–அ.மார்க்ஸ்
ஒன்று
ஆறுமுக நாவலர் தொடங்கி சி.வை. தாமோதரம்பிள்ளை, சைமன் காசிச் செட்டி, சபாபதி நாவலர் எனப் பல ஈழத் தமிழறிஞர்கள் இந்தியத் தமிழர்களை எப்போதுமே ஈர்த்து வந்துள்ளனர். நான் எழுதத் தொடங்கிய கால கட்டத்தில் பேரா.கைலாசபதியும், சிவத்தம்பி அவர்களும் எங்களுக்குப் பெரிய அளவில் ஆதர்சமாக விளங்கினர். ஜார்ஜ் தாம்சனின் மாணவர்களான இந்த இருவரின் வெளிப்படையான இடதுசாரி மார்க்சிய அணுகல்முறை இதில் கூடுதல் பங்கு வகித்தது. இப்படியான பின்னணியில்தான் பலஸ்தீனக் கவிஞர்களின் அரசியல் கவிதைகளின் மொழிபெயர்ப்பின் ஊடாக இந்தியச் சூழலில் பலரையும் ஈர்த்தவராக இன்னொரு ஈழப் பேராசிரியரான நுஃமான் எங்களுக்கு அறிமுகம் ஆனார். ஈழப்போர் உச்சக்கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த காலம் அது. அப்போது எங்கள் கண்ணில் பட்ட ’புத்தரின் மரணம்’ எனும் அவரது கவிதை எங்களைப் பெரிய அளவில் ஈர்த்த ஒரு படைப்பாக அன்று இருந்தது. யாழ் நூலகம் எரிக்கப்பட்ட பின்னணியில் எழுதப்பட்ட அந்தக் கவிதையின் ஊடாக நுஃமான் அவர்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்திற்கு உரியவரானார். அதை ஒட்டி ‘அரசியல் எதிர்ப்புக் கவிதைகள்’ என்றொரு கவிதை வடிவமே அவரது பெயரில் தமிழில் அறிமுகமானது.
தொடர்ந்து அவரது கவிதைகள், நீண்ட கவிதைகள், நூற்பதிப்புகள், மொழியாக்கங்கள், கட்டுரை நூல்கள், தமிழ் இலக்கண நூல்கள், ’மொழியும் இலக்கியமும்’ போன்ற நூல்கள் அந்தந்தக் காலங்களில் எங்களின் கண்ணில் பட்டன. இதற்கிடையில் ஒரு நாள் அவர் தன்னை ஒரு மார்க்சியச் சிந்தனையாளராக அறிவித்துக் கொண்டபோது என்னைப் போன்றவர்களின் கவனம் அவர்மீது கூடுதலாகத் திரும்பியது. ’மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’, ’அசன்பே சரித்திரம்’ மற்றும் ’சித்திலெவ்வை மரைக்காயரின் நூற்பதிப்புகள்’ ….. என நுஃமானின் பங்களிப்புகள் தொடர்ந்தன. கைலாசபதி, சிவத்தம்பி ஆகியோருடன் நுஃமானும் எங்களின் கவனத்தை ஈர்த்த ஓர் ஈழப் படைப்பாளி ஆனார்.
இரண்டு
அம்பாறை மாவட்டம் கல்முனையில் 1944 ஓகஸ்ட் 10 அன்று பிறந்த பேரா.நுஃமான் அவர்கள் என்னைக் காட்டிலும் ஐந்தாண்டுகள் மூத்தவர். தொடக்கத்தில் 15 ஆண்டுகள் பள்ளி ஆசிரியராக இருந்து பின்னர் தமிழகத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம், மலேயா பல்கலைக் கழகம் முதலானவற்றில் வருகைப் பேராசிரியர் பொறுப்புக்கள், இலங்கையின் திறந்த நிலைப் பல்கலைக் கழகம், தென்கிழக்குப் பல்கலைக் கழகம், பேராதனைப் பல்கலைக் கழகம் முதலான முக்கிய பல்கலைக் கழகங்களின் பல்வேறு கல்வித் துறைகளில் பணி என அவரது அனுபவங்களும் பங்களிப்புகளும் விரிந்தன.
தனது 16 வயது முதல் கவிதைகள் எழுதியவராக அறியப்படுபவர் நுஃமான். அவரது பலஸ்தீனக் கவிதைகளின் மொழியாக்கம் ஈழத்துக் கவிதை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியதைப் பலரும் பதிவு செய்துள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி எவ்வாறு இலக்கிய வெளிப்பாடாக உருப்பெறுகிறது என்பதில் ஆர்வம் உள்ளவராக அவரை ஆக்கியது.
இதே காலகட்டத்தில்தான் ஈழத்தில் தமிழ் எதிர் முஸ்லிம் இன மோதல்கள், அரச ஒடுக்கு முறைகள், முஸ்லிம் தமிழர்கள் காலம் காலமாக வாழ்ந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட கொடுமைகள் எல்லாம் நிகழ்ந்தேறின. சிறுபான்மை மக்கள், குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மை மக்கள் உலகளவில் பிரச்சினைகளுக்கு ஆங்காங்கு ஆளாகியிருந்த கொடும் காலம் அது. அதன் உச்ச பட்சமான வடிவங்களில் ஒன்றாக அன்றைய இலங்கை அமைந்தது.
இப்படி ஒரு பேராசிரியர், கல்வியாளர், கவிஞர், எழுத்தாளர், இன ஒடுக்குமுறை மீதான விமர்சகர் என நுஃமான் பலதுறைகளிலும் தடம் பதித்த இந்தக் கால கட்டம் இன்னொரு பக்கம் மிகக் கொடூரமாக அமைந்த ஒன்று என்பதை அவரது பலதுறைப் பங்களிப்புகளையும் கணக்கில் கொள்ளும்போது நாம் கவனத்தில் நிறுத்த வேண்டிய ஒன்று.
இத்தனைக்கும் மத்தியில் நகைச்சுவை உணர்வு குன்றாமல் வாழ்ந்து, மிக முக்கியமான கல்வித்துறைப் பணிகளையும் சிறப்புற மேற்கொண்டவர் அவர். தமிழகத்தின் சென்ற கால முக்கிய தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படும் எழுத்தாளர் மௌனியைத் தான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பின்போது அவரது வீட்டில் சந்தித்துப் பேசியது குறித்த நுஃமானின் கட்டுரை அவரது நகைச்சுவை உணர்வுக்கும் ஒரு சான்று. மௌனி போன்றோரின் இறுதிக்காலத் தனிமை குறித்த பரிவான ஒரு பதிவு அது.
மூன்று
ஈழப் போரின் ஆகக் கொடூரமான ஒரு கால கட்டத்தில் தனது சக முஸ்லிம் மக்களோடு கொடும் துயரங்களைப் பகிர்ந்து கொள்ள நேர்ந்தவர் பேராசிரியர் நுஃமான். ஒருபக்கம் இனவாத அரசு. இன்னொரு பக்கம் தமிழையே தாய்மொழியாக அறிந்த சக தமிழ் முஸ்லிம் குடிமக்களை இனவாத வெறுப்புடன் அணுகிய ஆயுதம் தாங்கிய தமிழ் இயக்கங்கள் என இந்த இரு தரப்பினருக்கும் மத்தியில் சிக்கிப் பேரழிவை எதிர்கொண்டவர்கள் இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள். இக் காலகட்டத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் துயரத்தை மிகச் செறிவாகவும், விரிவாகவும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் தமிழர்களின் வாக்கு மூலங்களாகத் தொகுக்கப்பட்ட ஆக முக்கியமான ஒரு நூல் நண்பர் வழக்குரைஞர் சர்ஜூன் ஜமால்தீன் அவர்களின் “சாட்சியமாகும் உயிர்கள்”. அகன்ற வடிவில், சிறிய எழுத்துக்களில் சுமார் ஆயிரம் பக்கங்களில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நூல். பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் மனப்பூர்வமான வாக்குமூலங்களால் நிரப்பப்பட்ட ஒன்று. இந்த நூலுக்கு நான்கு பக்கங்களில் மிக முக்கியமான, முற்றிலும் நடுநிலையான ஒரு முன்னுரையைப் பேராசிரியர் நுஃமான் அவர்கள் தந்துள்ளார். நுஃமானின் நுணுக்கமான பார்வையில் பொறுப்புடன் நேர்மையாகச் செய்யப்பட்டுள்ள ஒரு முக்கிய ஆவணமாக அமைந்துள்ள இம்முன்னுரை ஈழப்போரில் இரண்டு பக்கங்களிலிருந்தும் கடும் கொடு வன்முறையைச் சந்தித்த ஈழ முஸ்லிம் தமிழர்களின் துயரங்களைத் துல்லியமாகப் பதிவு செய்கிறது.
