மக்களின் நலன் காக்க தன் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு இயக்கத்தையும் முழுமையாக அர்ப்பணித்த எழுத்தாளர் ஒருவர் உண்டு என்றால் அது மார்க்சிம் கார்க்கிதான். கார்க்கியின் தாக்கம் மற்றும் செல்வாக்கு பல எழுத்தாளர்களை, விடுதலைப் போராளிகளை, முற்போக்குச் சிந்தனையாளர்களை, யதார்த்தவாதிகளை உலகம் முழுதும் உருவாக்கி இருக்கிறதென்றால் அது மிகையல்ல, உண்மை. இந்தியாவில் முல்க்ராஜ் ஆனந்த், கே.ஏ. அப்பாஸ், பிரேம்சந்த், கிருஷ்ண சந்தர் போன்றவர்களும், அமெரிக்காவில் ஹெமிங்வே, ஸ்டீன்பேக் போன்றோரும் கார்க்கியினால் உத்வேகம் அடைந்தவர்களாவார்கள்.
மாக்சிம் கார்க்கி என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பொகோவ் ( 16 மார்ச் 1868 – 18 ஜுன் 1936 ) அவரின் நினைவு தினம் இன்று.
மாக்சிம் கார்க்கி – உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும் பெருமைகளையும் உலகறியச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறார்.
இளமையில் கார்க்கியைப் போன்று துன்ப துயரங்களை அனுபவித்தவர் யாரும் இருக்க முடியாது. அவரது தந்தை மாக்சிம் கார்க்கியின் குடும்பத்தில் அவர் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்று முளைத்தார். “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று தனது தந்தை இறந்ததும் கார்க்கி கூறினார். தனது இறுதிக் காலம் வரை இரண்டு விஷயங்களை அவர் வெறுப்புணர்ச்சியோடு கண்டனம் முழங்குவார். ஒன்று அக்கிரம ஆட்சி நடத்திய ஜார் மன்னனும் முதலாளித்துவ சமூகமும் ஆகும். மற்றொன்று அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற அவரது பாட்டனார் வாசிலிகாசிரின் ஆவார்.
இளமைக்காலம்
கார்க்கியின் இளவயது வாழ்வு துயரமும் கண்ணீரும் இருளும் நிறைந்தது. அந்த இருளில் அவருக்கு ஒளிவிளக்காய்த் திகழ்ந்தது. அவரது பாட்டி அக்குலினா. இந்தப் பாட்டி மட்டும் இல்லையென்றால் பேரன் கார்க்கி எட்டு வயதிலேயே மடிந்திருப்பார். தனது பாட்டியைப் பற்றி அவர் குறிப்பிடும்போது –
“என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து படைத்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின. அந்தப் பாட்டியின் கதைகளைத் தனது இறுதிக்காலம் வரை கேட்கக் கிடைக்காத புதையல் என்று மதித்துப் பேணிப் பாதுகாத்தார். கார்க்கியின் வாழ்வுக்கு இன்பமூட்டி, அறிவொளி பாயச் செய்த பாட்டி அக்குலினாவை “எனது குழந்தைப் பருவம்” என்ற நூலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
தனது பத்தாவது வயதிலேயே வாழ்க்கை நடத்த வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை இறந்ததால் ஏற்பட்ட துயரமும் வறுமையும் அவரை விரட்டின. குழந்தைத்தொழிலாளியாக மாறி அவர் பல இடங்களில் வேலை செய்தார். பத்து வயது முதல் கார்க்கி தனக்கென ஒரு குறிப்பேடு வைத்துக் கொண்டார். பத்து வயதிலேயே அக்காலத்தில் இப்படி ஒரு பழக்கம் எப்படி அவருக்கு வந்தது என்பது புரியாத புதிராக உள்ளது.
இந்தக் குறிப்பேட்டில்தான் பாட்டி அக்குலினா கூறிய கதைகளை எழுதி வைத்திருந்தார். ஆனால் அந்தக் குறிப்பேட்டை அவர் யாரிடமும் காட்டாமல் தனக்கு மட்டுமே பாதுகாப்பாக வைத்திருந்தார்.
அந்த இளவயதில் பல நாட்கள் பட்டினி கிடந்து வீதிகளில் அலைந்தார். வேலை கிடைக்காமல் வறுமையில் வாழ்க்கையில் வெறுப்புற்றார். தன்னைத்தானே அவர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார். அந்தத் துயரச் சம்பவம் 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு நடந்தது. தன்னைச் சுட்டுக் கொள்வதற்கு முன்பு அவர் ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தார். அதை அவர் தனது மனைவியிடமும் நண்பர்களிடம் மட்டும் பிற்காலத்தில் சொல்லிச் சிரிப்பார். அந்தக் குறிப்பில் தனது தற்கொலைக்கு ஜெர்மானியக் கவிஞர் ஹைனே தான் காரணம் என்று எழுதியிருந்தார். மனிதனுக்கு உண்டாகும் இதய வலிபற்றித் தனக்கு முதன்முதலாக உணர்த்திய கவிஞன் ஹைனேவைப் பாராட்டியும் எழுதியிருந்தார்.
துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஆறி மருத்துவமனையை விட்டு சுகமாய் திரும்பினார். ஆனால் அந்தச் சூட்டினால் ஏற்பட்ட தசைவலிகள் அவர் சாகும் வரை துன்புறுத்தின. எனது இளமைப் பருவத்தை தேவன் பறித்து விட்டான் என்று அவர் வேடிக்கையாய்க் குறிப்பிடுவது உண்டு. அதற்காக அவர் வேதனைப்பட்டதில்லை. தனது 24 வயதில் இடுகாட்டில் பிணங்களின் தலைமாட்டில் நின்று கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார். இது ஆறு மாத காலம் மட்டுமே நீடித்தது. அது அவரது வாழ்க்கையில் நெஞ்சுறுதியும் தெம்பும் பெற உரமூட்டியது. பிணங்களின் வாடையை ஆறு மாதம் பக்கத்திலிருந்து கார்க்கி நுகர வேண்டியிருந்தது. வெளியில் மக்கள் இந்தப் பிணவாடையை விட மோசமான வாழ்வை அனுபவித்தனர். வறுமையால் அவர்கள் அனுபவிக்கும் பிணவாடையில் இருந்து அவர்களை விடுவிக்கும் லட்சியத்தில் உறுதிகொண்டார்.
முதல் கவிதை
ஒருமுறை கார்க்கி நேங்குரோத் நகரில் வாழ்ந்தபோது அவரது அறைக்குள் ஒரு திருடன் புகுந்துவிட்டான். அவன் நெடுநேரம் அந்த அறைக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்தான். அப்போது பசியோடு கார்க்கி விழித்துக் கொண்டிருந்தார். முதலில் திருடனின் தேடலை ரசித்த போதிலும் பின்பு அது அவன் மீதான பரிதாபமாக மாறியது. அவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு திருடனைப் பார்த்து “நண்பனே, உனது முயற்சி வீணானது. கடந்த மூன்று மணிநேரமாக என் அறையில் நீ தேடிக் கொண்டிருக்கும் பொருளை நான் கடந்த இரண்டு நாட்களாக இரவு பகலாய்த் தேடி வருகிறேன். விளக்கு ஏற்ற எண்ணெய் வாங்கக்கூடப் பணமில்லாமல் இருளில் தவிக்கிறேன். போயும் போயும் திருடுவதற்கு என் வீட்டுக்கு வந்தாயே. திருட்டுத் தொழிலுக்கு நீ புதியவரோ? சரி, எதற்கும் நாளைக்கு நீ பகலில் வா. இரண்டு பேரும் சேர்ந்து தேடுவோம்” என்று கூறினார். அதற்குப் பிறகு திருடன் அந்தப் பக்கம் தலைகாட்டவேயில்லை.
கார்க்கி முதன்முதலாகக் கவிதை எழுதியது வேடிக்கையான சம்பவமாகும். அது அவர் காசான் ரயில் நிலையத்தில் காவல்காரராக வேலை செய்தபோது நடந்தது. அங்கு அவரது அறைக்குப் பக்கத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்கான சமையலறை இருந்தது. அங்கு ஒரு தடித்த சமையல் காரி பணியாற்றினார். வாலிபமிடுக்கும் உடற்கட்டும் மிக்க கார்க்கியை அந்தப் பெண் இரவு நேரங்களில் தொந்தரவு செய்து வந்தாள். அவளது தொல்லை குறித்து தொழிலாளர்களிடமும், ரயில் நிலைய அதிகாரி வரை கார்க்கி புகார் கூறினார். ஆனால் எவரும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
சமையல்காரப் பெண்ணின் நச்சரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கார்க்கி அது பற்றி ஒரு கவிதை எழுதினார். அதில் சமையல்காரியைப் பற்றி முதலில் வர்ணித்துவிட்டு, அவளிடம் சிக்கி ஒவ்வொரு இரவும் தான்படுகிற நரக வேதனையை நகைச்சுவை ததும்ப எழுதினார். அதில் ரயில்வே அதிகாரிகளின் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் அது இருந்தது. கவிதையை எழுதி அதிகாரியிடம் கொடுத்தார். இருபது தினங்கள் கழித்து கார்க்கிக்கு ஊர் மாற்ற உத்தரவு கிடைத்தது. அக்காலத்தில் ஊர்மாற்றம் பெறுவது எளிதல்ல. அது சொர்க்கத்திற்கே சென்று திரும்புவது போன்றது. அதிகாரிகளுக்குக் கார்க்கியின் கவிதை புரியாத புதிராகவே இருந்தது. எனினும் ஊர் மாற்றம் செய்தனர்.
அவரது முதல் கவிதை இவ்வாறு முக்கியத்துவம் பெற்றது. தொழிலாளர்களும் அந்தக் கவிதையைப் படித்து கிண்டலும் கேலியும் சிரிப்புமாக இருந்தனர். ஊர் மாற்றத்திற்குப் பின்பு கார்க்கி தனது இரண்டாவது கவிதையை எழுதினார். “பழங்கமுகு மரத்தின் கீதம்” என்ற அந்தக் கவிதை எங்கும் பிரசுரமாகவில்லை. தொடர்ந்து நிறைய கவிதைகள் எழுதினார். எனது பெரும்பாலான கவிதைகள் இறந்தே பிறந்தன என்று அவர் கூறினார். எனது கவிதைகளில் மனிதனின் உணர்ச்சிகளைத் தட்டி எழுப்பும் துடிப்பு ஏனோ மந்தமாக உள்ளது என்று தனது நண்பர்களிடம் சுயவிமர்சனம் செய்துகொண்டார். இதனால் அவர் உயிரோடு வாழ்ந்த வரை அவரது கவிதைகளைத் தொகுப்பாக வெளியிட அவர் சம்மதிக்கவே யில்லை. அவர் இறந்த பின்புதான் அந்தக் கவிதைத் தொகுப்பு வெளியானது.
