Site icon சக்கரம்

ஆப்பிரிக்காவிலும் தகர்கிறது டொலரின் ஆதிக்கம்!

மேற்கு ஆப்பிரிக்காவில் நடப்பது என்ன?

“ஆப்பிரிக்க மக்களுக்கு இப்போது உடனடித் தேவை போதிய உணவு தானியங்கள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்; இதை மனிதநேய அடிப்படையிலும் நட்பு அடிப்படையிலும் உறுதிப்படுத்துவதும் மேம்படுத்துவதுமே எங்களின் நோக்கம் என்று ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஷ்ய பல்கலைக்கழகங்களில் ஆப்பிரிக்க மாணவர்களை தாராளமாக அனுமதிப்பதற்கும் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.”

2023 ஜூலை 28. அந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார் ஜனாதிபதி புட்டின். கருங்கடல் வழியாக நடக்கும் உணவு தானிய ஏற்றுமதியில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கணிசமான உணவு தானியங்களை உக்ரைன் அனுப்ப வேண்டும் என்பது ஏற்கெனவே அமுலில் இருந்த ஓர் ஒப்பந்தம். ரஷ்யா அனுமதித்தால் தான் கருங்கடல் வழியாக கப்பல்கள் செல்ல முடியும். ஆப்பிரிக்காவுக்கு உணவுதானியம் என்பதால் தான் ரஷ்யா ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி, ஆப்பிரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய 3.28 கோடி தொன்கள் உணவு தானியங்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக திசை மாற்றி, மடைமாற்றி, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. வர்த்தகத்திற்கான  உணவு தானிய ஏற்றுமதிதான் இது என்ற போதிலும் முழுமையாக கிடைக்கப் பெற வேண்டிய ஆப்பிரிக்க மக்கள் வஞ்சிக்கப்பட்டு, ஐரோப்பிய மக்களுக்கு உக்ரைன் அனுப்பியது அநீதியானது என பகிரங்கமாக போட்டுடைத்தார் புட்டின்.

பசியின் துயரத்தில் இருக்கும் எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெறும் 3 சதவீத உணவு தானியங்கள்தான் அனுப்பப்பட்டன என்பதும் புடின் உரையில் வெளிப்பட்ட தகவல். செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற ரஷ்யா – ஆப்பிரிக்கா இரண்டாவது உச்சிமாநாட்டை நிறைவு செய்து உரையாற்றும் போதுதான் இதுபோன்ற பல விபரங்களை வெளியிட்டார் புட்டின். இந்த மாநாடு முதல் முறையாக 2019 இல் ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இம்மாநாட்டை தொடர்ந்து நடத்துவோம் எனக் குறிப்பிட்ட புட்டின் ஆப்பிரிக்க நாடுகளுடனான ரஷ்யாவின் உறவையும் தோழமையையும் மேலும் வலுப்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார். உடனடியாக ஓரிரு மாதங்களில் புர்கினோ பாசோ, ஜிம்பாப்வே, மாலி, சோமாலியா, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, எரித்ரியா ஆகிய நாடுகளுக்கு ரஷ்யா சுமார் 50ஆயிரம் தொன் உணவு தானியங்களை இலவசமாக அனுப்பி வைக்கும் எனவும் உறுதி அளித்தார். ஆப்பிரிக்க நாடுகளில் விவசாய உற்பத்தியை பன்மடங்கு பெருக்குவதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளை உடனடியாக அளிப்பதற்கு திட்டமிடுவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

