–சாவித்திரி கண்ணன்
ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்கிற நோக்கத்தை நோக்கி, பாஜக அரசு முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் பின்னணி என்ன? நோக்கங்கள் என்ன? விளைவுகள் என்ன? எதை சாதிக்க துடிக்கின்றனர்..?
முன்னாள் ரப்பர் ஸ்டாம்பான ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இந்தக் குழுவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம்நபி ஆசாத், பாஜக கட்சியின் என்.கே.சிங், பாஜகவின் செல்லப் பிள்ளையும், ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருந்த போது அவருடைய செயலாளராக பணியாற்றிவருமான ஐ.ஏ.எஸ் அதிகாரி சஞ்சய் கோத்தாரி, முன்னாள் பாரளுமன்ற செயலாளரான 94 வயது முதியவர் சுபாஷ் கைசாப், டாடா, அம்பானி போன்ற கோர்ப்பரேட்களுக்காக ஆஜராகும் நாக்பூர் வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே போன்றோருடன் காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி பெயரும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, ”இந்த தீய எண்ணத்திற்கு காங்கிரஸ் ஒத்துழைக்காது” என அறிவித்துவிட்டார்.
இதையடுத்து ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவிப்பதற்கு என்றே சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் செப்டம்பர் 18 முதல் 22 வரையிலும் நடைபெற உள்ளது.
ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே சீருடை, ஒரே கலாச்சாரம்.. என்றெல்லாம் பேசியும், செயல்படுத்தியும் வரும் பா.ஜ.க தற்போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் என முழங்குவதன் நோக்கம் என்னவாக இருக்கும் எனப் பார்ப்போம்;
வாஜ்பாய் தலைமையில் ஆறாண்டுகள் ஆட்சி நடந்த போதும் சரி, தற்போது மோடி அரசு பத்தாண்டுகள் முடிக்கவுள்ள போதும் சரி, பா.ஜ.க செய்ய நினைத்த பல விஷயங்களை அமல்படுத்த முடியாமல் போய்விட்டது. காரணம், மத்தியில் ஆட்சிக்கு வந்தால் மட்டும் போதாது, மாநிலங்கள் அனைத்திலும் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே நினைத்தை எல்லாம் எந்த எதிர்ப்புமின்றி, தடைகள் வராமல் நிறைவேற்ற முடியும். இதுமட்டுமின்றி, மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ஆறேழு மாதத்திற்கு ஒரு முறை ஏதாவது சில மாநிலத் தேர்தல்கள் குறுக்கிடுவதால் அதிரடி முடிவு எடுக்க முடியவில்லை. ஏனெனில், நாம் எடுக்கும் அதிரடி முடிவுகள் மாநிலத் தேர்தல்களில் பிரதிபலிக்குமோ என அஞ்ச வேண்டியுள்ளது. அதனால், தங்கள் அதிருப்தியை வெளியிடும் வாய்ப்பை இடைப்பட்ட காலங்களில் மக்களுக்கு வழங்கக் கூடாது எனவும் பா.ஜ.க யோசிக்கிறது.
ஒரு முறை ஓட்டுப் போட்டுவிட்டால் ஐந்து ஆண்டுகள் வரையில் நாம் என்ன செய்தாலும் அதற்கு மக்கள் காட்டும் எதிர்வினைகள் நம்மை பாதிக்கக் கூடாது. நாம் செய்ய விரும்பியதை அதிரடியாக செய்து கொண்டே போக வேண்டும்…என பா.ஜ.க விரும்புகிறது.
இந்த நோக்கத்தை விமர்சிக்கும் வகையில் தான் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியா, அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம். ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற எண்ணம் இந்திய யூனியன் மற்றும் அதன் அனைத்து மாநிலங்கள் மீதான தாக்குதலாகும்” என்று தெரிவித்து உள்ளார்.
ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது, மிகுந்த வேலை பளு, ஆட்கள் பலம், கூடுதல் வாக்கு பதிவு இயந்திரங்கள், அதீத பணிச்சுமை ஆகியவற்றை உள்ளடக்கியது.
உதாரணத்திற்கு ஒரு பெரிய மாநிலமான உத்திரபிரதேசத்திற்கு தேர்தலை நடத்தவே ஆறு கட்டங்களாக நடத்த வேண்டி உள்ளது என்றால், இந்தியா போன்ற பரந்துபட்ட தேசத்திற்கு பல கட்டங்களாகத் தன் தேர்தலை நடத்த முடியும். அப்படி பல கட்டங்களாக நடந்தால், மாதக் கணக்கில் நடத்த வேண்டும். இது தேவையற்றது என்பதே அனுபவப்பூர்வமான தெளிவாகும்.
