–ராஜன் குறை
அலகாபாத் அருங்காட்சியகத்திலே உறங்கிக்கிடந்த கைத்தடி ஒன்று திடீரென செங்கோலாகப் பெயர்பெற்று, உயிர்பெற்று நாடாளுமன்றத்தின் மக்களவையிலே நடு நாயகமாக வீற்றிருக்கிறது. கொற்றவனின் கையில் இருந்தால்தான் அது செங்கோல். மற்றவனின் கையில் இருந்தால் அது கைத்தடி மட்டுமே.
ஜவஹர்லால் நேரு மன்னரல்ல. மக்களின் பிரதிநிதி. அவர் கையில் கொண்டுபோய் தங்கமுலாம் பூசிய தடியைக் கொடுத்தால் அதைக் கைத்தடியாகத்தான் காட்சிக்கு வைப்பார்கள். அதைச் செங்கோல் என அழைத்தால் மக்களாட்சியின் மாண்புக்கல்லவா இழுக்கு? இந்தியாவில் குறியீடாகக்கூட மன்னர் கிடையாதே?
ஆதீனம் கொடுத்த செங்கோலை நேருவும் காங்கிரஸும் அவமதித்து விட்டார்கள் என்று கொந்தளிக்கிறார் பிரதமர் மோடி. மக்கள் பிரதிநிதியாக ஆட்சி செய்பவருக்குக் கோல் எதற்கு? மணிமுடி எதற்கு? சிங்காதனம்தான் எதற்கு? எதற்காக ஆதீனம் அவராக நேருவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்த செங்கோலை பிரிட்டிஷ்-இந்திய ஆட்சி மாற்றத்தைக் குறித்தது என்று அரசு பொய் சொல்ல வேண்டும்?
பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தால் பிரதமர். நாளையே பாதிப்பேர் ஆதரவை விலக்கிக் கொண்டால் பதவி கிடையாது. இதிலெதற்கு கோலும், வெண்கொற்றக் குடையும், பீதாம்பரமும்? இந்தியா குடியரசா, இல்லை முடியரசா?
நாடாளுமன்றத்திற்கு ஒரு புதிய கட்டடம். அதைத் திறந்து வைக்க குடியரசுத் தலைவருக்கு அழைப்பு கிடையாது. பிரதமரே செங்கோலை ஆதீனங்களிடம் பெற்றுக் கொள்வார். அவரே நாடாளுமன்றத்தைத் திறந்து வைப்பார். குடியரசுத் தலைவரை அப்புறப்படுத்திவிட்டுத் தானே முடியரசர் என்று வேடம் கட்டுகிறாரா பிரதமர் என்றுதான் எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.
மரபு என்ற பெயரில் மதகுருக்களை நாடாளுமன்றத்திற்கு அழைப்பதும், அவர்கள் இறைவனை வேண்டி பாட நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறப்பதும், மக்களாட்சிக்கு மன்னராட்சி முலாம் பூசிடத்தானா என்ற கேள்வி எழத்தானே செய்யும்? பாரதீய ஜனதா கட்சியின் இந்து ராஷ்டிர திட்ட த்திற்கான ஒத்திகையா இது? மதகுருமார்களும், இறைவழிபாடும் இறையாண்மையின் பழைய வடிவத்தை மீட்பதற்குத்தானா? மக்களாட்சி குடியரசின் இறையாண்மையும், மன்னராட்சியின் இறையாண்மையும் ஒன்றா?
இங்கேதான் ஒரு முக்கிய கேள்வி எழும். இறையாண்மை என்று அடிக்கடி கூறுகிறார்களே, அது என்னவென்று ஒரு கேள்வி எழும். ஆங்கிலத்தில் Sovereignty என்பார்கள். அடிக்கடி தேசத்தின் இறையாண்மை, இந்தியாவின் இறையாண்மை என்று பேசப்படுவது உண்டு. அதே போல மாநில இறையாண்மை பாதிக்கப்படுவதாகப் பேசுவதும் உண்டு.
அப்படியென்றால் இறையாண்மை என்பது ஓரிடத்தில் குவிந்திருப்பதா? நல்லதா, கெட்டதா, தேவையா, தேவையில்லையா, அது பல்வகைப்பட்டதா என ஆராய வேண்டியது அவசியம். அப்போதுதான் செங்கோல் நாடகத்தின் வரலாற்று முரணை புரிந்துகொள்ள முடியும்.
இறையாண்மை என்றால் என்ன?