நுஃமான் சொல்வார்:
“இத்தகைய நூலின் நோக்கம் பழைய புண்ணைக் கீறி வேதனையையும் குரோதத்தையும் மேலும் தீவிரப் படுத்துவதாக இருக்க முடியாது…… வடக்கு கிழக்கில் முஸ்லிம் மக்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். குடிசனப் பரம்பலைப் பொருத்தவரை இவர்கள் தனித்துப் பிரிந்து வாழ்வதற்கான வாய்ப்புகள் இல்லை. கல்வி, விவசாயம், வர்த்தகம், ஏனைய தொழில் வாய்ப்புகளில் இங்குள்ள மக்கள் பரஸ்பரம் தங்கியுள்ளனர். இவற்றில் முன்னேற்றம் வேண்டுமாயின் இன நல்லுறவு அத்தியாவசியமாகும். மக்கள் மத்தியில் இது தொடர்பான புரிந்துணர்வு இருக்கின்றது. இரு பகுதிகளையும் சேர்ந்த அதிகார வேட்கை உடையவர்களே இனங்கள் மத்தியில் பகையையும் குரோதத்தையும் பற்ற வைக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். முப்பது ஆண்டுகால யுத்தத்திலும் பேரழிவுகளிலும் இருந்து நாம் பாடம் படிக்க வேண்டும்….வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத எந்தச் சமுகத்துக்கும் விமோசனம் இல்லை…. இலங்கை மாதாவே அடுத்த தலைமுறையினருக்காவது உனது அன்பையும், காதலையும், சமாதானத்தையும் வழங்கு”.
கொடூரமாகப் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மைச் சமூகம் வேறென்ன சொல்ல முடியும்.
1948 முதல் 1980 களின் நடுப்பகுதிவரை முஸ்லிம்களை ”தமிழ் பேசும் மக்களாக” உள்ளடக்கித் தமிழரசுக் கட்சி உருவாக்கியிருந்த ஒற்றுமைகள், தேர்தல் கூட்டணிகள் எல்லாம் 1983 முதல் சிதைந்தன. தமிழ் முஸ்லிம் உறவைச் சீரழிப்பதில் இலங்கை அரசும் தீவிரமாக இருந்தது. இன்னொரு பக்கம் போராளிக் குழுக்கள் முஸ்லிம் நில உடைமையாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் பணம் பறிக்கத் தொடங்கின.
முஸ்லிம்கள் கொல்லப்படுவது, தாக்கப்படுவது, அவர்களிடம் இருந்து பணம் பறிக்கப்படுவது எல்லாம் தொடர்ந்தன. பயிற்சிபெற்ற தமிழ் ஆயுதப் படையினருக்கு முன்னால் முஸ்லிம்களைப் பாதுகாக்க என அரசு உருவாக்கிய முஸ்லிம் ஊர்க்காவல் படையினரால் ஒன்றும் செய்ய இயலாததை நுஃமான் சுட்டிக் காட்டுகிறார். 1985 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் 70 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 200 வீடுகள் பள்ளி வாசல்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக் கணக்கான ஏக்கர் நெல்வயல்கள், ஏராளமான கால்நடைகள் பறிக்கப்பட்டன. 2006 வாக்கில் மூதூரைச் சேர்ந்த மொத்த முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் ஒருபக்கம் இனவாத அரசையும், இன்னொருபக்கம் ஆயுதம் தாங்கிய ஈழத் தமிழ்ப் படைகளையும் எதிர்கொள்ள வேண்டிய அன்றைய இந்த நிலைய விளக்கமாக உரிய தரவுகளுடனும், மிக்க நடுநிலையாகவும் நுஃமான பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அக்கால முஸ்லிம்கள் சந்தித்த இந்தக் கொடுமைகளை மிகவும் மேலோட்டமாகவே இங்கு நான் பதிவு செய்துள்ளேன்.
நான்கு
இந்தக் கட்டுரையின் நோக்கம் நுஃமான் என்கிற அறிஞரின் துறை சார்ந்த பங்களிப்புகளை மதிப்பிடுவதுதான் என்ற போதிலும் அவர் வாழ்ந்த காலம் குறித்த பின்னணியை நாம் நினைவிற் கொள்ளாமல் இருக்க இயலாது என்பதால் சற்று விரிவாக இந்த முன்னுரைப்புகள் இங்கே தேவை ஆயின. இனி அவரது கல்விசார் பணிகளைத் தொடர்வோம்.
நுஃமானின் கல்வித்துறை சார் பணியின் முதல் பதினைந்து ஆண்டுகள் பள்ளிக் கல்வி சார்ந்ததாகவும், எஞ்சிய காலம் அவரது முனைவர் ஆய்வு மற்றும் உயர் கல்வித்துறை ஆசிரியப் பணியிலும் அமைந்தது. அதே நேரத்தில் தமிழ் ஆய்வுகள், நூற்பதிப்புகள், இலக்கிய விமர்சனங்கள் எனக் கல்வி மற்றும் ஆய்வு சார்ந்த பணிகளும் தொடர்ந்தன.
அவரது ஆய்வு மற்றும் எழுத்துப் பணிகளைப் பொறுத்தமட்டில் தொடக்கக் காலத்தில் அவர் தன்னை ஒரு மார்க்சியச் சிந்தனையாளராக அறிவித்துக் கொள்ளவில்லை. அவரது சுய குறிப்பொன்று இப்படி அமைகிறது:
“ஒவ்வொருவரும் வாழும் காலம் முதல் வளர்ந்து கொண்டே உள்ளனர். இரண்டு தசாப்தங்களில் என்னில் ஏற்பட்ட மாற்றங்களும் வளர்ச்சிகளும் எனது கவிதைகளில் காணப்படுகின்றன… இடைக் காலத்தில் சமயச்சார்பான ஆன்மிகச் சிந்தனைகள் என்னைக் கவர்ந்தன….. பாரசீகச் சூஃபி கவிஞர் ரூமியின் ‘மஸ்னவி’ யால் கவரப்பட்டிருந்தேன். சமயத் தத்துவங்களைச் சரியாக கடைப் பிடிப்பதன் மூலமே வாழ்வின் தீமைகளைக் களையமுடியும் என்ற ஓர் எண்ணம் இருந்தது. 1965 – 67 ஆம் ஆண்டுகளில் நான் எழுதிய கவிதைகளில் இதன் பாதிப்பை அறியலாம். 67க்குப் பின் ஆன்மிகச் சிந்தனைப் போக்கிலிருந்து நான் மெல்ல மெல்ல விடுபடத் தொடங்கினேன். மார்க்சியத் தத்துவார்த்த நூல்கள் என்னைப் பெரிதும் வளப்படுத்தின. வாழ்க்கைப் போக்குகளை நிர்ணயிக்கும் புறநிலை விதிகளை அவை எனக்குக் கற்பித்தன. வாழ்க்கையின் இயக்கப் போக்கைப் புரிந்துகொள்ள அவை எனக்கு உதவின. இலக்கியத்துக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பை உணர்த்தின. இவ்வாறாகப் பெரும்பாலான எனது பிற்காலக் கவிதைகளில் சமுக அரசியல் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன” (26 jul 2017)
– எனக் கூறும் நுஃமான் அதற்குப் பின் தான் சீர், கட்டளையை மட்டுமே பேணி எதுகை மோனையின் முக்கியத்துவத்தைக் குறைக்கத் தொடங்கியதாகவும் பதிவு செய்கிறார்.
தான் இவ்வாறு மார்க்சியச் சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்டவர் எனக் கூறியபோதும் இன்னொரு பக்கம் அவர்,
“என்னை மார்க்சிய விமர்சகன் என்பதைவிட ஒரு நடுநிலையான விமர்சகன் என்கிற அடையாளத்தையே நான் பெரிதும் விரும்புகிறேன்” –
எனக் கூறுவதும் கவனத்திற்குரியது (Ref: மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் ஒரு வரலாற்றுக் கணக்கெடுப்பு – எம்.ஏ.நுஃமான், வல்லினம் நேர்காணல், 25, ஜூலை, 2011). அதே நேர்காணலில் அவர், ”மார்க்சிய விமர்சனத்தில் மேலோங்கி இருந்த வறட்டுப் போக்கை நான் தீவிரமாக விமர்சித்திருக்கிறேன். ’மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்’ – என்ற எனது நூல் அதன் விளைவுதான்” – எனக் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆக மார்க்சியத்தைத் தான் ஏற்றுக்கொண்டபோதும் மார்க்சிய விமர்சனமாக அக்காலத்தில் முன்வைக்கப்பட்ட போக்குகளை எல்லாம் தான் அப்படியே ஏற்கவில்லை என்பதை இங்கே நுஃமான் இவ்வாறு பதிவு செய்வது கவனத்துக்குரியது.
நுஃமான் ஒரு நல்ல ஆசிரியராகவும், தமிழ் இலக்கணம் முதலான துறைகளில் வல்லுநராகவும், தம் காலத்தில் ஒரு முக்கிய கவிஞராகவும் இருந்த அதே நேரத்தில் அவர் ஒரு களப் போராளியாக எல்லாம் தன்னைக் காட்டிக் கொண்டது இல்லை.
கோட்பாட்டறிஞர்களாக இருக்கும் எல்லோரும் களப் போராளிகளாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் இயலாது. எனினும் தன்னை ஒரு மார்க்சியராக, கம்யூனிஸ்டாக அறிவித்துக் கொள்ளும் அறிஞர்கள் களத்தில் இறங்கிச் சக தோழர்களோடு போராட இயலாதபோதும் சமகாலத்தில் கண் முன் நிகழும் வர்க்க ரீதியான அநீதிகளையும், சுரண்டல்களையும், ஒடுக்கு முறைகளையும் வாய்திறந்து கண்டிக்காமல் மௌனமாக இருந்துவிடவும் இயலாது.
