Site icon சக்கரம்

வியர்வைக்கு விடியல் காண மே தினத்தை உயர்த்திப் பிடிப்போம்!

சாலமன்

ழைப்பில் சிந்தும் வியர்வைக்கு விடியல் காண, உழைப்போரின் வரலாற்று முன்னோர்கள் நடத்திய போராட்டத்தாலும் சிந்திய ரத்தத்தாலும் செய்த தியாகத்தாலும் 18ஆம் நூற்றாண்டின் சுரண்டல் சமூகத்துக்கு எதிரான ஒளிரும் காலப் புள்ளியாய், உழைப்போர் ஆட்சி அதிகாரம் பெறுவதற்காக மிளிரும் தொடர் புள்ளியாய் அமைந்ததே மே 1.

“இதுவரையிலான வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே” என ஜெர்மானிய தாடிக்காரர் மாமேத மார்க்ஸின் எழுத்துகளை , மார்க்ஸ் கூறிய அந்தக் கூற்றை, பிரடெரிக் எங்கெல்ஸ் திருத்துகிறார். “புராதனப் பொதுவுடமை (வர்க்கங்களின் பிரிவுகளற்ற) சமுதாயத்துக்குப் பிந்தைய வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறு” என்பதாக எழுதுகிறார். மொழி கடந்து, தேசம் கடந்து, நிறம் கடந்து, பாலினம் கடந்து உழைப்போரின் உள்ளங்களை பற்றிக்கொண்டபோது, 19ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் உலகெங்கும் கலகங்கள் மூண்டது. 14 மணி நேர அல்லது 16 மணி நேர வேலை நேரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

“நாங்கள் இயந்திரங்களா அல்லது மானுடங்களா? பெரும் பணக்காரர்களின் சொகுசு வாழ்க்கைக்கு,எங்கள் ஒட்டு மொத்த வாழ்க்கையை உழைப்பால் செலுத்த நாங்கள் என்ன அடிமைகளா? நாங்கள் தொழிலாளர்கள். எங்களின் வேலை நேரம் எட்டு மணி நேரமாக வேண்டும். எங்களுக்கு எட்டு மணி நேர உறக்கம் வேண்டும். எட்டு மணி நேர வாழ்க்கை வேண்டும்!” என உலகத் தொழிலாளர் வர்க்கம் வீறுகொண்டு எழுந்து முழங்கிய போது ,உலகெங்கும் சுரண்டல் பாறைகளில் விரிசல்கள் விழுந்தது. இதுபோன்ற உலகு தழுவிய முழக்கத்தை, உழைப்போரின் போர் பிரகடனத்தை அதுவரையில் மானுட வரலாற்றுச் செவிகள் கேட்டதில்லை.

உழைக்கும் கூட்டம் என்றென்றைக்கும் அடங்கிக்கிடக்கும் என்ற மிதப்பில் கொட்டமடித்த சுரண்டல் கூட்டம், உழைப்போரின் உரிமைப் போரை நசுக்காமல் இருக்குமா என்ன? உலகெங்கும் பரவிய உழைப்போரின் உரிமைக் குரல்கள் டாலர் தேசம் முழுவதும் உச்சமடைந்தது. உழைப்போரின் வியர்வை வாசம் வீசும் அமெரிக்கத் தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 1886ஆம் ஆண்டு 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற வேலைநிறுத்தப் போர் தொடங்கியது. ஆம்… அது போர் தான். உழைப்போரின் அரசியல் அதிகாரத்துக்கு அடித்தளமிட்ட உழைப்போரின் வேலைநிறுத்தப் போர் அது. 16 மணி நேரம் உழைப்போரின் உதிரத்தை உறிஞ்சிக் குடித்த லாபவெறி மிருகங்களுக்கெதிரான வர்க்கப் போர் அது. இந்த வேலைநிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணி புரிந்த தொழிலாளர்கள் பாலினம் கடந்து பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சியைக் கண்டு மிரண்டு போன, அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. ரயில் சக்கரங்கள் சுழலவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் பேரணிகள் அமெரிக்காவை உலுக்கியது. மிக்ஸிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிகாகோவில் 70,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பங்கெடுத்து தங்களின் உரிமைக் குரல்கள் உலகெங்கும் விரியும் அளவுக்கு உயர்த்தினர். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்கள் தங்களின் ஒற்றுமையின் வலிமையுணர்ந்து இணைந்தன.

‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’ என்ற மாபெரும் இயக்கம் கட்டமைக்கப்பட்டது.. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களைக் கட்டமைத்து நெஞ்சை நிமிர்த்தி விண்ணதிரும் முழக்கங்களை டாலர் தேசம் முழுக்க எழுப்பியது. அத்தோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்தது. இது வெறும் வேலைநிறுத்தத்துக்கான அறைகூவல் அல்ல; மானுட விடியலுக்கு ரத்தத்தாலும் தியாகத்தாலும் அடித்தளம் இடுவதற்கான அறைகூவல் என அடுத்தடுத்து வந்த நாட்கள் வரலாற்றுப் பக்கங்களில் இன்றளவும் மின்னுகின்றன.

1886 மே 1 அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின் அறைகூவலை இதயத்திலேந்தி 1886 மே 3 அன்று மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் எனும் தொழிற்சாலை வாயிலுக்கு வெளியே… இதுவரையில் முதலாளித்துவத்தினால் நீட்டிக்கப்பட்ட காலச் சக்கரங்களில் உழன்று வந்த 3,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு முதலாளித்துவக் காலச் சக்கரத்தை எதிர்த்து கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தை ஒடுக்க ஆலை முதலாளிகளுக்கு ஆதரவாக வந்திறங்கிய ஆயுதம் ஏந்திய அரசப் படை தொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்த துப்பாக்கிச்சூட்டில் குண்டடிபட்டு இறந்த தொழிலாளர் தியாகிகளின் உதிரங்கள் உலகெங்கும் உள்ள உழைப்போரின் உணர்வுகளை எழுச்சியடைய வைத்தது. அதன் வெளிப்பாடாக இந்தத் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஹே மார்க்கட்டின் மைதானத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அமைதியான முறையில் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் முதலாளிகளின் சதியின் காரணமாக ஒரு வெடிகுண்டு வீசப்பட்டு அரசப் படையைச் சேர்ந்த ஒருவர் இறந்து போகிறார். இச்சம்பவத்தைக் காரணம் காட்டி அரசப் படையினர் தொழிலாளர் திரளின் மீது தடியடியும் துப்பாக்கிச்சூடும் நடத்தி கூட்டத்தைக் கலைத்து அமெரிக்கத் தொழிலாளர்களின் தலைவர்களான ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோரை கைது செய்து சிறையிலடைக்கிறது அமெரிக்க முதலாளித்துவ அரசு. ஓராண்டு கழித்து கைது செய்யப்பட்ட தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்கள் நால்வரும் 1887 நவம்பர் 11 ஆம் தேதி முதலாளித்துவ அதிகாரத்தால் பின்னப்பட்ட தூக்குக் கயிற்றுக்கு இரையாக்கப்படுகிறார்கள்.

இந்த அரசப் படுகொலையைக் கண்டித்து வியர்வையாலும் உதிரத்தாலும் உழைப்பாலும் டாலரை மின்ன வைத்த உழைப்போர் கூட்டம் வீறு கொண்டு எழுந்தது. தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலம் மானுடக் கடலானது. உழைப்போருக்காக செந்நீர் சிந்திய தொழிலாளர் தலைவர்கள் உழைப்போரின் கண்ணீர் கடலில் புதைந்தார்கள்.

“தொழிலாளர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள் எனும் சேதி உலகெங்கும் மின்னல் வேகமாகப் பரவியது. மாமேதை காரல் மார்க்ஸ் வாழ்ந்த காலகட்டத்தில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்குத் தத்துவார்த்த ஒளியூட்டி வழிநடத்தி வந்த அகிலம் என்று அழைக்கப்படுகிற சர்வதேச தொழிலாளர் சங்கம் தத்துவ வழிகாட்டலை முடித்துக்கொண்டு பின் கலைக்கப்பட்டது. எட்டு மணி வேலை நேரத்துக்காக உலகெங்கிலும் உள்ள பாட்டாளி வர்க்கம் வீறு கொண்டு எழுந்த சூழலில் அந்தப் போராட்டங்களைத் தத்துவார்த்த வகையிலும் செயல் வழியிலும் வழிகாட்டும் தேவை எழுந்தது. அதன் விளைவாக 1887ஆம் ஆண்டு இரண்டாவது சர்வதேச தொழிலாளர் சங்கம் பாரிஸில் கூடியது . இக்கூட்டத்தில் உலகெங்கும் உள்ள தொழிலாளர் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் மார்க்ஸினுடைய நண்பரும் மார்க்ஸிய மூலவர்களில் ஒருவருமான மாமேதை பிரிடெரிக் எங்கெல்சம் கலந்து கொள்கிறார். ஹேகேட் மைதானத்தில் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்தும்,கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய எட்டு மணி நேர வேலை நேரத்தை வீரியமிக்கதாக்கிய ‘அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு’ தொடங்கப்பட்ட மே 1ஆம் நாளை உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் தங்களுக்கான நாளாக நம் உரிமையை உயர்த்திப் பிடிக்கும் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கோரினார். உலகெங்கிலும் மே தினத்தின் வாயிலாகத் தொழிலாளரின் உரிமைப் போராட்டம் காட்டுத் தீயெனப் பரவியது.