ஒரு செயலைச் செய்ய தன்னிச்சையாக முடிவெடுப்பதும், அதைச் செயல்படுத்துவதும்தான் இறையாண்மையின் நுண் வடிவம் எனலாம். இதையே சுதந்திரம் என்றும் கூறுகிறோம். நம் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதுதான் இறையாண்மை எனலாம். அப்படியானால் எதற்காக ஒரு தனி வார்த்தை?
சரியாகச் சொன்னால் நம் சுதந்திரம் பறிக்கப்படும்போது நாம் எதிர்ப்பதுதான் இறையாண்மை. இறையாண்மையின் அடிப்படை வடிவம் ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு என்பதாகும். இதுவே நாடு, அரசு என்று வரும்போது போர் என்ற வடிவத்தை எடுக்கும். சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் இந்தியாவின் இறையாண்மை பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள் அல்லவா? அதுதான் போர் இயந்திர இறையாண்மை.
அப்படியானால் மெளரிய, சாளுக்கிய, சோழ, பாண்டிய பேரரசுகளின் இறையாண்மையும், நவீன மக்களாட்சி குடியரசுகளின் இறையாண்மையும் ஒன்றா என்றால் நிச்சயம் இல்லை. அதை வேறுபடுத்திப் பார்க்க நாம் எத்தகைய அரசியல் வடிவங்கள் மானுட வரலாற்றில் உருவாயின என்பதை முதலில் காண வேண்டும். சுருக்கமாக நாம் மூன்று விதமாக அரசியல் வடிவங்களை வகைப்படுத்தலாம். அவற்றை ஒத்திசைவு அரசியல், முரண் அரசியல், ஒத்துழைப்பு அரசியல் என அழைக்கலாம். விரிவாகக் காண்போம்.
ஒத்திசைவு அரசியல்
இந்த வகை அரசியலின் அடிப்படை என்னவென்றால் அனைவருக்கும் ஒற்றை இலக்கு, லட்சியம் மட்டுமே உண்டு என்பதாகும். ஒரு கால்பந்தாட்டக் குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரேயொரு இலக்குதான் இருக்க வேண்டும்: அது எதிர் அணியின் கோல் போஸ்ட்டில் பந்தை செலுத்துவது. அணியின் ஒவ்வொரு வீரரும் பந்தை எதிரணியின் கோல் போஸ்ட்டை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். தடை வந்தால் தன் அணியின் வீரரிடம் செலுத்திவிட வேண்டும். பூரண ஒத்திசைவுடன் மொத்த அணியும் ஆட வேண்டும்.
ஆதி கால இனக்குழு சமூகங்கள் இவ்வகையிலே கட்டப்பட்டன. அனைவரும் தலைவரின் சொல்லுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்கள். மீறினால் அவர்கள் விலக்கப்படுவார்கள், தண்டிக்கப்படுவார்கள். பின்னர் அரசர்கள், பேரரசர்கள் என்று அரசு விரிவடைந்தபோதும் சமூகம் ஒத்திசைவின் பாற்பட்டே இருக்க வேண்டும் என கருதப்பட்டதால் அதிகாரம் முழுமையாக அரசனிடம் குவிந்திருப்பதாகக் கருதப்பட்டது.
அப்படி ஒரு மனிதனிடம் அதிகாரம் குவிந்திருக்க வேண்டுமானால், அவன் மனிதர்களுக்கு மேம்பட்ட ஆற்றலின், இறைவனின் அருள் பெற்றவனாக இருக்க வேண்டும் என்பதும் பெறப்பட்டது. அதனால் மத குருக்கள் அரசனுக்கு முடிசூட்டினார்கள். செங்கோலை வழங்கினார்கள். இதுவே இறையாண்மையின் பழைய வடிவம்.
“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” என்று கூறுகிறது சங்கப்பாடல். செஸ் விளையாட்டில் அரசனுக்கு செக் வைத்து அதிலிருந்து தப்ப முடியாவிட்டால், வேறு எத்தனை காய்கள் இருந்தாலும் அது தோல்வியாகக் கருதப்படும். ஒரு தேசத்தின் அதிகாரம் குவிக்கப்பட்ட புள்ளிதான் அரசனின் அல்லது அரசியின் உடல். அவர்கள் கட்டளைக்குட்பட்டவர்களே அனைவரும்.