நுஃமானைப் பொறுத்தமட்டில் அவர் முக்கிய சிந்தனையாளராகவும், கோட்பாட்டாளராகவும் வெளிப்பட்ட காலகட்டத்திலும் இலங்கையில் கொடும் தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டிருந்த பஞ்சமர்கள் மிகப்பெரிய அளவில் பொது உடைமைக் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். அந்தப் பின்னணியில்தான் இப்படியான தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக அங்கே எம்.சி.சுப்பிரமணியம் தலைமையில் ‘சிறுபான்மைத் தமிழர் மகா சபை’ உருவாக்கப்பட்டது. எழுத்தாளரும், களப் போராளியுமான டானியல், ஜீவா (தமிழகத் தோழர்), செ.கணேசலிங்கன், அகஸ்தியர், இளங்கீரன், எச்.எம்.சி.முகைதீன் முதலான தோழர்கள் எனப் பலரும் பஞ்சமர்களின் போராட்டங்களை ஏதோ ஒருவகையில் வெளிப்படையாக ஆதரித்து நின்றனர். குறிப்பாக பொன்னம்பலம் கந்தையா, அ.வைத்தியலிங்கம், கார்த்திகேசன், நா.சண்முகதாசன் முதலானோரும் இவ்வகையில் தீண்டாமைக்கு எதிராக முன்கை எடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் பலரும் வெளிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சியினர் என்பதும் கவனத்துக்குரியது.
இக்காலகட்டம் குறித்த பதிவுகளை நந்தினி சேவியர் முதலானோரின் எழுத்துக்களில் காணலாம்.
எனினும் ஈழ இடதுசாரி எழுத்தாளர்களாக அறியப்பட்ட கைலாசபதி, சிவத்தம்பி, நுஹ்மான் முதலானவர்கள் அப்படி வெளிப்படையாகத் தீண்டாமைக்கு எதிராக களத்தில் நின்றதில்லை. போராட்டக் களத்தில் நிற்க இயலாது போனது மட்டுமின்றித் தங்கள் எழுத்துக்களின் ஊடாக இவர்கள் தீண்டாமையை விமர்சிக்கவும், போராட்டங்களை ஆதரிக்கவும் இல்லை. போராடிய பஞ்சமர் மக்களுடன் ஏதோ ஒரு வகையில் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமகாலத்திலும், சற்றே அதற்கு முன்னதாகவும் இலங்கையில் இருந்த தமிழறிஞர்களான பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி ஆகியோர் போராடிய பஞ்சமர்களுக்கு வெளிப்படையாக ஆதரவளிக்காவிட்டாலும் ஏதோ ஒரு வகையில் தாங்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர் அல்லது ருஷ்யக் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள் என வெளிப்படையாக அடையாளப் படுத்திக் கொண்டார்கள். தங்களது எழுத்துக்களிலும், ஆய்வுகளிலும் அவ்வப்போது மார்க்சிய அணுகல் முறைகளைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த வகையில் எங்களுக்கெல்லாம் அவர்கள் அக்காலத்தில் முன்னோடிகளாகவும், ஆசான்களாகவும் இருந்தார்கள். அப்படியான போக்குகள் எதையும் கூட நுஃமானிடம் காண இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சமர்களின் இந்தப் போராட்டம் குறித்தெல்லாம் பின்னாளிலும் அவர் ஏதும் பேசியதில்லை. அது மட்டுமின்றி தான் “ஒரு நடு நிலை அடையாளத்தையே பெரிதும் விரும்புவதாக” – கொஞ்சமும் தயக்கமின்றிச் சொல்லி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அன்று பெரிய அளவில் கவனம் பெற்றிருந்த தாழ்த்தப்பட்ட பஞ்சமர்களின் போராட்டங்கள் குறித்து அவர் ஒன்றும் எங்கும் கூறாதது குறிப்பிடத்தக்கத்து.
இப்படி சகமக்களில் ஆக அடித்தளத்தில் உள்ள ஒருசாரர் பல்வேறு வகைகளில் இழிவு செய்யப்பட்டும், வன்முறைகளுக்கு ஆக்கப்பட்டும் இழிவ செய்யப்படும் போது ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர் இவற்றைக் கண்டு கொள்ளாமல் உப்படி மௌனம் காக்க இயலும் – என்கிற கேள்வியை நம்மால் தவிர்க்க இயலவில்லை. நுஃமான் தன்னை ஒரு மார்க்சியச் சிந்தனையாளர் என ஒரு பக்கம் கூறிக் கொண்டு இன்னொரு பக்கம் அந்தக் காலகட்டத்தில் எதார்த்தத்தில் இப்படி ஒரு நிலைப்பாடு எடுத்ததாலேயே நம்மை இந்தக் கேள்வி நெருடுகிறது.
ஐந்து
இந்தியா, இலங்கை இரண்டு நாடுகளிலும் பார்ப்பனியத்தின் தன்மையும் பங்கும் வேறுபடுவதை ஆய்வாளர்கள் கணக்கில் கொள்வது அவசியம். தீண்டாமையைப் பொறுத்தமட்டில் இந்தியாவில் பார்ப்பனியம் முக்கிய பங்கு வகிப்பதையும் இலங்கையில் வெள்ளாளம் இதில் முக்கிய பங்கு வகிப்பதையும் ஆய்வாளர்கள் கணக்கில் கொள்ள வேண்டும். இலங்கையின் சாதாரண மக்கள் பார்ப்பனர்களை ”புக்கை தின்னிப் பார்ப்பான்” என எளிதாக விளித்து அகல்வதைப் போல இந்தியாவில் பார்ப்பனர்களை எளிதாகப் பேசிவிட இயலாது. பார்ப்பனியத்தின் வில்லங்கத்தையும், வலுவையும் எளிதாக மதிப்பிட்டு அகன்றுவிட முடியாது. இன்றளவும் இந்தியாவில் பார்ப்பனியம் வலுவாகவே உள்ளது. சொல்லப்போனால் சமீபகாலங்களில் இங்கு பார்ப்பனியம் மேலும் வலுவாகி உள்ளது.
ஒரு வாழ்நாளை தீண்டாமையையும் பார்ப்பனியத்தையும் கோட்பாட்டு ரீதியாக எதிர்த்து நின்ற சுயமரியாதைப் போராளியான தந்தை பெரியார் ஈ.வெ.ரா போன்றோரை நுஃமான் போன்றவர்கள் மதிப்பிடும்போது இவற்றை அவர்கள் மிகவும் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் நுஃமான் அப்படியாக இந்தியப் பார்ப்பனியத்தையும் அதற்கு எதிரான பெரியார் போன்றோரின் சுய மரியாதை அணுகுமுறையையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அது மட்டுமல்ல பெரியார் போன்றோரின் சுய மரியாதை அணுகல் முறையை அவர் நசுக்கி நசுக்கி நுணுக்கமாக அவதூறு செய்வதையும் காண இயலும். இது குறித்துச் சிலவற்றைக் காணலாம். இதில் மிகவும் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் இப்படிப் பெரியாரை உரிய நியாயமற்று விமர்சிப்பது என்பதில் நுஃமான் தமிழகத்தில் யாருடன் கை கோர்த்திருந்தார் என்பதுதான்.
நுஃமானுக்கு ’காலச்சுவடு’ பத்திரிக்கை மீதும், அதன் நிறுவன ஆசிரியர் சுந்தர ராமசாமியின் மீதும் உள்ள நெருக்கத்தையும் அவரது எழுத்துக்களை வாசித்த யாரும் அறிவர். ”என் எழுத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து, காணும்போதும் கடிதங்களிலும் தொடர்ந்து எழுதும்படி என்னைத் தூண்டிக்கொண்டே இருந்தவர்” என விளித்துத் தன் நூல் ஒன்றைச் சுந்தர ராமசாமிக்குக் காணிக்கை ஆக்கியுள்ளவர் நுஃமான் (”மொழியும் இலக்கியமும்: பெரியாரின் சிந்தனைகள்”, எம்.ஏ.நுஃமான், மொழியும் இலக்கியமும், காலச்சுவடு பதிப்பகம், 2021).
