–சிவகுமார் இராஜகுலம்
அமெரிக்க அரசுக்கு ஏற்பட்டுள்ள கடன் உச்சவரம்பு நெருக்கடி சர்வதேச நிதிச் சந்தையில் பெரும் புயலை உருவாக்கி இருக்கிறது. அமெரிக்காவுக்கு இந்த நெருக்கடி ஏன் வந்தது? இதற்கு தீர்வு காண அதிபர் ஜோ பைடன் என்ன செய்கிறார்? அமெரிக்காவால் இந்த நெருக்கடியை எளிதில் கடந்துவிட முடியுமா? இதனால் உலகளாவிய நிதிச் சந்தையில் மாற்றங்கள் வருமா?
இலங்கை திவாலாகி மக்கள் கிளர்ச்சி வெடித்ததையும், பாகிஸ்தான் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதையும் அண்மைக்காலத்தில் கண்ணுற்ற நமக்கு, அமெரிக்காவும் அதேபோன்றதொரு நெருக்கடியில் சிக்கியிருப்பதைக் காணும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.
ஏனெனில், உலகமே கண்டு வியக்கும் நாடு, பெரும் பணக்கார நாடு, ராணுவ, பொருளாதார வல்லரசு என்பன போன்ற பெருமைகளைக் கொண்ட அமெரிக்காவை ஆளும் அரசு செலவிட பணம் இல்லாத நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதைக் கேள்விப்படும் யாவருக்கும் ஆச்சரியம் வருவது இயற்கையே.
கடன் உச்சவரம்பு நெருக்கடி என்றால் என்ன?
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடான அமெரிக்காவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 26.85 டிரில்லியன் டொலர் ஆகும். ஆனால், அந்நாட்டை 31.5 டிரில்லியன் டொலர் அளவுக்கு கடன் கழுத்தை நெரிக்கிறது.
அதாவது, அதன் ஜிடிபி மதிப்பைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகமாக, தலைக்கு மேல் கடன் இருக்கிறது. இதுவே, 3.38 டிரில்லியன் டொலர் பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியாவை எடுத்துக் கொண்டால் அந்த மதிப்பில் 57 சதவீதம்தான் கடன் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அதன் ஜிடிபி மதிப்பில் 26 சதவீதம் கடன் உள்ளது.
கடன் அளவில் காணப்படும் இந்த வித்தியாசம்தான், பெரும் பணக்கார நாடான அமெரிக்காவை நெருக்கடியில் தள்ளியுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யும் அமெரிக்க அரசு புதிதுபுதிதாக கடன்களை வாங்கிக் கொண்டேதான் இருக்கிறது.
அதற்கு ஏற்றவாறு, தேவைப்படும் போதெல்லாம் கடன் உச்சவரம்பை அந்நாட்டு அரசு உயர்த்திக் கொண்டே வந்திருக்கிறது. அதுதான் அமெரிக்க அரசை இன்று இந்த நெருக்கடிக்கு கொண்டு வந்துள்ளது.
கடன் வாங்க அனுமதிக்கப்பட்ட அளவான 31.38 டிரில்லியன் டொலர் அளவை கடந்த ஜனவரி 19-ம் தேதியே அமெரிக்க அரசு நெருங்கிவிட்டது. அது முதலே நெருக்கடியில் இருந்து வரும் அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள சமாளிப்பு நடவடிக்கைகள் மூலம் இம்மாத இறுதி வரையே தாக்குப்பிடிக்க முடியும்.
மே ஒன்றாம் தேதிக்குப் பிறகு அரசு செலவினங்களுக்கு பணமும் இருக்காது, கடன் உச்சவரம்பு உயர்த்தப்படாவிட்டால் புதிதாக கடனும் வாங்க முடியாது என்பதால் அமெரிக்க அரசு நெருக்கடியில் தவிக்கிறது.