கார்க்கி முக்கியமான நூல்களைத் தவிர மற்றவைகளை ஒருமுறைக்கு மேல் வாசிப்பதில்லை. படித்த நூல்களின் உள்ளடக்கத்தைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூடச் சொல்லுவார். படிக்கும் விசயங்கள் அவரது சிந்தனையில் ஆழமாய்ப் பதிந்திருந்தன. அவரது நினைவாற்றல் அபூர்வமானது. தனது பத்து வயதில் அவர் முதலில் வாசித்த ஹான்ஸ் ஆண்டர்சனின் சிறுவர் கதைத் தொகுதியிலுள்ள பல கதைகளை அவர் கடைசி வரை மறக்கவில்லை.
மகனின் மரணம்
கார்க்கிக்கு ரஷ்ய மொழி தவிர பிரெஞ்சு, இத்தாலிய மொழிகளும் நன்கு தெரியும். ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளும் தெரியும். கார்க்கியின் மகனுக்கும் ஐந்து மொழிகள் தெரியும். மகன் உதவியைக் கொண்டு கார்க்கி உலக இலக்கியங்கள் பற்றிய பல விமர்சனங்களையும், ஒரு விமர்சன நூலையும் வெளியிட்டார். பல நாடுகளிலிருந்து வரும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள கதைகள், நாவல்கள், கட்டுரைகளைப் படித்து கார்க்கியின் மகன் தனது தந்தைக்கு எடுத்துரைப்பார். அதே போல் கார்க்கியின் கதைகளை ரஷ்ய மொழியிலிருந்து பிறமொழிகளில் மொழிபெயர்த்து அனுப்புவதிலும் உதவினார். உலக நாடுகளிலிருந்து நண்பர்கள் எழுதும் கடிதங்களுக்கு மகனின் உதவியுடன் பதில் எழுதினார்.
பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து, அமெரிக்க எழுத்தாளர் தியோடர் ட்ரீசர், ஜாக்லண்டன், அப்டன் சின்கிளேர், ஆங்கில நாவலாசிரியர்கள் ஜான் கால்ஸ்வொர்த்தி, ஜேன் ஆன்டர்சன், சீன எழுத்தாளர் லூசுன் ஆகியோருடன் கார்க்கிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. கார்க்கி வெளிநாடுகளுக்குச் சென்றபோதெல்லாம் தனது மகனையும் அழைத்துச் சென்றார். வெளிநாடுகளில் சாதாரண மக்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களைப் பற்றியும், வாழ்வு மற்றும் பழக்கவழக்கங்களையும் அறிந்துகொள்வதில் அவரது மகனின் மொழிபெயர்ப்பு பெரிதும் உதவியது. ஐரோப்பா, அமெரிக்க நாடுகள்பற்றி கார்க்கி கட்டுரைகள் எழுத இவை உதவியாக இருந்தன. ஆனால் கார்க்கியின் துரதிருஷ்டம் அவருக்குப் பேருதவிபுரிந்த மகன் 1934ஆம் ஆண்டு திடீர் மரணம் அடைந்தார். மகனின் மரணம் அவரை அடியோடு உலுக்கிவிட்டது. அந்தப் பாதிப்பு கார்க்கிக்கு இறுதிவரை தொடர்ந்தது.
உலகத் தொடர்புகள்
கார்க்கி ஒவ்வொரு நாட்டு இலக்கியங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார். பிறநாட்டு இலக்கியங்களைப்பற்றி அந்தந்த நாட்டு எழுத்தாளர்களிடமே விமர்சனம் செய்வார். பாராட்டிப் புகழவும் செய்வார். ஒருமுறை இத்தாலி நாட்டு எழுத்தாளர்கள் கார்க்கியின் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் உலக இலக்கியம் பற்றியும், ரஷ்ய இலக்கியம் பற்றியும் கார்க்கியுடன் நீண்ட நேரம் விவாதித்தனர். பின்பு கார்க்கி அவர்களிடம் இத்தாலிய இலக்கியத்தின் ஜனநாயகம் பாரம்பரியம் பற்றியும், அதன் பரம்பரையாக வரும் இலக்கிய மாண்பு பற்றியும் நீண்ட சொற்பொழி வாற்றினார். இலக்கியம் பற்றிய அந்த இத்தாலிய எழுத்தாளர்களின் தவறான பார்வையைக் கடுமையாக விமர்சனம் செய்தார். இறுதியில் அவர்களிடம் “உங்கள் தாய்மொழியான இத்தாலியில் தொன்றுதொட்டு வந்துள்ள இலக்கியச் செல்வங்களை இன்னும் அதிகமாக நீங்கள் படித்தால் அனைவருக்கும் நல்ல பயன்கிடைக்கும்” என்று கார்க்கி கூறி அனுப்பினார்.
குடும்ப வாழ்க்கை
கார்க்கி தனது சொந்த வாழ்க்கையில் சிறந்த கணவராகவும் மதிப்பிற்குரிய தந்தையாகவும் வாழ்ந்தார். அவர் பெரும்பாலும் கோபமேபடமாட்டார். கோபம் வந்தால் அதைக் கட்டுப்படுத்தவே முடியாது. தன் மனதில் பட்டதை நேருக்கு நேர் நின்று தைரியமாகச் சொல்வார். மகத்தான தலைவர் லெனினுக்கு முன்னால்கூட அவர் தனது கருத்தை அழுத்தமாய்க் கூறுவார். சமயங்களில் லெனினுடைய முடிவுகளுக்கு முரண்பட்ட கருத்துக்களைக் கூட அவரிடம் அழுத்தமாய்க் கூறுவதற்குத் தயங்கியதேயில்லை.