சர்வாதிகாரமாக முடிவெடுக்க விரும்பிய இந்திராகாந்தி அம்மையாருக்கே இப்படி ஒரே நேரத்தில் தேர்தலை நடத்திவிட்டால் என்ன என்ற நினைப்பு இருந்துள்ளது. அவரது காலகட்டத்தில் இருந்த தேர்தல் ஆணையத்தின் மூலம் இந்தப் பரிந்துரையையும் அவர் பெற்றார். எனினும், பலதரப்பட்ட கலந்துரையாடல் வழியாக இது நடைமுறை சாத்தியமற்றது, மிகவும் பணி அழுத்தம் தரக் கூடியது, தேவையற்றது என்ற தெளிவுக்கு அவர் வந்து அந்த நினைப்பை கைவிட்டார் என்பது வரலாறு.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கமான ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை வாஜ்பாய் காலத்தில் அவர்கள் கையில் எடுத்தனர். அதற்காகவே சட்டக் கமிஷனிடம் பரிந்துரையும் கேட்டனர். ஆனால், நடைமுறை சிக்கல்களை உணர்ந்து வாஜ்பாயும் இதை கைவிட்டார். மாபெரும் தலைவரான வாஜ்பாய்க்கு ஆர்.எஸ்.எஸால் அழுத்தம் தந்து சாதிக்க முடியவில்லை. அதனால் தான் தாங்கள் சொல்வதைக் கேட்கும் கைப்பிள்ளையான மோடியை அவர்கள் பிரதமராக்கினார்கள். ஆனால், மோடியும் இதன் சிரமங்களை நன்கு உணர்ந்து இந்த விவகாரத்தை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார்.
”இந்த நோக்கத்தை எய்தினால் தான் நாம் விரும்பியதை சாதிக்க முடியும். இதோ பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தும் பொதுசிவில் சட்டத்தை நம்மால் அமல்படுத்த முடியவில்லை, குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. இப்படி இன்னும் பல முடியவில்லைகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆகவே, தற்போதாவது அதற்கு முன்முயற்சி எடுக்காவிட்டால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளரை மாற்ற வேண்டி இருக்கும்” என ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கை தந்த பிறகு தான் மோடியும், அமிஷாவும் களத்தில் இறங்கிவிட்டனர்.
மாநில தேர்தல்கள் நடக்கும் போது மாநில பிரச்சினைகளுக்கும், மாநில உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பேச வேண்டிய கட்டாயம் வந்துவிடுகிறது. இரண்டு தேர்தல்களையும் சேர்த்து நடத்திவிட்டால், தேசிய பிரச்சினைகளுக்கே பெரும் முக்கியத்தும் தந்து மாநில உணர்வு என்பதையே இல்லாமல் செய்துவிடலாம் என பாஜக நினைக்கிறது.
உதாரணத்திற்கு, தற்போது டெல்லியில் பாராளுமன்றத் தேர்தலின் போது அதன் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பா.ஜ.கவிற்கு ஓட்டுப் போடும் வாக்காளர்கள், அதுவே சட்டமன்றத் தேர்தல் என்று வந்தால், ஆம் ஆத்மி கட்சிக்கே அறுதி பெரும்பான்மையாக வாக்களித்து விடுகிறார்கள். ‘அதனால், இரு தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்திப் பார்ப்போமே’ என பா.ஜ.க துடிக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் வெவ்வேறு கட்சிகளின் ஆட்சி, கூட்டாட்சி தத்துவம் என்ற பன்முகப் பரிமாணங்களை எல்லாம் அனுமதித்துக் கொண்டிருந்தால் இந்துத்துவ நோக்கங்களை நிறைவேற்ற தடைகளை சந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆகவே, அரசியல் சட்டங்களை திருத்தி அமைத்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதை எப்படியாவது சாத்தியப்படுத்த வேண்டும் என தவிக்கிறது பா.ஜ.க அரசு. இதை இந்த தேர்தலில் முழுமையாக சாதிக்க முடியாவிட்டாலும், அடுத்த தேர்தலுக்குள் அமல்படுத்துவதற்கு இந்த முன்னெடுப்புகள் உதவும் என்பதே பாஜகவின் கணக்கு.
‘எந்தெந்த மாநிலத்திற்கு எந்த நேரத்தில் தேர்தல் செளகரியப்படும் என்பதெல்லாம் யோசிக்கத் தேவையில்லை. நாம் நம் தேவையை மட்டுமே யோசிப்போம்’ என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது.
பா.ஜ.கவின் இந்த நோக்கத்தை நாம் நிறைவேற்ற அனுமதித்தால், அவர்கள் இன்னும் ‘ஒரே உணவு, ஒரே நேரம்’ என்பதைக் கூட அறிவிப்பார்களோ என்னவோ!
ஓம், இனி அவரருக்கும் பசிக்கும் நேரத்திற்கு தான் சாப்பிடுவது என்ற நடைமுறை கூட குற்றமாக்கப்படலாம். ‘அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு தான் அனைவரும் சாப்பிட வேண்டும்’ என சொன்னாலும் சொல்வார்கள்!
ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே சின்னம் அங்கு ஒரே முத்திரையில் குத்தினால், முடிந்தது இந்திய ஜனநாயகத்தின் கதை!