-சாவித்திரி கண்ணன்
பெருமை தான் – சந்திராயன் 3 விண்வெளிக்கு அனுப்பியது. ஆனால், அதன் நோக்கம் நிலவின் இயற்கை வளங்களை சுரண்டுவதாம். அதற்காக இஸ்ரோவின் உற்பத்தி பிரிவையே தனியார் மயப்படுத்தும் ஏற்பாடுகள் ஜரூராக நடக்கிறது! பூமியின் வளங்களை சுரண்டுவது போல, நிலவின் வளத்தை அபகரிப்பது பேரழிவைத் தராதா..?
நிலவில் முதன் முதலாக தடம் பதித்த நாடு ரஷ்யா தான்! அதன் பிறகு அமெரிக்கா, சீனா போன்றவை அடுத்தடுத்து சென்றன! ஆனால், 1970 களுக்கு பிறகு 2000 ஆண்டு வரையிலும் நிலவு தொடர்பான ஆராய்ச்சிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்த மேலை நாடுகள் 2000க்கு பிறகு தீவிர கவனம் செலுத்த தொடங்கின. காரணம், ‘ஸ்பேஸ் காமர்ஸ்’ (space commerce) எனச் சொல்லக் கூடிய ‘விண்வெளி வர்த்தக யுகம்’ அதற்கு பிறகு வேகமாக விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது.
விண்வெளியில் செயற்கை கோள்களை அனுப்பி நிலை நிறுத்திய வகையில், செல்போன் நிறுவனங்கள், தொலைகாட்சி நிறுவனங்களுக்கு மின்காந்த அலைகளை விற்பனை செய்து பல இலட்சம் கோடிகளை சம்பாதிக்கும் வளர்ச்சி போக்குகள் படிப்படியாக அதிகரித்த போது, அதன் பலன் தொலைபேசித் துறையில் பாரம்பரியமாக கொடிகட்டிப் பறந்த பி.எஸ்.என்.எல் வளர்ச்சிக்கு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது அம்பானியின் செல்போன் நிறுவனத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டது. பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 3ஜி, 4ஜி அலைக்கற்றைகள் பா.ஜ.க அரசால் மறுக்கப்பட்டன! இதே சமாச்சாரம் தான் தற்போது இஸ்ரோ (ISRO) என அழைக்கப்படும் விண்வெளி சாதனைகள் படைத்து வரும் அரசு நிறுவனத்திற்கும் ஏற்பட உள்ளது. அதைத் தான் இந்தக் கட்டுரையில் பார்க்க உள்ளோம்.
அந்த வகையில் தான் தற்போது இந்தியாவும் சந்திராயன் 3 என்ற விண்களத்தை நிலவின் வளங்களை வசப்படுத்த அனுப்பப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து இஸ்ரோவால் ஜூலை 14 -ஆம் தேதி விண்ணுக்கு ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவில் ஓகஸ்ட் -23ல் தரையிறங்கியது. கிட்டத்தட்ட 41 நாட்கள் பயணத்தில் பூமியில் இருந்து சுமார் 3 இலட்சம் கி.மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவை சந்திரயான் 3 சென்று சேர்ந்தது.
அதன் பிறகு சந்திராயனின் விக்ரம் லேண்டர் கருவியில் இருந்து வெளியே வரும் பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் சுமார் 14 நாட்கள் ஆய்வு செய்யதபடி இருக்கிறது. நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3 விண்கலம் 7 விதமான ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
”இது ஒரு சரித்திர வெற்றி” என்றும், ”இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு மற்றும் தென் துருவத்துக்கு சென்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்று புதிய சகாப்தம் படைத்துள்ளது” என்றும் ஊடகங்கள் கொண்டாடுகின்றன!
3,895 கிலோ எடை கொண்ட சந்திராயன் 3 ஐ உருவாக்க, இந்தியா சுமார் 250 கோடிகள் செலவழித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு செலவழித்ததன் பின்னணியில், வெறும் பெருமைக்காக மட்டும் இவ்வளவு செலவு செய்யவில்லை. ‘செய்யப்பட்ட செலவைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக அங்குள்ள இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும்’ என இந்தியா நினைக்கிறது.
அந்த வகையில் பூமிப் பரப்பில் மிக அரிதாக மட்டுமே கிடைக்கும் ஹீலியம் 3 (Helium 3) என்ற கனிமம் நிலவில் அதிகமாக உள்ளதால், அதை எடுத்துப் பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாம்! இந்த மிக சக்தி வாய்ந்த ஹீலியத்தை நிலவில் அதிகமாக எடுத்து அணு மின் உலைகளுக்கும், மின்சாரத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என திட்டமிட்டே இது செய்யபடுகிறதாம். அத்துடன் நிலவில் லாண்ட்டனைடு, இட்ரியம் (Yttrium) போன்றவையும் உள்ளனவாம். இவையன்றி ஒட்சிசன் உள்ளிட்ட நீர்ம பொருட்கள் இருப்பதால், அது ரொக்கெட்டுகளுக்கு எரிபொருளாக பயன்படக் கூடுமாம். அதனால் தான் நிலவின் தென் துருவத்தின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ள நிலையில், மற்ற நாடுகளை முந்திக் கொண்டு இந்தியா முதன்முதலாக தென் துருவத்தில் தடம் பதித்து உள்ளது.
