பல்கலைக்கழகத்தில் என்ன படிக்கப் போகிறேன் என்று பட்டம் தேர்ந்தெடுத்த போது பல அயல்மொழிகளில் தமிழ் பார்த்தேன். இது பற்றிய தகவல் இணையத்தில் தேடிப் பார்த்தேன். ஒரு கட்டுரை தமிழ்மொழி உலகில் மிக தொன்மையான செம்மொழிகளில் ஒன்று என்று கூறியது. பிறகு அக்கட்டுரையில் தமிழ் எழுத்துக்கள் காட்டின. இந்த அற்புதமான எழுத்துக்களை பார்த்தபோது மலர்கள் போல் ஆகின்றன என்று வியந்து சொன்னேன்.

இது நிச்சயமாக ஒரு சிறப்பான மொழி என்று நினைத்து இதனை எனது பல்கலைக்கழகத்தின் பட்டமாக தெரிவு செய்தேன். தமிழ்மொழி சீன மொழியை விட மிகவும் வித்தியாசமானது முதலில் இதைப் படிப்பது எனக்கு கடினம். ஆனால் படிக்கப் படிக்க இதன் மீது ஆர்வம் அதிகரித்தது . உங்கள் பேராசிரியர்கள் கவிதை, தமிழ்ப் பாடல் தமிழ்த் திரைப்படங்கள் முதலியவற்றை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவற்றில் கண்டுபிடித்துள்ள தமிழின் அழகு என்னை ஈர்த்துள்ளது. நாளுக்கு நாள் தமிழ் என் வாழ்க்கையில் முக்கியமான பகுதியாக மாறியது.

கேள்வி: தமிழ் மொழி தொடர்பாக உங்கள் குரு யார்?

பதில்: தமிழ்மொழி உலகிற்கு என்னை அழைத்துக் கொண்டு சென்று எனக்கு வழிகாட்டியவர் எனது பேராசிரியர் சூன் கோச்சியாங் அவர்கள். அவர் முன்னாள் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவின் தலைவர். வானொலி நிலையத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு எங்கள் பேராசிரியராக பணிபுரியத் தொடங்கினர். அப்போது வயதாகி உடல்நிலை மோசமாகி விட்டாலும் அவர் உறுதியுடன் தினமும் ஒரு மணி நேரம் சுரங்கப்பாதையின் மூலம் வீட்டிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு வந்து வகுப்பு எடுத்தார். இலங்கையில் தமிழ் படித்த அவர் அடிக்கடி இலங்கையின் அழகை, இயற்கை காட்சிகளை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். எங்கள் தமிழ் படிப்பில் கடும் கவனம் செலுத்தி கடுமையாகவும் உன்னிப்பாகவும் இருந்தார். அவர் எங்களுக்கு அடிக்கடி கூறியதாவது, தமிழ் செம்மொழி, நன்றாக படியுங்கள் என்பதாகும். படிப்பு முடிந்த பிறகு தமிழ் பணி செய்யுங்கள் என்றார். அவரது தமிழ்ப் பற்று என் மீது பெரிதும் செல்வாக்கு செலுத்தியது. அவர் கூறியது போலவே இரு மக்களுக்கிடையே நட்பு பாலமாக தமிழ்ப் பணி செய்ய வேண்டும் என்ற கனவிற்கு நான் முயற்சி செய்கிறேன். தற்போது பேராசிரியராக நானும் எனது பேராசிரியர் சூன் அவர்களின் பொறுப்புணர்ச்சியை வழிகாட்டியாக கொண்டு மாணவர்களின் மேல் பாசமாக இருந்து உன்னிப்பாக வேலை செய்கிறேன்.

கேள்வி: அதிகளவான மக்கள் சீனாவில் தமிழ்மொழி பயில்கிறார்கள். இது பற்றி கூறுங்கள்.