அமெரிக்க அரசின் வரவு-செலவுக்கான நிதியை நிர்வகிக்கும் கருவூலத்தின் செயலர் ஜேனட் எல்.எல்லென், இந்த கடன் உச்சவரம்பு நெருக்கடி சூழலை பேரழிவு என்கிறார். இதனால், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமெரிக்க அரசு அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குக் கூட நிதி இல்லாத மோசமான நிலை உருவாகி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்த நெருக்கடி வந்தது எப்படி?
உலகையே ஈராண்டுகள் முடக்கிப் போட்ட கொரோனா பேரிடர்தான் அமெரிக்காவின் இன்றைய நிலைக்கு முக்கியமான காரணம். கொரோனா ஊரடங்குகளால் ஏற்பட்ட பொருளாதார சுணக்கத்தை சரிசெய்ய அமெரிக்க அரசு 900 பில்லியன் டொலர் அளவுக்கு வரிச்சலுகைகள், மானியங்களை வாரி வழங்கியது. இதனால் ஏற்பட்ட பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ், குறுகிய காலத்திலேயே வட்டி விகிதத்தை கணிசமாக அதிகரித்துவிட்டது. இதன் பக்க விளைவுகளில் ஒன்றாக சிலிகன் வேலி பேங்க், சிக்னேச்சர் பேங்க், ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் ஆகிய 3 வங்கிகள் திவாலாகிவிட்டன.
அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய கடன் உச்சவரம்பு நெருக்கடியும் வந்துள்ளது. நெருக்கடியில் இருந்து மீள கடன் உச்சவரம்பை உயர்த்துவதே சரியான தீர்வாக இருக்கும் என்பதால் அதற்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் ஒத்துழைப்பை ஆளும் ஜனநாயகக் கட்சி நாடியுள்ளது. ஜப்பானில் ஜி-7 மாநாட்டை முடித்துக் கொண்டு, ஆஸ்திரேலியாவில் குவாட் அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது பயணத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, இதற்காகவே தாயகம் திரும்பினார்.
கடன் உச்சவரம்பை உயர்த்துவதில் சிக்கல் ஏன்?
அமெரிக்காவுக்கு இதுபோன்ற கடன் உச்சவரம்பு நெருக்கடிகள் ஒன்றும் புதிததல்ல. 1960-ம் ஆண்டுக்குப் பிறகு 78 முறை இதே நெருக்கடியை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. டொனால்ட் டிரம்பின் கடந்த நான்காண்டு ஆட்சிக் காலத்தில் 3 முறை கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோன்று இப்போதும் உயர்த்துவதில் என்ன சிக்கல்? என்ற கேள்வி எழலாம்.
அமெரிக்காவில் பொருளாதார பிரச்னையுடன் அரசியலும் கலந்து விட்டதே தற்போதைய நெருக்கடிக்கு காரணம் என்கிறார் எழுத்தாளரும், நிதி சார் ஆலோசகருமான சோம. வள்ளியப்பன். “அடுத்த அதிபர் தேர்தலை மனதில் கொண்டு, எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி இந்த நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறது. கடன் உச்சவரம்பு நெருக்கடியில் இருந்து அரசு மீண்டுவர உதவி செய்வதற்கு கைமாறாக, அரசு செலவினங்களைக் குறைக்க வேண்டும் என்று அதிபர் ஜோ பைடனுக்கு அக்கட்சி நிபந்தனை விதிக்கிறது. கல்விக்கடன் தள்ளுபடி, மின்சார வாகனங்களுக்கு சலுகை போன்ற அதிபர் பைடனின் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சி நிர்பந்திக்கிறது. அதனால்தான், கடன் உச்சவரம்பை தளர்த்துவதில் இரு கட்சிகளும் உடன்பாட்டிற்கு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.” என்று அவர் கூறுகிறார்.