ஒருமுறை, ரஷ்யாவின் இருபதாம் நூற்றாண்டின் மகாகவி என்று புரட்சிக்கு முன்பு முதலாளித்துவ விமர்சகர்களால் பாராட்டப் பெற்ற சாலியாபினுக்கு சிறப்பு விழா மாஸ்கோவில் கொண்டாடப்பட்டது. அந்த விழாவுக்குக் கார்க்கியும் அழைக்கப்பட்டிருந்தார். அந்த விழாவில் முழுக்கப் பெரும் வணிகர்களும், பிரபுக்களும், அவரின் வாரிசுகளும் கலந்துகொண்டனர். கவிஞர் சாலியாபினைப் பற்றி அனைவரும் வானளாவப் புகழ்ந்தனர். இறுதியாக கார்க்கி பேசினார். மேடையில் கம்பீரமாக அமர்ந்திருந்த சாலியாவினைப் பார்த்து கார்க்கி “சாலியாபின், நீர் ஒரு சிறந்த அறிவாளி! ஆனால் உமது அறிவுத் திறனெல்லாம், கவிதை ஆற்றல் எல்லாம் சொகுசு வர்க்கத்தினரான பெரும் வணிகர்களின் அருமை மனைவிகளின் பட்டாடையிலும் பகட்டுத் தோற்றத்திலும் ஆழ்ந்து அமிழ்ந்து பாலைவனத்தில் இறைத்த நீராகி விடுகிறது. அன்பனே! இனிமேலாவது உன் கண்களைத் திறந்துபார். அனாதரமான, அடிமைப்பட்டுத் தவிக்கும் ஆத்மாக்களுக்கு ஜீவத்துடிப்பளிக்க உனது சொற்களைச் சீராக்கு. அன்றுதான் நீ உண்மையிலேயே மாபெரும் கவிஞனாவாய்” என்று கூறினார். கார்க்கியின் பேச்சுக்கெதிராக வணிகர்களும் பிரபுக்களும் ஆவேசமாகவும் கடுங்கோபத்தோடும் கூக்குரல் கிளப்பினார். ஆனால் கார்க்கியின் ஓங்காரக் குரலின் முன்னால் அவை ஒடுங்கிப் போய்விட்டன.
கார்க்கியிடம் சில அபூர்வப் பழக்கவழக்கங்கள் இருந்தன. உதாரணமாக அவர் பேனாவால் எழுதுவதை வெறுத்தார். அவர் தனது படைப்புகளைப் பென்சிலால்தான் எழுதினார். அதற்காக அவர் விதவிதமான பென்சில்களை உபயோகப்படுத்தினார். தனது பென்சில்களை அவர் எப்போதும் கூர்மையாகச் சீவி வைத்திருப்பார். அவர் மேஜை முழுவதும் பென்சில்களைப் பரப்பி வைத்திருப்பார். ஒவ்வொரு வார்த்தையின் தகுதிக்கும், அவசியத்துக்கும், முக்கியத்துவத்திற்கேற்ப பென்சில்களை மாற்றி எழுதுவார். ஆனால் அவர் தட்டெழுத்து (டைப்ரைட்டர்) எந்திரத்தை மிகவும் விரும்பினார்.
அவர் படிப்பது பெரும்பாலும் படுக்கையில்தான். அவர் பத்திரிகை படிப்பது மட்டும் நாற்காலியில் அமர்ந்து படிப்பார். கார்க்கிக்கு எப்போதும் மிகச் சிறிய பொருள்களின் மீது தான் அதிக ஆசை இருந்தது. சிறிய சிற்பங்கள் மீது அவருக்கு மிகவும் பிரியம். அவர் பல நாடுகளுக்கும் பெரும் தொகை அனுப்பிச் சிறிய சிற்பங்களை வாங்கித் தனது படுக்கை அறையில் வைத்திருந்தார். சீனாவிலிருந்து நான்கு மாத உழைப்பில் உருவான ஒரு தந்தச் சிற்பத்தைப் பெருந்தொகை கொடுத்து வாங்கினார். அதை அவர் கையிலெடுத்துப் பார்த்து ரசிப்பார். அந்தச் சீனச் சிற்பியின் உழைப்பையும் திறமையையும் பாராட்டினார். அந்தச் சிற்பத்தைத் தனது கலைக் கண்ணால் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போவார். உலகின் ஓட்டத்திற்கு உழைப்புத்தான் ஜீவசக்தி என்ற கருத்தில் கார்க்கி உறுதியாக இருந்தார்.
உழைப்புத்தான் உலகின் ஜீவசக்தி என்ற கருத்தைச் சில எழுத்தாளர்களிடம் பேசும்போது கூறினார். கலாசாரப் பண்பாட்டுக்கும் உழைப்புக்குமிடையே நிலவும் பிரிக்க முடியாத உறவைப் பற்றியும் அவர்களிடம் அழுத்தமாக எடுத்துரைத்தார். “கலாசாரம் என்பது மனிதனின் சிருஷ்டி உழைப்புத்தான்; உழைப்புத்தான் இன்றும் நாளையும் அதன் அடிப்படை. மனிதகுலம் இவ்வுலகில் எப்படியெல்லாம் உழைத்தது, உலகின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்தியது என்பதைக் கூறுகிற கதைதான் உலகின் பேரதிசயமான கதையாகும்” என்று உழைப்பின் பெருமையை எழுத்தாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார் கார்க்கி.
