-ராஜன் குறை
அரசியல் தத்துவம், கோட்பாடுகளின் அடிப்படையில் பார்த்தால் பாரதீய ஜனதா கட்சியின் அரசியல் என்ன என்பது மிகவும் குழப்பமாக இருக்கிறது. அந்தக் கட்சி தன்னை “வித்தியாசமான கட்சி” (Party with a difference) என்று கூறிக்கொள்வது உண்டு. அது என்ன வித்தியாசம் என்பது தெளிவாக இல்லை. பிற கட்சிகளைப் போலவே உட்கட்சிப் பூசல்களும், ஊழல் குற்றச்சாட்டுகளும் மலிந்த கட்சியாகத்தான் உள்ளது என்பதை கர்நாடகாவில் கண்டோம்.
அது ஒரு தேசியவாதக் கட்சி, தேச பக்தர்களின் கட்சி என்றெல்லாம் கூறப்பட்டாலும், நடைமுறையில் அது சமூகத்திலுள்ள முரண்பட்ட அடையாளங்களை வலுப்படுத்தும் கட்சியாகவே விளங்குகிறது. மக்களை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக பிரித்தாளவே நினைக்கிறது.
பாரதீய ஜனதா கட்சியின் முரண்பட்ட நிலையை பகுத்தறிய உலக வரலாற்றில் எப்படி நவீன மக்களாட்சி அரசியல் தோன்றியது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நவீன மக்களாட்சியின் முக்கியத்துவம் என்னவென்றால் மக்களே அரசனின், அரசின் அதிகாரத்திற்கு அடிப்படை என்பதுதான். மக்களுக்கிடையேயான சமூக ஒப்பந்தமே அரசுக்கான, அரசியலுக்கான அடிப்படை எனக் காண வேண்டும்.
இது எதனால் முக்கியத்துவம் பெறுகிறது என்றால் அதற்கு முன்னால் அரசனோ, அரசியோ இறைவனின் அருள் பெற்றவர்கள் என்ற எண்ணம் இருந்ததுதான். இதனால் பூசாரி வர்க்கம்தான் இறைவன் சார்பாக அரசனுக்கு முடிசூட்டும். நேற்றைக்குக் கூட இங்கிலாந்து அரசர் சார்லஸின் முடிசூட்டு விழாவில், காண்டர்பரி ஆர்ச் பிஷப்தான் மணிமகுடத்தை அரசர் தலையில் சூட்டியுள்ளார். ஆனால் இங்கிலாந்து அரசர் பொம்மை அரசர்தான். அதிகாரம் எதுவும் கிடையாது.
இப்படி இறைவனுக்கும், அதிகாரமுள்ள அரசனுக்கும் உள்ள தொடர்பு வெட்டப்பட்ட பிறகு, குடிமக்கள் அனைவரும், எந்த மதமாக இருந்தாலும், எந்த சமூகப் பிரிவாக இருந்தாலும் ஒரே நிறையுள்ள தனி நபர்கள், இவர்களின் பிரதிநிதிதான் நாட்டை ஆட்சி செய்யும் பொறுப்பில் இருக்க முடியும் என்பது பெறப்பட்டது. இதைத்தான் மதச்சார்பின்மை என்று அழைப்பார்கள்.
இங்கிலாந்து நாட்டை உண்மையில் ஆள்பவர் பிரதமர் ரிஷி சுனக் என்ற இந்துதான். அறுதிப் பெரும்பான்மையாக கிறிஸ்துவர்கள் வாழும் நாட்டில், ஒரு இந்து பிரதமராவது எந்த விதத்திலும் தவறானதாகப் பார்க்கப்படவில்லை. பொம்மை அரசர் கிறிஸ்துவ பாதிரியார் கையால் முடிசூட்டிக் கொண்டாலும் ஆட்சி அதிகாரம் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளின் தலைவரான பிரதமர், அமைச்சரவை கையில்தான்.
சுருக்கமாகச் சொன்னால் மக்களாட்சியின் அடிப்படைகள் மூன்று:
1. ஒரு தேசத்தில் வசிக்கும் எல்லா குடிமக்களும், அவர்கள் பிற அடையாளங்கள் எதுவாக இருந்தாலும், சம மதிப்புள்ளவர்கள். அவர்களை ஒருங்கிணைப்பதே தேசிய அரசியல்.
2. அவர்களுடைய அரசியல் அணிகள் நாட்டின் ஆட்சிக்கான கொள்கைகள் சார்ந்த வேறுபாட்டின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, ஜாதி, மத, இன அடிப்படையில் அமையக் கூடாது. அந்தக் கொள்கை வேறுபாடு சமூக ஒற்றுமையை சிதைக்காமல், ஆரோக்கியமான கருத்தியல் போராக மட்டுமே நடக்க வேண்டும்.
