Site icon சக்கரம்

இன்றைக்கு காந்தி மணிப்பூரில் இருந்திருப்பார்!

சென்னை, தியாகராய நகர் காந்தி கல்வி நிலையத்தின் நூல் அறிமுக தொடர் நிகழ்வின் தற்போதைய பொறுப்பாளர் சு.சரவணனின் நேர்காணல். தீண்டாமை, கிராமத் தன்னிறைவு, இயற்கை பாதுகாப்பு,  நூல் வாசிப்பு, பெண்களின் சமூகப் பங்களிப்பு ..போன்ற காந்தியின் பன்முகப் பரிமாணம் குறித்த உரையாடல்:

காந்தி நடத்திய போராட்டங்களில் அதிக அளவில் பெண்கள் திரண்டதற்கு என்ன காரணம் ?

வன்முறையற்ற அஹிம்சையின் வழி ஒரு சமூகம் அமைய வேண்டும் எனில், அது பெண்களின் கைகளில் தான் இருக்கிறது என்று சொன்னவர் காந்தியடிகள். அவருடைய போராட்டங்களிலும், நிர்மாணத் திட்டங்களிலும் பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர்.  ஏனெனில்,  இயல்பாகவே அவருடைய  வேலைத்திட்டங்கள் அனைத்தும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வடிவிலேயே அமைந்திருந்தன. காந்தியின் அறைகூவலுக்கு இணங்க, அவருடைய பணிகளுக்கு பெண்கள் தங்கள் நகைகளை தானமாக மனமுவந்து தந்தனர். உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில், தொடக்கத்தில் தண்டி யாத்திரையில் பெண்களை கலந்து கொள்ள வேண்டாம் என்று காந்தி முதலில் சொன்னார்.

தண்டி யாத்திரை வெற்றிகரமாக நிறைவு பெற்ற பின்னர் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தர்சணா உப்பள முற்றுகைப் போராட்டம் முதற்கொண்டு பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். நாடெங்கும் நடைபெற்ற போராட்டங்களில் சட்ட விரோதமாக உப்பு காய்ச்சி சிறை சென்றவர்களில் கணிசமானவர்கள் பெண்கள். தென்னாப்பிரிக்காவில், இனவெறிக்கு எதிரான போரில், சிறை சென்ற தில்லையாடி வள்ளியம்மை இறந்தார். அவருடைய தியாகம் மற்ற சத்தியாகிரகிகளுக்கு ஒரு பெரும் உந்து சக்தியாக இருந்தது என  காந்தி போற்றி புகழ்ந்தார். அவருடைய மனைவி கஸ்தூரி பாய் அத்தகைய பெண் சத்தியாகிரகிகளுள் முதன்மையானவர். சரோஜினி நாயுடு,  பிரபாவதி (ஜெய்பிராகாஷ் நாராயணி்ன் மனைவி), ராஜ்குமாரி அம்ரித் கௌர், மீரா பென் என அவரைப் பின்பற்றிய பெண் தொண்டர்கள் பலர்.

கோவில் நுழைவுப் போராட்டம் போன்ற தீண்டாமை ஒழிப்புத் திட்டத்தில் காந்தி பங்கெடுத்தது பற்றி…

காந்தி தனது 12 ம் வயதில், அன்றைக்கு இருந்த வழக்கப்படி தங்கள் வீட்டின் கழிப்பிடத்தை சுத்தம் செய்யும் ‘உகா’ என்ற தலித்தை தொடக் கூடாது என்று அவரது அம்மா சொன்னதற்கு “இறைவன் அனைவருக்குள்ளும் இருக்கிறார் என்று நீங்கள் சொல்வது உண்மை என்றால், அவருக்குள்ளும் இருப்பார் தானே? அவரைத் தொடுவது எப்படி தீட்டாகும்” என்று  எதிர்த்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் வெள்ளை இன வெறியை, இந்தியாவில் நிலவிய தீண்டாமையோடு ஒப்பிட்டார். சபர்மதி ஆசிரமத்தில், தலித் மக்களை சேர்த்துக் கொண்டால் நிதி தர மாட்டோம் என்று எதிர்ப்பு கிளம்பிய போதும், அதற்கு அஞ்சாமல் தலித் மக்களை சக ஆசிரமவாதிகளாக தொடர்ந்து வைத்திருந்தார். எனவே, தீண்டாமைக்கு எதிரான அவரது நிலைப்பாடு என்பது அவருடைய வாழ்வின் தொடக்கத்தில் இருந்தே இருந்து வந்திருக்கிறது. அந்த தெளிவின் தொடர்ச்சி தான் கோவில் நுழைவு போராட்டங்கள். காந்தியின் ஹரிஜன அரவணைப்பு விஷயத்தில் அவருக்கு மிகவும் துணை நின்றவர் அன்னை கஸ்தூரிபாய்.