இது குறித்து நுஃமான் நசுக்கி நசுக்கி வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் சிலவற்றில் வெளிப்படும் ஆபத்தான சில கருத்துக்கள் குறித்தும் இங்கே சுருக்கமாகவேனும் சிலவற்றைப் பதிய வேண்டி உள்ளது. ஏதோ பெரியாரை நடுநிலையாக மதிப்பீடு செய்வதைப்போலக் காட்டிக் கொண்டு பெரியாருக்கு எதிராக மிகவும் வன்மமாக அவர் எழுதியுள்ள கட்டுரை இது. பெரியாரை ஆகக் கடுமையாக மறுப்பவர்கள்தான் சுந்தர ராமசாமியும் அவரைக் கொண்டாடுபவர்களும், பிற தமிழகத்துப் பார்ப்பனர்களும். அவர்களின் கூடாரத்தில் உட்கார்ந்து கொண்டு, “மக்களுக்கு மதத்தின் மீது இருந்த பிடியை அவரால் (பெரியாரால்) தளர்த்த முடியவில்லை” எனச் சொல்லி மகிழ்கிறார் நுஃமான். ஒரு வாழ்நாள் முழுவதையும் போராடியும் பெரியாரால் அவ்வளவு எளிதாக இப்படியான மூட நம்பிக்கைகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கைகளையும் பிடிப்பையும் ஒழித்துவிட முடியவில்லை என்பதெல்லாம் ஒரு வகையில் உண்மைதான். ஆனால் அதை ஓர் ஆய்வுக்குரிய பிரச்சினையாக எடுத்து ஒரு ஆய்வாளராக நின்று, உரிய தரவுகளையும் சேகரித்து அலசாமல் ஏதோ பெரியார் அபத்தமாக உளறித் தன் கையில் மாட்டிக் கொண்டதுபோல நுஃமான் அவர்கள் சுந்தர ராமசாமி குழுமத்துடன் நின்று பெரியாரை மிகவும் நுணுக்கமாக அவதூறு செய்வது குறிப்பிடத்தக்கது. இது அவர் மீது உள்ள மரியாதையையும் நம்பிக்கைகளையும் பெரிய அளவில் குலைக்கிறது.
இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்..
பெரியாரால் அவ்வளவு எளிதாக மக்கள் மத்தியிலிருந்து கடவுள் நம்பிக்கையை நீக்க இயலவில்லை என்பது ஒருவகையில் உண்மைதான். மறுப்பதற்கில்லை. அதை ஆழமாக ஆராயாமல் கண்சிமிட்டி மகிழ்கிறார் நுஃமான். கடவுள் எனும் கருத்தாக்கம் ஒரு அபத்தம் எனும் கருத்தைக் காரல் மார்க்ஸ் உள்ளிட்ட யார்தான் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் நிலை நிறுத்தியுள்ளனர்? ஒருவரும் இல்லை. ஏனெனில் அது அத்தனை எளிதல்ல. “மதம் மக்களின் அபின்” என கார்ல் மார்க்ஸ் சொன்ன சொற்கள் மிகவும் ஆழமானவை. தாங்க இயலாத வலியால் துடிக்கும் ஒரு மனிதனுக்கு ஒரு மருத்துவர் அபினை ஒரு மருந்தாக அளிக்கிறார் என்றால் அபின் அந்த வலிக் கொடுமையை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வந்துவிடும் என்பதல்ல. ஆனாலும் அந்த வலிக் கொடுமையிலிருந்து தற்காலிகமாகவேனும் முதலில் பாதிக்கப்பட்டு உள்ளவனை விடுவித்தாக வேண்டும் என்கிற நிலையில்தான் அது மேற்கொள்ளப்படுகிறது. அவ்வாறு கொடுக்கப்படும் அபின் நோயைக் குணப்படுத்தாது. உடனடியாகக் குணப்படுத்த வேறு வழியும் இல்லை. ”மதம் மக்களின் அபின்” என கார்ல் மார்க்ஸ் சொல்வதன் ஆழமான கருத்து இதுதான். அந்த மருந்தைப் பரிந்துரை செய்த மருத்துவருக்கும் அது தெரியும். இந்த இடைவெளியில்தான் மதத்தின் வெற்றி அடங்கியுள்ளது. இதனைப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் மிகவும் விரிவாகத் தன் கட்டுரை ஒன்றில் விளக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது (விரிவுக்குப் பார்க்க எனது ‘கார்ல் மார்க்ஸ்’ குறித்தநூலில் இது. குறித்த பகுதி. இதில் பேராசிரியரின் இது தொடர்பான மேற்கோளை அங்கு அப்படியே பதிவு செய்துள்ளேன்.)
”மதம் மக்களின் அபின்” என்பதன் ஆழமான பொருள் இதுதான். தன்னைத்தானே மனிதன் இப்படித்தான் ஏமாற்றிக் கொள்கின்றான். இப்படியான மூட நம்பிக்கைகளில் பயனில்லை. அது பயனில்லை என்று அறிந்த பின்னும்தான் வலியால் துன்புறுகிறவன் அதை நாடுகிறான். மருத்துவரும் அதைப் பரிந்துரைக்கிறார். ஆனால் அதைத் தடுக்க முடிவதில்லை. இந்த நிலையைத்தான் மார்க்ஸ் ”மதம் மக்களின் அபின்” – என்பதாக விளக்குகிறார்.
இந்தக் கட்டுரையில் ஆங்காங்கு பெரியாரை ஈ.வெ.ராமசாமி ”நாயக்கர்”, “நாயக்கர்” என்று நுஃமான் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. தமிழகத்தில் பெரியாரைத் ”தந்தை பெரியார்” எனச் சொல்வதே மக்கள் மத்தியில் வழக்கம். அவரை ‘நாயக்கர்’ ஆக நிறுத்தி சு.ரா குழுமத்துடன் சேர்ந்து மகிழ்கிறார் நுஃமான். நடுநிலையாகப் பெரியாரை அணுகும் யாரும் இப்படி அவரை ’நாயக்கர்’ என்றெல்லாம் அடையாளப்படுத்துவதில்லை எங்கள் எழுத்துக்களில் மட்டுமின்றி பெரியாரை வெறித்தனமாக எதிர்ப்பவர்கள் தவிர பொதுவில் யாரும் இன்று அவரை நாயக்கர் என்பதாகக் குறிப்பதில்லை. ஆகக் கீழிறங்கி அவதூறு பேசுபவர்களைத் தவிர மற்றவர்கள் பெரியார் என்றுதான் சொல்கிறோம். என்னைப் போன்றவர்கள் எளிய மக்களுடன் இணைந்து நின்று ‘தந்தை பெரியார்’ எனவும் சொல்வதுண்டு. பெரியார் என உச்சரிக்க உங்களுக்குப் பிடிக்காவிட்டால் ’ஈ.வெ.ராமசாமி’ என்றாவது சொல்லுங்கள். அதென்ன சார் ’நாயக்கர்…..?
அதாவது பெரியார் தமிழர் இல்லையாம். நுஃமான், சுந்தர ராமசாமி ஆகியோர் அதை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றனராம். அவர் தமிழ் நாட்டில் பிறந்து, வாழ்ந்து இறந்தவர்தான். அவரது உடல் புதைக்கப்பட்டதும் தமிழ் நாட்டில்தான்.
அதென்ன பெரியாரைத் ’தமிழர் இல்லை’ என்பது?
வேறொன்றும் இல்லை. அவர் சாதி தமிழ்ச் சாதி இல்லையாம்!
”சிலகாலம் பொதுவுடைமைக் கொள்கையில் ஈடுபாடு கொண்டு பொதுவுடமைப் பிரச்சாரம் செய்து வந்தார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதுடன் பொதுவுடைமையை விட்டு விலகினார்”” –
இது பெரியார் குறித்த நுஹ்மானின் இன்னொரு அறிமுகம்! அதாவது பெரியார் பயந்தாங்கொள்ளியாம். சட்டம் இயற்றப்பட்ட உடன் தன் கொள்கையைக் கைவிட்டவராம்.
‘பார்ப்பனியம்’ எனத் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் கருத்தாக்கத்தைத் தன் வாசகர்களுக்கு நுஃமான் இப்படி அறிமுகம் செய்கிறார்: தமிழகத்தில் காலம் காலமாக இருந்த பார்ப்பன ஆதிக்கம், அதற்கு எதிரான மிகப் பெரிய போராட்டங்கள். அப்படியான போராட்டங்களுக்குப் பெரியார் உள்ளிட்ட சுயமரியாதை இயக்கத்தினர் தலைமை தாங்கியது முதலியன என்பதெல்லாம் மிக முக்கியமான ஒரு வரலாறு.
ஆனால் இதை நுஃமான் எப்படிக் கொச்சைப் படுத்துகிறார் பாருங்கள்:
“பிராமணியம்’ அல்லது ‘பார்ப்பனியம்’ என்பது பிராமண உயர் குழாத்தினரின் சமூக மேலாதிக்கத்துக்கு எதிரான பிராமணர் அல்லாத உயர் குழாத்தினரின் ஒரு கருத்து நிலைக் கட்டமைப்பாகும்”.
அதாவது தமிழக மக்களிடம் பார்ப்பன எதிர்ப்பு என்பதெல்லாம் இல்லை என்பதும் பிராமணர் அல்லாத பிற ”உயர் குழாத்தினர்கள்” மட்டும்தான் அப்படியான ஒரு பார்ப்பன எதிர்ப்பைக் கட்டமைத்தனர் என்பதும் பொருள். இதனூடாக ஏதோ அடித்தள மக்கள் பார்ப்பன மேலாண்மை என்பதை வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொண்டனர். சூத்திர மேற்தட்டினர்தான் இதை எல்லாம் எதிர்க்கிறார்கள் என்கிற ரீதியில் நுஃமான் தமிழகத்தில் உருவான பார்ப்பனியத்திற்கு எதிரான அடித்தள மக்களின் எதிர்ப்பை குறைத்துக் காட்ட முயல்கிறார் .