3. எல்லா குடிமக்களும் சம வாய்ப்பினை உடையவர்களாக இருக்க வேண்டும். அதனால் அடிப்படை தேவைகள், கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கான வசதிகளை அனைவரும் பெற வேண்டும். முற்றிலும் பொதுவுடமை சாத்தியம் இல்லாவிட்டாலும், முற்போக்கான வரி விதிப்பின் மூலம் முதலீட்டிய திரட்சியின் உபரியை பரந்துபட்ட மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்.
பாரதீய ஜனதா கட்சி இந்த மூன்று குறிக்கோள்களுக்கும் எதிராகவே பயணிக்கிறது. இதை சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சமூக அடையாளங்களை எதிர் நிறுத்துதல்
இந்து மகா சபா, ராஷ்டிரிய சுயம் சேவக் உள்ளிட்ட சங்க பரிவார அமைப்புகள் தொடக்கம் முதலே சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டி இந்து அடையாள அணி சேர்க்கைக்கான அரசியலையே முன்னெடுத்து வருகின்றன.
இந்தியா, பாகிஸ்தான் என இரு தேசங்கள் உருவானதும், காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் இரு நாடுகளிடையே விரோதத்தை உருவாக்கியதும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்க உதவியது. சர்வதேச அளவிலான மேற்குலக நாடுகளுக்கு எதிரான இஸ்லாமிய தீவிரவாதமும் இப்போது இதற்கு கைகொடுக்கிறது.
ஆனால் கூட, இதைப் பயன்படுத்தி இந்தியர்களை ஒருமைப்படுத்துவதையோ, இந்துக்களை ஒருமைப்படுத்துவதையோ பாஜக செய்வதில்லை. அவர்களில் உயர் ஜாதியினர், உயர் மத்தியதர வர்க்கத்தினர் அவர்கள் சார்பாகவே, அவர்களை ஆதரவு தளமாகக் கொண்டே இயங்குகிறது. பெருமுதலீட்டிய நலனுக்கு ஆதரவாகவே இருக்கிறது. வங்கிக் கடன்களையும், வரிச்சலுகைகளையும் பெருமுதலீட்டிய நிறுவனங்களுக்கு வாரி வழங்குகிறது.
மேலும் தேர்தல் காலங்களில் மாநில அடையாளங்கள், ஜாதி அடையாளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தியே, அவற்றை கூர்மைப்படுத்தியே அரசியல் செய்கிறது. மக்களை ஒருங்கிணைப்பதற்கு பதிலாக பிளவுபடுத்தியே அரசியல் செய்கிறது. உதாரணங்களைப் பார்ப்போம்.
இராணுவ தளபதிகள் திம்மையாவும், கரியப்பாவும்
கர்நாடக மாநில தேர்தல் கூட்டமொன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஜெனரல் திம்மையாவையும், கரியப்பாவையும் நேரு அரசாங்கம் அவமானப்படுத்தியதாகக் கூறினார். அவர் கூறிய தகவல்கள் எல்லாமே தவறு.
ஜெனரல் திம்மையாவின் தலைமையில் 1948ஆம் ஆண்டு பாகிஸ்தானை போரில் வென்றதாகவும், காஷ்மீரையும் காப்பாற்றியதாகவும், ஆனால் பிரதமர் நேருவும், பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனனும் அவரை அவமானப்படுத்தியதாகவும் பிரதமர் கூறினார்.
முதலில் 1948ஆம் ஆண்டு இராணுவத்தினை தலைமை தாங்கியது ராய் புஷ்சர் என்ற பிரிட்டிஷ் அதிகாரி. நேரு திம்மையாவின் பங்களிப்பினை பாராட்டி அவரை கொரியாவுக்குச் சென்ற ஐக்கிய நாடுகள் படைக்கு தலைமையேற்க செய்தார். திம்மையா 1957 முதல் 1961 வரை இராணுவத்தின் முப்படைத் தளபதியாக இருந்தார். அவருக்கு பத்மபூஷண் விருதும் வழங்கப்பட்டது.
ஜெனரல் கரியப்பாவுடன் கருத்து வேறுபாடுகள் நேருவுக்கு இருந்தாலும், அவரை முதல் முப்படைத் தளபதியாக நியமித்ததும் நேருதான். அவருக்கு ஃபீல்டு மார்ஷல் விருதை அளித்தது ராஜீவ் காந்தி அரசுதான்.
இந்த தவறான தகவல்களில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் இந்திய இராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த அவர்களை குறித்து ஏன் கர்நாடக மாநில தேர்தலின்போது பேசுகிறார் என்பதுதான். அப்படி அவர்களை காங்கிரஸ் அரசு அவமரியாதையாக நடத்தியிருந்தால் அது இந்திய தேசத்திற்கே பொதுவான பிரச்சினை அல்லவா? ஏன் அந்த இந்திய தேசிய இராணுவ முப்படை தளபதிகளை கர்நாடக மாநிலத்தின் அடையாளமாக பிரதமர் குறுக்குகிறார்?
