–ஆரா
டெல்லியிலே புதிதாக கட்டப்பட்ட இந்திய நாடாளுமன்றக் கட்டிடத்தை வரும் மே 28 ஆம் திகதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். நாடாளுமன்றத்தை துவக்கி வைக்கவும் முடித்து வைக்கவுமான அதிகாரம் பெற்றவர் குடியரசுத் தலைவர்தான்.
ஆனால் மோடி அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி குடியரசுத் தலைவரை ஓரங்கட்டிவிட்டு, இந்த விழாவில் பிரதமராகிய தன்னை மையப்படுத்திக் கொள்கிறார். இது இந்திய ஜனநாயகத்துக்கே ஆபத்து என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இதுகுறித்த விவாதங்கள் நாடு முழுதும் நடந்துகொண்டிருக்கும் நிலையில்…. ஒட்டுமொத்தமாக இந்த விவாதத்தை மிஞ்சும் வகையில் மக்களவையில் செங்கோல் நிறுவப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
குடியரசுத் தலைவரா பிரதமரா என்ற கேள்வி ஒருபக்கம் என்றால் அதை மிஞ்சி… மக்களவையில் சபாநாயகருக்கு பின்னால் நிறுவப்படும் செங்கோல் பற்றிய பேச்சு அதிகரித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமிதத்தோடு தொடர்புடையது செங்கோல் என்பதால் 1947 ஆம் ஆண்டு வரலாற்றை மட்டுமல்ல…. சோழர் கால வரலாறையும் மீட்டெடுக்கும் வகையில் பிரதமர் செயல்பட்டிருக்கிறார் என்று மோடி மீதான தமிழ், தமிழுக்கு நெருக்கமான பிம்பத்தை கூர்மைப்படுத்துகிறது பாஜக.
மக்களவையில் 28 ஆம் திகதி நிறுவப்பட இருக்கிற செங்கோலுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன தொடர்பு? இதற்கு சோழர் காலம் முதல் இந்தியாவின் சுதந்திரம் வரையிலான வரலாறு இருக்கிறது.
திருக்குறளும் செங்கோலும்!
தமிழ் என்றதுமே முதன்மையாக முக்கியமாய் பார்க்கப்படுவது திருக்குறள். அப்பேற்பட்ட திருக்குறளில் செங்கோன்மை என்று ஓர் அதிகாரமே வைத்துள்ளார் திருவள்ளுவர்.
கூடவே இறைமாட்சி என்னும் அதிகாரத்தில்,
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி என்கிறார் வள்ளுவர்,
அதாவது செங்கோல் எனப்படுவது நல்லாட்சி, சிறந்த அரசாட்சி என்பதைக் குறிக்கும் படிமமாக திருவள்ளுவரால் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் செங்கோன்மை என்ற அதிகாரத்தையும் அமைத்தார் திருவள்ளுவர்.
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
குடிமக்களை அன்போடு அரவணைத்து ஆட்சி செய்யும் மன்னரின் பாதம் பணிந்து இந்த உலகமே நிற்கும் என்பதுதான் இக்குறளின் பொருள்.
ஆக செங்கோன்மை என்றால் சிறந்த அரசாட்சி என்றும்,கோலோச்சுதல் என்றால் ஆட்சி செய்தல் என்றும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.
திருள்ளுவர் தன் காலத்திலும் தனக்கு முற்காலத்திலும் தமிழ் மன்னர்களின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்துதான் கோலோச்சுதல், செங்கோன்மை ஆகிய வார்த்தைகளைக் கையாள்கிறார். வள்ளுவருக்குப் பிறகான மன்னர்களும் இந்த கோலோச்சுதலை தொடர்ந்துள்ளனர்.
குறிப்பாக சோழ மன்னர்கள் தங்கள் அதிகாரத்தை ஒருவரிடம் இருந்து இன்னொருவரிடம் மாற்றும்போது அதற்கான அடையாள நிகழ்வாக செங்கோலை பரிமாற்றினர். செங்கோன்மை என்பது தத்துவம் என்றால் செங்கோல் என்றால் அந்த தத்துவத்துக்கான தத்ரூபம். அதாவது கருத்தின் உருவம்.
