–நா.மணி
“மாற்றுக் கல்விக்கான வாசிப்பு முகாம்” என்ற தலைப்பில் தமிழ் நாடு அறிவியல் இயக்கம் ஆசிரியர் மத்தியில் கல்வி சார் நூல்களை அறிமுகம் செய்ய ஓர் இயக்கத்தை நடத்தியது. அதற்கான பரிசோதனை முயற்சி ஈரோட்டில் தொடங்கியது. பின்னர் மாநில அளவில் விரிவு படுத்தப்பட்டது.
ஒருங்கிணைப்பு குழு, சில புத்தகங்களை முன்கூட்டியே தேர்வு செய்து முகாம் நடைபெறும் இடம் தேதி ஆகியவற்றை அறிவித்து விடும். ஆசிரியர்கள் , கல்வி ஆர்வலர்கள் நூலை காசு கொடுத்து வாங்கிப் படித்து விட்டு வர வேண்டும்.
முகாம் நடைபெறும் இரண்டு நாட்களும் நூலின் மீதான உரையாடல்/ மதிப்புரை/ திறனாய்வு என்பதாக நிகழ்வு நடைபெறும். இறுதியில் ஓர் தொகுப்புரையோடு முகாம் நிறைவடையும். கோடை விடுமுறை எனில் இதே முகாம் மூன்று நாட்களாக ஏதேனும் மலைப்பிரதேசத்தில் நடைபெறும்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள் கல்வி ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள். இப்படியாக 20 முகாம்கள் தொடர்ந்து நடைபெற்றது. தமிழ்நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் தம் சொந்த செலவில் இந்த முகாம்களில் பங்கெடுத்தனர்.
ஒரு சிறிய பகுதி ஆசிரியர்கள் மத்தியிலேனும் வாசிப்பின் தாகம் உருவெடுக்க காரணமாக அமைந்தது. சிலர், கல்வி செயல்பாட்டாளர்களாக உருவாகவும் முகாம்கள் வழிவகுத்தன. முகாம்களில் பங்கு பெற்றவர்கள் தொடர் வாசிப்புடன், விவாதம் செயல்பாடு – மிக்கவர்களாக பரிணாம வளர்ச்சி அடைந்தனர்.
தங்களின் ஆசிரியர் பயிற்சி, கல்வியியல் பட்டம், பல ஆண்டுகால கற்றல் கற்பித்தல் அனுபவங்கள் என இவை தங்களுக்குள் நிகழ்த்தாத மாற்றங்களை வாசிப்பு முகாம்கள் அவர்களுக்குள் நிகழ்த்திக் காட்டியது. சில புதிய கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளுக்கு வித்திட்டது.
இரவு பதினொரு மணி வரை முகாம்களில் நடக்கும் உரையாடல்கள் கண்டு முதன்மை கல்வி அலுவலர்கள் பெரும் ஆச்சரியம் அடைந்தனர். பள்ளிக் கல்வி இயக்ககம் இதனை அனைவருக்கும் கல்வி பயிற்சி மையங்களில் பயன்படுத்த இயலுமா என்று முயற்சித்தது.
இப்போதும் அதுபோன்ற முகாம்களுக்கு தேவை இருக்கிறது. ஏன் இந்த முகாம்களை நிறுத்தி விட்டீர்கள் என்று ஆதங்கத்தோடு, ஆர்வத்தோடும் கேட்கத்தான் செய்கிறார்கள்.
இத்தகைய முகாம்களை வடிவமைக்க உந்து சக்தியாக இருந்தவர் பிரேசில் நாட்டு கல்வியாளர் பாவ்லோ பிரைரே (Paulo Freire).
“ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை” என்னும் அவரது நூல் உலகெங்கும் கல்வியில் பெரும் புரட்சிக்கு வித்திட்ட நூல். தமிழில் அதனை மொழிபெயர்த்தவர் ஆயிஷா நடராசன். ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்வி நூலை வாசிப்பதும் புரிந்து கொள்வதும் தொடக்க நிலை வாசகர்களுக்கு எளிதல்ல.