இப்படி இந்திய இராணுவத்தின் முப்படைத் தளபதிகளையே ஒரு குறிப்பிட்ட மாநில அடையாளமாகச் சுருக்குவதுதான் தேசியமா? அவர்களை நேரு அவமதித்திருந்தார் என்றால் அதை வட மாநிலத்தவர்கள் தவறு என்று நினைக்க மாட்டார்களா? அவர்கள் கர்நாடக மாநிலத்துக்கு மட்டுமா இராணுவ தளபதிகளாக இருந்தார்கள்? இப்படி மாநில அடையாளத்தை வைத்து அரசியல் செய்வதுதான் பா.ஜ.க தேசியமா?
மணிப்பூர் இனக்கலவரம்
மணிப்பூரின் மொத்த மக்கள் தொகையே முப்பது லட்சம் பேர்தான். இவர்களை ஒருங்கிணைத்து, ஒரு பொதுவான மாநில நலன் என்பதை உருவாக்கினால்தானே அரசியல் என்பது பயனுள்ளதாக இருக்கும்? ஆனால் தேசபக்தர்களின் கட்சியான பா.ஜ.க அந்த மாநிலத்தில் மிகப்பெரிய இனக்கலவரத்தையல்லவா உருவாக்கியுள்ளது?
மணிப்பூர் மாநிலத்தில் சமவெளி பகுதியும், மலைப்பகுதிகளுமாக இரண்டு நிலவியல் பகுதிகள் உள்ளன. சமவெளி பகுதியில் மைதே இன மக்களும், மலைகளில் பழங்குடி இனக்குழுக்களின் மக்களும் உள்ளனர். மலைவாழ் பழங்குடியினரில் பலர் கிறிஸ்துவர்கள். மைதே இன மக்களே ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள்.
மணிப்பூரில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் இயங்கி வந்தன. அதனால் அங்கே இந்திய இராணுவம் முகாமிட்டிருந்தது. இராணுவத்தினரின் அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தன. இராணுவத்தினருக்கு தனி அதிகாரங்களை கொடுக்கும் சட்ட த்தை நீக்கச் சொல்லி இரோம் ஷர்மிளா என்ற பெண்மணி பல ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
பாரதீய ஜனதா கட்சி 2017ஆம் ஆண்டு முதல் அங்கே ஆட்சி செய்து வருகிறது. சமவெளியில் உள்ள மைதே பெரும்பான்மையருக்கும், மலைகளில் உள்ள பழங்குடி மக்களுக்குமான முரண்பாடுகள் பெருகி வந்தன. பாதுகாக்கப்பட்ட பகுதிகள் (ரிசர்வ்டு ஃபாரஸ்ட்) என்ற பெயரில் பழங்குடி மக்களை காடுகளிலிருந்து அகற்றுவது அதிகரித்தது. இது அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சமீபத்தில் சமவெளியில் வாழும் முன்னேறிய வகுப்பினரான மைதே மக்களையும் பழங்குடி பட்டியலில், ஷெட்யூல்டு டிரைப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற முன்னெடுப்பும் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சி மக்களை அரசியல் மையப்படுத்தி, கருத்து வேறுபாடுகளை விவாதங்களாக மாற்றுவதில் அடைந்துள்ள தோல்வி மிக மோசமான இனக்கலவரமாக வடிவெடுத்துள்ளது. அமைச்சர்களாக உள்ள பழங்குடியினரின் வீடுகளே கொளுத்தப்பட்டுள்ளன. கடந்த வார வன்முறை நிகழ்வுகள் ஆறாத வடுக்களை சமூகத்தில் தோற்றுவித்துள்ளன எனலாம்.
நிர்வாகத் தோல்வியையே வெற்றியாக்குதல்
காஷ்மீர் கவர்னராக 2018-2019 ஆண்டுகளில் இருந்தவர் சத்யபால் மாலிக். இவர் பாரதீய ஜனதா கட்சிக்காரராகத்தான் இருந்தார். அப்போது 2019 தேர்தலுக்கு முன்னால் புல்வாமா என்ற இடத்தில் இந்திய இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வெடிமருந்து அடங்கிய காரினால் தாக்கப்பட்டு நாற்பது பேர் உயிரிழந்தனர்.
பாரதீய ஜனதா கட்சி பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதல் என்று சொல்லி ஒரு பெரும் தேச பக்தி அலையைக் கட்டவிழ்த்து விட்டது. அந்த அலையில் அது தேர்தலில் பெரும்பான்மையும் பெற்றது. பாகிஸ்தான் தீவிரவாதத்திலிருந்து நாட்டை காப்பாற்ற பாஜகவால்தான் முடியும் என்று கூறப்பட்டது.