காந்தியும், கஸ்தூரிபாயும்

கிராம சுயராஜிய கனவை காந்தி முன்னெடுத்தார். அதன் தொடர்ச்சியாக இப்போது பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்துள்ளது. அவருக்கு இப்படிப்பட்ட  எண்ணம் எப்படி வந்தது ?

சிறியதே அழகு, சிறியதை நிர்வாகம் செய்வது எளிது என்ற எண்ணம் காந்திக்கு உண்டு. ஒரு கிராமத்திற்கு தேவைகளை அங்குள்ள நிலம், உற்பத்தி இவைகளைப் பொறுத்து அவர்களே முடிவெடுப்பது நல்லது. எங்கிருந்தோ யாரோ ஒருவர் போடும் உத்தரவு சரியல்ல என்று நம்பினார். அதிகாரம் என்பது யாரோ தருவதல்ல, மக்களிடமிருந்து பிறப்பதுதான், மக்கள் வழியாக வருவதுதான் அதிகாரம் என கூறினார். அதனால்தான் பாதுகாப்பு, அயல்துறை,  பெரிய தொழில்கள் போன்றவைகளைத் தவிர, மற்ற அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றார்.

கிராமங்கள் சுயமாகவும், மற்ற கிராமங்களோடு இணைந்தும் செயல்பட விரும்பினார்.  இதற்கான அனுபவம் அவருக்கு தென்னாப்பிரிக்காவிலேயே பீனிக்ஸ் பண்ணையிலும், டால்ஸ்டாய் பண்ணையிலும் கிடைத்தது. அங்கு இனம், மொழி, ஏன் நாடு கடந்தும் பல்வேறு மக்கள் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டுப் பண்ணை வாழ்க்கை முறையை ஒரு சிறிய லட்சிய கிராமம் போல் வாழ்ந்தனர். அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர். கிராமம் என்றால் பிற்போக்கானது, குழு மனப்பான்மையுள்ளது என நாம் எண்ண வேண்டியதில்லை. சுயசார்புள்ள, உற்பத்தியிலும், பகிர்விலும்   தன்னிறைவு பெற்ற சுத்தமும், ஆரோக்கியமும், சமத்துவமும் கொண்ட கிராமங்களின் தொகுப்பாக இந்தியா இருக்க வேண்டும் என விரும்பினார்.

சுற்றுச்சூழல் இன்றைய காலக்கட்டத்தில் வெகுவாகப் பேசப்பட்டு வருகிறது ? இதைப்பற்றி காந்திக்கு கருத்து ஏதும் இருந்தனவா ?

சுற்றுச்சூழலின் முன்னோடி என்று, காந்தியைச் சொல்லமுடியும். இது குறித்து அவருக்கு தீர்மானமான பார்வை இருந்தது. நம் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வளம் நம் புவியில் இருக்கிறது, ஆனால் நம்முடைய பேராசைகளை அல்ல என்று கட்டற்ற நுகர்வையும் அது சார்ந்த உற்பத்தி முறையையும் குறித்து காந்தி எச்சரிக்கிறார். நமது வாழ்க்கை இயற்கை சார்ந்தே இருக்க வேண்டும் என்றார். அதனுடைய ஒரு வடிவமாகத்தான் கதர் உற்பத்தியை முன்னெடுத்தார். அதனுடைய நிறுவன வடிவம்தான், கிராமத் தொழில்களை வளர்க்கும் அவர் உருவாக்கிய அமைப்புகளில் ஒன்றான காதி கிராமோத்யக் அல்லது Khadi and Village Industries. தன்னுடைய ஆசிரமத்தில், ஆசிரமத் தேவைக்காக மரத்தின் கிளை ஒன்றை தேவைக்கு அதிகமாக அதுவும் மரங்கள் ஓய்வெடுக்கின்ற இரவு நேரத்தில் ஒடித்தார் என்பதற்காக சக ஆசிரமவாசியை கடுமையாக கடிந்து கொண்டவர் காந்தி. உலகத்திலேயே குப்பையைப் பற்றியும், அதன் மேலாண்மை பற்றியும், மனிதக் கழிவுகளில் இருந்து வேளாண்மைக்கான இயற்கை உரம் பற்றியும் முதலில் பேசிய தலைவர் காந்தியடிகள்தான்.

சர்வதேச  அரசியலை காந்தி எப்படி பார்த்திருக்கிறார் ?

