Site icon சக்கரம்

சனாதனம் என்றால் என்ன?

– அ.அன்வர் உசேன்

னாதன தர்மம்’ எனும் பதம் 19ஆம் நூற்றாண்டில்தான் உருவானது எனவும் அதனை முதலில் பயன்படுத்தியது ‘இந்துமத சீர்திருத்தவாதிகள்’ எனவும்  கூறுகிறார் இந்து மத ஆய்வாளர்  பேராசிரியர் ஆடுரே டுருஷ்கே. வேதங்களிலோ அல்லது உபநிடதங்களிலோ சனாதனம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதே போல வேத மரபுகள் நிலவிய பொழுது அதற்கு எதிராக செயல்பட்ட அல்லது ஆதரவாக செயல்பட்ட எந்த தத்துவப் பிரிவிலும் சனாதனம் குறித்து எதுவும் கூறப்படவில்லை. சனாதனத்தை இந்து  மதத்துக்கு இணையானது என்கிறார் ஆர்.எஸ்.எஸ்  தலைவர் மோகன் பகவத். ஆனால், அதே ஆர்.எஸ்.எஸ்-சின் தீனதயாள் உபாத்யாயா தனது “ஒருங்கிணைந்த மனிதம்’ எனும் முக்கிய ஆவணத்தில் சனாதனம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. சனாதனம் இந்து மதம் முழுமையையும் குறிக்கிறது எனவும் அது வாழ்வியல் முறை எனவும் இன்றைக்கு கூறுபவர்கள், அந்த சொற்றொடர் ஏன் பல  ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட வில்லை என்பதையும், ஏன்  இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு காலனிய ஆட்சியில் தான் பயன் படுத்தப்பட்டது என்பதையும்  விளக்கத் தயாராக இல்லை.

சனாதனம் குறித்து இஸ்கான் இயக்கம் தனது இணைய பக்கத்தில் எழுதியுள்ளது; தர்மங்கள்  இரு வகைப்படும் என பிரிக்கிறது. ஒரு வகை  சனாதன தர்மம்- இது ஆன்மீக மனதுடன் தொடர்புடையது; இன்னொன்று வர்ணாசிரம தர்மம் – இது ஒருவரின் வாழ்க்கை கடமையுடன் தொடர்புடையது. ஒவ்வொரு வர்ணத்தவரும் அவருக்கு இடப்பட்ட கடமையை செய்வது.  சனாதன தர்மமும் வர்ணாசிரம தர்மமும் பிரிக்க முடியாதவை என்பதே இதன் பொருளாகும். வர்ணாசிரம தர்மம் என்பது வர்ண படிநிலைகளை கொண்டுள்ளதால் அது மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை வரையறுக்கிறது. இதனை பா.ஜ.க.  அண்ணாமலை தெளிவாகவே ஒரு  காணொலியில் குறிப்பிடுகிறார். அவர் கூறுவது: “தர்மம் என்பது என்ன? இந்த வார்த்தை மனுஸ்மிருதியிலிருந்து பெறப்படுகிறது. உனக்கு தரப்பட்ட, உனது சமூகத்துக்கு தரப்பட்ட, உனது சாதிக்கு தரப்பட்ட கடமையை நீ செய்ய வேண்டும். அதுதான் தர்மம் என்பது”. ஆகவே ஒரு சாதியினர் தனக்கு மேலே உள்ள சாதியினரின் பணியை செய்ய நினைக்கக் கூடாது. தனது சாதிக்கு இடப்பட்ட கடமையை மட்டுமே செய்ய வேண்டும். இதனையே பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்த பொழுது துப்புரவுப் பணியாளர்கள் செய்யும் பணி அனைத்தும் அவர்களுக்கு கடவுள் இட்ட பணியாக இன்பத்துடன் செய்கின்றனர் என குறிப்பிட்டார். அவரது உரையிலிருந்து பின்னர் இந்த வாக்கியங்கள் நீக்கப் பட்டாலும் பா.ஜ.க. தலைவர்களின் எண்ணம் என்ன என்பதை இது பறைசாற்றியது. 

