-பெல்சின் சினேகா
பத்திரிகையாளர், சமூக செயற்பாட்டாளர், தொகுப்பாளர், கவிஞர் எனப் பல பரிமாணம் கொண்ட இளம் படைப்பாளி சினேகா பெல்சின் ஓகஸ்ட் 28ந் திகதி தன் வாழ்வின் இறுதிப் பக்கத்தினை முடித்துக் கொண்டார்.
அவள் எப்படியும் போகத்தான் போகிறாள் என்று தெரிந்துகொண்டாளோ என்னவோ. ஓகஸ்ட் மாதம் முழுவதும் என்னை அவளோடு இருக்கச் சொல்லி நச்சரித்தாள், சாப்பிடாமல் அடம் பிடித்து ஊட்டிவிடச் சொன்னாள், பள்ளி செல்லும் பெண் போல தலைவாரிவிடச் சொன்னாள், இரவில் என்னைக் கட்டிக்கொண்டு படுத்தாள், நடு இரவில் எழுந்து ரஜினிகாந்த் பேசிய விடியோ பார்த்துக் கொண்டிருந்தாள்.. சினேகா.. இனிய, அழகான, புத்திசாலியான, அறியா குழந்தை!!! அவளை நான் உலகளவு நேசித்தேன். சினேகா பெல்சின்! ஓம். அந்த சின்ன பெண் மிகவும் வித்தியாசமானவள். அவளை என் மகளாய் நான் நேசித்த அளவுக்கே, அவளை ஒரு ஆளுமையாகவும் நேசித்தேன்.
புத்தகங்கள் அவள் உயிர். வாசிப்பதை நேசித்தாள். டாக்டர் அம்பேத்கரின் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தாள். நிறைய எழுதினாள். முடிந்தவரை அவளது கருத்துகளை விடியோவாகப் பதிவு செய்திருக்கிறாள். வயது வித்தியாசமின்றி நிறைய நட்பு பாராட்டல்கள் வைத்திருந்தாள். சில குறும்படங்கள் எடுத்திருக்கிறாள். திரைப்படங்கள் மீதும் பயணங்கள் மீதும் தீராத காதல் கொண்டிருந்தாள்.
பத்திரிகையாளராக இருந்தாள், என் அன்பு மகள். அவள் எழுத ஆரம்பித்த போது அவள் வயது 16 தான். ஒவ்வொரு புத்தாண்டிற்கும் சினேகாவின் அப்பா, சினேகாவின் தங்கை ஸ்வேதா, சினேகா மூவருக்கும் ஒரு டைரி வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தேன். அவற்றையெல்லாம் எழுத்தால் நிறைத்தாள். அவற்றில் தன்னைப் பற்றி அவள் எழுதியது மிகக் குறைவு. அத்தனை தீர்க்கமான சமூக சிந்தனை இருந்தது அவளிடம். கண்ணில்பட்ட சமூகத்தின் குற்றம் குறைகளை சுட்டி காட்டுவதில் சாதி மத பேதமின்றி சமரசம் என்ற பேச்சுக்கே இடமும் இன்றி சவால்களுக்கு சவால் விட்டு தனித்துவமாய் திகழ்ந்தாள். அழகாக அறிவாக, கவிதையாக அவளுக்கிருந்த சமூக கோபங்களை எழுதினாள். அவளைப் பார்த்து வியந்தவர்களுள் நானுமே ஒருத்தி.
அவள் தங்கை ஸ்வேதா 14 வயதில் உயர் ரத்த நோயால் போராடி ஜன்னல் அடைக்கும் சத்தம் கேட்டாலே பதறி, வலி அனுபவித்து 2016-ல் ஏப்ரல் 2-ம் தேதி இறந்துபோனாள். அன்று நான் அழுதபோதெல்லாம் என் கைபிடித்து கண்ணீர் துடைத்து என்னை நெடுந்தொலைவு பயணம் அழைத்து போய் கடற்கரையில் கால்களை நனைத்து அந்த துன்பங்களைக் கொஞ்சம் கடக்க என் உடன் இருந்தவள் சினேகா. சில நாள்கள் இரவு முழுவதும் என் வலது கையில் ஸ்வேதாவும் இடது கையில் சினேகாவும் படுத்திருப்பார்கள். இப்போது தனிமையையும் இழப்பையும் கடப்பதற்கு என்னைத் தொலைதூரம் அழைத்துச் செல்ல சினேகா உடன் இல்லை என்றுகூட எனக்கு புரிபடவில்லை. எங்கோ சென்னையில் வேலையில் இருக்கிறாள், வந்துவிடுவாள் என்று என் மனம் நம்பிக்கொண்டிருக்கிறது.