சோழர் காலம் முதல் சுதந்திர காலம் வரை
சோழ மன்னர் காலத்தில் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை இந்தியாவின் சுதந்திரம் வரையில் பின்பற்றப்பட்டிருக்கிறது. அதைத்தான் இப்போது புதுப்பித்து புதிய மக்களவையில் நிறுவ இருக்கிறார் பிரதமர் மோடி. அதுபற்றிய வரலாற்றைத்தான் இன்று (மே 25) சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் விளக்கினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைய ஆங்கிலேயர்கள் ஒப்புதல் அளித்தனர். முறைப்படி இந்தியாவுக்கு ஆட்சியை அளிப்பதற்கான நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க அப்போதைய வைசிராய் மவுண்ட் பேட்டன் பிரபுவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
காகிதத்தில் எழுதி கையெழுத்திடுவது வழக்கமான முறை என்றாலும், ஆட்சி அதிகாரத்தை இந்தியா பெறுவது என்பதை வேறு என்ன மாதிரி மக்களுக்கு தெரிவிக்கலாம் என்று யோசித்தார் நேரு. இதுகுறித்து தமிழ்நாட்டின் ராஜாஜியிடம் மற்று பலரிடம் ஆலோசனை கேட்டார் நேரு.
அப்போதுதான் ராஜாஜி இதுகுறித்து திருவாவடுதுறை ஆதீனத்திடம் பேசியுள்ளார். அதன் பின், தமிழ்நாட்டின் பண்டைய சோழ மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தை ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மாற்றும்போது ஆட்சி-அதிகாரத்துக்கான அடையாளமாக செங்கோலை அந்த மன்னர்களின் ராஜகுரு மூலமாக கையளிப்பார்கள் என்று நேருவிடம் குறிப்பிட்டார். வரலாற்று ஆர்வலரான நேருவும் இதுபற்றி தேடி விசாரித்து இந்த நடைமுறையை ஒருவாறாக ஒப்புக் கொண்டார்.
1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகாரம் கைமாறுவதற்கான அடையாளமான செங்கோல் செய்யும் பொறுப்பு சென்னையைச் சேர்ந்த உம்மிடி பங்காரு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வெள்ளியால் ஆன தங்க முலாம் பூசிய செங்கோலை உருவாக்கினர்.
1947 ஆகஸ்டு 14 ஆம் தேதி திருவாவடுதுறை இளைய ஆதீனம் டெல்லி வரவழைக்கப்பட்டார்.
நாதஸ்வரம் முழங்க தேவாரம் இசைக்க ஆட்சி அதிகாரத்தின் அடையாளமான செங்கோலை வைஸ்ராய் மௌண்ட்பேட்டன் திருவாவடுதுறை இளைய ஆதீனத்திடம் கொடுத்தார். அதை இளைய ஆதீனம் நேருவிடம் கொடுத்தார். இந்த நிகழ்ச்சி நேருவின் ஆனந்த பவனம் இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்ட நேரு அதன் பின் ஆகஸ்டு 14 இரவு நாடாளுமன்றத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். tryst with destiny என்ற புகழ் பெற்ற நாடாளுமன்ற உரையை நிகழ்த்தினார் நேரு.
செங்கோல் மீதான நேருவின் பார்வையும் மோடியின் பார்வையும்
ராஜாஜியின் யோசனைப்படி அதிகாரத்தை ‘மாற்றும்’ அடையாளமாக செங்கோலை நேரு ஏற்றாலும், அந்த செங்கோலை விட முக்கியமானதாக நாடாளுமன்றத்தையே கருதினார். அதனால்தான் இந்த அடையாள நிகழ்ச்சியை தன் வீட்டில் நடத்திவிட்டு நாட்டுக்கு சுதந்திரத்தை அறிவிக்கும் நிகழ்வை நாடாளுமன்ற உரையின் மூலம் நிலைநாட்டினார் நேரு. மேலும் மன்னராட்சியின் அடையாளமான செங்கோல் மக்களாட்சியில் அருங்காட்சியகத்தில் இருக்கட்டும் என்று அங்கே வைத்தார் நேரு. நாடாளுமன்றத்துக்கு அதை எடுத்துவரவில்லை.
ஆனால் மோடி இதில்தான் வேறுபடுகிறார். ஒரே நேரத்தில் அரசியல், ஆன்மீகம், மதம், வரலாறு, கலாச்சாரம் என்று பல்வேறு ரன்களை குவிக்கும் சிக்சராக இந்த செங்கோலை இப்போது உருவகப்படுத்துகிறார் மோடி. இந்து மதம், பாரத கலாச்சாரம், பழம் பெருமை, அதேநேரம் புதுமையின் பிரதிநிதி என்றெல்லாம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் மோடி இந்த செங்கோல் விவகாரத்தை சரியாக கையாண்டிருக்கிறார்.
நேரு தனது இல்லமான ஆனந்த பவனத்தில் நடத்திய நடைமுறையை புதிய நாடாளுமன்றத்தில் உலகப் பொது நிகழ்வாக நடத்துகிறார் மோடி. இதன் மூலம் சோழர் கலாச்சாரத்தை எதிரொலிக்கிறார் என்று தமிழர்கள் மத்தியில் பெருமிதமாக மோடி பேசப்படலாம். இன்னொரு பக்கம், மக்களாட்சி நடந்தாலும் மோடி ஒரு மன்னர்தான் என்ற இமேஜை நிலைநாட்டும் நிகழ்வாகவும் இதைப் பார்க்கிறார்கள்.