முரண் அரசியல்
முரண் அரசியல் என்பது வெவ்வேறு குழுக்களிடையே, தனி நபர்களிடையே உள்ள முரண்களின் மோதல் எனலாம். உதாரணமாக, ஓர் அங்காடியில் பலர் மாங்கனிகளை விற்கும் கடைகளை நடத்தலாம். அவர்களிடையே யாருடைய கடையில் அதிகம் விற்பனையாகிறது என்ற போட்டி இருக்கும். மாங்கனி வணிகர்களுக்கும், மாதுளை வணிகர்களும் வேறுவிதமான போட்டி இருக்கும். அவரவர்கள் நலன்கள் வேறுபட்டவை. முரண்பட்டவை.
சமூக இயக்கம் விரிவடைந்தபோது பல்வேறு தொழில்களில் ஈடுபடுபவர்கள், விவசாயிகள், விற்பனையாளர்கள், கைவினைக் கலைஞர்கள் எனப் பல தரப்பு மக்களின் நலன்களிடையே முரண்கள் உருவாயின. உற்பத்தியும், வர்த்தகமும் விரிவடையும்போது சமூக இயக்கமும் பன்மை கொண்டு, பல்வேறு பகுதிகளின் நலன்களும் வேறுபடவும், முரண்படவும் தொடங்குவது இயற்கை.
நவீன காலத்தில் அச்சுத்தொழில் விரிவடைந்து பலரும் நூல்களைப் பயில்வதும், செய்திகளைப் பகிர்வதும் அதிகரித்தபோது, ஒவ்வொரு தனி நபரும் சுதந்திரமானவர், அவருடைய நலன் என்பது தனிப்பட்ட து என்ற புதியதோர் உண்மை துலக்கமுற்றது. அதே சமயம், முதலீட்டிய உற்பத்திமுறை வலுவடைந்தபோது முதலீட்டாளர்களுக்கும், தொழிலாளர்களுக்குமான முரண்பாடுகளும் வலுவடைந்தன.
இந்தியாவில் வர்ண-ஜாதி அமைப்பில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் தொகுதிகள் தங்கள் உரிமைகளைப் பேசுவது, சமூக நீதி, சம நீதி கோருவது என்பது மக்களாட்சி அரசியலின் இன்றியமையாத பகுதியாக, முரண் அரசியல் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
ஒத்துழைப்பின் அரசியல்
முரண் அரசியல் என்பது சமூக இயக்கத்தை வன்முறையால் சீர்குலைப்பது ஆபத்தானது அல்லவா? அதனால் முரண்களைக் கூடியவரை சமப்படுத்த, சமரசப்படுத்த பொதுவான ஓர் அரசை, அதன் நிர்வாகத்தை சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து உருவாக்கிக் கொள்வது அவசியமானது. அதுவே நவீன மக்களாட்சி குடியரசாகும்.
ஓர் அங்காடியில் உள்ள மாங்கனி வியாபாரிகளைக் குறித்துச் சொன்னோம். அவர்களுக்குள் விற்பனையில் போட்டியும், முரண்களும் இருந்தாலும் பொதுவாக அங்காடி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் ஒத்துழைப்பும் தேவை. அந்த ஒத்துழைப்பு என்பது அவர்களாகவே ஒருங்கிணைந்து செயல்படுத்திக் கொள்வதுதான் இயல்பாகும்.
தனி நபர் உரிமைகளும், வர்க்க முரண்களும், ஜாதி ஏற்றத்தாழ்வும் அரசியலில் முக்கியத்துவம் பெற்ற பிறகும், சமூக இயக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் இருக்கத்தான் செய்தது. அதுவே ஒத்துழைப்பு அரசியலானது.
நவீன அரசமைப்பு முரண்களை ஏற்றுக்கொண்ட ஒத்துழைப்பு என்பதால் அதில் அதிகாரத்தை ஒரு புள்ளியில் குவிக்க முடியாது. அதனால் இறையாண்மை என்பது பரவலாக்கப்பட வேண்டும்; பிரித்தளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தனி நபரும் தங்கள் மனோதர்மப்படி வாழ சுதந்திரம் பெற்றவர் என்பதால் அவருக்கும் இறையாண்மை உண்டு. அதனால்தான் “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று கூறுகிறோம்.
மக்களாட்சியின் அருவமான குறியீட்டு இறையாண்மை
நாட்டில் பொதுவான சட்டங்களை இயற்றவும், சமூகப் பொருளாதார இயக்கத்தை நிர்வகிக்கவும் மக்கள் பிரதிநிதிகள் கொண்ட அவை ஒன்று தேவை. அதுவும் உள்ளாட்சி, மாநில ஆட்சி, ஒன்றிய ஆட்சி என மூன்று தளங்களில் இயங்குவது அவசியம். அதிகாரம் இந்த மூன்று தளங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்போது இறையாண்மையும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இவ்வாறு தனி நபர், உள்ளூராட்சி, மாநில ஆட்சி, ஒன்றிய ஆட்சி என நான்கு தளங்களுக்கு இறையாண்மை பகிரப்படுவதுடன், மூன்று பிரிவுகளாகவும் பிரிக்கப்படுகிறது.