வர்ணாசிரமத்தின்  பொருளாதார அடிப்படை

சனாதன தர்மத்துக்கு வேதங்கள் மற்றும்  உபநிடதங்கள் தான் வேர்கள் என அதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அந்த கோட்பாடு களுக்கு சட்டவரைவுகளை உருவாக்கியது ஸ்மிருதிகள்.  ‘ஸ்மிருதி’ என்பது, வேத காலத்தில் வாழ்வியலை வரையறை செய்ய, மனு போன்ற  நபர்களால் எழுதப்பட்ட குறிப்புகள். யக்ஞவல்வக்ய ஸ்மிருதி/ கவுதம ஸ்மிருதி/ நாரதா ஸ்மிருதி/ மனு ஸ்மிருதி ஆகிய அனைத்து  ஸ்மிருதிகளும் வர்ணாசிரமத்தை வலுவாக முன்வைத்தன. கீழ்நிலை சூத்திரர்கள் மற்ற அனைத்து வர்ணத்தாருக்கும் சேவை புரியவே கடமைப்பட்டவர்கள் என வரையறுத்தன. இந்த ஸ்மிருதிகள் உருவான காலம் இந்திய சமூகம்  குறிப்பாக ஆரியர்கள் மேய்ச்சல் சமூகத்தி லிருந்து விவசாய சமூகத்துக்கு பரிணமித்த காலகட்டம். மேய்ச்சல் சமூகமாக இருந்தவரை உபரி உற்பத்தி இல்லை. எனவே அதனைப் பறிக்கும் தேவையும் இருக்கவில்லை. ஆனால்  விவசாய சமூகமாக மாறிய பின்னர் உபரி உற்பத்தி உருவானது. அதனை அபகரிக்க சிறு கூட்டம்  தோன்றியது. இதனை கேள்வி கேட்காமல் இருக்க அரசு எனும் அடக்குமுறை கருவி உருவானது. அரசு அடக்குமுறைகள் மூலம் எதிர்ப்புகளை அடக்க முயன்ற அதே நேரத்தில் அதனை கருத்தியல் அடிப்படையில் நிலைநிறுத்த சட்டக்குறியீடுகள் ஸ்மிருதிகள் மூலம் உருவாக்கப்பட்டன. இந்த சட்டக்குறியீடுகளை ஸ்மிருதிகள் உருவாக்கிய பொழுதுதான் அதன் அடிப்படையாக வர்ணாசிரமம் தோன்றியது.  வர்ணாசிரமம் மூர்க்கத்தனமாக உபரி உற்பத்தியாளர்களான சூத்திரர்களை ஒடுக்க சட்டகுறியீடுகளை வரைந்தது. கவுதம ஸ்மிருதி கீழ்கண்டவாறு கூறுகிறது:

“நேர்மை/தன்னடக்கம்/எளிமை ஆகி யவையே சூத்திரனின் குணங்களாக இருக்க வேண்டும். மற்ற வர்ணத்தினருக்கு சேவை செய்வதன் மூலம் மட்டுமே சூத்திரன் வாழ வேண்டும். உயர் வர்ணத்தார் பயன்படுத்திய செருப்பு/குடை/ துணி ஆகியவற்றையே சூத்திரன் பயன்படுத்த வேண்டும். அவர்களின் எச்சத்தையே சாப்பிட வேண்டும்.” மேலும் கூறுகிறது: “சூத்திரன் வேதங்களை கேட்டுவிட்டால் அவன் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றப்பட வேண்டும். வேதங்களை சொன்னால் நாக்கு துண்டிக்கப்பட வேண்டும். வேதங்களை மனனம் செய்தால் துண்டு துண்டாக சூத்திரன் வெட்டப்பட வேண்டும்.” மனுஸ்மிருதி பெண்கள் குழந்தைகள் பெற மட்டுமே தகுதியானவர்கள் எனவும் குழந்தை பருவத்தில் தந்தையின் பராமரிப்பிலும் திருமணத்துக்கு பின்னர் கணவனின் பராமரிப்பிலும் முதிய வயதில் மகனின் பராமரிப்பிலும் இருக்க வேண்டும் எனவும் வரையறுக்கிறது. பெண்ணுக்கு எவ்வித சுதந்திரமும் இல்லை என்பதே இதன் பொருள். ஸ்மிருதிகள் முன் வைத்த இந்த கொடூரமான, காட்டுமிராண்டித் தனமான கருத்துகள் இன்றும் பல வடிவங்களில் நடைமுறையில் உள்ளன. எனவே சுயமரியாதை உள்ள எந்த மனிதரும் வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. சனாதன தர்மத்தை ஆதரிக்கும் எவரும் வர்ணாசிரம தர்மத்தை நிராகரிக்க முன்வரவில்லை. சனாதன தர்மம் வர்ணாசிரமத்தையும் உள்ளடக்கியது என்பதால் அந்த சனாதன தர்மம் அகற்றப்பட வேண்டும் என்று வலுவாக குரல் எழுகிறது. சனாதனத்துக்கு எதிராக குரல் எழுப்புவது சமத்துவத்துக்கான குரல்தான்!

Exit mobile version