Site icon சக்கரம்

மதச்சார்பற்ற அரசியல் முகம்: கர்நாடகாவின் முதல்வராகும் சித்தராமையா

பால. மோகன்தாஸ்

ர்நாடகாவின் முன்னாள் முதல்வரான சித்தராமையா மீண்டும் அம்மாநில முதல்வராக சனிக்கிழமை (மே 20) பதவியேற்க இருக்கிறார். சோசலிச தலைவரான ராம் மனோகர் லோகியா மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரான சித்தராமையா கடந்து வந்த பாதை குறித்து தற்போது பார்ப்போம்.

சித்தராமையாவின் இளைமைக் காலம்: கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள சித்தரமணா ஹூண்டி என்ற குக்கிராமத்தில் சித்தராமே கவுடா – போரம்மா தம்பதியருக்கு 1948-ம் ஆண்டு ஓகஸ்ட் 12-ம் திகதி பிறந்தவர் சித்தராமையா. இவர் தனது பெற்றோருக்கு இரண்டாவது குழந்தை. சித்தராமையாவுக்கு உடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். விவசாயத்தை பிரதானமாகக் கொண்ட குருபா கவுடா என்ற சமூகத்தில் பிறந்தவர் சித்தராமையா. பத்து வயது வரை முறைப்படி பள்ளியில் பயிலாத சித்தராமையா, அதன் பிறகே பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கி உள்ளார். பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பட்டமும், அதனைத் தொடர்ந்து சட்டப் படிப்பில் பட்டமும் பெற்று, சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார்.

அரசியலுக்குள் நுழைந்த சித்தராமையா: கல்லூரிக் காலத்தில் இருந்தே பேச்சுத்திறமைக்குப் பெயர்பெற்ற சித்தராமையா, சோசியலிச தலைவரான ராம் மனோகர் லோகியாவால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்குள் நுழைந்தார். 1983-ம் ஆண்டு கர்நாடகாவின் 7-வது சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய லோக் தள் கட்சி சார்பில் மைசூரு மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா, அதில் வெற்றி பெற்று முதல் முறையாக கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், ஜனதா கட்சியில் இணைந்த சித்தராமையா, முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான அரசில், கன்னட மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்தப்படுவதை கண்காணிப்பதற்கான கன்னட கண்காணிப்பு அமைப்பின் முதல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, கர்நாடக பட்டு வளர்ப்பு மற்றும் பட்டு தொழில் துறையின் அமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

மக்கள் தலைவராக உருவெடுத்த சித்தராமையா: 1985-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா, மீண்டும் ராமகிருஷ்ண ஹெக்டே தலைமையிலான அரசில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். கன்னட அலுவல் மொழி கண்காணிப்புத் துறை தலைவர், பட்டு வளர்ப்பு மற்றும் பட்டுத் தொழில் துறை அமைச்சர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர் என படிப்படியாக வளர்ந்த சித்தராமையா, அரசியலுக்குள் நுழைந்த 10 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் அறிந்த தலைவராகவும், ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராகவும் பெயர் பெற்றார்.

கர்நாடகாவின் நிதிநிலையை சீர் செய்த நிதி அமைச்சர்: 1994-ம் ஆண்டு கர்நாடகாவின் 10-வது சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மீண்டும் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா, முதல்வர் தேவ கவுடா தலைமையிலான அமைச்சரவையில் துணை முதல்வராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். மாநிலத்தின் வருவாயைப் பெருக்கிய சித்தராமையா, முந்தைய அரசு வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தியதோடு, மீண்டும் கடன் வாங்காமல் அரசை நடத்தினார். நாட்டிலேயே சிறந்த நிதிநிலை கொண்ட மாநிலமாக கர்நாடகா விளங்குகிறது என நிதி கண்காணிப்பு அமைப்புகள் பாராட்டு தெரிவித்தன.

தேவ கவுடாவுடன் இணைந்த சித்தராமையா: ஜனதா தளத்தில் இருந்து பிரிந்து மதச்சார்பற்ற ஜனதா தளத்தை 1999-ம் ஆண்டு உருவாக்கினார் தேவ கவுடா. அவரது கட்சியில் இணைந்தார் சித்தராமையா. அதே ஆண்டு நடைபெற்ற 11-வது சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தோல்வி அடைந்தது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வரானார்.