ஆனால், 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த முதல் முகாமில் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை” நூல் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 28 பேர் கலந்து கொண்டனர். நூலை வாசித்து விட்டு விவாதங்களை நிகழ்த்தவே முகாமிற்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இருந்தோம்.
பெரும்பான்மையானவர்கள் வாசித்து விட்டு வரவில்லை. வாசிக்க முயன்றவர்களுக்கு புரியவில்லை என்றார்கள். வந்திருந்தவர்களை நான்கு குழுக்களாகப் பிரித்து மீண்டும் வாசிக்கும்படி கூறினோம். கூட்டு வாசிப்பிலும் புரியவில்லை என்ற புலம்பலே முன்னுக்கு வந்தது.
முகாமின் இரண்டாம் நாள் மதிய அமர்வில் நூல் மதிப்புரை மற்றும் திறனாய்வுக்கு ஒதுக்கப்பட்டது. இன்றைய கல்வி முறையை “வங்கிமுறை கல்வி” என்று வரையறை செய்து, ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி வேண்டும் எனில் “பிரச்சினை அடிப்படையிலான உரையாடல் வழி கல்வி” முறையை நோக்கி செல்ல வேண்டும் என்பதே அந்த நூலின் அடிநாதம். அதனை பாவ்லோ பிரைரே விளக்கும் முறையை ஆசிரியர்கள் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது.
பங்கேற்பாளர்களில் நூலினை முழுமையாக புரிந்து கொண்டவர் ஒருவரே. அவர் ஓர் தமிழ் பேராசிரியர். பார்வைத்திறன் இல்லா மாற்றுத் திறனாளி. அவர் இந்த முகாமிற்கு வந்த பிறகு தான் என்ன கற்பிக்க வேண்டும்? எப்படி கற்பிக்க வேண்டும்? என்ற தெளிவு பிறந்தது என்பார். தனது மகளைக் கூட எப்படி அணுகுவது என்ற பார்வை கிடைத்தது என்பார். முகாம்களுக்கு வரத் தொடங்கிய பின்னர் கல்வி சார் நூல்களை தேடித் தேடி வாங்கினார். 2010 ல் மாதம் ரூபாய்.4000/- ஊதியம் கொடுத்து நூல்களை வாசித்து ஒலிப்பதிவு செய்து தர என ஒருவரை நியமித்துக் கொண்டார்.
“ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்வி முறை” நூலை ஆசிரியர்கள் அனைவர் மனதிலும் கொண்டு நிறுத்தி விட வேண்டும் என்ற வேகத்தோடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். பலரை அணுகினோம். இந்த நூலை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்ய காரணமாக இருந்த எழுத்தாளர் ரவிக்குமார்.
இந்நூலை கற்றுத் தேறி, தமிழ் மொழிப் பாடத்தில் எப்படி நடைமுறை ஆக்கம் செய்ய முடியும் என்று வெற்றி கண்ட பேராசிரியர் ச.மாடசாமி என பலரிடம் உரையாடல் நடத்தினோம். இந்த நூலை எளிமையாக்கி புத்தக பூங்கொத்து வடிவில் கொண்டுவரலாம் என்று முயற்சி மேற்கொண்டோம். வீதி நாடகமாக நிகழ்த்தி காட்ட முடியுமா என்று ஆலோசனை செய்தோம்.
ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்வி முறை நூல் தமிழில் வெளிவரக் காரணமாக இருந்த இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் தோழர் ஜி.செல்வாவிடம் இந்நூலை எளிமைப்படுத்தி கொடுக்க எடுத்து வரும் முயற்சிகள் குறித்து பேசினேன்.