குடியரசுக் கட்சியின் முன்மொழிவும், அதிபர் பைடனின் பதிலும்
நெருக்கடிக்கு தீர்வு காண குடியரசுக் கட்சி முன்மொழிந்துள்ள, ‘Limit, Save and Grow Act’ மசோதா கடன் உச்சவரம்பை 1.5 டிரில்லியன் டொலர் அளவுக்கு உயர்த்திக் கொள்ள அனுமதிக்கிறது. அதேநேரம், அடுத்த நிதியாண்டில் 1.47 டிரில்லியன் டொலர் அளவுக்கு அரசு செலவினங்களை குறைக்க வேண்டும் என்பதுடன், அடுத்து வரும் ஆண்டுகளில் அரசு செலவினங்களை ஒரு சதவீதம் மட்டுமே உயர்த்த வேண்டும் என்றும் அந்த மசோதா கூறுகிறது.
ஆனால், குடியரசுக் கட்சியின் நிபந்தனைகளை ஏற்காமலேயே தன்னால் 3 டிரில்லியன் டொலர் அளவுக்கு வருவாய் பற்றாக்குறையை சரி செய்ய முடியும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நடுத்தர மக்களைப் பாதிக்கக் கூடிய குடியரசுக் கட்சியின் நிபந்தனைகளை புறந்தள்ளி, அக்கட்சி பாதுகாக்க நினைக்கும் பெரு நிறுவனங்கள், பணக்காரர்களுக்கு வரி விதிப்பதன் மூலம் தன்னால் அதனை சாதிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
கடன் நெருக்கடியைத் தீர்க்க மாற்று வழிகள் உள்ளதா?
2011-ம் ஆண்டு ஒபாமா ஆட்சியில் கடன் உச்சவரம்பு நெருக்கடி உருவான போதும் எதிர்க்கட்சியாக இருந்த குடியரசுக் கட்சி இதுபோன்றே நடந்து கொண்டது. அதாவது, அரசின் நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி புதிய நிர்பந்தங்களைத் திணிப்பதே. அப்போது, 900 பில்லியன் டொலர் அளவுக்கு கடன் உச்சவரம்பை தளர்த்திக் கொள்வதை ஏற்றுக் கொண்ட குடியரசுக் கட்சி, அடுத்த ஆண்டு அதே அளவு நிதியை அரசு செலவினத்தில் இருந்து குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்து சாதித்துக் கொண்டும் விட்டது. இதன் காரணமாக, திட்டச் செலவுகளை தாராளமாக செய்ய முடியாத அரசு மக்களிடையே செல்வாக்கை இழக்கும், அடுத்த ஆண்டில் அதாவது 2012ம் ஆண்டு அதிபர் தேர்தல் தனக்கு சாதகமாக முடியும் என்ற குடியரசுக் கட்சி போட்ட அரசியல் கணக்கு தவறாகிப் போய்விட்டது.
2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருக்கும் போது கடன் உச்சவரம்பு நெருக்கடியை அணுகும் விதத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகும் 5 ஆண்டுகள் அதிபர் பதவியில் இருந்த ஒபாமா, இதுபோன்ற நெருக்கடிகளில் ஒருமுறை கூட எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதே அணுகுமுறையைத் தான் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் கடைபிடிக்கிறார். 2011-ம் ஆண்டைப் போல இன்னொரு முறை குடியரசுக் கட்சியின் உத்தியை இம்முறை அனுமதிக்கக் கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது.
காலக்கெடு வெகுவாக நெருங்கி வருவதால், ஒருவேளை கடன் உச்சவரம்பை உயர்த்த முடியாமல் போனால் நெருக்கடியை சமாளிக்க என்ன செய்வது?. இதற்குப் பதிலளித்த சோம.வள்ளியப்பன், “கடன் உச்சவரம்பை உயர்த்த குடியரசுக் கட்சியுடன் உடன்பாட்டுக்கு வருவத தவிர்த்த மாற்று வழிகள் குறித்தும் பல யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அதில் ஒன்று, கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்குப் பதிலாக புதிய பணத்தை அச்சடிப்பது. அதிலும், ஒரு ட்ரில்லியன் நாணயம் ஒன்றை வெளியிட்டு பிரச்னையை தீர்த்துவிடலாம் என்பது போன்ற யோசனைகள் கூட முன்வைக்கப்படுகின்றன.” என்று தெரிவித்தார்.
கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் என்ன நடக்கும்?