கலாசாரத்தைப் படைப்பவர்களும், உலகின் அனைத்து வகையான செல்வங்களையும் உருவாக்குவோர் மக்கள்தான். இந்த உண்மையை கார்க்கி தொடர்ந்து கூறிவந்தார். உழைப்பாளி மக்களின் வாழ்க்கையிலிருந்தும் அவர்களின் போராட்டங்களிலிருந்தும்தான் உணர்வு பெற்றதாய்க் கூறினார். கணக்கற்ற நூற்றாண்டுகளில் மக்கள் தங்கள் உழைப்பின் மூலம் படைத்து உருவாக்கிய போற்றுதலுக்குரிய பல்வேறு சிறப்பு அம்சங்களிலிருந்துதான் நான் உணர்வு பெற்றேன் என்றார். அதிலிருந்துதான் உற்சாகத்தையும் தனது மொழியையும், உருவகங்களையும் கற்பிதங்களையும் பெற்றுத்தான் கார்க்கி தனது அமர இலக்கியங்களைப் படைத்தார்.
எழுதக் கற்பித்த ஆசிரியர்
இளம் எழுத்தாளர்கள் மீது கார்க்கி மிகுந்த அக்கறை காட்டினார். அவர்களது வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். அவர்கள் எழுதிய படைப்புகளைப் பொறுமையாய்ப் படித்து தனது கருத்துக்களைக் கூறித்திருத்துவார். கடிதங்கள் மூலமாகவும் எழுத்தாளர்களின் படைப்புகளை விருப்பு வெறுப்பின்றிப் படித்துக் கருத்துக்களை அனுப்புவார். அவர்களைத் தனது வீட்டுக்கு வரவழைத்து விவாதங்கள் நடத்தி அவர்கள் எழுதுவதற்கு ஊக்குவிப்பார். அவர்கள் எழுதிய கைப்பிரதிகளைத் திருத்திக் கொடுப்பார்.
கார்க்கி தனக்கிருக்கும் அதிகமான இலக்கியப் பணிகளுக்கிடையே புதிய எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் படித்து, விமர்சனம் செய்து அவர்களிடம் நட்பு ரீதியாக எடுத்துக் கூறி வந்தார். அவர்களின் பிரியத்துக்குரிய வழிகாட்டியாகவும் தோழராகவும் கார்க்கி திகழ்ந்தார். மேலும் அவர்களது படைப்புகளைப் பல்வேறு பத்திரிகைகளுக்குச் சிபாரிசு செய்து பிரசுரிக்கவும் ஏற்பாடு செய்தார். இளம் எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் தன்னம்பிக்கை ஏற்படுத்தினார்.
புதிய எழுத்தாளர்களுக்கு கார்க்கி எழுதும் கடிதங்கள் நீளமாகவும், தெளிவாகவும், உணர்வூட்டுவதாகவும் இருக்கும். இதோ உதாரணத்திற்கு கார்க்கியின் ஒரு கடிதம்:
அன்புள்ள நண்பரே
உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இவ்வளவு காரசாரமாகவும், உயிர்த் துடிப்போடும், சீரிய கவிதை மொழியில் இதை நீங்கள் எழுதியிருப்பதைக்கண்டு மகிழ்கிறேன். உங்கள் ஆற்றலும், கவிதைத் துறையில் உங்களுக்குள்ள நம்பிக்கையும் மேலும் பெருகவேண்டும். மனப்பூர்வமாய் இதயத்தின் அடியாழத்திலிருந்து உங்களை வாழ்த்துகிறேன்.
உங்களுடன் ஒப்பிடும்போது வயது முதிர்ந்தவன் என்ற முறையில் நான் நல்லதொரு ஆலோசனையை வழங்கத் துணிகிறேன். எந்த நேரமும் அயராது உழையுங்கள். உங்கள் ஆயுதத்தைக் கூர்மையாகத் தீட்டி வைத்துக் கொள்ளுங்கள். வற்றாத ஊற்றுப் போன்ற மக்களது செழுமிய, எழில் மிகுந்த இன்சுவை மொழியைத் தொடர்ந்து பயிலுங்கள். இம்மொழியிலிருந்து நீங்கள் மேதைமையோடும் ஆற்றலோடும் வெளிப்பட முடியும். நல்ல கருத்துகளையும் உணர்ச்சிகளையும் எடுத்துரைக்கும் வல்லமையைப் பெறமுடியும். எந்தச் சிறிய விஷயத்தையும் கவனியாது விட்டுவிடாதீர்கள். எதைப் பற்றியும் அஞ்சாதீர்கள். அனைத்தையும் துருவி ஆராயுங்கள். அரிய வகையான விசயங்களை அனைவருக்கும் பயன்தரக் கூடியவற்றை உங்களால் திறம்படக் கண்டறிய முடியுமென்று உறுதியாய்க் கூறுகிறேன்” என்று கடிதத்தை கார்க்கி முடித்துள்ளார்.
கார்க்கி தனக்குப் பின்னால் ஒரு எழுத்தாளர் பரம்பரையை உருவாக்க இப்படிப்பட்ட நட்புரீதியான விமர்சனங்களும் கடிதங்களும் விவாதங்களும் உதவிபுரிந்தன. தன்னை நேரில் வந்து சந்திக்கும் இளம் எழுத்தாளர்களுக்கு கார்க்கி ஒரு பொன்மொழியைக் கூறுவது வழக்கம். “அன்பர்களே, கவிஞர்களாகவும், நாவலாசிரியர்களாகவும் எழுத்தாளர் களாகவும் சிறந்து விளங்க வேண்டுமா? அந்த ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால் நீங்கள் கனல்பறக்கும் இதயத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறுவார்.