சினேகா “மன அழுத்தம்” என்ற சிக்கலுக்காக மருத்துவம் மேற்கொண்டு கடைசி வரை அதிலிருந்து வெளிவரப் போராடினாள். அவள் உயிரோடு இருந்த வரை “மன அழுத்தம்” நோய் என்று நான் நம்பவில்லை. இந்தக் கால இளைஞர்கள் சொல்லும் வெறும் வார்த்தை என்று நினைத்திருந்தேன். உண்மையில் மன அழுத்தம் என்பது உயிரை பறிக்கும் ஒரு மோசமான நோய் என்பதை அவள் மரணித்து எனக்குப் புரிய வைத்திருக்கிறாள்.
மன அழுத்தம் ஒரு தனி நபர் பிரச்னையல்ல. ஒரு சிட்டுக் குருவியாய் சுதந்திரத்தை மனதில் உணர்ந்த ஒருத்தியால், அதை இந்த உலகத்தின் கட்டமைப்புகளுக்குள் நிகழ்த்திப் பார்க்க முடியவில்லை. குறுகிய பார்வை, குரூரமான சிந்தனை, சுயநலம், அரசியலற்ற சூழல், ஆணாதிக்கம் இவற்றால் நிறைந்த உலகத்தில் சுதந்திரத்தை நேசிப்பவர்கள் இறப்பது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை என்று சொல்லிக் கொள்வது நம்மை நாமே நியாயப்படுத்திக் கொள்ள போதுமானதாக இருக்கலாமேயொழிய, உண்மையாகாது என்பதை உணர்த்தி சென்றிருக்கிறாள் என் மகள்.
சினேகாவின் இறப்பு இரக்கமற்றது, நியாயம் இல்லாதது. உண்மையில் இந்த துன்பத்தைக் கடப்பதற்கு சில நண்பர்கள் உதவுகிறார்கள். பலர், உறவினர்கள் துக்கம் விசாரிப்பது போல், சுவாரஸ்யமான பதிலை என்னிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு சினேகா அவள் டைரிக்குறிப்பில் ரோஹித் வெமுலாவின் இறுதிக் கடிதத்தின் சில வரிகளை எழுதியிருப்பதில் பதிலளித்திருக்கிறாள்.
“என் மரணத்திற்கு பிறகு என்னை என்னவென்று அழைப்பார்கள் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. மரணத்திற்கு பிறகான கதைகள், ஆன்மாக்களில் எனக்கு நம்பிக்கை இல்லை நான் ஏதேனும் ஒன்றை நம்புவேன் என்றால் அது என் மரணத்திற்கு பிறகு என்னால் நட்சத்திரங்களுக்குள் பயணிக்க முடியும் என்பதுதான்.
” சினேகா ஒரு மின்னல் கீற்று போல மறைந்து போயிருக்கலாம். நிறைய இளைஞர்கள் அவள் கருத்துகளை சமூக பார்வையை ரசித்து கொண்டாடி இருக்கிறார்கள் என்பது எனக்குப் பெரும் மகிழ்ச்சியே. அவள் மரணத்தின் பிரிவின் வலியில் நான் தவித்தாலும் அவள் வெற்றிகளை கொண்டாடுகிறேன். காரணம் 40, 50 வயதை கடந்தும் எதையும் சாதிக்காமல் வெறுமனே வாழும் மக்களின் மத்தியில், நம் வீட்டிற்கு அடுத்த வீட்டில் யார் வாழ்கிறார்கள் என்பதை கூட தெரிந்துகொள்ள விருப்பமில்லாத இந்த சுயநலம் நிறைந்த சமூகத்தில், பிரச்சினைகள் குறித்து சமரசம் இன்றி குரல் கொடுத்தாள்.
கண்ணியத்தோடு பெண்கள் வாழவே பெண்ணியம் பேசினாள். இப்படியான என் செல்லப் பெண் அவளுக்காக வாழ்ந்த என்னை ஏனோ மறந்தாள். ஒருவேளை மனிதர்கள் வாழும் இந்த மண்ணுலகில் மனுஷியாக வாழ பிடிக்காத அவள் தேவர்கள் வாழும் அந்த விண்ணுலகில் தேவதையாக வாழச் சென்றிருப்பாளோ!
எதையேனும் கூறி என் மகளின் இழப்பை கடக்க முயன்றாலும், இந்த உலகம் இழந்துவிட்ட ஓர் அறிவுப் பெட்டகத்தின் இழப்பை நான் கடக்க முடியாது. அன்பு மகளே, போய் வா! நட்சத்திரங்களுக்கிடையே நாம் சந்திக்கும் போது நீ சென்ற பிறகு நிகழ்ந்தவற்றை இரண்டு கோப்பை பிளாக் டீ அருந்தியபடி பேசிக்கொள்வோம்!
(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் பணியாற்றி மறைந்த இளம் பத்திரிகையாளர் சினேகா பெல்சின் பற்றி தாயின் அஞ்சலிக் குறிப்பு)