ஒரு சில வரலாற்று உண்மைகள் இங்கே கவனத்துக்குரியவை. தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை இத்தனை எளிதாக யாரும் குறைத்துப் பேசிவிட இயலாது. பார்ப்பன ஆதிக்கம் இங்கு இருந்ததை பார்ப்பனர்களைத் தவிர எல்லோருமே உணர்ந்திருந்தனர். அரசுப் பணிகள் முதலானவற்றில் அவர்களே பெரிய அளவில் இடம் பெறுகின்றனர் என்கிற அடிப்படையில் அடுத்த நிலையில் உள்ள நடுத்தர சாதியினர் அதற்கெதிரான போராட்டங்களில் முன்னிலையில் இருந்தாலும் நுஹ்மான் சொல்ல வருவதுபோல அடித்தள மக்கள் ஏதோ பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டனர் என்பதெல்லாம் நூறு சதம் அபத்தம்.
”அவர் (பெரியார்) வடமொழியை எதிர்த்தாரே தவிரத் தனது எழுத்துக்களில் வடமொழிச் சொற்களையோ, கிரந்த எழுத்துக்களையோ அவர் தவிர்க்க முயன்றதில்லை” – என்றெல்லாம் நுஃமான் பெரியார் மீது வன்மத்தைக் கக்கிக்கொண்டே போகிறார். இது இன்னொரு அபத்தம். இதன் மூலம் நுஃமான் என்ன சொல்ல வருகிறார்? பெரியார் வடமொழி மற்றும் கிரந்த எழுத்துக்களுக்கு ஆதரவானவர் என்றா? பெரியார் வாழ்ந்த காலம், அவர் வாழ்ந்த காலத்தில் நமது மொழிப் பயன்பாடு என்பதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறார். ஏதோ எல்லோரும் தூய தமிழில் பேச்சிக் கொண்டிருந்தபோது பெரியார் மட்டும் வடமொழிச் சொற்களையும் கிரந்தத்தையும் பயன்படுத்தினார் என்பதாக ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கும் அற்பத்தனத்தையே இது வெளிப்படுத்துகிறது.
பெரியார் நீண்ட காலம், பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கி, தி.மு.க ஆட்சிவரை பல்வேறு கால கட்டங்களில் ஓயாது அடித்தள மக்களின் அரசியலைப் பேசியவர். நுஹ்மான் சொல்ல வருவது போல வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாகப் பேசியவர் அல்ல. ‘சுயமரியாதை’ எனும் கருத்தாக்கம்தான் அவரது அடிப்படையான அரசியல் கொள்கை. இது குறித்து நான் எனது ‘பெரியார்?’ எனும் முக்கிய நூலில் மிக விரிவாக எழுதி உள்ளேன்.
ஆறு
இறுதியாக நுஃமான் ’பின் நவீனத்துவம்’ குறித்து உமிழ்ந்துள்ள ஆகக் கடும் வெறுப்பு குறித்து ஒரு சுருக்கமான குறிப்பு. ’
பின் நவீன நிலை’ குறித்து நான் மிக விரிவாக எழுதியுள்ளேன் (அ.மார்க்ஸ், ’பின் நவீன நிலை : இலக்கியம், அரசியல், தேசியம்’, அடையாளம், 2 ஆம் பதிப்பு, பக்கம் 526, விலை: இந்திய ரூ: 430)
மார்க்சியம் என்பது வளரும் ஒரு தத்துவம்.
அப்படித்தான் கார்ல் மார்க்ஸ் அதைப் பார்த்தார். கார்ல் மார்க்சையே ‘இளம் மார்க்ஸ்’, ‘மூத்த மார்க்ஸ்’ எனப் பிரித்தணுகக் கூடிய அளவிற்கு அவர் காலத்திலேயே கால ஓட்டத்தில் மார்க்சியச் சிந்தனைகள் வளர்ந்திருந்தன. புதிய வளர்ச்சிகளைக் காணவே கூடாது எனச் சொல்லும் அளவிற்கு அது வேதமோ இல்லை மதமோ அல்ல.
மார்க்சியம் எனும் கருத்தாக்கத்தின் ஆசான் கார்ல் மார்க்சை இன்று எதிரிகளும் கூட அத்தனை எளிதாக மறுக்க முயல்வதுமில்லை, முடிவதுமில்லை என்பதைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தவர்கள் நாங்கள். மார்க்சியத்தை விட்டு விலகிப் போனவர்கள் என என்னையும், இதர நிறப்பிரிகை குழுவினரையும் ‘காலச்சுவடு’ இதழின் ஊடாகத் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்த நுஃமான் அவர்கள் தன்னைக் குறித்து,
“என்னை மார்க்சிய விமர்சகன் என்பதைவிட ஒரு நடுநிலையான விமர்சகன் என்ற அடையாளத்தையே நான் பெரிதும் விரும்புகிறேன்” எனவும், “”மார்க்சியத்தில் மேலோங்கி நின்ற வறட்டுவாதப் போக்கை நான் தீவிரமாக விமர்சித்திருக்கிறேன்” என்றெல்லாம் கூறிக் கொண்டிருந்தவர்தான் என்பதையும் நாம் நினைவிற் கொள்ள வேண்டும். (பார்க்க: ”மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்” எனும் நூல்”, காலச்சுவடு வெளியீடு). இதை வெளிப்படையாகக் கூறிக்கொண்டவர்தான் நுஹ்மான். (பார்க்க: மலேசியாவிலிருந்து வெளிவரும் நவீனின் இதழுக்கு அளித்த நேர்காணல், ஆண்டு; 2011). ஆனால் மார்க்சியத்தின் பெயரால் ஆக வறட்டுத்தனமாக நடந்துகொண்டவர்தான் நுஃமான். இதை நடைமுறையிலும், அவரது எழுத்துக்களிலும் நாம் காண்கிறோம்.
நான் அறிந்தவரை ’பின் நவீனத்துவம்’ எனும் தத்துவப் போக்கு நமது சமகாலத்தின் முக்கிய பேரறிஞர் என உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னணியில் ழாக் தெரிதாவால் முன்வைக்கப் பட்ட போது, அக் கோட்பாடு குறித்துத் தமிழ் பேசும் உலகில் அதைக் கடுமையாகக் கண்டித்து அவதூறு செய்தவர் நுஃமான்தான். இது குறித்து ஆழமாக எதையும் கூறாமலும், எந்தப் புரிதலும் இன்றியும் அவர் அதைப் ”பின் நவீனத்துவ மாயை” என்றெல்லாம் அவதூறு செய்து வெறுப்பைக் கொட்டினார். இது குறித்து ”நுஃமானுக்கு எந்தப் புரிதலும் இல்லை” என நீங்கள் குற்றஞ் சாட்டினாலோ அது எப்படி ஒரு “மாயை” என விளக்குங்கள் எனக் கேட்டாலோ அவர் எங்கும் தனது இந்தக் கருத்தை விளக்கவும் இல்லை. ஏனெனில் அவரால் அதை விளக்கவோ நிறுவவோ முடியாது என்பதே.
மார்க்சியத்தின் பெயரால் சோவியத் ருஷ்யா போன்ற நாடுகளில் நடந்த அபத்தங்கள்தான் மார்க்சியம் எதிர்கொண்ட சறுக்கலுக்குக் காரணமாக அமைந்ததே ஒழிய ஏதோ ’பின்நவீனம்’ என்றெல்லாம் பேசியதுதான் உலகளவில் சோஷலிச அணுகல் முறைக்கு ஏற்பட்ட சருக்கலுக்குக் காரணம் என அவர் புரிந்து கொண்டதுதான் அவரது மிகப் பெரிய பலவீனமாக இருந்தது. எங்களை எல்லாம் விட அவர்தான் பின்நவீனத்துவம் குறித்து ஆகப் பெரிதாகக் கருத்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மை.
ஒரு புதிய தத்துவம் முன்வைக்கப் படும்போது அது குறித்து ஓரளவேனும் ஆழமாகக் காரணங்களைச் சொல்லாமல் அதை முந்திய தத்துவத்திற்கு எதிரானதாகக் காண்பதும், அதை வெளிப்படையாகப் பேசித் திரிவதும் அபத்தம். புதிய சிந்தனைகள் குறித்த ஒரு வகையான ஒவ்வாமையின் விளைவே இது. இது ஒருவகையான சனாதன மனப்பான்மை. நுஃமான் போன்ற அறிஞர் பெருமக்கள் அவ்வாறு ’பின் நவீனத்துவ மாயை’ என்றெல்லாம் அது குறித்து அறியாமலேயே உமிழ்ந்த தெல்லாம் தமிழ்ச் சூழலில் பெரும் கொடுமை. ஒரு மூத்த பேராசிரியருக்குப் பொருத்தமற்ற ஒன்று. பின்-நவீனம் குறித்துப் பேசிய தெரிதா போன்ற சமீப காலத்தின் ஆக முக்கியமான சிந்தனையாளர்களின் கருத்துக்களை எல்லாம் அவர் நெருங்கவே இல்லை. தனக்கு அப்படி நெருங்காதது ஒரு மிகப் பெரிய இழப்பு என்பதை அவர் உணரவும் இல்லை. புதிய சிந்தனைகளின்பால் அவருக்கு ஓர் அச்சமும், தயக்கமும், மிரட்சியும் இருந்தது. கூடியவரை அவர் அவற்றிலிருந்து விலகியே நின்றார்.