“அடிப்படையில் இது தொடக்க நிலை வாசகர்களுக்கு ஏற்றதல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? ” என்றார். ஆம் என்றேன். “அப்படியெனில் இதனை எளிமைப் படுத்த வேண்டிய அவசியம் எழவில்லையே” என்றார். அவரது கருத்து சரி என்று பட்டது. அடுத்து நூல் பற்றிய ஆழமான புரிதலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டோம். வாசிப்பு முகாம்கள் நடத்த தொடங்கியதிலிருந்து எட்டாவது முகாமில் மீண்டும் “ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்வி முறை” ஆழமான வாசிப்பு மற்றும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என்று முடிவு செய்தோம்.
அத்தோடு இந்த நூலை நன்கு புரிந்து கொண்டு இருக்கும் அனைத்து கல்வியாளர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்த முகாமிற்கு அழைப்பது என்று முடிவு செய்தோம். அப்படி அழைப்பதாக இருந்தால் மிகுந்த பொருட்செலவு இன்றியும் வந்து போகும் கருத்தாளர்களுக்கு சிரமம் இன்றியும் நடைபெற சென்னையில் அந்த முகாமை நடத்துவது என்று திட்டமிட்டோம். ஒவ்வொரு கருத்தாளரும் மிகுந்த தயாரிப்பு மற்றும் எழுத்துப்பூர்வமான கருத்து தாள்களோடு வர இருந்தனர். பேராசிரியர்கள் கே.ராஜு, சிவக்குமார், பொன்ராஜ், விஜயகுமார், ஆயிஷா நடராசன் என பலரது கருத்துக்களை முன் பதிவு செய்தோம்.
வாசிப்பு முகாமில் குழந்தைகளுடன் …
எனது இணையரும் ஓர் ஆசிரியர். முதல் முகாமில் அவர் பங்கேற்கவில்லை. இப்போது அவரும் பங்கேற்க விரும்பினார். எனவே பதினைந்து வயது மகள், நான்கரை வயது மகனோடு சென்னைக்கு பயணித்தோம். மூன்று நாள் முகாம். மகள் எப்படியோ பொறுமை காத்தார். மகன் சில நேரங்களில் அம்மாவோடு அமர்ந்து இருப்பான். கொஞ்சம் தள்ளிப் போய் அவனாக ஏதோ விளையாடுவான். அவனது அக்கா துணை இருப்பாள். குழந்தையை வீட்டில் விட்டு வர ஆளில்லாம்ல் கொடுமைக்கு அழைத்து வந்து அவனை இப்படி துன்புறுத்தல் செய்கிறோமே என்று கூடபட்டது.
முகாமின் நிறைவு நாளில் முகாம் பங்கேற்பு சான்றிதழ் அவனுக்கும் வழங்கப்பட்டது. மகன் சச்சின் சூர்யா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். “முகாமின் மூத்த பங்கேற்பாளர் நான். மிக இளைய பங்கேற்பாளர் சச்சின்” என்று அவரை அறிமுகம் செய்து சான்றிதழ் வழங்கினார் மூட்டா பேரா. ராஜு.
அப்போது நான் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவராக இருந்தேன். இதனால் தான் அவனுக்கும் சான்றிதழா என்று சங்கோஜமாக கூட இருந்தது. 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 & 29 தேதிகளில் அம்முகாம் நடந்தது. வீட்டார் அனைவரையும் ஈரோடு கொண்டு வந்து விட்டுட்டு, 1/10/2013 அன்று இரவே, அறிவியல் இயக்கத்தின் பணிக்காக தொடர் வண்டியில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன்.
குழந்தையின் கேள்வி
மறுநாள் காலை எட்டு மணி இருக்கும். என் இணையர் அழைத்தார். “சச்சின் ஏதோ சொல்றான்” என மகிழ்ச்சியில் சிரித்தார். குழந்தமையின் பல்வேறு செயல்பாடுகளில் ஒன்றைத்தான் சொல்லப்போகிறார் என ஆர்வமுடன் கேட்கத் தொடங்கினேன். மகன் பேச மறுத்தான். என் மனைவியே தொடர்ந்தார். தமிழ் இந்து நாளிதழில் “கண்டுபிடி கண்ணே கண்டுபிடி” ( அப்படி ஒரு பகுதி அப்போது வந்து கொண்டு இருந்தது) பகுதியில் ஒளிந்து இருக்கும் விலங்குகள், பறவைகள் பற்றி கூறும்படி சொன்னேன். ஒன்று இரண்டைக் அவன் கூறிவிட்டு, “அம்மா! அம்மா! என, என் முகத்தைப் திருப்பி, “ஆதிக்கவாதின்னா யாரும்மா”ன்னு கேட்கிறான் என்றார். நான் ரயிலினுள் மிதந்தேன்.