ஒரு வேளை அமெரிக்க அரசால் கடன் உச்சவரம்பை உயர்த்த முடியாமல் போய்விட்டால் என்ன நடக்கும் என்று உலகம் முழுவதும் நிதிச் சந்தையில் கலக்கம் நிலவுகிறது. அதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த சோம. வள்ளியப்பன், “2011-ம் ஆண்டைப் போல குடியரசுக் கட்சியுடன் கடைசி நேரத்தில் உடன்பாட்டை எட்டப்படலாம் அல்லது மாற்று உபாயங்கள் கையாளப்படலாம். ஆனால், அமெரிக்க அரசு செலவினங்களுக்கு நிதி ஒதுக்க முடியாத நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்த்துவிடும் என்று நம்பலாம்.” என்று தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்த அவர், “ஒருவேளை குடியரசுக் கட்சியுடன் உடன்பாடு எட்ட முடியாத நிலை ஏற்பட்டால், அமெரிக்க அரசு முன்னுரிமை அடிப்படையில் செலவுகளை செய்யலாம். அதன்படி, கடன் பத்திரங்களுக்கான வட்டி கண்டிப்பாக செலுத்தப்பட்டுவிடும். ஏனெனில், அது அமெரிக்க அரசின், அதன் நாணயமான டொலரின் நம்பகத்தன்மை தொடர்பானது. ஊழியர்களின் ஊதியங்கள் சற்று தள்ளிப் போகலாம். அத்தியாவசியம் அல்லாத செலவுகளாக கருதும் செலவுகளை அமெரிக்க அரசு ஆறப் போடலாம்.
எது நடந்தாலும் அது தற்காலிகமானதுதான். அமெரிக்கா விரைந்து மீண்டுவிடும். ஆனால் அதற்குள் பங்குச்சந்தைகள் வீழலாம். ஸ்டாண்டர்ட் அன்ட் புவர்ஸ் கடன் தர மதிப்பீட்டு நிறுவனம் அமெரிக்காவின் மதிப்பீட்டைக் குறைக்கலாம். டாலர் மதிப்பிலும் மாற்றம் வரலாம்.” என்று கூறினார்.
அமெரிக்க டொலரின் ரிசர்வ் கரன்சி அந்தஸ்துக்கு ஆபத்தா?
அமெரிக்காவுக்கு நெருக்கடி வரும் போதெல்லாம் அமெரிக்க டொலரின் ரிசர்வ் கரன்சி அந்தஸ்துக்கு குந்தகம் நேருமோ என்ற விவாதம் எழுவது வாடிக்கையான ஒன்று. இதுகுறித்த கேள்வியை முன்வைத்த போது,
“தற்போதைய நெருக்கடியால் உலகின் சேமிப்பு நாணயம் (Reserve Currency) என்ற டொலரின் அந்தஸ்துக்கு எந்த பங்கமும் வராது. சர்வதேச நிதிச் சந்தையில் டொலரே தொடர்ந்து கோலோச்சும். கடந்த 15 ஆண்டுகளாகவே டொலருக்கு மாற்று குறித்து பல யோசனைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், எதுவுமே நடைமுறைக்கு வரவில்லை. அதனை அமெரிக்கா அனுமதிக்கவும் செய்யாது. ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவின் பின்னேதான் அணிவகுக்கும்.
அமெரிக்கத் தடைகளைத் தாக்குப்பிடிப்பதுடன் உக்ரைன் போரை ரஷ்யா தொடர்வதும், சீனாவின் வளர்ச்சியும் சர்வதேச அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும் இந்த சூழலில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள கடன் உச்சவரம்பு நெருக்கடி கவனிக்கத்தக்கது. ஆனாலும் கூட, டொலர் வீழ்ச்சியடைவதை சீனா உள்பட பெரும்பாலான நாடுகள் விரும்பாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடுகளின் எல்லை கடந்த முதலீடுகளும் பொருளாதார ஒத்துழைப்புமே அதற்குக் காரணம். அமெரிக்க கடன் பத்திரங்களில் அதிகம் முதலீடு செய்துள்ள நாடுகளில் முதலாவது இடத்தில் இருக்கும் சீனாவும், அமெரிக்க டொலர் மதிப்பிழப்பதை விரும்பாது. ஏனெனில், டொலரின் மதிப்பு குறைவது, அமெரிக்க அரசின் கடன் பத்திரங்களில் சீனா செய்துள்ள முதலீட்டின் மதிப்பையும் குறைத்துவிடும் அல்லவா!