இந்தக் கனல் பறக்கும் இதயம் கார்க்கிக்கு அமைந்திருந்தது. மாமேதை லெனின் இதற்குக் காரணமாக இருந்தார். லெனின் கார்க்கியின் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இருவரும் தனிமையில் பல மணி நேரம் பேசுவார்கள். சில நேரம் சண்டையிடுவது போல் பேச்சு உக்கிரமாக இருக்கும். கார்க்கி கதை சொன்னால் லெனின் அதைப் பிரியமாய்க் கேட்பார். ஒருநாள் கார்க்கி லெனினுக்கு ஒரு கதை சொன்னார்.
கதை இதுதான். புரட்சி வென்ற பிறகு பணக்காரச் சீமாட்டிகளுக் கெல்லாம் தலைவலி அதிகரித்தது. அப்போது ஜார் மன்னனின் நேரடி வாரிசு என்று கூறிக்கொண்ட ஒரு சீமாட்டி தனது சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான வசதி இல்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்துகொள்ள ஆற்றுக்குப் போனாள். தமது எஜமானி ஆற்றில் பாயப் போவதை அறிந்த நான்கு நாய்கள் அவளைக் கவ்விப் பிடித்துத் தடுத்தன. அதனால் சீமாட்டி தனது தற்கொலை எண்ணத்தைக் கைவிட வேண்டியதாயிற்று.
கார்க்கி இந்தக் கதையைக் கூறிவிட்டு லெனினுடைய கருத்து என்ன என்று கேட்டார். லெனினின் முகம் மாறிக் கண்கள் மேலும் கீழுமாய் கார்க்கியைப் பார்த்தன. சில வினாடிகள் கண்களை மூடித் திறந்துவிட்டு லெனின் அமைதியாகக் கூறினார். “இது கற்பனைக் கதையாக இருந்தால்கூட இதில் அடங்கியுள்ள கருத்து ஒன்றும் மோசமானதல்ல”, என்று கூறிவிட்டு “இது புரட்சி தந்த அருமையான கேலிக்கதை” என்று சிரித்தார். பின்பு கார்க்கியும் லெனினும் சேர்ந்து சிரித்தனர்.
கார்க்கி, லெனின் இருவரிடமும் ஒரு பொதுப் பார்வை இருந்தது. அவர்கள் இருவரும் தங்களை நன்கு அறிந்திருந்தனர். தாங்கள் பின்பற்றும் பாதை குறித்துத் தெளிவோடும் தேர்ச்சியோடும் இருந்தனர். லெனினைப் பற்றி கார்க்கிக்கு மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. கார்க்கி தனது மரணப்படுக்கையில்கூட லெனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தார். அதே போல் லெனினும் கார்க்கியை தனது உயிராக நேசித்தார். வெளிநாடுகளுக்குச் சென்றால்கூட லெனின் கட்சி உறுப்பினர்கள் மூலம் கார்க்கிக்குக் கடிதங்கள் எழுதிவந்தார். கார்க்கியும் லெனினும் சதுரங்கம் விளையாடுவர். அப்போது சிரிப்பும் கும்மாளமுமாய் இருவரும் ஆடுவர்.
இலக்கிய மேதை
ரஷ்ய இலக்கியத்தில் பிற எழுத்தாளர்களோடு ஒப்பிடும்போது கார்க்கியே எல்லா வழிகளிலும் சிறந்து விளங்கினார். புஷ்கின், கோகோல், துர்கனேவ், டால்ஸ்டாய், லெர்மன்தோவ், கிராஸ்கோவ், ரேபின், லெஸ்கோ, ஆஸ்ட்ராவ்ஸ்கி ஆகிய ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளை முழுமையாகப் படித்து கார்க்கி மனப்பாடம் செய்திருந்தார். அவர் டால்ஸ்டாயை ரஷ்ய மக்களின் உண்மையான தவப்புதல்வன் என்று கூறினார். புஷ்கின் பற்றி கார்க்கி “புஷ்கின் ரஷ்ய நாட்டின் மகத்தான கவிஞர். அவரது இலக்கியத் தொண்டு ரஷ்யாவுக்குப் பெருமை சேர்த்தது. புஷ்கின் அனைத்து ஆரம்பங்களின் ஆரம்பம்” என்று கூறினார்.
கார்க்கி அன்டன் செகாவ், மாயகோவ்ஸ்கி போன்ற தனது சமகால எழுத்தாளர்களிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். மாயகோவ்ஸ்கி தற்கொலை செய்துகொண்டார். அந்த மாபெரும் கவிஞர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கார்க்கிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த நேரம் கார்க்கி வெளியூரிலிருந்தார். பின்பு அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு மிகவும் வேதனைப்பட்டார்.
சில தினங்களுக்கு முன்பாகவே அந்தக் கடிதம் கிடைத்திருந்தால் மாயகோவ்ஸ்கியின் மரணத்தைத் தடுத்திருக்க முடியும் என்று மிகுந்த துயரமடைந்தார். மாயகோவ்ஸ்கியின் வளர்ச்சிக்கு கார்க்கி அரும்பாடுபட்டவர். அதனால் அவரது மரணம் கார்க்கியை உலுக்கிவிட்டது.
கார்க்கி கணித நூல்களைத் தவிர மற்ற எல்லா நூல்களையும் படிப்பார். தத்துவம், ஆன்மிகம், உளநூல் ஆகிய நூல்களையும் பொறுமையாக வாசிப்பார். ஒருமுறை சில அமெரிக்க விஞ்ஞானிகள் அவரைக் காண வந்திருந்தனர். அவர்களுடைய ஒரு கேள்வி கணிதம் பற்றியதாக இருந்தது. அதற்கு கார்க்கி “கணிதம் பற்றிய விசயத்தில் நான் ஒரு அப்பாவி. என்னை அதிலிருந்து விலக்கிவிடுங்கள். நான் கணிதத்தை விரும்பவில்லை. காரணம் அவை வெறும் எண்களாகவே எனக்குத் தோன்றுகின்றன. அவைகளில் கற்பனையும் அழகும் சேருவதில்லை” என்று கூறினார்.