இதனைத் தொடர்ந்து 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார் சித்தராமையா. காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசில், துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையா, நிதித் துறைப் பொறுப்பை ஏற்று மாநிலத்தின் நிதி நிலைமையை மேம்படுத்தினார். குறிப்பாக, வரி ஏய்ப்பில் உள்ள ஓட்டைகளை அடைத்து அரசுக்கு வரி வருவாயை அதிகரித்து அனைத்துத் தரப்புக்குமான பட்ஜெட்டை அளித்தார். இதன் காரணமாக பொதுமக்களின் பாராட்டோடு, பொருளாதார நிபுணர்களின் பாராட்டையும் அவர் பெற்றார்.

காங்கிரஸில் இணைந்த சித்தராமையா: தேவ கவுடாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து 2006-ம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து விலகிய சித்தராமையா, அதே ஆண்டு தனிக்கட்சித் தொடங்கினார். பின்னர் காங்கிரஸ் கட்சியின் அழைப்பை ஏற்று அதே ஆண்டு அக்கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே சாமுண்டீஸ்வரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முன்மாதிரி அரசியலை முன்னெடுத்தார்.

முதல்வராக பதவியேறற சித்தராமையா: 2008-ம் ஆண்டு கர்நாடகாவின் 13-வது சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், அதற்கு முன்பாக சித்தராமையாவை கட்சியின் மாநில பிரச்சாரக் குழு தலைவராக நியமித்தது காங்கிரஸ் கட்சி. இம்முறை வருணா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சித்தராமையா. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் சித்தராமையா. 2013-ல் நடைபெற்ற 14-வது சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சித்தராமையா. இம்முறை காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக தேர்வாகி 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை வழங்கினார் அவர்.

தேவ கவுடாவுடன் கூட்டணி: 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் வருணா தொகுதியை தனது மகனுக்காக் கொடுத்த சித்தராமையா, சாமுண்டீஸ்வரி, பதாமி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்த அவர், பதாமி தொகுதியில் வெற்றி பெற்றார். பா.ஜ.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்தது. இதன் காரணமாக, ஹெச்.டி. குமாரசாமி முதல்வரானார். காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.

சொந்த கட்சியினரால் விமர்சிக்கப்பட்ட சித்தராமையா: ஓராண்டு காலத்துக்கும் மேலாக குமாரசாமி முதல்வராக இருந்த நிலையில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினமா செய்தனர். இதன் பின்னணியில் பா.ஜ.க இருந்ததாகக் கூறப்பட்டது. இந்த இடைத் தேர்தலில் குறைந்தது 15 இடங்களில் வெற்றி பெறுவோம் என உறுதிபட அறிவித்தார் சித்தராமையா. எனினும், 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. இது சித்தராமையாவின் அரசியல் தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. கட்சிக்குள் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதன் காரணமாக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா. 2019-ல் பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைக்கத் தொடங்கியதை அடுத்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார் சித்தராமையா.

மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ள சித்தராமையா: இந்தப் பின்னணியில்தான் காங்கிரஸ் தலைவராக கடந்த 2020-ம் ஆண்டு தேர்வானார் டி.கே. சிவகுமார். இளம் தலைவரான அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி துடிப்புடன் செயல்பட்டது. கடந்த 10-ம் தேதி நடைபெற்ற கர்நாடகாவின் 16-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. தனது தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளதால் தானே முதல்வராக வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு அழுத்தம் கொடுத்தார் டி.கே. சிவகுமார். அதேநேரத்தில், மாநிலத்தில் மக்கள் செல்வாக்குள்ளத் தலைவராக சித்தராமையா அறியப்படுவதால், இருவரில் யாரை முதல்வராக தேர்வு செய்வது என்பதில் கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், இந்த குழப்பம் இன்று முடிவுக்கு வந்து முதல்வராக சித்தராமையா பதவியேற்பார் என்றும், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்பார் என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியில் சிவகுமார் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதச்சார்பற்ற அரசியல் முகம்: கர்நாடகாவின் மதச்சார்பற்ற அரசியல் முகமாக அறியப்படும் சித்தராமையா, மீண்டும் முதல்வராக பதவியேற்க இருப்பது பா.ஜ.கவின் அரசியலுக்கான சரியான மாற்றாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். அதேநேரத்தில், காங்கிரஸ் அளித்துள்ள முக்கிய 5 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பெரும் கடமை சித்தராமையாவுக்கு இருக்கிறது. கொள்கை அரசியலோடு, மக்கள் நல அரசியலையும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சித்தராமையா, அதில் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

-இந்து தமிழ்
18.05.2023

Exit mobile version