மன்னராட்சியா மக்களாட்சியா?
மோடி இப்போது மக்களவையில் நிறுவும் செங்கோல் என்பது மன்னராட்சியை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். ஆனால் இது மக்களிடம் எடுபடுமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் மன்னராட்சி முடிந்து நூற்றாண்டுகள் ஆனாலும் இப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி மலர்ந்துவிட்டாலும் இன்று மன்னராட்சி தொடர்பான உளவியல் சிக்கல்களில் இருந்து இந்திய மக்கள் முழுமையாக விடுபட்டுவிடவில்லை.
மக்கள் என்றால் இன்றைய அரசியல்வாதிகள் தொடங்கி ஊடகங்கள் வரை எல்லாரும் இதில் அடக்கம். இன்று வரை நடக்கும் அரசியல் மாநாடுகளில் கூட தங்கள் தலைவருக்கு செங்கோல் அளிக்கும் நிகழ்வு என்பது தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதாவது எல்லா அதிகாரமும் தலைவருக்கே என்ற விருப்பத்தின் நோக்கத்தின் அடையாளம்தான் தலைவர்களுக்கு செங்கோல் அளிக்கும் காட்சி.
இதுமட்டுமல்ல… முப்படை, போலீஸ் அணி வகுப்பு மரியாதை, கோட்டைக் கொத்தளத்தில் கொடியேற்றுதல் என்ற நிகழ்வுகளில் தொடங்கி தலைவரின் மகன் தலைவராகும் வாரிசு அரசியல் வரை எது எடுக்கப்பட்டதோ அது எல்லாமே மன்னர் ஆட்சியில் இருந்துதான் எடுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட இந்திய பொது சமூகத்தில்தான் மோடி தனது ’செங்கோல்’ அரசியலை மிக சாமர்த்தியமாக செய்து கொண்டிருக்கிறார்.
மோடியின் செங்கோல்
புதிய நாடாளுமன்றத் திறப்பின்போது 1947 சுதந்திர விழாவின் போது பின்பற்றப்பட்ட சில நடைமுறைகளை உயிர்ப்பிக்கிறார் மோடி. அன்று வெள்ளையர்களிடம் இருந்து அதிகாரம் ஜனநாயகமான இந்தியாவுக்கு கிடைத்தது. இப்போது அதே நடைமுறைகளை பின்பற்றுகிறார் என்றால் இந்தியாவின் ஆட்சி அமைப்பு முறை மாறுகிறதா, மாறப் போகிறதா என்ற முக்கியமான கேள்வி எழுகிறது.
முழுக்க முழுக்க மன்னாராட்சி பெருமிதங்களுக்கு உட்பட்ட இந்திய பொது சமூகத்தில் ஒரு மனக் கிளர்ச்சியை ஏற்படுத்தி தன்னை குடியரசுத் தலைவரை விட அதிகாரம் மிக்க பிரதமராக நிறுவிட முயற்சிக்கிறாரா மோடி என்ற கேள்வியும் எழுகிறது.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் தோல்வியை பரிசாகக் கொடுத்த 15 நாட்களுக்குள் இந்தியாவில் தன்னை மன்னராட்சியின் நீட்சியாக உருவகப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் மோடியிடம்… இந்திய மக்கள் மீண்டும் செங்கோலை வழங்குவார்களா இல்லையா என்பது 2024 மக்களவைத் தேர்தலில் தெரியும்.
‘புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும்’ – உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு சுமார் 20 எதிர்க்கட்சிகள் இந்த விழாவை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளன. இந்தச் சூழலில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை வழக்கறிஞர் சி.ஆர் ஜெய சுகின் என்பவர் தொடுத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறப்பது தொடர்பாக மக்களவை செயலகத்துக்கு ‘வழிகாட்டுதல் அல்லது ஆலோசனை’ வழங்க வேண்டும் என நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 18-ம் திகதி மக்களவை செயலக ஜெனரல் வெளியிட்ட அறிக்கையில் வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த விழாவிற்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை. இதன் மூலம் மக்களவை செயலகம் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயலில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
தனது மனுவில் அரசியலைமைப்பின் 79-வது பிரிவையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டும் மற்றும் ஒத்திவைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் தொடங்கி அனைவரையும் நியமிப்பதும் குடியரசுத் தலைவர்தான் என அவர் தெரிவித்துள்ளார்.