ஒரு பிரிவு நாட்டை நிர்வகிக்கும் அதிகாரிகள், காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அரசுப் பணியாளர்கள். இரண்டாவது பிரிவு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளின் உள்ளாட்சி, மாநில, ஒன்றிய அரசுகள். இவர்களே தேசத்திற்கான அனைத்து முடிவுகளையும் எடுப்பவர்கள். மூன்றாவது மக்களால் பிரதிநிதிகள் மூலம் இயற்றப்பட்ட சட்டங்கள். இந்த சட்டங்கள்படி அனைவரும் இயங்குவதை உறுதி செய்வதும். மீறுபவர்களை தண்டிப்பதும் நீதித்துறையின் அதிகாரமாகும். இதுவே சட்டத்தின் ஆட்சி.
இப்படி நான்கு தளங்களிலும், மூன்று பிரிவுகளிலும் பகிரப்பட்டு, பிரிக்கப்பட்டு இருப்பதால் இறையாண்மை என்பது மக்களாட்சியில் முக்கியத்துவம் அற்றுப் போகிறது. அது சுயாட்சி-கூட்டாட்சி என்ற வடிவத்தைப் பெறுகிறது. தனி நபரில் தொடங்கி உலக அரசுகளுக்கு இடையிலான உறவு வரை, சுயாட்சி-கூட்டாட்சி என்ற வடிவமே சமகால அரசியலின் இறையாண்மை மறுவடிவமாக, மறைவடிவமாக இருக்க வேண்டும். இங்கே இறையாண்மை காற்றைப்போல அருவமாகப் பரவியிருக்க வேண்டும்.
இந்த ஒத்துழைப்பு இறையாண்மைக்கு அடையாளமாக ஒரு குறியீட்டு பதவியாக நாட்டின் முதல் குடிநபராக குடியரசுத் தலைவர் என்பவரை தேர்வு செய்கிறோம். அவரே இறையாண்மையின் ஒரே குறியீட்டு வடிவமாக இருக்கும்போது அவரை அழைத்து நாடாளுமன்றத்தைத் திறக்காமல், பிரதமரே அந்தக் குறியீட்டுத் தன்மையைக் கையகப்படுத்துவது மக்களாட்சியை களங்கப்படுத்தும் செயல் என்பதாலேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் நாடாளுமன்றத் திறப்பு விழாவைப் புறக்கணித்துள்ளன.
பழைய இறையாண்மையின் எஞ்சிய வடிவம்
நவீன அரசியலுக்கு எதிரான ஒரு முக்கிய முரண் இன்றும் மீந்துள்ளது. அது என்னவென்றால் தேசத்தின் எல்லைகளும், ராணுவமும். ஒரு நாடு அண்டை நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமிக்கும் சாத்தியம் இன்றும் இருக்கிறது. ரஷ்யா – உக்ரைன் மீது தொடுத்திருக்கும் போர் இன்றும் நடக்கிறது. சீனா இந்தியாவின் எல்லைகளில் ஊடுருவி இருப்பதாகக் கூறப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்பு என்ற அம்சத்தில் “ஆக்கிரமிப்பு-எதிர்ப்பு” என்ற பழைய இறையாண்மை வடிவம் இன்றைக்கும் தொக்கி நிற்கிறது. ராணுவத்தில் ஒத்திசைவு இறையாண்மையே பயில்கிறது. மேலதிகாரிகளின் உத்தரவுக்குக் கேள்வி கேட்காமல் கீழ் படிய வேண்டும். எதிரிகளை வெல்வது என்ற ஒற்றை இலக்கே ராணுவத்துக்கு இருக்க வேண்டும் என்பதால் அது இன்னும் மன்னர் காலத்து தன்மையுடனேயே விளங்குகிறது.