கார்க்கி குழந்தைகளிடம் மிகுந்த அன்பு காட்டுவார். அவருக்குச் சிறுவயது முதலே அனாதைக் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துவந்து பசியாற்றி அனுப்பும் பழக்கம் அவருக்கிருந்தது. 1898இல் அவரது கதைகள் அனைத்தும் தொகுப்பாக வெளிவந்தன. அப்போது அவருக்குக் கிடைத்த பெருந்தொகையைக் குழந்தைகளுக்காகவே செலவிட்டார். கிறிஸ்துமஸ் தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு பணம் கிடைத்தது. ஏராளமான குழந்தைகளைத் தனது வீட்டில் திரட்டி அவர்களுக்குப் புதுஉடைகள் விளையாட்டுச் சாமான்கள் வாங்கிக் கொடுத்து, விருந்து வைத்து ஒரு திருவிழாப் போன்று கொண்டாடினார். குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி மகிழ்வித்தார். கார்க்கி வெளியில் செல்லும்போது பையில் இனிப்புகளைக்கொண்டுபோவார். வீதியில் நடமாடும் ஏழைகளுக்கு அவற்றைக் கொடுத்துவிட்டுத் திரும்புவார்.
கார்க்கியின் தனிப்பெரும் பண்பு தொழிலாளி, விவசாயி, ஏழை மக்கள் மீது அவருக்கிருந்த கரிசனம் தான். அவர்களுடைய வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். இந்த நம்பிக்கை அவரிடம் ஆழமாக அவரது பேச்சிலும் எழுத்திலும் இந்த நம்பிக்கை ஒளிவு மறைவின்றி வெளிப்பட்டது.
கார்க்கி வாலிபராக இருந்தபோது நீட்சேயின் கவிதைகளை ஆழ்ந்து படித்தார். அவைகளில் அவர் தனது தத்துவத்தை வெளிப்படுத்திஇருந்தார். “வீழ்ந்து கிடக்கும் மனிதனை மேலும் வீழ்த்தாட்டு” என்பது அவரது தத்துவமாக இருந்தது என்று கார்க்கி கூறினார். மேலும் அவர் தாஸ்தவெஸ்கி தனது இலக்கியத்தில் புகுத்தி இருந்த தத்துவம் “கர்வமுள்ள மனிதனே, சரணடைந்துவிடு” என்பதுதான். என்னுடைய தத்துவம் “வீழ்ந்து எழுந்திருக்கும் மனிதனைக் கைகொடுத்துக் தூக்கிவிடு” என்பதுதான் என்று கார்க்கி கூறினார்.
‘சோசலிச யதார்த்தவாதம்’
உண்மையான மனிதாபிமானம் என்பது, துன்பத்தில் வாடும் மக்களைப் பார்த்து கண்ணீர் சிந்துவதல்ல, மாறாக அவர்களின் துன்பத்தைத் துடைத்திட, தங்கள் ரத்தத்தையும் சிந்தத் தயாராயிருப்பதேயாகும் இத்தகைய மனிதாபிமானத்தை அவர் ‘சோசலிச யதார்த்தவாதம்’ என்று அழைத்தார். சோசலிச யதார்த்தவாதம் என்பது மார்க்சிசத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான சோவியத் படைப்புக்கள் சோசலிய யதார்த்தவாதக் கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டன. கார்க்கி, 1934இல் சோசலிச யதார்த்தவாதத்திற்கு என்று ஒரு பள்ளியை நிறுவினார். இப்பள்ளியை அவர் உருவாக்குவதற்கும் முன்பே இந்தக் கலைநுட்பத்தை அவர், தன்னுடைய தாய் நாவலில் பயன்படுத்தினார்.கார்க்கியின் சம கால எழுத்தாளர்களான லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செக்காவ், விளாடிமீர் கொரலன்கோ போன்றோரும் சமூகத்தைப் பற்றி எழுதியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் கார்க்கிக்கும் ஒரு வேறுபாடு உண்டு. தாஸ்தாவ்ஸ்கி என்ற எழுத்தாளர், புரட்சிகரப் போராட்டமானது மக்கள் மத்தியில் துவேஷ உணர்ச்சியை வளர்த்து, அவர்களை காட்டு மிராண்டிகளாக மாற்றிவிடுமோ என அஞ்சினார். மாறாக கார்க்கி, புரட்சிகரப் போராட்டமானது விலங்கு நிலையில் உள்ள மனிதனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, உயர்வடையச் செய்கிறது என்றார். கார்க்கியின் படைப்புக்களில் மிக முக்கியமான தாய் நாவல் இருநூறு தடவைகளுக்கும் மேல் மறுபதிப்பு அச்சாகியிருக்கிறது, உலகின் பல மொழிகளிலும் சுமார் 70 லட்சம் பிரதிகள் வெளியாகியிருக்கின்றன. நாவல் ஒரு குறிக்கோளுடன் எழுதப்பட்டிருப்பது என்பதும், சோவியத் புரட்சியின் வளர்ச்சியைப் படிப்படியாக நாவல் சித்தரிக்கிறது என்பதும் அனைவருக்கும் தெரியும். வாளின் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்பதை மெய்ப்பித்தவர் கார்க்கி.