சிங்காரவேலர்

இந்தியாவில் உலக உழைப்போருக்காக தியாகத்தால், ரத்தத்தால் சிவந்த மே நாளை 1923ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக , வெள்ளைக் கழுகின் ஆட்சியின் கீழ் நெஞ்சுரத்தோடு சென்னை வங்கக் கடலின் கரையில் சிந்தனைச் சிற்பி ம.வெ. சிங்காரவேலர் உயர்த்திப் பிடித்தார். 1932 கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு கூட்டப்படுவதற்கு முன்பாகவே மே தினக் கூட்டம் நடத்தியவர் சிந்தனைச் சிற்பி ம. வெ. சிங்காரவேலர் அவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக 20-7-1942இல் பதவி ஏற்றார். ஆட்சிக்கு வெளி அரங்கில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அவர்கள் தொழிலாளர்களின் எட்டு மணி நேர வேலைக்காக, தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார் என்றால் அந்தப் போராட்டங்களுக்குத் தகுந்தாற்போல பிரிட்டிஷ் ஆட்சியின் உள்ளேயே அதை மிகத் திறமையாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

அண்ணல் அம்பேத்கர் 1945 நவம்பர் 27, 28 தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் முத்தரப்பு மாநாட்டில் ஏழாவது கூட்டத் தொடரின் மிக முக்கியத்துவம் வாய்ந்த குறைந்த அளவு வேலை நேரம் (Reduction in factory working hours) மசோதாவைக் கொண்டுவந்தார். முதலாளிகள் முன்போன்று லாபம் கிடைக்காது என வெஞ்சினம் அடைந்தனர். தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வரவேற்றனர். இந்த மாநாட்டில், தொழிற்சாலைத் திருத்தச் சட்டம், ஊதியத்துடன் விடுமுறை, எட்டு மணி நேர வேலை, தொழிற்துறை நடைமுறை விதிகள், தொழிற்சங்கங்களுக்குக் கட்டாய அங்கீகாரம், தொழில் தகராறு சட்டம், உணவு, சிற்றுண்டி சாலை, குறைந்தபட்சக் கூலி நிர்ணயம் போன்ற முக்கிய பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்கு அண்ணல் அம்பேத்கர்தான் தலைமை தாங்கினார்.

அந்த மாநாட்டுத் தீர்மானங்கள்தான் சுதந்திர இந்தியாவில் சட்டமாக்கப்பட்டன என்பது வரலாறு. தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளுக்காக அரசுக்கு உள்ளும் புறமும் போராடிய மகத்தான தலைவர்கள் சிந்தனை சிற்பி சிங்கார வேலரும் அண்ணல் அம்பேத்கருமே ஆவர். தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கு சாதி ஒழிப்பை முன் நிபந்தனையாக வைத்த காரணத்தினாலேயே இந்த மகத்தான தலைவர்கள் சுதந்திர இந்தியாவில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மே தினமும் துப்புரவுத் தொழிலாளிகளும்

உலகம் முழுக்கவும் உழைப்போரின் தியாகங்களினால் ஆன உரிமை எனும் விளைபொருள் தேசம் கடந்து, மொழி கடந்து, நிறம் கடந்து, இனம் கடந்து, பாலினம் கடந்து அனுபவிக்கும் இவ்வுலகச் சூழலில் இந்தியாவில் மட்டும் சாதியைக் கடக்க முடியாமல் இருக்கிறது. குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர்கள் மட்டுமே பல ஆண்டுக்காலம் துப்புரவுப் பணியாளர்களாக இருக்க வேண்டிய அவலச் சூழல் உலக மானுடம் அனுபவித்திராதது. உலக மானுடம் உழைக்கும் கரங்களாகவும் உழைப்பைச் சுரண்டும் கரங்களாகவும் பிரிந்து கிடக்கும்போது இந்தியாவில் மட்டும் உழைக்கும் கரங்களுக்குள்ளேயே சாதிய ஒதுக்குதலால் குறிப்பிட்ட சமூகம் சார்ந்த கரங்கள் மட்டும் மலம் அள்ள வேண்டும், சாக்கடைத் தொட்டியில் இறங்கி சாக வேண்டுமெனில், ‘இந்தியாவில் தொழிலாளர் ஒற்றுமை என ஒன்றுண்டோ?’ என 150 ஆண்டுக்காலம் கடந்த மே தின தியாகங்கள் கேட்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் மலக்குழி மரணங்களில் தமிழகம்தான் முதலிடம் வகிப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகிறது.

