Site icon சக்கரம்

ஓய்வூதிய வயதெல்லை அதிகரிப்புக்கெதிராக பிரான்சில் போராட்டம்!

-பீட்டர் துரைராஜ்

உலக அதியசயமான  ஈபிள் கோபுரம் (Eiffel Tower),  பிரான்ஸுன் தொழிலாளர்கள் போராட்டத்தில் மூடப்பட்டது. ஓய்வுபெறும் வயதை 62 லிருந்து 64 ஆக உயர்த்திய சட்டத்தை எதிர்த்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் என தொடர் போராட்டங்களை கடந்த மூன்று மாத காலமாக நடத்தி வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்களுக்கு  நல்ல ஓய்வூதியத்தை அரசு வழங்கி வருகிறது. மக்களின் சராசரி ஆயுள் நீடித்து வருவதால் அதிக காலத்திற்கு ஓய்வூதியம் வழங்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே 2010 ல்,  ஓய்வுபெறும் வயதை 60 லிருந்து 62 ஆக அந்த நாட்டு அரசு உயர்த்தி உள்ளது. தற்போது தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறும் வயதை 62 லிருந்து 64 க்கு உயர்த்தப் போவதாக அந்த நாடு கொண்டு வந்திருக்கும் ஓய்வூதிய சீர்த்திருத்த சட்டம் கூறுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்,  ஒரு ஆண்டுக்கு மூன்று மாதம் வீதம் ஓய்வுபெறும் வயதை உயர்த்த உள்ளது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து அந்த நாட்டு தொழிற்சங்கங்கள்  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தம் என்பது ஒரு ஜனநாயக உரிமை என்பது அங்கு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட முப்பது இலட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. கடந்த வாரம்  குப்பையை  அகற்றாமல் போராடிய தொழிலாளர்கள், சில தினங்களுக்குப் பிறகு குப்பையை அகற்றும் பணியை மீண்டும் தொடர்ந்தார்கள். அந்த நாட்டிற்கு வருகை தருவதாக இருந்த வெளிநாட்டு பிரமுகர்களின் வருகையை பிரான்ஸ் இரத்து செய்துள்ளது.  பிரான்ஸ் நாட்டில் மார்ச் 28,  அன்று நடந்த பொது வேலை நிறுத்தம் காரணமாக  உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தினை பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளை விட, பிரான்ஸ் நாட்டில்  தொழிலாளர்களுக்கு சாதகமான ஓய்வூதியத்  திட்டங்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. போக்குவரத்து, எரிசக்தி போன்ற துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டங்கள் என 43 வகையான ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக இருக்கும் இமானுவேல் மேக்ரன் ஓய்வூதியத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்று பரப்புரை செய்து ஆட்சிக்கு வந்துள்ளார். “ஓய்வூதியம் பெற்றுவரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 மில்லியனில் இருந்து 17 மில்லியனாக உயர்ந்துள்ளது. எனவே, தொடர்ந்து ஓய்வூதியத்திற்காக செலவு செய்வதை குறைக்க வேண்டும்” என்று அரசாங்கம் நீண்ட காலமாக முயற்சி செய்து  வருகிறது. இந்த அரசாங்கம் வலதுசாரிகளையும், மையமான அரசியல் எண்ணவோட்டங்களையும் கொண்டுள்ளவர்களால் ஆளப்படுகிறது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து தொடர்ந்து சில ஆண்டுகளாகவே தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கின்றனர். இந்த நிலையில் அந்த நாட்டு பாராளுமன்றத்தில் விவாதித்து வாக்கெடுப்பு  மூலமாக இந்த சட்டத்தை கொண்டு வரவில்லை. மாறாக, அந்த நாட்டின் அரசியல் சாசனத்தின் சிறப்பு பிரிவு 49.3 ன் மூலமாக வாக்கெடுப்பு இல்லாமல்,  கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி பாராளுமன்றத்தில் விவாதிக்காமல், வாக்கெடுப்பு நடத்தாமல் சட்டமாக்கியுள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது  என்று கூறி போராட்டம் வலுத்து வருகிறது. வருகிற ஏப்ரல் 6ஆம் நாள் மீண்டும் போராட்டத்தை நடத்த தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளன.

பன்னாட்டு பொதுத்துறை தொழிற்சங்க கூட்டமைப்பின் ( Public Services International) தெற்காசியச் செயலாளரான ரா.கண்ணன் சென்னையைச் சார்ந்தவர். அவரிடம் கேட்டபோது “பிரான்ஸ் நாட்டில், ஐரோப்பிய நாடுகளை விட சிறந்த பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளன. சில ஐரோப்பிய நாடுகள் ஓய்வூதிய வயதை 64, 67 என ஏற்கனவே உயர்த்தி உள்ளன.  எந்த ஒரு மாற்றமாக இருந்தாலும் தொழிலாளர், முதலாளி, அரசு என முத்தரப்பும் இணைந்து பேசிதான் கொண்டு வர வேண்டும். ஆனால் பாராளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை இல்லாததால்,  விவாதமின்றி மேக்ரான் அரசு இந்த சட்டத்தை இயற்றி உள்ளது. எனவேதான், இது மேலும் தொழிலாளர்களை கோபத்தை அதிகரித்துள்ளது.

ஆசிய நாடுகளில்தான்  ரிக்‌ஷா ஓட்டுவோர், ஓட்டல்களில் பணிபுரிவோர், சுய வேலை செய்வோர், கட்டட  வேலை செய்வோர்  போன்ற உதிரித் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் கிடைப்பதில்லை. ஆனால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் உதிரித் தொழிலாளர்கள் போன்ற வகை  இல்லை. அங்கு அனைவருக்கும் மருத்துவம், ஓய்வூதியம், விடுமுறை கால வசதி என  பலவகையான திட்டங்கள் உள்ளன” என்றார்.

”உலகமயமாக்கல் கொள்கையானது, தொழிலாளர்கள் இறக்கும்வரை வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறது. உலகெங்கும் உள்ள  பன்னாட்டு நிறுவனங்கள் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு  எதிராக உள்ளன. பிரான்ஸ் நாட்டில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள இந்த ஓய்வூதியச்  சீர்திருத்தம் தொழிலாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விரோதமானது. உலகம் எங்கும் உள்ள தொழிலாளர்களை,   பிரான்ஸ் நாட்டு தூதரகங்களுக்கு முன்பாக  போராட்டங்களை நடத்துமாறு” உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) உலகின் 130 நாடுகளில் உள்ள தமது இணைப்புச் சங்கங்களுக்கு  கூறியிருக்கிறது.

இந்தியாவிலும் 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசு வேலையில் சேருபவர்களுக்கு அரசு ஓய்வூதியம் வழங்காது என ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியம் வழங்குவற்கென தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி  உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டுமென மத்திய, மாநில அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் பிரதேசம் போன்ற மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறப் போவதாக அறிவித்துள்ளன.

தமிழ்நாட்டில் திமுக, தனது தேர்தல் அறிக்கையில் அரசு  ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என கூறியிருந்தது. ஆனால், தற்போது ஆர்வமின்றி உள்ளது. ஒன்றிய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு  மீண்டும் வருவதை எதிர்க்கிறது. நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ஏறக்குறைய ஓய்வூதியம் இல்லை என்றே கூறலாம். ஓய்வூதியம், முதியோர் பாதுகாப்பு, மருத்துவ வசதி போன்றவைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது நாகரிக சமுதாயத்தின் கடமையாகும்.

Exit mobile version