ஹிட்லரை ‘எனது அருமை நண்பரே’ என விளித்து, அவருடைய கொள்கை மனித குலத்திற்கு எப்படி எதிரானது என்று விளக்கி, அக் கொள்கைகளை கைவிடக் கோரி  ஹி்ட்லருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அந்தக் கடிதத்தை வெள்ளையரசு தணிக்கையில் நிறுத்திவிட்டது; கடிதம் ஹிட்லருக்கு போகவில்லை. அதே போல பாலஸ்தீன பிரச்சினையில் பாதிக்கப்பட்ட அரபு மக்களுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார். “என் வீட்டு ஜன்னல்களும், கதவும் திறந்திருக்கட்டும்; ஆனால் என் கால்கள் என் நிலத்தில் ஊன்றியிருக்கட்டும்” என்று அவர் சொல்லியிருக்கிறார். ‘ Think Globally, act locally’ என்று சொல்வதன் வடிவம்தான் இது. டால்ஸ்டாயோடு அவருக்கு தொடர்பு இருந்தது. சி.எப்.ஆண்ட்ருஸ் என்ற ஆங்கில பாதிரியார் காந்தியடிகளின் நண்பராக இருந்தவர். வெள்ளை அரசாங்கத்திடம் இந்தியர்களுக்காக ஆதரவாக பேசியவர் அவர். அதே போன்று, இலக்கியத்திற்கன நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர் ரோமைன் ரோலண்ட்  அவர்கள், பிரிட்டிஷ் கடற்படை அட்மிரலின் மகளான மெடலின் ஸ்லேட் என்கிற பெண்மணியை வாழும் இயேசு கிறிஸ்துவாக காந்தி இருக்கிறார், அவரிடம் சென்று உன் வாழ்க்கையை அர்ப்பணித்து பணியாற்று என்று அவரை வழி நடத்தினார்.  பின்னர் இந்தியா வந்து காந்தியிடம் சேர்ந்த அவர்தான் மீரா பென் என்ற பெயரில் இந்திய தேசத்திற்கு தொண்டாற்றினார்.

மீரா பென் எனப்படும் மெடலின் ஸ்லேட்

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ரைன் ‘இப்படி ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதை வருங்கால சந்ததி நம்ப மறுக்கும்” என்று கருத்து தெரிவித்தார். அதாவது சர்வதேச நிகழ்வுகோடு காந்தி இடையறாது தொடர்பில் இருந்திருக்கிறார். சர்வதேச சமூகமும் அவரை தொடர்ந்து கவனித்து வந்தது.

காந்திக்கு பிடித்த நூல்கள் யாவை ?

காந்தி நிறைய நூல்களைப் படித்து அவைகளை மேற்கோள் காட்டியும் இருக்கிறார். ஆனால், அவர் நம்முடைய கவனத்திற்கு கொண்டு வந்த நூல்களை கவனித்தோமெனில்,  அறிவுக்கு முன்னுரிமை அளிக்கும் நூல்களை விட, அவர் மனித மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த, மனித இனத்தின் மேம்பாட்டுக்கு வழிகாட்டிய நூல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததை கவனிக்கலாம்.  உதாரணத்திற்கு அவருடைய சுயசரிதையான சத்திய சோதனையில் ஜோன் ருஸ்கின் எழுதிய ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ (Unto this last)  நூலை தான் விரும்பியதாகவும், தன் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தயதாகவும் எழுதியிருக்கிறார். இத்தகைய முக்கியத்துவத்தை   டால்ஸ்டாயின் ”இறைவனின் ராஜ்ஜியம் உனக்குள்ளே” (Kingdom of God is within you), பகவத் கீதை, பைபிள், குரான் போன்றவைகளுக்கும் அவர் அளித்திருக்கிறார்.

காந்திக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்ததா ?

நாட்குறிப்பு எழுதுவது என்பது நாம் அவசியம் கைக்கொள்ள வேண்டிய பழக்கம்; நம்மை நாமே உற்றுப் பார்த்துக்கொள்ள இது உதவும். முடிந்த அளவுக்கு ஆவணப்படுத்தும் வேலையையும்  இது செய்யும் எனச்சொல்லி இருக்கிறார். நவகாளி யாத்திரையின் போது, உடனிருந்த மனுபென் அவர்களை தினமும் தவறாமல் நாட்குறிப்பு எழுதுமாறு வலியுறுத்துகிறார்.  நிறைய ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதிய காந்தியடிகள், பின் நாளில் அவருடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பொது வெளிக்கு வந்தபிறகு அதற்கு அவசியம் இல்லாமல் போகவே எழுதவில்லை. அவருடைய வாழ்க்கையும், உரைகளும், எழுத்துகளும் முழுவதுமாக நூறு தொகுதிகளாக வெளி வந்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு எண்பது  கடிதங்கள் வரை எழுதியிருக்கிறார். மேற்சொன்ன 100 தொகுதிகளில் பெரும்பாலும் அவருடைய கடிதங்களே அடங்கும். நேரு போன்ற தலைவர்களுக்கும், எங்கோ ஒரு குக்கிராமத்தில் முகம் தெரியாத ஒருவரிடம் இருந்து வரும் கடிதங்களுக்கும் சம அக்கறையோடு பதில் எழுதியிருக்கிறார். ஒரு சில கடிதங்களை, சம்மந்தப்பட்டவர்கள் அனுமதியோடு, தான் நடத்தும் பத்திரிகைகளில் பிரசுரித்தும் இருக்கிறார்.