ஆனால் இதில் ஆகப் பெரிய வேடிக்கை என்னவெனில் பின்நவீனத்துவம் பேசிய இந்த ழாக் தெரிதா தான் சோவியத் ருஷ்யா வீழ்ந்தபோது அது சோஷலிசம் மற்றும் கம்யூனிஸக் கருத்தாக்கத்தின் வீழ்ச்சியாக உலக முதலாளித்துவங்களால் கொண்டாடப் பட்ட நிலையில் அதற்கு எதிராக மாற்றுக் கருத்தை முன்வைத்து SPECTORS OF MARX எனும் ஒரு மிக முக்கிய நூலை எழுதியவர்! ”மார்க்சியப் பூதம் இந்த உலகை ஆட்டிப் படைக்கிறது” என்பது பொருள்.
மதிப்பிற்குரிய நண்பர் நுஃமான் அவர்கள் சென்ற நூற்றாண்டின் பேரறிஞர்களில் முக்கியமானவரான தெரிதாவின் இந்த நூலைத் தரவிறக்கம் செய்து பயில வேண்டும் என அன்புடன் வேண்டிக் கொள்கிறேன். ஒரு மூத்த அறிஞர் என்கிற வகையில் அவர் இதைச் செய்ய வேண்டும். தான் முன்வைத்த கருத்து எப்படிச் சரி என்பதை அதன் பின்னாவது அவர் விளக்க வேண்டும்.
இதை எல்லாம் ஆழமாக அலசாமல் பின்நவீனத்துவம் குறித்துப் பேசியதெல்லாம் ஏதோ மார்க்சியத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட சதி என்பதுபோல நுஃமான் போன்ற அறிஞர் பெருமக்கள் உமிழ்ந்தது எத்தனை பெரிய அபத்தம்!
பின்நவீனத்துவம் (post modernism) என்பது ருஷ்யச் சோஷலிசத்தின் வீழ்ச்சியின் பின்னணியில் உருவான ஒரு சிந்தனைப் போக்கு. ஒருவகையான நம்பிக்கை வீழ்ச்சி. இப்படி ஓர் ஐயுறவு (scepticism) உருவாகியுள்ள நிலையை ஏற்று அந்த அனுபவங்களின் ஊடாகச் சிலவற்றை மறு பரிசீலனைக்கு ஆளாக்குவதுதான் அது. ஆம். ஐயுறவு மனப்பான்மை என்பதும் கூடச் சில நேரங்களில் நாம் நம்மைத் திருத்திக் கொள்ள அவசியமாகிறது. சொல்லப் போனால் அறிவு வளர்ச்சிக்கு அது தேவையானதும் கூட. அப்படியான நிலையையும் ஏற்று எல்லாவற்றையும் மறு பரிசீலனைக்கு உள்ளாக்க வேண்டும். ஏனெனில் ’ஐயுறவு” என்பது வேறு. அறியாமை, புரியாமை ஆகியன வேறு. “எல்லாவற்றையும் சந்தேகி” என்பது கார்ல் மார்க்சியக் கூற்று.
நுஃமானுக்கு ஏற்பட்டது ஐயுறவு கூட இல்லை. அப்பட்டமான வெறுப்பு. பின்நவீனத்துவம் குறித்து இப்படி வெறுப்பும் வசவும் மட்டுமே உமிழப்பட்டனவே ஒழிய ஆழமான நியாயங்கள் அல்லது கருத்துச் செறிவுடன் கூடிய விளக்கங்கள் ஏதும் இப்படியானவர்களிடம் இல்லை.
Knowledge is merely subjective. There is no external truth என்பதுதான். முழுமையான உண்மை (absolute truth) என ஏதும் இல்லை. எது சரி, எது தவறு // எது நீதி, எது அநீதி’ என்பதெல்லாம் தன்மயமானவை.
மொத்தத்தில் காரண காரியம் (reason) குறித்த ஐயம் (suspicion of reason) என்பதற்கு முக்கியத்துவம் அளித்தல். இறுக்கமான மதப் பார்வை என்பதாக வெல்லாம் இதைப் புரிந்து கொள்ளலாம். “ஐயம்” என்பது வேறு. “வெறுப்பு” என்பது வேறு. ஐயம்தான் அறிவு வளர்ச்சியின் மூலம். மரத்தில் இருந்த ஆப்பிள் ஏன் கீழே விழுந்தது என்கிற கேள்வியின் பின்னே ஐயுறவு இருந்தது. அந்த ஐயுறவின் விளைவே ‘புவி ஈர்ப்பு’ எனும் கருத்தாக்கம் உணரப்பட்டது, அதை ஒட்டி மிகப் பெரிய அறிவு வளர்ச்சிக்குக் காரணமானது என்பதெல்லாம்..
இப்படியான ஒரு பார்வையை இம்மியும் ஏற்காத ஒரு சனாதனியாகவே நுஃமான் உள்ளிட்ட பின்நவீன வெறுப்பாளர்கள் வெளிப்பட்டனர். ஒரு மூத்த கல்வியாளரான நம் மதிப்பிற்குரிய நுஃமான் அவர்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் இதை உணர்ந்திருப்பார் என நம்புகிறேன்.
ஏழு
ஒன்றைச் சொல்லி இக்கட்டுரையை நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன்.
மேலைத் தத்துவங்கள் அனைத்தும் அரிஸ்டாட்டலியப் பாரம்பரியத்தில் வந்தவை. அதில் ஒரு முக்கிய இடையீடாக உருப்பெற்றது மார்க்சியம்தான்.
அதென்ன?
அரிஸ்டாட்டலியப் பாரம்பரியத்தில் – அமைப்பியல் தொடங்கிப் பின் நவீனம் வரை ஏற்படுத்திய மிகப் பெரிய அதிரடி மாற்றங்களைச் சற்றே ஒதுக்கிவைத்துப் பார்த்தால் இன்றுவரை மேலைத் தத்துவமாக அறியப்பட்டவை “முரண்பாடு” (contradiction) என்பதை ஏற்பதில்லை. சரியாகச் சொல்வதானால் முரண்பாடுகளின் இருப்பை மேலைத் தர்க்கம் (logic) அங்கீகரிப்பதில்லை. எந்த ஒரு கூற்றும் (statement) “உண்டு” அல்லது “இல்லை” என்கிற இருமை எதிர்வுக்குள் (binary opposition) அடங்க வேண்டும். எந்தக் கூற்றும் ஒன்று “சரி” யாக இருக்க வேண்டும் அல்லது “தவறு” ஆக இருக்க வேண்டும். ஏதொன்றும் இந்த இரண்டுக்கும் இடையில் – ஒரே நேரத்தில் சரியானதாகவும் தவறானதாகவும்- இருக்கும் வாய்ப்பை எதிரொலிப்பதாக அமையக் கூடாது. முரண்பாடுகளுக்கு இடமற்றதாகவே எந்த ஒரு கருத்தும் அமைய வேண்டும். முரண்பாடுகளுக்கு இடையில் மூன்றாவதாக ஏதொன்றும் இருக்க முடியாது என்பதை எல்லாம் Principle of Excluded Middle என மேலைத் தத்துவத்தில் குறிப்பார்கள்.
இப்படி மூன்றாவதற்கு இடமில்லை (tertium non datur) என இடைப்பட்ட இருப்பு புறந்தள்ளப்படும். அதோ அந்த மலையிலிருந்து புகை வருகிறது என்றால் மேலைத் தத்துவ அடிப்படைகளின்படி அங்கே நெருப்பு இருக்க வேண்டும் என்பதே சரியான கூற்று. வேறு சாத்தியம் ஏற்கப்படுவதில்லை.
மேலைத் தத்துவத்தின் இந்த அணுகல் முறையைப் பவுத்தம் போன்ற கீழைத் தத்துவங்கள் ஏற்பதில்லை.
இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கீழைத் தத்துவப் போக்குகளில் ஒன்றான நாகார்ஜுனரின் (கி.பி150 – 250) “மாத்யமிகா” அணுகல் முறையில் (மகாயானப் பௌத்த மரபு) முன்வைக்கப் படுகிற “நான்கு மூலைகள்” (சதுஷ்கோடி) எனும் கருத்தாக்கம் இங்கே கருதத்தக்கது. “உண்மை”, “பொய்” என்கிற இரண்டிற்கும் அப்பால் ஏதேனும் ஒன்றே “உண்மையாகவும் பொய்யாகவும்” இருக்க முடியும் என்பது மட்டுமல்ல “உண்மையாகவும் இல்லாமல், பொய்யாகவும் இல்லாமலும்” கூட ஒன்று இருக்க முடியும் என்றார் அவர். இந்த நான்கு சாத்தியங்களுக்கும் நாகார்ஜுனரின் தத்துவம் இடமளிக்கிறது. மேலைத் தத்துவங்களில் காண இயலாத தனித்துவங்கள் இவை.