சோவியத் யூனியன் உருவான பிறகு, சோவியத் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை உலகம் முழுதும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அதுபோல் உலக இலக்கியங்களும் தங்கள் நாட்டிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் விரும்பினார்கள். எனவே தங்கள் படைப்புக்களை வெளிநாட்டு மொழிகளில் ஏராளமாக மொழியாக்கம் செய்தார்கள், அதேபோன்று வெளிநாட்டு இலக்கியங்களைத் தங்கள் நாட்டின் மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்கள். கார்க்கியின் பெயரில் இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒரு இன்ஸ்டிட்யூட்டும் நிறுவப்பட்டது. ரஷ்ய மக்களின் ரத்தத்துடனும் சதையுடனும் கார்க்கியின் பெயர் இரண்டறக் கலந்து விட்டது. அவர் பிறந்த இடமான நிஷ்னி நோவோகிராத் என்னுமிடத்தை கார்க்கி என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்கள். கார்க்கியின் நூல்களை ஆய்வு செய்வதற்காக சோவியத் அரசாங்கம் ஒரு ஆராய்ச்சி பல்கலைக்கழகமே நிறுவியிருந்தது. அவர்கள் பல நூல்கள் அச்சிட்டு உலகம் முழுதும் இலவசமாகவே அனுப்பி வந்தார்கள். அவர்கள் நோக்கம் அவற்றின் மூலம் பணம் பண்ணுவது அல்ல. மாறாக சோசலிச சிந்தனைகளைப் பரப்புவதுதான். ஆனால், சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின், எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டது.
1917 புரட்சி குறித்து அவர் அதிருப்தியடைந்திருந்தாரானால், அவர் இந்தப் பள்ளியைத் தொடங்கியிருக்கவே மாட்டார். புரட்சி நடைபெற்ற காலத்தில், கார்க்கி தன் படைப்புகளின் மூலமாக ஏராளமாக சம்பாதித்தார். தன் சம்பாத்தியம் அனைத்தையும் அவர் புரட்சியில் ஈடுபட்டிருந்த போல்ஷ்விக்குகளுக்குக் கொடுத்து வந்தார். புரட்சி வெற்றி பெற்ற பிறகு, போல்ஷ்விக் தலைவர்கள் கார்க்கி மீது மிக உயர்ந்த மதிப்பு வைத்திருந்தார்கள். உடல் நலிவுற்றிருந்த கார்க்கியைத் தங்கள் கண்ணின் மணிபோல் காத்தார்கள். தோழர்கள் லெனினும் ஸ்டாலினும் கார்க்கியிடம் அபரிமிதமான அன்பு செலுத்தினார்கள். அவர்கள் கார்க்கியை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தார்கள்.
கார்க்கியின் துணைவியார் திருமதி பெஷ்கோவா அவரது கணவரின் மறைவுக்குப் பிறகு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒருமுறை கார்க்கியுடன் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கிராமத்தில் அப்போது விவசாயிகள் நாற்று நடுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். கார்க்கி அவர்கள் வேலை செய்வதைச் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நான் அவரைப் பரிவுடன் பார்த்தேன். அவர் “இருபதாண்டுகளுக்கு முன்பு நான் இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறேன். இதே விவசாயிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களுடைய மெலிந்த உடலையும், உக்கி உருகிப்போன கண்களையும், வறுமையில் வாடிய அவர்கள் நிலையையும் கண்டு அன்று நான் கண்ணீர் வடித்தேன். மனம் தாங்காமல் அன்று நான் கண்ணீர் விட நேர்ந்தது. ஆனால் இன்று நான் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன். இன்று சோசலிச ஆட்சியில் எனது தாய் நாட்டின் உழைப்பாளி மக்களிடம் உருவாகியுள்ள ஆவேசமும் உற்சாகமும், உத்வேகமும், தாயகத்தை வளர்ப்பதில் அவர்கள் காட்டும் கூட்டு முயற்சியும் அற்புதமானவை. அவர்களின் சிரித்த முகங்களும், இன்பமாய் ஒலிக்கும் கிராமிய கீதங்களும் என்னிடம் இன்பத்தை வாரியிறைப்பதைக் காண்கிறேன்” என்று கூறினார். அன்று விவசாயிகளோடு கார்க்கியும் பயிர் நட்டு அவர்களுக்கு உதவினார்.
ரஷ்யாவில் கார்க்கி கைதூக்கிவிட்ட மனிதன் அசுர சக்தி பெற்றவனாகி உலகிற்கே வழிகாட்டியானான். கார்க்கி தனது தத்துவத்தைத் தனது காலத்திலேயே கையாண்டு வெற்றி கண்டவர். உலக முற்போக்கு இலக்கியத்தின் முதல்வராகவும், சோசலிச யதார்த்தவாதத்தின் பிதாமகனாகவும் திகழ்ந்தார்.
கார்க்கி உலக இலக்கியத்தின் மணி மகுடம், உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற பெரும் பொக்கிஷம். உலகின் எட்டுத் திசையிலும் வாழும் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்களின் அழியாத சொத்து. உலகில் உழைத்து வாழும் மக்கள் உள்ளவரை, மனிதகுலம் இந்தப் பூமியில் நீடித்திருக்கும் வரை அவர் புகழ் அழியாது நிலைத்திருக்கும்.
பொன்மொழி
இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் இடையில் உள்ள உறவு பரஸ்பரம் உதவி செய்துகொள்ளக் கூடியவைகளாகும். (The relations between literature and society are reciprocal). இலக்கியம் என்பது சமூகக் காரணிகளின் விளைவு மட்டுமல்ல. அது சமூக விளைவுகளின் காரணியுமாகும். (Literature is not only the effect of social causes; it is also the cause of social effect.)