மகாத்மா காந்தி, மகாதேவ் தேசாய்

அவருடைய உதவியாளர்கள் மகாதேவ் தேசாய், பியாரிலால் இருவரும் அவரது அன்றாட நடவடிக்கைகளை தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கின்றனர். மகாதேவ் தேசாயின் சிறப்பு என்னவெனில், காந்தியின் சிந்தனை ஓட்டத்தை, மனதை நன்கறிந்து அவ்வாறே செயல்பட்டவர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்தியடிகளுடன் சேர்ந்து கைதாகி ஆகாகான் மாளிகைச் சிறையில் இருந்த போது இறந்தவர். அவர், காந்தியடிகளின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். அப்பதிவுகள் “Day-to-Day with Gandhi” என்ற பெயரில் 9 தொகுதிகளாக வெளி வந்திருக்கிறது.  அதே போன்று மற்றொரு செயலாளரான பியாரிலால் அவர்கள் “Mahathma Gandhi” என்று காந்தியடிகளின் சரிதையை மிக விரிவாக 9 தொகுதிகளாக எழுதி இருக்கிறார்.

தனது இறப்பு எப்படி இருக்க வேண்டும் என காந்தி நினைத்தார் ?

ஆமாம், அவரே அதைப் பற்றி சொல்லி இருக்கிறார். தான்  கொண்ட கொள்கைகளுக்காக தன்னுடைய மரணம் நிகழ வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அவ்வாறில்லாமல் சாதாரணமாக நோய்வாய்ப்பட்டு முதுமையின் காரணமாக இறந்தால், தான் ஒரு மகாத்மா இல்லை என்றும், ஒரு சராசரி சாமானிய மனிதன்தான் என்றும் தன் மரணத்தின் போது அறிவிக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.  அவருடைய 78 வயதில்,  மதவெறி கொண்ட கோட்சே சுட்டுக் கொன்றான்.

காந்திய ஆர்வலர் சு.சரவணன்

இன்றைக்கு காந்தி இருந்திருந்தால், மணிப்பூர் விவகாரத்தில் என்ன சொல்லியிருப்பார் ?

அவர் ஒரு செயல்பாட்டாளர். கொள்ளை நோய்களாக இருக்கட்டும், நில அதிர்வு போன்ற இயற்கைப் பேரிடர்களாக இருக்கட்டும், நவகாளி போன்ற கலவர பூமியாகட்டும் அனைத்திலும் மக்கள் மத்தியில் இருந்து  எப்போதும் களத்தில் தீர்வைக் கண்டவர். தற்போதும் மணிப்பூர் கலவரத்திலும் உடனடியாக களத்திற்கு சென்று அங்கு அமைதி திரும்ப வழி வகுத்திருப்பார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை உறுதி செய்திருப்பார். கலவரத்தில் அரசாங்கத்தின் பங்கு என்ன என்பதை உணர்த்தி, அவ்வாறே செயல்பட வைத்திருப்பார்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவெனில், இது போன்ற சூழ்நிலைகளில் அமைதியை நிலை நாட்ட நன்கு பயிற்சி பெற்ற அஹிம்சை வீரர்களைக் கொண்ட சாந்தி சேனை என்ற படை ஒன்றை காந்தியடிகள் அவர் காலத்திலேயே உருவாக்கியிருக்கிறார். அவரது மறைவுக்குப் பின்னரும், அப்படியான சாந்தி சேனையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இந்திய விடுதலைக்குப் பின்னரும் இதே வட கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் அமைதிப் பணியாற்றி இருக்கிறார்கள்.

வினோபா பாவே, ஜெயப்பிரகாஷ் நாராயண், நாராயண் தேசாய் போன்றவர்கள் அப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட பிரபல காந்தியர்கள். அத்தகைய சாந்தி சேனை போன்றதொரு முயற்சி மீண்டும் நமக்கு தேவைப்படுகிறது. வன்முறையான போர்கள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் பெருஞ்செலவில் உலகெங்கும் நடந்து வருகின்றன. ஆனால், இவர்கள் யாரும் அமைதிக்கான வழிமுறைகள் (Peace Making) குறித்து ஆராய்ச்சியில் ஈடுபடுவதில்லை.

Exit mobile version