கொரோனா எனும் பெருந்தொற்றுக் காலத்திலும் களத்தில் இறங்கி, சாக்கடையை அள்ளி சமூகப் புறங்களைத் தூய்மையாக்கும் துப்புரவுப் பணியாளர்களை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டுவதும் அடிப்பதும் விஷமூற்றிக் கொல்வதுமான கொடுஞ்செயல்களை மூடி மறைத்துவிட்டு அல்லது இத்தகைய கொடுஞ்செயல்களுக்குத் தீர்வு காணாமல், மனிதர்களை மனிதர்கள் ஒதுக்கி வைக்கும் முறையை வைத்துக்கொண்டே உழைக்கும் வர்க்கமாக நாம் விடுதலையடைய வேண்டுமெனில் அதைவிட நகைப்புக்குரியதும் கோபத்திற்குரியதுமான வார்த்தை வேறு கிடையாது.

இப்பொருள் குறித்து அண்ணல் அம்பேத்கர் கூறும்போது, “இந்திய நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தினர் அதாவது ஏழை எளிய மக்கள், தம்மிடையே ஏழை – பணக்காரன் என்ற வேறுபாட்டைத் தவிர வேறு எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லையா? இவர்கள் இந்த வேறுபாட்டைப் பார்க்கவே செய்கிறார்கள் என்பது உண்மையென்றால், அத்தகைய பாட்டாளி மக்கள் பணக்காரர்களுக்கு எதிராக எந்த வகையில் ஒன்றுபட்ட அணியாக திரள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டு ஓரணியாகத் திரள முடியாத நிலையில் புரட்சி எப்படி சாத்தியமாகும்?” என்கிறார். புரட்சி மட்டுமல்ல… உலகத் தொழிலாளர்களின் தியாகத்தாலும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் இயக்கத்தாலும் ஆற்றலாலும் விளைந்த உரிமைகளையும் தக்கவைக்கக்கூட முடியாது. ஐரோப்பிய நாடான பின்லாந்து வாரத்துக்கு நான்கு நாட்களும் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரமும் உழைத்தால் போதும் என்கிறது. ஆனால், நம் தேசத்திலோ 12 மணி நேர வேலை நேரம் எழுதப்படாத விதியாக இருக்கிறது. கொரோனாவைக் காரணம் காட்டி 12 மணி நேர வேலை கட்டாயமாக்கப்பட இருக்கிறது மத்திய அரசு. தொழிலாளர் நலச் சட்டங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனத் தொழிலாளர்கள் நவீன கொத்தடிமைகள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அனைத்துத் தளங்களிலும் பன்மைத்துவத்துக்கு எதிரான ஒற்றைத் துருவ ஆட்சி முறை கோலோச்சுகிறது. கல்வியும் மருத்துவமும் விவசாயமும் கார்ப்பரேட்டுகளின் கொடுங்கரங்களுக்குள் சென்றுகொண்டே இருக்கிறது. மே தினம் என்பது வேலை நேர குறைப்புக்காக மட்டும் உயர்த்தப்படும் பதாகை அல்ல. மானுடத்தின் மீதும் புவியின் மீதும் அப்பியிருக்கும் அனைத்து அழுக்குகளையும் அகற்றும் பதாகையே மே தினம். மனிதர்களை மனிதர்கள் ஒதுக்கிவைக்கும் சாதிமுறையை எதிர்த்தும், மானுட பெரும்பான்மையை, புவியைச் சுரண்டும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் மே தினத்தை உயர்த்திப் பிடிப்போம்! சாதியம் மடிய ஜனநாயகம் மலர மே தினத்தை உயர்த்திப் பிடிப்போம்! மே தினம் வாழ்க

Exit mobile version