உண்மையில் நடந்தது என்ன என்பதை சத்யபால் மாலிக் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். சி.ஆர்.பி.எஃப் வீர ர்கள் பயணம் செய்ய விமானங்களைக் கோரியுள்ளனர். அதுதான் பாதுகாப்பானது என்பதால். ஆனால், அவர்களுக்கு விமானங்களை வழங்க மறுத்துள்ளார்கள்.
தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்ற தகவல்கள் இருந்தும் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பாகிஸ்தானிலிருந்து வந்த வெடிமருந்துகள் அடங்கிய கார் பத்து, பதினைந்து நாட்கள் காஷ்மீரின் சாலைகளில் சுற்றிக்கொண்டு இருந்துள்ளது.
சத்யபால் மாலிக் இந்த நிகழ்வுக்கு நமது நிர்வாகக் கோளாறுதான் காரணம் என்று சொன்னபோது பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதைக்குறித்து வெளியில் பேச வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஊடகங்களும் இந்தக் குளறுபடிக்கு அரசு பொறுப்பில்லையா என்று கேட்கவில்லை. இதே புல்வாமா நிகழ்ச்சி காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருந்தால், பா.ஜ.க அதற்கு காங்கிரஸ் அரசின் மெத்தனம்தான் காரணம் என்று சொல்லி பிரச்சாரம் செய்து காங்கிரஸை தோற்கடித்திருக்கும். பா.ஜ.க ஆட்சியில் நடந்ததால் அது அரசின் பலவீனமாக பார்க்கப்படாமல், பாகிஸ்தானுக்கு எதிரான தேசபக்தி முழக்கமாக மாறிவிட்டது.
வெறுப்பரசியலும், ஒருங்கிணைப்பு அரசியலும்
இதற்கு என்ன காரணம்? காங்கிரஸ் கட்சி அது 1885ஆம் ஆண்டு தோன்றியதிலிருந்தே மக்களைப் பிளவுபடுத்தாமல், அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கவே விரும்புவதுதான். குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை தூண்டுவதை அது ஒரு போதும் செய்யாது.
அதனால்தான் மகாத்மா காந்தி கோட்ஸேவால் கொல்லப்பட்டார். அன்றிலிருந்து இன்றைய ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை வரை மக்களை ஒருங்கிணைப்பதையே காங்கிரஸ் தன் அரசியலாகக் கொண்டுள்ளது.
இப்போதும்கூட முஸ்லிம்கள் மீது வெறுப்பினைத் தூண்டும் விதமாக ‘தி கேரளா ஸ்டோரி’ (The Kerala Story) என்ற திரைப்படத்தினை வெளியிட்டுள்ளார்கள். அந்தப் படத்தை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் குரல் கொடுத்துள்ளனர். மிக அபத்தமாக வெறுப்பு பிரச்சாரம் செய்யும் படம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஆனால் பிரதமர் மோடி அந்தப் படத்தை ஆதரித்துப் பேசுகிறார். காங்கிரஸ் அரசியல் ஆதாயத்துக்காக தீவிரவாதத்துக்குத் துணை போவதாகக் கூறுகிறார். வாக்களிப்பவர்கள் “ஜெய் பஜ்ரங் பலி” என்று முழக்கமிட வேண்டும் என்று வெளிப்படையாக மதவாத அரசியல் செய்கிறார்.
தேச பக்தி என்ற பெயரில் மக்களிடையே பல்வேறு பிரிவினைகளைத் தூண்டுவது எவ்வளவு பெரிய முரண்பாடு என்பதை பாரதீய ஜனதா கட்சியை ஆதரிப்பவர்கள் சிந்திக்க வேண்டும். “கண்ணுக்குக் கண்” என்ற போக்கினால் உலகமே குருடாகிவிடும் என்றார் காந்தி. மக்களிடையே கருத்தியல் சார் முரண்களை உருவாக்க வேண்டுமே தவிர, அடையாளங்கள் சார்ந்த முரண்களை உருவாக்கக் கூடாது.
பார்ப்பனீயத்தையும், வடவர் ஆதிக்கத்தையும் எதிர்த்த தி.மு.க ஒருபோதும் அடையாளம் சார்ந்த வெறுப்பாக அதை மாற்ற அனுமதிக்கவில்லை. அதனால்தான் தமிழகத்தில் ஒருபோதும் வன்முறை தலையெடுத்ததில்லை. அது பொறுக்காமல்தான் திராவிட மாடல் காலாவதியாகிவிட்டதென்று வெறுப்பின் முகவர்கள் கூறுகிறார்கள்.