வழக்கமான மாநாடு அல்ல

ரஷ்யா – ஆப்பிரிக்கா இரண்டாவது உச்சிமாநாடு, வழக்கமான உலக புவி அரசியல் சூழலில் நடந்த மாநாடு அல்ல; மாறாக, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஆப்பிரிக்க நாடுகளில் வலுவான எதிர்ப்புணர்வு எழுந்துள்ள நிலையில்; இதுகாறும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் தலையீடுகளால் நிர்ப்பந்திக்கப்பட்டு வந்த ஆப்பிரிக்க நாடுகள் ரஷ்யாவை நோக்கி மீண்டும் திரும்பியுள்ள புதிய அரசியல் சூழலில் நடந்துள்ள மாநாடு என்பது கவனிக்கத்தக்கது. பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, காலநிலை மாற்றம், விவசாயம், போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் அரசியல் உள்பட பல்வேறு துறைகளில் ஆப்பிரிக்க நாடுகளுடன் மிக விரிவான முறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வதற்கான ஏராளமான ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்தாகியுள்ளன. ரஷ்யா – ஆப்பிரிக்கா இடையிலான கூட்டணி என்ற முறையில் 181 அம்சங்கள் கொண்ட செயல்திட்டத்தை 2023-2026 காலக்கட்டத்தில் நிறைவேற்றுவது என விளாடிமிர் புடினும், 49 ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இது உலக அரசியல் அரங்கில் ஆதிக்கம் செய்து வரும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளை மூன்றாம் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து புறக்கணிக்கிற, தனிமைப்படுத்துகிற மிக முக்கிய அரசியல் நடவடிக்கை ஆகும். 

டொலரில் இருந்து வெளியேறுவோம்!

இந்த மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்ட மற்றொரு முக்கிய அம்சம், ரஷ்யாவுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தில்; ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பிரிக்ஸ் எனப்படும் (பிரேசில்-ரஷ்யா-சீனா-இந்தியா-தென் ஆப்பிரிக்கா) வளர்முக நாடுகளின் கூட்டணிக்கும் இடை யிலான வர்த்தகத்தில் அமெரிக்க டொலரைக் கைவிடுவது என்பதாகும். ‘டொலரிலிருந்து வெளியேறுவது’ என்ற சமீபத்திய மிக முக்கிய உலக அரசியல் பொருளாதார வளர்ச்சிப் போக்கில், ஆப்பிரிக்க நாடுகளும் இணைந்து கொண்டிருப்பது, ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு விடப்பட்டுள்ள வலுவான சவால் ஆகும். படிப்படியாக தங்களது சொந்த நாணயத்திலேயே சர்வதேச வரவு- செலவுகளை மேற்கொள்ளவும் வர்த்தக பேரங்களை மேற்கொள்ளவும் இந்த மாநாடு முடிவு செய்துள்ளது.

23 பில்லியன் டொலர் கடன் தள்ளுபடி

இந்த முடிவை வரவேற்றுப் பேசிய புட்டின், “பல ஆப்பிரிக்க நாடுகள் உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம் ஆகிய சர்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து வாங்கியுள்ள கடன்கள் அமெரிக்க டாலரில்தான் அளிக்கப்பட்டுள்ளன. இந்தக் கடன்கள் அந்த நாடுகளை அழுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தக் கடன்களைக்  காரணம் காட்டி அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் பல ஆப்பிரிக்க நாடுகளின் அரசியலிலும் பொருளாதார நடவடிக்கைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்தக் கடன்களிலிருந்து ஆப்பிரிக்க நாடுகளை மீட்க, பிரிக்ஸ் கூட்டமைப்பும் அது உருவாக்குகிற புதிய வளர்ச்சி  வங்கியும் கணிசமான உதவிகளை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்குவோம்” என்றும் கூறியுள்ளார். அத்துடன் நிற்கவில்லை. இந்த மாநாட்டிலேயே, ஆப்பிரிக்க நாடுகள் ரஷ்யாவிடம் பெற்றுள்ள 23 பில்லியன் டொலர் கடன் தொகையை அப்படியே தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அது மட்டுமல்ல, கூடுதலாக 90 மில்லியன் டொலர் அளவிற்கு பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு நிவாரண கடன் அளிப்பதாகவும் உறுதி அளித்தார். அமெரிக்காவைப் போலவும், பிரான்சைப் போலவும் பிரிட்டன் உள்ளிட்ட  இதர ஏகாதிபத்திய சக்திகளைப் போலவும் வல்லாதிக்கம் செய்து, கனிம வளங்களையெல்லாம் ஒட்டச் சுரண்டி  ஆப்பிரிக்க நாடுகளை மேலும் அடிமைப் படுத்த அல்ல..