எடுத்துக்காட்டுகள் என எதையும் முன்வைக்காமல் உங்கள் ஊகங்களுக்கே விட்டுவிடுகிறேன்.
எல்லாவற்றையும் நாம் ”ஆம் / இல்லை” என்கிற இரட்டை எதிர்விற்குள் (binary oppositions) அடக்கிவிட முடியாது. இரண்டிற்கும் இடைப்பட்ட சாத்தியங்கள் உண்டு என்பதை நவீன இயற்பியலும் (physics) ஏற்கிறது. ஐன்ஸ்டினின் சார்பியல் கோட்பாடு (Relativity Theory), டீ ப்ராக்லியின் பொருட்களின் இரட்டைப் பண்பு குறித்த கோட்பாடு (Dual Nature of Matter), ஹெய்சன்பர்கின் உறுதியின்மைக் கோட்பாடு (Uncertainty Principle) முதலியன இத்தகைய ஆம் / இல்லை எனும் இரட்டை எதிர்வுகளைச் சென்ற நூற்றாண்டில் நொறுக்கித் தூளாக்கியதை நான் எனது பின்நவீனத்துவம் குறித்த கட்டுரைகளில் விரிவாக விளக்கியுள்ளேன்.
மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வருவோம். இந்த வகையில் பௌத்தம் மேலைத் தத்துவங்களைப் போல அல்லாமல் முரண்பாடுகளைத் தீண்டத் தகாதவையாகப் புறம் தள்ளுவதில்லை.
முரண்பாடுகளை அது ஏற்கிறது.
இங்கேதான் மார்க்சியம் முரண்பாடுகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நம் நெஞ்சில் உறைக்கிறது. எல்லாவற்றுக்குள்ளும் முரண்பாடுகள் இருக்கும். முரண்பாடுகளுக்குள் மோதல்களும் இருக்கும். மோதல்களின் ஊடாகவே சமூக இயக்கம் சாத்தியமாகும் என்பதுதானே மார்க்சிய இயங்கியலின் அடிப்படை.
மேலைச் சிந்தனையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ‘பின் அமைப்பியல்’ மற்றும் ‘பின் நவீனத்துவ’ கருத்துக்களை விளக்க முயலுவோர் க்ளாட் லெவி ஸ்ட்ராசிலிருந்துதான் தொடங்குவர். அவர் , “மார்க்சியமும் புத்திசமும் ஒரே காரியத்தைத்தான் செய்கின்றன. ஆனால் வெவ்வேறு மட்டங்களில் (Marxism and Buddhism are doing the same thing, but at different levels)” எனக் கூறியது (1955) குறிப்பிடத்தக்கது.
பௌத்த தரப்பிலிருந்தும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. திபெத்தின் 14வது தலாய்லாமா வணக்கத்துக்குரிய டென்சின் கியாஸ்டோ,
“நவீன பொருளாதாரக் கோட்பாடுகள் எல்லாவற்றிலும் மார்க்சியம் மட்டுமே அற அடிப்படையில் அமைந்த ஒன்று. முதலாளியத்தைப் பொறுத்தமட்டில் லாபம் மற்றும் லாபத்தை ஈட்டும் வழிகள் மட்டுமே முக்கியம்… சோவியத் யூனியனின் வீழ்ச்சி என்பது என்னைப் பொறுத்தமட்டில் அது மார்க்சியத்திற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல.அது எதேச்சாதிகாரத்தின் (totalitarianism) தோல்வி மட்டுமே. இந்தக் காரணத்தால்தான் நான் இன்னும் ’அரை மார்க்சிஸ்ட் – அரை புத்திஸ்ட்’ எனச் சொல்லிக் கொள்கிறேன்” எனச் சோவியத் வீழ்ச்சியை மார்க்சியத்தின் தோல்வியாக முன்வைத்துப் பேசப்பட்ட சொல்லாடல்களின் போது (1993) கூறியது குறிப்பிட்டத்தக்கத்து.
வண. டென்சின் கியாஸ்டோ அவர்கள் அத்தோடு நிறுத்தவில்லை. தொடர்ந்து அவர், “பௌத்தம் எதை மனிதர்களுக்கான பேரின்பத்தின் உச்சம் எனச் சொல்கிறதோ அந்தச் சூன்ய நிலையில் (state of nothingness) மனதை வைத்துக்கொண்டு மேலும் கீழுமாக நடந்து கொண்டுள்ள ஒரு ‘வாக்கிங் ஸ்டிக்’ போல நான் ஆகிவிட்டேன்” எனப் பேராசான் கார்ல் மார்க்ஸ் கூறியுள்ளதையும் மேற்கோள் காட்டினார்.
மார்க்சியம் தொழிலாளி வர்க்கம் X முதலாளி வர்க்கம் என்கிற முரண்பாடுகளை முன் வைப்பதோடு நிறுத்திவிடுவது இல்லை. இரண்டுக்கும் இடையிலான முரண்பாடுகளின் இருப்பை அது நடைமுறையில் ஏற்றுக் கொள்கிறது. சொல்லப்போனால் அதற்கு அது அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதோடு நிறுத்திவிடாமல் அந்த முரண்பாடுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அது அதிகம் பேசுகிறது.
நல்லது X கெட்டது, சரி X தவறு, எதிரி X நண்பன், ஆண் X பெண், இந்து X முஸ்லிம் முதலான இரட்டை எதிர்வுகள் (binary oppositions) மூலமாகவே உலகைப் பார்ப்பது வன்முறை மட்டுமல்ல. அது உலகைப் புரிந்து கொள்வதற்கான வழிமுறை அல்ல என்பது ஆக முக்கியம்.
சில குறிப்புகள்
“””””””‘””””””””””””
1. புத்தருக்கும் நாகார்ஜுனருக்கும் இடையில் சுமார் 750 ஆண்டு கால இடைவெளி உள்ளது. புத்தருக்கும் தின்னாகர், தருமகீர்த்தி ஆகியோருக்கும் இடையில் ஓராயிரம் ஆண்டு காலம் ஓடி விடுகிறது. இடையில் பௌத்தத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன. கடவுளின் இருப்பை மறுத்தவர் புத்தர். பின்னவர்கள் புத்தரே கடவுளாக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். இந்த வேறுபாடுகள் இருந்தபோதும் பின்னாளில் வளர்ந்தெழுந்த பௌத்த தர்க்கம் புத்தரின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுவிடவில்லை. வைதீகத் தத்துவங்களிலிருந்து அது முரண்பட்டே வந்தது. எல்லாம் இயக்கத்தில் உள்ளது என்கிற பௌத்த அடிப்படையை அது துறக்கவில்லை. இங்கு பேசப்படும் இருமை எதிர்வு என்பதும் கூடப் புத்தர் உரைத்த ”ஓடிக் கொண்டிருக்கும் நீரில் இந்தக் கணத்தில் இருக்கும் நீர்த்துளி அடுத்த கணத்தில் இருப்பதில்லை” எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவானதுதான்.
2. மார்க்ஸ் மேலைத் தத்துவ மரபுகளில் ஒன்றான ஹெகலிய மரபில் வந்தவர்தான் என்ற போதிலும் அவர் “ஹெகலைத் தலைகீழாகக் கவிழ்த்தவர்”. அந்த வகையில் அவரது சிந்தனைகள் அவருக்குப் பின் வந்த இன்றைய நவீனச் சிந்தனைகளுக்கு மிக நெருக்கமானவை.
3. மேலைத்தத்துவங்கள் அனைத்தும் அரிஸ்டாட்டலியப் பாரம்பரியத்தில் வந்தவை. அதில் ஒரு முக்கிய இடையீடாக உருப்பெற்றது மார்க்சியம்தான். இதைச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம்.