இதனால்தான் முதிர்ந்த அரசியல் அறிஞர்கள் அனைவருமே சர்வதேச கூட்டாட்சியை வலியுறுத்தினார்கள். வர்க்க பேதமற்ற சமூகத்தை உருவாக்க விரும்பிய பொதுவுடமையாளர்கள் கம்யூனிச அகிலத்தைத் தோற்றுவித்தார்கள். அமெரிக்க அரசியலாளர் வெண்டல் வில்க்கி சர்வதேச கூட்டாட்சி குடியரசை முன்மொழிந்தார். அறிஞர் அண்ணா பலமுறை வெண்டல் வில்க்கியின் உலக கூட்டாட்சி குடியரசு என்ற எண்ணத்தை பாராட்டியுள்ளார்.
மானுடம் அடைந்துள்ள சிந்தனை முதிர்ச்சி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, உலகை சுருக்கிவிட்ட போக்குவரத்து, தொலைதொடர்பு வசதிகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு பார்த்தால் இன்று போர்களும், ராணுவமும், தேசிய எல்லைகளும் முற்றிலும் மறைந்திருக்க வேண்டும். ஆனால், சமூக ஏற்றத்தாழ்வை அகற்ற விரும்பாத முதலீட்டிய ஆதிக்க சக்திகளே, ஆயுத வர்த்தகமே இன்றும் உலகை தேசிய எல்லைகளால் பிரித்து வைத்துள்ளன என்பதைக் காண முடியும்.
செங்கோல்: பாசிசம் வலியுறுத்தும் ஒத்திசைவு இறையாண்மை
சமூகத்தில் உள்ள முரண்களை மறுத்து, மறைத்து ஒத்திசைவை வலியுறுத்தும் மேலாதிக்க அரசியல் சிந்தனையையே நாம் பாசிசம் என்கிறோம். இது ராணுவத்தையே தன் மூல வடிவமாகச் சிந்திக்கும். பாரதீய ஜனதா கட்சியின் அடித்தளமாக உள்ள ராஷ்டிரிய சுவயம்சேவக் சங்க் ராணுவ வடிவிலேயே கட்டப்பட்டுள்ள இயக்கமாகும். அதில் உள்முரண்கள் கிடையாது. விவாதங்கள் கிடையாது, தேர்தல்கள் கிடையாது.
இந்து மதம் என்ற பெரும்பான்மை அடையாளத்தை உருவாக்கி, சிறுபான்மை மத அடையாளங்களுக்கு எதிராக நிறுத்துவதையே தங்கள் கருத்தியலாகக் கொண்டவை சங்க பரிவார அமைப்புகள். அதனால் அவர்கள் எப்போதுமே தேசத்தை முரண்களற்ற ஒற்றை அலகாக, புனிதமான ஒற்றை அடையாளமாகக் கட்டமைப்பார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் ஒத்துழைப்பு அரசியலின் காலத்தில், ஒத்திசைவு அரசியலை வலியுறுத்துபவர்கள்; சமூக முரண்களை, ஏற்றத்தாழ்வுகளை அவற்றின் அரசியலை மறுப்பவர்கள் என்று பாரதீய ஜனதா கட்சியைக் கூறலாம். அதனால் அவர்களுக்கு பெருமுதலீட்டிய ஆதரவு, பார்ப்பனீய-பனியா கருத்தியல் மேலாதிக்க சக்திகளின் ஆதரவு இருப்பது இயல்பானது.
இதன் வெளிப்பாடாகத்தான் அரசர் காலத்து செங்கோல் என்பதை, மதகுருமார்கள் கையிலிருந்து வாங்கி, நாடாளுமன்றத்தின் மக்களவையில் வைக்கிறார்கள். இதன் மூலம் கூட்டாட்சியின் வடிவமாக இருக்கும் மேலவை எனப்படும் மாநிலங்களவையின் முக்கியத்துவத்தை மறுக்கிறார்கள். இரு அவைகளின் தலைவரான குடியரசுத் தலைவரையும் புறக்கணிக்கிறார்கள். பிரதமர் என்ற ஒற்றை புள்ளியில் அரசதிகாரத்தை, ஒத்திசைவு இறையாண்மையைக் குவிக்க நினைக்கிறார்கள்.
செங்கோல் என்பது தண்டம் எனப்படும். அதாவது அரசனின் சாம, தான, பேத, தண்டம் என்ற நான்கு பரிமாணங்களில் தண்டனை என்ற பரிமாணத்தைக் குறிப்பதே செங்கோல். மக்களாட்சியில் நாடாளுமன்றத்துக்குத் தண்டிக்கும் அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கே உண்டு. அந்தவகையிலும் காலத்துக்குப் பொருந்தாத அலங்கோலமே நாடாளுமன்றத்தில் குடியேறிய செங்கோல் எனலாம். என்று மடியும் இந்த இறையாண்மை மோகம்?