தகுந்த மாற்று வராத வரையிலும் அமெரிக்க டொலரின் அந்தஸ்து குறையாது. தற்போதைய நிலை அப்படியே நீடித்தால், சர்வதேச நிதி, வர்த்தகச் சந்தையில் மேலும் சில நாணயங்கள் தலையெடுக்கலாமே தவிர டொலரை அவை பதிலீடு செய்ய முடியாது. ஆகவே, சர்வதேச நிதி, வர்த்தக சந்தையில் அமெரிக்க டொலருக்கு மாற்று என்பது தூரத்து கனவாகவே இருக்கும்.” சோம. வள்ளியப்பன் விரிவாக பதிலளித்தார்.
இந்தியாவுக்கு ஆபத்தா? ஆதாயமா?
அமெரிக்காவுக்கு வந்துள்ள நெருக்கடி ஒரு வகையில் இந்தியாவுக்கு ஆதாயம் தருவதாகவும் அமையலம் என்று அவர் கூறினார். “அடிக்கடி வருகின்ற இதுபோன்ற கடன் உச்சவரம்பு நெருக்கடி காலப்போக்கில் அமெரிக்காவுக்கு பாதகமாக அமையலாம். கடனைத் திருப்பிச் செலுத்தும் அமெரிக்க அரசின் திறன் மீது சந்தேகம் எழும் பட்சத்தில், அமெரிக்கச் சந்தைகளில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறக் கூடும். அவ்வாறான பெருமுதலீட்டாளர்கள், ஒப்பீட்டளவில் பாதுகாப்பான சந்தைகளாக கருதப்படும் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் முதலீடு செய்யலாம். இந்தியாவை நோக்கி முதலீடுகள் வரும் பட்சத்தில் நீண்ட கால நோக்கில் அது நம் நாட்டிற்கு சாதகமாக அம்சம்.
அமெரிக்கா ஒரு பணக்கார நாடு. தற்போதைய நெருக்கடி அந்நாட்டு அரசுக்குத்தான் ஏற்பட்டுள்ளதே தவிர அந்நாட்டு நிறுவனங்களுக்கு அல்ல. அவை வழக்கம் போல் செயல்படுவதில் எந்த மாற்றமும் இருக்காது. இதனால், 2008-ம் ஆண்டைப் போல் மீண்டும் ஒரு நெருக்கடி உலக அளவில் வரும் என்ற அச்சம் தேவையில்லை. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட எந்தவொரு துறைக்கும் நெருக்கடி வராது. நம் நாட்டில் யாருக்கும் பாதிப்பு இருக்காது.” என்று சோம. வள்ளியப்பன் தெரிவித்தார்.
அமெரிக்கா இன்று நெருக்கடியில் இருப்பதாக தோன்றினாலும், அதனுடன் வேறு எந்த நாட்டையும் ஒப்பிடவே முடியாது. ‘யானை படுத்தாலும் குதிரை மட்டம்’ என்ற நிலைதான். அமெரிக்கா தனது 230 ஆண்டு கால வரலாற்றில், வாங்கிய கடனையோ, அதற்கான வட்டியையோ திருப்பிச் செலுத்த முடியாத நிலையை ஒருமுறை கூட சந்தித்ததே கிடையாது. அந்த பெருமையைத் தக்க வைக்கவும், தற்போதைய சிக்கலைத் தீர்க்கவும் கடன் உச்சவரம்பை உயர்த்த ஒத்துழைக்குமாறு அமெரிக்க அரசின் கருவூலச் செயலர் ஜேனட் எல்லன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-பிபிசி
24.05.2023