இப்படிப்பட்ட அரிய முக்கியத்துவம் கனிமங்கள் நிலவில் இருக்குமென்றால், அதை பயன்படுத்திக் கொள்ள வல்லரசு நாடுகளும் போட்டிபோடத் தான் செய்வார்கள்.
2020ம் ஆண்டு ஆர்டிமிஸ் எனப்படும் விண்வெளி ஒப்பந்தத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதன் படி, விண்வெளி வளங்களை சமமாக பகிர்ந்து கொள்வது, விண்வெளி ஆய்வின் போது கடை பிடிக்க வேண்டிய சில நடைமுறைகள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி முதன் முதல் ஒன்றை கண்டுபிடித்தாலோ, தடம் பதித்தாலோ அந்த நாட்டிற்கு அந்த பகுதியை உரிமை கொண்டாட முடியும் என்பது தான் அந்த ஒப்பந்தமாம்! இந்த தென் துருவத்தில் கால் பதிக்க ரஷ்யா அனுப்பிய விண்களம் சில நாட்களுக்கு முன்பு தோல்வி அடைந்ததை அடுத்து இந்த சாதனையும், வாய்ப்பும் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. அதே சமயம் இதை சுலபத்தில் வல்லரசுகள் விட்டுத் தராது. சில, பல பிரச்சினைகள் வெடிக்க வாய்ப்புள்ளது எனவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, விண்வெளித் துறையில் உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக சாதனை படைக்கும் இஸ்ரோ அமைப்பை பி.எஸ்.என்.எல்லைப் (Bharat Sanchar Nigam Ltd. – BSNL) போல பலவீனப்படுத்தி, இதன் அளப்பரிய பொருளாதார அனுகூலங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய பா.ஜ.க அரசு திட்டமிட்டு வருகிறது.
அதாவது, தற்போது இஸ்ரோவின் நிர்வாகக் கட்டமைப்பு என்பது மிகச் சரியாக ஜனநாயக முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு அரசு நிறுவனம். எனினும் விண்களங்கள் ராக்கெட்டுகள் தயாரிப்புகளுக்கான உதிரி பொருட்கள் தயாரிப்பில் கணிசமான தனியார் நிறுவனங்களையும் பயன்படுத்தியே வருகிறது. ஆனால், தற்போதைய பாஜக அரசோ இஸ்ரோவை தனியார்மயப்படுத்த அமைச்சரவை கூடி முடிவெடுத்த நிலையில் இஸ்ரோ அமைப்பை கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட மேலதிக அதிகாரம் உள்ள நேஷனல் ஆக்டிவிட்டி பிரமோஷன் போர்ட் (National activity promotion board) என்ற அமைப்பை உருவாக்கி உள்ளது. அதில் இஸ்ரோவிற்கு வெளியில் உள்ள தங்களுக்கு வேண்டப்பட்ட சில தனியார் நிறுவனத்தாருக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை தந்துள்ளது.
அதன்படி இஸ்ரோ விஞ்ஞானிகள் இனி விண்வெளி களம் குறித்த ஆராய்ச்சியை மட்டும் சுயேட்சையாக செய்யலாம். அவர்கள் செய்த ஆராய்ச்சிப்படி விண்களம் தயாரிக்கும் உரிமையை தனியாருக்கு தந்துவிடப் போகிறார்களாம். அதன் படி விண்வெளிக்கு அனுப்படும் விண்களத்தை தனியார் தான் அனுப்ப வேண்டுமாம். தற்போது சந்திராயன்3 மூலமாக கிடைத்த அரிய தகவல்கள் படி அங்குள்ள அரிய கனிமங்களை அங்கிருந்து எடுத்து வந்து வணிகம் செய்யும் வாய்ப்பை தனியார் தான் செய்யப் போகிறார்களாம்! இந்த முடிவு இஸ்ரோ விஞ்ஞானிகளை மிகவும் வேதனைபடுத்தி உள்ளது. சில விஞ்ஞானிகள் தங்கள் குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒட்டு மொத்த இந்திய வளங்களை தூக்கி அம்பானி, அதானிகளிடம் தாரை வார்த்து வரும் பா.ஜ.க அரசு, நிலவின் வளத்தை சூறையாடவும் துணை போவது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் தருவதாக உள்ளது.
சூரியனும், சந்திரனும் பூமி சுழல்வதற்கும், உயிர்ப்போடு இயங்குவதற்கும் ஆதார சக்திகளாக திகழ்கின்றன. பூமியின் இயற்கை வளங்களை சுரண்டி வருவதற்கான எதிர் வினைகளை நாம் அவ்வப்போது சந்திக்கும் பெருமழை, புயல், காட்டுத் தீ, புவி வெப்பமயமாதல், கொரானா போன்ற புதிய நோய்கள் வழியாக சந்தித்து வருகிறோம். தற்போது விண்வெளியான அண்ட சாராசரங்களை நம் பொருளாதார ஆதாயத்திற்காக அழிக்கத் துணிவது மனித குலத்திற்கே மிகப் பெரிய பேரழிவைத் தான் ஏற்படுத்தும். அது மீளமுடியாத அழிவாகவும் மாறும்.