“வீட்டில் விட்டுவிட்டு போக ஆளில்லை என்ற நிலையில், நாலரை வயது பாலகனை முகாமிற்கு அழைத்து வந்து துன்பப்படுத்துகிறோமே வருத்தம் முகாம் முடியும் வரை இருந்தது. வாசிப்பு நடைபெறும் போது அருகில் சில நேரம் அமர்ந்து இருப்பான். சில நேரம் தள்ளிச் சென்று விளையாடுவான். தொகுப்புரை நடந்த போதும் அப்படியே. கடினம் கடினம் என்ற ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை நூலின் முக்கியமான சொல்லாடல்களில் ஒன்று “ஆதிக்கவாதி”. முகாம் முடிந்த நான்காம் நாள், குழந்தை “ஆதிக்கவாதி என்றால் யாரம்மா” கேட்டால் எப்படி இருக்கும்? மகனிடமே பேச முயற்சி செய்தேன். அவன் பேச மறுத்தான். என் மனைவியே தொடர்ந்தார்.
“ஏங்க கேட்குதா?”என்ற என் மனைவி, “ஏங்க என்ன சொல்லட்டும்?”என்றார்.
எனக்கு சுருக்கென தைத்தது.குழந்தைக்கு யார் ஆதிக்கவாதி? என்பதை எப்படி சொல்லி புரியவைப்பது? சிறிது நேர யோசனைக்கு பிறகு குழப்பமே இல்லாமல் “நம்ம வீட்டில் அப்பாதான் ஆதிக்கவாதி என்று சொல்லேன்”என்றேன். “நான், அப்படி சொல்லவில்லை. உன்னை யாரெல்லாம் அடிக்கிறார்களோ, யாரெல்லாம், மிரட்டுகிறார்களோ, அவர்களெல்லாம் ஆதிக்கவாதிகள் தான் தம்பி” என்று சொன்னேன் என்றார். நான் கூறியதை காட்டிலும் பொருத்தமான பதிலாகவும் இருந்தது. மீண்டும் மீண்டும் இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு அலைபேசியை அணைத்து வைத்தேன்.
அடுத்த நிமிடமே, முகாம் ஒருங்கிணைப்பில் முக்கிய பங்காற்றிய சேலம் ஆசிரியர் பாலசரவணனை அழைத்தேன். “முகாம் பெருவெற்றி” என்றேன்.
“என்ன சொல்றீங்க” என்றார். விசயத்தை பரிமாறிக் கொண்டோம்.
பின்னர் முகாமில் பங்கு கொண்டோரிடம் அவர்கள் அழைத்தாலும் சரி, நாங்கள் அழைத்தாலும் சரி, இருவருமே இந்த மகிழ்ச்சியான செய்தியை இருவருமே பரிமாறினோம். பாலசரவணன் மூலம் செய்தி அறிந்த வாசிப்பு முகாம் நண்பர்கள் தோழர் சச்சினிடம் பேசவேண்டும் என அழைத்தனர்.