பதில்: சீனாவில் யுன்னோன் மிஞ்சு பல்கலைக்கழகம் (Yunnan Minzu University) உட்பட மூன்று பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறை அமைந்துள்ளது. சீனாவில் தமிழ் படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை. ஆங்கிலம், பிரான்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளை விட சீனாவில் தமிழ்க் கல்வி தொடக்க நிலையில் இருக்கிறது. ஆகவே இதைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மற்றும் சீனர்களுக்கென தமிழ் பாடல் நூல்கள் தேவை.

அண்மைக்காலத்தில் தமிழ் மொழியின் சிறப்பை சீனர்கள் தெரிந்து கொண்டுள்ளனர். சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஸ்வான்சேவ் நகரத்தில் தமிழ்மொழி கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டுக்கும் சீனர்களுக்கும் இடையே பண்டைக்காலம் தொட்டு உறவு தொடங்கியது என்று மக்களுக்கு தெரிந்தது. சீன அரசுத் தலைவர் சி ஜிங் பிங் தமிழ்நாட்டில் இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினர்.

கேள்வி: உங்கள் பல்கலைக்கழக தமிழ்த் துறை குறித்து கூறுங்கள்…

பதில்: எங்கள் பல்கலைக்கழகத்தின் பெயர் யுன்னோன் மின்சு பல்கலைக்கழகம் (Yunnan Minzu University). இது சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னோன் (Yunnan) மாகாணத்தில் இருக்கிறது. எங்கள் பல்கலைக்கழகத்தில் 2017 ஆம் ஆண்டு தமிழ்த் துறை ஆரம்பித்தது. இங்கே இளங்கலை மற்றும் சில முதுகலை வகுப்புகள் உள்ளன.

தற்போது தமிழ்த் துறையில் நான் தலைவராக பணிபுரிகிறேன். தவிர வேறொரு சீன விரிவுரையாளர் மற்றும் தமிழ்ப் பேராசிரியர் இங்கு பணி செய்து கொண்டிருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாணவர்களை சேர்ப்போம். இப்போது பத்து மாணவர்கள் நான்கு ஆண்டுகால இளங்கலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் தங்கள் படிப்பின் மூன்றாம் ஆண்டில் இலங்கை அல்லது இந்தியாவிலுள்ள சிறந்த பல்கலைக்கழகத்தில் ஓராண்டு தமிழ் படிக்கத் திட்டம் வகுத்துள்ளோம். தமிழ்நாட்டிற்கு பயணம் செய்ய ஆசைப்படுகிறேன். இலங்கையின் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி முதலிய நகரங்களில் பயணம் செய்யவும் திட்டம் இருக்கிறது. அப்போது வேறொரு பயணநூல் எழுத ஆசைப்படுகின்றேன்.

கேள்வி: தமிழ்மொழி மீதான உங்கள் இலட்சியம் என்ன?

பதில்: மென்மேலும் மாணவர்களை சேர்த்து அவர்களுக்கு நல்ல தமிழ் கற்பிக்க வேண்டும். அவர்களுக்கு தமிழின் மீதான ஆர்வம் அதிகரிக்க வேண்டும். படிப்பு முடிந்த பிறகு தமிழ்ப்பணி செய்ய ஊக்கமளிப்பேன். சிறந்த தமிழ் இலக்கியங்களை சீன மொழியில் மொழிபெயர்ப்பு செய்வது எனது கனவும் கடமையும் ஆகும். தற்போது செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆதரவில் மணிமேகலையை சீனமொழியில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். அதன் பிறகு, தொல்காப்பியம் பற்றி ஆராய்ந்து மொழிபெயர்க்கத் திட்டம் இருக்கிறது.

இவை தவிர ஆய்வுக் கட்டுரைகள் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் கீழடி போன்ற சிறப்பு வாய்ந்த அம்சங்களை சீனாவில் மேலும் அறிமுகப்படுத்துவேன். மாணவர்களுடன் இணைந்து தமிழ்மொழி பண்பாட்டை சீனாவில் பரப்ப போகிறோம். மென்மேலும் சீனர்கள் தமிழை ரசித்து தமிழ் வரலாற்றை புரிந்து தமிழ்மொழி கற்க வேண்டும் என்பதற்காக முயற்சி செய்கிறேன்.

“நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?” – விடையளிக்கும் சீனர்கள்

சாய்ராம் ஜெயராமன்

ல ஆண்டுகளுக்கு முன்பு சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகின.

இவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம் மட்டுமின்றி, அவர்களது பின்னணி குறித்த பல்வேறு கேள்விகளும் எழுகின்றன.

எனவே, இந்த காணொளி/ புகைப்படங்களை வெளியிட்டு வரும் சீனாவின் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் துறையை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியது.

“சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது”

சீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

யுன்னான் மின்சு பல்கலைக்கழக தமிழ் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதியிடம் (சீனப் பெயர் கிகி ஜாங்) கேட்டபோது, “நாங்கள் தமிழ் மொழியில் நான்காண்டுகள் இளங்கலை பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்” என்று கூறுகிறார்.

இந்த படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதி என்ன? உதவித்தொகை ஏதாவது வழங்கப்படுகிறதா? என்று கேட்டபோது, “இந்த படிப்பிற்கு சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். முதற்கட்ட நுழைவுத் தேர்வுக்கு பிறகு தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களிடம் அதற்குரிய காரணங்களை கேட்டறிந்துவிட்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கிறோம். தமிழை படிக்கும் மாணவர்களையும், என் போன்ற ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் சீன அரசு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகைளையும் வழங்குகிறது” என்று நிறைமதி கூறுகிறார்.

“நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?”

சீனர்கள் தமிழ் படிப்பதற்கான காரணம் என்ன? இது சீன அரசாங்கத்தின் மறைமுக சதித்திட்டமா? தமிழை படித்துவிட்டு இவர்கள் என்ன செய்வார்கள்? உள்ளிட்ட சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் முன்வைக்கும் பல்வேறு கேள்விகளை நிறைமதியிடம் கேட்டதற்கு, “தமிழ் மொழிக்கும் சீனாவிற்கும் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதுமட்டுமின்றி, அன்று தொட்டு இன்று வரை வர்த்தகத்தில் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகிறோம். இதை கலை, விளையாட்டு, கல்வி போன்றவற்றிற்கும் விரிவுபடுத்துவதற்கு சீனா விரும்புகிறது.

அதுமட்டுமின்றி, பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியாவை முழுவதுமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு தென்னிந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டை புரிந்துகொள்வது அவசியம் என்பதால் நாங்கள் தமிழ் மொழியையும், அதன் கலாசாரம், இலக்கியம், கலைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்வதற்கு முயற்சித்து வருவதன் ஒருபடியே இது.

எனவே, எங்களது மாணவர்கள் தமிழ் மொழியை மட்டுமின்றி அதன் சிறப்பியல்புகள் குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளும் விதமாக அவர்களது மூன்றாமாண்டு படிப்பை முழுவதும் தமிழகத்தில் கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு விரைவில் தமிழ்நாட்டு பல்கலைக்கழங்களுடன் ஆசிரியர்-மாணவர் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளோம்” என்று விவரிக்கிறார்.

“247 எழுத்துகளை பார்த்து பயந்துவிட்டேன்”

முற்றிலும் தமிழ் மொழியின் அறிமுகமே இல்லாத சீன மாணவர்கள் படிப்பை தொடங்கிய சில மாதங்களிலேயே மொழியை ஆர்வத்துடன் கற்று கொண்டதுடன், தங்களது எண்ணங்களை அழகான கையெழுத்தில் தமிழிலேயே எழுதுவதாக தெரிவித்து இந்த துறையின் சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டை பெறுவதை பார்க்க முடிகிறது.

இதுகுறித்து, அங்கு பயிலும் மாணவர் மகிழனிடம் கேட்டபோது, “முதலில் தமிழை புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக தமிழ் மொழியில் 247 எழுத்துகள் உள்ளதை கண்டு மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், தமிழை தொடர்ந்து படித்து, படித்து அதனால் ஈர்க்கப்பட்டு விட்டேன். பொங்கல் விழா கொண்டாடுதல், தமிழ் உணவு சாப்பிடுதல், தமிழ் திரைப்படங்களை ரசித்தல் முதலியவற்றின் மூலம் தமிழர்களின் கலாசாரத்தை புரிந்துகொள்வதற்கும், தமிழ் மொழியை மேலும் ஆர்வமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது” என்று அவர் கூறுகிறார்.

“தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. தமிழ் மொழியை கற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், அதை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு, தமிழர்களுடன் செம்மையாக உரையாடல் நடத்த விரும்புகிறேன்” என்று கூறுகிறார் கயல்விழி என்னும் மாணவி.

கயல்விழி

படித்த பிறகு என்ன செய்வார்கள்?

தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், தமிழர்களின் வரலாறு, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை தெரிந்துகொள்வது மட்டுமின்றி, தமிழை படிப்பதால் சீனர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளதாக உறுதிபட கூறுகிறார் நிறைமதி.

“எங்களிடம் நான்காண்டு பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, சென்னையில் பல்வேறு சீன நிறுவனங்களின் கிளைகளும், தொழிற்சாலைகளும், துணை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உயரதிகாரிகளாக உள்ள சீனர்களுக்கு மாண்டரின், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளே தெரிந்துள்ளதால் மற்ற பணியாளர்களுடன் இயல்பாக உரையாடுவது கடினமாக உள்ளது.

இந்நிலையில், மாண்டரின், ஆங்கிலம் மட்டுமின்றி தமிழும் தெரிந்த சீனர் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது முயற்சி இருக்கும். அதுமட்டுமின்றி, பொதுவாகவே தமிழ் திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்க்கும் சீனர்களுக்கு பெருந்தடையாக இருந்துவரும் மொழிபெயர்ப்பை மேற்கொள்வதிலும் பணிவாய்ப்புகள் உள்ளன.

தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து படித்து, அதில் ஆராய்ச்சி செய்வதற்கும், எதிர்கால சீனர்களுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லும் ஆசிரியராகவும் பணிபுரிவதற்கு வாய்ப்புள்ளது” என்று நிறைமதி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.

“நான் பட்டம் பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு சென்று மேலதிக கற்றல்களையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, ஒரு தேர்ந்த தமிழ் ஆசிரியராக விரும்புகிறேன்” என்று கயல்விழி கூறுகிறார்.

மாணவர் மகிழன் பேசும்போது, “நான் தமிழ்நாட்டில் சில காலம் வாழ்ந்து அங்குள்ள கலாசாரத்தில் முழுமையாக மூழ்க விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் தமிழ் சார்ந்த பணிகளை மேற்கொள்வதுடன், சீன-இந்திய நட்புக்கு ஒரு பாலமாக மாற வேண்டுமென விரும்புகிறேன்” என்று தனது கனவை முழுவதும் தமிழிலேயே விவரிக்கிறார்.

“தாய்மொழி பாசம் அதிகம்”

சீனா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை கற்பதையும், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படுவதையும் பார்த்து தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

அதாவது, சமீபத்திய ஆண்டுகளாக பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழக படிப்புவரை ஆங்கில வழி கல்வியின் தாக்கமே தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து நிறைமதியிடம் கேட்டபோது, “தமிழர்கள் தங்களது தாய்மொழியின் மீது அதிக பாசம் கொண்டவர்கள் என்பதை நான் நன்கறிவேன். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆங்கில மொழி மீதான மோகத்துக்கு உலகமயமாக்கலே மிக முக்கிய காரணம். இதுபோன்ற தடைக்கற்களை சீன மொழியும் சந்தித்து மீண்டெழுந்து வருகிறது.

இருந்தபோதிலும், உலகின் செம்மொழிகளில் முக்கிய மொழியான தமிழை தமிழர்கள் பேணிக்காக்க வேண்டும். தமிழின் அறிமுகமே இல்லாத சீனர்களே தமிழை கற்க முன்வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்ல வேண்டும்” என்று நிறைமதி நிறைவு செய்கிறார்.

Exit mobile version