4. அரிஸ்டாட்டலியப் பாரம்பரியத்தில் – அமைப்பியல் தொடங்கிப் பின் நவீனம் வரை ஏற்படுத்திய மிகப் பெரிய அதிரடி மாற்றங்களைச் சற்றே ஒதுக்கிவைத்துப் பார்த்தால் – இன்றுவரை மேலைத் தத்துவமாக அறியப்பட்டவை “முரண்பாடு” (contradiction) என்பதை ஏற்பதில்லை. சரியாகச் சொல்வதானால் முரண்பாடுகளின் இருப்பை மேலைத் தர்க்கம் (logic) அங்கீகரிப்பதில்லை. எந்த ஒரு கூற்றும் (statement) “உண்டு” அல்லது “இல்லை” என்கிற இருமை எதிர்வுக்குள் (binary opposition) அடங்க வேண்டும். எந்தக் கூற்றும் ஒன்று “சரி” யாக இருக்க வேண்டும் அல்லது “தவறு” ஆக இருக்க வேண்டும். ஏதொன்றும் இந்த இரண்டுக்கும் இடையில் – ஒரே நேரத்தில் சரியானதாகவும் தவறானதாகவும்- இருக்கும் வாய்ப்பை எதிரொலிப்பதாக அமையக் கூடாது. முரண்பாடுகளுக்கு இடமற்றதாகவே எந்த ஒரு கூற்றும் அமைய வேண்டும். முரண்பாடுகளுக்கு இடையில் மூன்றாவதாக ஏதொன்றும் இருக்க முடியாது என்பதை Principle of Excluded Middle என மேலைத் தத்துவத்தில் குறிப்பார்கள். மூன்றாவதற்கு இடமில்லை (tertium non datur) என இடைப்பட்ட இருப்பு புறந்தள்ளப்படும். அதோ அந்த மலையிலிருந்து புகை வருகிறது என்றால் மேலைத் தத்துவ அடிப்படைகளின்படி அங்கே நெருப்பு இருக்க வேண்டும் என்பதே சரியான கூற்று. வேறு சாத்தியம் ஏற்கப்படுவதில்லை. பௌத்தம் இதை ஏற்பதில்லை. இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
பௌத்த தத்துவப் போக்குகளில் ஒன்றான நாகார்ஜுனன் (கி.பி150 – 250) “மாத்யமிகா” அணுகல் முறையில் (மகாயானப் பௌத்த மரபு) முன்வைக்கப்படும் “நான்கு மூலைகள்” (சதுஷ்கோடி) எனும் கருத்தாக்கம் இங்கே கருதத்தக்கது. “உண்மை”, “பொய்” என்கிற இரண்டிற்கும் அப்பால் ஏதேனும் ஒன்றே “உண்மையாகவும் பொய்யாகவும்” இருக்க முடியும் என்பது மட்டுமல்ல “உண்மையாகவும் இல்லாமல், பொய்யாகவும் இல்லாமலும்” கூட ஒன்று இருக்க முடியும் என்றார் அவர். இந்த நான்கு சாத்தியங்களுக்கும் நாகார்ஜுனரின் தத்துவம் இடமளிக்கிறது. மேலைத் தத்துவங்களில் காண இயலாத தனித்துவங்கள் இவை.
ஆம் / இல்லை என்கிற இரட்டை எதிர்விற்குள் (binary oppositions) எல்லாவற்றையும் அடக்கிவிட முடியாது. இரண்டிற்கும் இடைப்பட்ட சாத்தியங்கள் உண்டு என்பதை நவீன இயற்பியலும் (physics) ஏற்கிறது, ஐன்ஸ்டீனில் சார்பியல் கோட்பாடு (Relativity Theory), டீ ப்ராக்லியின் பொருட்களின் இரட்டைப் பண்பு குறித்த கோட்பாடு (Dual Nature of Matter), ஹெய்சன்பர்கின் உறுதியின்மைக் கோட்பாடு (Uncertainty Principle) முதலியன இத்தகைய ஆம் / இல்லை எனும் இரட்டை எதிர்வுகளைச் சென்ற நூற்றாண்டில் நொறுக்கித் துவம்சமாக்கியதை நான் எனது பின்நவீனத்துவம் குறித்த கட்டுரைகளில் விரிவாக விளக்கியுள்ளேன்,
மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வருவோம். இந்த வகையில் பௌத்தம் மேலைத் தத்துவங்களைப் போல அல்லாமல் முரண்பாடுகளைத் தீண்டத் தகாதவையாகப் புறம் தள்ளுவதில்லை. முரண்பாடுகளை அது ஏற்கிறது.
இங்கேதான் மார்க்சியம் முரண்பாடுகளுக்குக் கொடுத்த முக்கியத்துவம் நம் நெஞ்சில் உறைக்கிறது. எல்லாவற்றுக்குள்ளும் முரண்பாடுகள் இருக்கும். முரண்பாடுகளுக்குள் மோதல் இருக்கும். மோதல்களின் ஊடாகவே சமூக இயக்கம் சாத்தியமாகும் என்பதுதானே மார்க்சிய இயங்கியலின் அடிப்படை.
மேலைச் சிந்தனையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ‘பின் அமைப்பியல்’ மற்றும் ‘பின் நவீனத்துவ’ கருத்துக்களை விளக்க முயலுவோர் க்ளாட் லெவி ஸ்ட்ராசிலிருந்துதான் தொடங்குவர். அவர் , “மார்க்சியமும் புத்திசமும் ஒரே காரியத்தைத்தான் செய்கின்றன. ஆனால் வெவ்வேறு மட்டங்களில் (Marxism and Buddhism are doing the same thing, but at different levels) எனக் கூறியது (1955) குறிப்பிடத்தக்கது.
பௌத்த தரப்பிலிருந்தும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. திபெத்தின் 14வது தலாய்லாமா வணக்கத்துக்குரிய டென்சின் கியாஸ்டோ,
“நவீன பொருளாதாரக் கோட்பாடுகள் எல்லாவற்றிலும் மார்க்சியம் மட்டுமே அற அடிப்படையில் அமைந்த ஒன்று. முதலாளியத்தைப் பொறுத்தமட்டில் லாபம் மற்றும் லாபத்தை ஈட்டும் வழிகள் மட்டுமே முக்கியம்… சோவியத் யூனியனின் வீழ்ச்சி என்பது என்னைப் பொறுத்தமட்டில் அது மார்க்சியத்திற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல.அது எதேச்சாதிகாரத்தின் (totalitarianism) தோல்வி மட்டுமே. இந்தக் காரணத்தால்தான் நான் இன்னும் அரை மார்க்சிஸ்ட் – அரை புத்திஸ்ட் எனச் சொல்லிக் கொள்கிறேன்” எனச் சோவியத் வீழ்ச்சியை மார்க்சியத்தின் தோல்வியாக முன்வைத்துப் பேசப்பட்ட சொல்லாடல்களின் போது (1993) கூறியது குறிப்பிட்டத் தக்கத்து.
வண. டென்சின் கியாஸ்டோ அவர்கள் அத்தோடு நிறுத்தவில்லை. தொடர்ந்து அவர், “பௌத்தம் எதை மனிதர்களுக்கான பேரின்பத்தின் உச்சம் எனச் சொல்கிறதோ அந்தச் சூன்ய நிலையில் (state of nothingness) மனதை வைத்துக்கொண்டு மேலும் கீழுமாக நடந்து கொண்டுள்ள ஒரு ‘வாக்கிங் ஸ்டிக்’ போல நான் ஆகிவிட்டேன்” என மார்க்ஸ் கூறியுள்ளதையும் மேற்கோள் காட்டினார்.
மார்க்சியம் தொழிலாளி வர்க்கம் X முதலாளி வர்க்கம் என்கிற முரண்பாடுகளை முன் வைப்பதோடு நிறுத்திவிடுவது இல்லை. இரண்டுக்கும் இடையிலான முரண்பாடுகளின் இருப்பை அது ஏற்றுக் கொள்கிறது. சொல்லப்போனால் அதற்கு அது அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதோடு நிறுத்திவிடாமல் அந்த முரண்பாடுகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அது அதிகம் பேசுகிறது.
நல்லது X கெட்டது, சரி X தவறு, எதிரி X நண்பன், ஆண் X பெண், இந்து X முஸ்லிம் முதலான இரட்டை எதிர்வுகள் (binary oppositions) மூலமாகவே உலகைப் பார்ப்பது வன்முறை மட்டுமல்ல. அது உலகைப் புரிந்து கொள்வதற்கான வழிமுறை அல்ல என்பது ஆக முக்கியம்.
5. புத்தருக்கும் நாகார்ஜுனருக்கும் இடையில் சுமார் 750 ஆண்டு கால இடைவெளி உள்ளது. புத்தருக்கும் தின்னாகர், தருமமூர்த்தி ஆகியோருக்கும் இடையில் ஓராயிரம் ஆண்டு காலம் ஓடி விடுகிறது. இடையில் பௌத்தத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து விடுகின்றன. கடவுளின் இருப்பை மறுத்தவர் புத்தர். பின்னவர்கள் புத்தரே கடவுளாக்கப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர்கள். இந்த வேறுபாடுகள் இருந்தபோதும் பின்னாளில் வளர்ந்தெழுந்த பௌத்த தர்க்கம் புத்தரின் அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுவிடவில்லை. வைதீகத் தத்துவங்களிலிருந்து அது முரண்பட்டே வந்தது. எல்லாம் இயக்கத்தில் உள்ளது என்கிற பௌத்த அடிப்படையை அது துறக்கவில்லை. இங்கு பேசப்படும் இருமை எதிர்வு என்பதும் கூடப் புத்தர் உரைத்த ‘ஓடிக் கொண்டிருக்கும் நீரில் இந்தக் கணத்தில் இருக்கும் நீர்த்துளி அடுத்த கணத்தில் இருப்பதில்லை’ எனும் கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவானதுதான்.
6. மார்க்ஸ் மேலைத் தத்துவ மரபுகளில் ஒன்றான ஹெகலிய மரபில் வந்தவர்தான் என்ற போதிலும் அவர் “ஹெகலைத் தலைகீழாகக் கவிழ்த்தவர்”. அந்த வகையில் அவரது சிந்தனைகள் அவருக்குப் பின் வந்த இன்றைய நவீனச் சிந்தனைகளுக்கு மிக நெருக்கமானவை.
(2023 மே மாதத்தில் இலங்கை ஏறாவூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின்போது பேரா.நுஃமான் அவர்களின் படைப்புகள் குறித்த மதிப்பீட்டு உரையில் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் பேசியது)