சென்னையில் இருக்கிறேன். ஊருக்கு போய் பேசச் சொல்கிறேன் என்றேன். மாலை கூட்டம் முடிந்ததும் மீண்டும் மனைவி அழைத்தார். “டிவியில் சிறுத்தை படம் ஓடுது. அதில் வில்லன், போலீஸ் அப்பாவி பொது மக்கள் என எல்லோரையும் போட்டு அடிக்கிறான். தம்பி அதைப் பார்த்து டென்ஷன் ஆயிட்டான். அம்மா! அம்மா! அவன்தான் ஆதிக்கவாதின்னு கத்தறான்”என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. “சென்னை சி.பி.ஆர் வீட்டு பக்கத்தில் புக் ரீடிங் கேம்ப்” என்கிறான். “பாவ்லோ பிரைரெ” என்று மிக அழகாக உச்சரிக்கிறான்.
சான்றிதழ் வாங்கியது சரியானதுதான்
ஆதிக்கவாதி என்னும் சொல்லை நாம் சொன்ன பொருளில் பலவிதங்களில் பொருத்திப் பார்க்கிறான். நான்கரை வயதில் ‘பிரைரெ’ என அவன் சொல்லிய அழகை எப்படி பகிர்ந்து கொள்வது என்றே தெரியவில்லை. முகாம் பங்கேற்பு சான்றிதழ் வழங்கியது குறித்து துளி சங்கோஜமும் மறைந்து விட்டது. பின்னர் சில மாதங்கள் வரை கூட வாசிப்பு முகாமில் நடைபெற்ற உரையாடல், ஆதிக்கவாதி, ஒடுக்கப்பட்டோர் அதன் கடினப் பகுதிகள் குறித்து எளிமையாக யதேச்சையாக உரையாடுவான்.
இப்போது வயது பதினைந்தை நெருங்குகிறான். புனைவு இலக்கியங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் சரளமாக வாசிக்கும் பழக்கம் அவனைத் தொற்றிக் கொண்டது. புனைவு அல்லாத தமிழ் ஆங்கில நூல்களையும் அவ்வாறே வாசிக்கிறான். ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளிவந்து டிக்கெட் கிடைக்க ஆறு நாட்கள் ஆகிவிட்டது. இந்த ஆறு நாட்கள் இடைவெளியில் பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் படித்து முடித்து விட்டுத்தான் படம் பார்க்க வந்தான்.
சமீபத்தில் ஈரோட்டில் எழுத்தாளரும் மக்களவை உறுப்பினருமான தோழர் சு. வெங்கடேசனுக்கு சி.கே.கே. அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா. அங்கு ‘வேல்பாரி’ நூலை வாங்கி வந்து நான்கைந்து நாளிலேயே படித்து முடித்து விட்டான். அவனிடம் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்வி முறை நூல் வாசிப்பு முகாமில் அவனது பங்கேற்பு. அவனது உரையாடல், ‘ஆதிக்காவாதி’ ‘ஒடுக்கப்பட்டோர்’ குறித்து அவன் பேசியது பற்றிக் கேட்டால், சற்றும் நினைவில் இல்லை என்கிறான்.
மிகுந்த சங்கோஜம் அடைகிறான். ஆழமான விசயங்களை சிறு வயது குழந்தைகளால் கூட எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடிகிறது. வளரும் போது அவர்கள் அதனை நினைவு கூற இயலாமல் போகிறது. ஓர் அனுபவத்தின் யதேச்சையான ஓர் மீள் பார்வை இது. குழந்தைகளுக்கான முக்கிய புத்தகம் என்று நாம் ஆசை ஆசையாக வாங்கி வந்து கொடுப்போம்.
நமது நண்பர்கள் அவர்களாகவே வாங்கி அனுப்புவார்கள். வாங்கிக் கொடுப்பார்கள். அதில் சிலவற்றை, அவர்கள் தொட்டுக் கூட பார்ப்பதில்லை. அதேசமயம் நாம் படிக்க வாங்கி வந்த நூலை நமக்கு முன்பு படித்து விட்டு, நீங்க இன்னும் படிக்கலையா என்று நம்மை நச்சரித்து கொண்டு இருப்பார்கள். குழந்தைகள் வாசிப்பு பற்றி ய நமது அவதானிப்புகளை மேலும் அதிகரித்து கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த அனுபவங்கள் வெளிக் கொணர்கிறது.