அம்மக்களுக்கான வரலாற்று நீதியை வழங்குவதற்கான ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாநாடு.  எனவே ஆப்பிரிக்கக் கண்டத்தில், குறிப்பாக மேற்கு ஆப்பிரிக்காவில் எழுந்துள்ள எழுச்சிகளுக்கும் கிளர்ச்சிகளுக்கும், முன்பொரு காலத்தில் சோவியத் ஒன்றியம் எப்படி உதவிக்கரம் நீட்டியதோ, அதேபோல தற்போது, ரஷ்யா ஒரு முதலாளித்துவ நாடு என்ற போதிலும் சோவியத்தின் விழுமியங்கள். இன்னும் அங்கு நீர்த்துப் போகாமல் நீடிக்கின்றன என்பதை உணர்த்தும்விதமாக ஆப்பிரிக்க கண்டத்துடன் தோழமை பாராட்டி வருவது உலக புவி அரசியலில் நிச்சயம் ஒரு புதிய பாதைக்கு வழிவகுக்கும்.

அதுமட்டுமல்ல, தற்போது முதலாளித்துவ நாடாக உள்ள ரஷ்யா, ஆப்பிரிக்காவை அரவணைத்துக் கொள்வது என்பது, இன்றைய நிலையில் முதலாளித்துவ நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்துள்ள முரண்பாட்டின் ஒரு வெளிப்பாடு என்பதும் கவனிக்கத்தக்கது.  “உலகின் ஒட்டுமொத்த இயற்கை வளங்களில் 30 சதவீதத்தை ஆப்பிரிக்கா வைத்திருக்கிறது. இந்த மாபெரும் வளங்களை அந்நாட்டு மக்கள் அனுபவிப்பதற்கு பதிலாக அவற்றை  கைப்பற்றுவதற்கு வரலாறு நெடுகிலும் ஐரோப்பாவும்,  அமெரிக்காவும் முயற்சித்திருக்கின்றன; மோதி இருக்கின்றன; ஆப்பிரிக்கர்களை அடிமைப்படுத்தியிருக்கின்றன. ஆனால் ரஷ்யாவைப் பொறுத்தவரை ஆப்பிரிக்காவுடனான உறவு தோழமைப்பூர்வமானதே தவிர, காலனிய உறவு அல்ல என்பதை சோவியத் ஒன்றிய காலத்திலிருந்து ஆப்பிரிக்க மக்கள் உணர்ந்தே வருகிறார்கள்” என்று, இம்மாநாட்டைப் பற்றி குறிப்பிடுகிறார்கள் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

நைஜர் கிளர்ச்சிக்கு ரஷ்யா காரணமா?

ரஷ்யாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே மீண்டும் வலுவான உறவு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நிலைநாட்டப்பட்ட அதேவேளையில்தான், மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜரில் ராணுவ அதிகாரிகள் கிளர்ச்சி செய்து, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் கையாளாக இருந்த ஜனாதிபதி முகமது பஜுமை அதிகாரத்திலிருந்து வெளியேற்றிய நிகழ்வு நடந்தது. இதற்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினுக்கும் தொடர்பு உண்டு என்றும், புட்டின்  உத்தரவின் பேரில் ரஷ்யாவின் தனியார் துணை ராணுவப் படையான ‘வாக்னர் ராணுவக் குழு’ நைஜருக்கு சென்று ராணுவக் கிளர்ச்சிக்கு உதவியதாகவும், நைஜர் மீது பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய சக்திகள் படையெடுத்தால் நைஜரின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கண்ட வாக்னர் ராணுவப் படை நைஜர் -மாலி எல்லையில்  தயாராக காத்திருப்பதாகவும் விதவிதமாக தகவல்களை மேற்கத்திய ஊடகங்கள் பரப்பின.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும் கூட அந்தக் கருத்தை வெளியிட்டார். ஆனால் அது ரஷ்யா மீது திட்டமிட்ட அவதூறை பரப்பும்  கருத்தே என்று நைஜர் பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார். நைஜர் ராணுவக் கிளர்ச்சி என்பது அந்நாட்டு மக்களின் நீண்டகால அடிமைத்தனத்திற்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்பு கிளர்ச்சி; அதற்கு, ரஷ்யா போன்ற மாபெரும் சக்திகள் தங்களுக்கு உறுதுணையாக நிற்கும்  என்ற உந்துதலும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அதனால்தான் நைஜரில் ராணுவ கிளர்ச்சியை ஆதரித்து தலைநகர் நியாமேயில் பல்லாயிரக்கணக்கில் கூடிய மக்கள்  தங்கள் தேசியக் கொடியோடு ரஷ்ய கொடியையும் ஏந்தியிருந்தனர்.

Exit mobile version