–பேராசிரியர் ய. மணிகண்டன்
இருபதாம் நூற்றாண்டின் வைகறைப் பொழுது. தமிழ்மண்ணை மூடிக் கிடந்த மூட இருள் உட்பட மொத்த இருளையும் அகற்றி விரட்டும் அதிசய நிகழ்வு அரங்கேறியது. எட்டயபுரத்தில் தோன்றிய ஓர் எழு ஞாயிறு இன்றமிழ் வானின் திசைகள் அனைத்தையும் கவிதை, வசனகவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, இதழியல், கருத்துப்பட உருவாக்கம், நாடகம், சொற்பொழிவு, பாடல் இசைத்தல், ஆங்கில ஆக்கம் என அலகில் சோதியால் ஆரத் தழுவியது. அதன் ஒருமுகம் கண்டால் கவி ஞாயிறு. ஒட்டுமொத்தத் திருமுகமும் கண்டால் தமிழ் ஞாயிறு.
கவிதைக்கலையில் மட்டுமல்ல, கதைக்கலையிலும் முன்னோடி மகாகவி பாரதியார். உலக இலக்கியங்களின் உன்னதப் படைப்புகளையெல்லாம் உற்று நோக்கிவந்த பாரதி தமிழ் மொழியில் சிறுகதைத்துறை சிற்றடி வைத்து நடந்த சிறுபருவத்திலேயே சாதனைகள் பல புரிந்திருக்கின்றார். கவித்துவத்தையும் புதுமைச் சிந்தனைகளையும் குழைத்து உரைநடையில் அவர் தீட்டிய கதைச்செல்வங்கள் கவின்சிற்பங்கள்.
“துளஸீ பாயி’, “ஸ்வர்ண குமாரி’, “வேப்பமரம்’, “காந்தாமணி’, “ஒரு காக்கை கவிபாடிய கதை’ “மிளகாய்ப்பழச் சாமியார்’, “பஞ்ச கோணக் கோட்டையின் கதை’, “ஆறிலொருபங்கு’, “ஞானரதம்’, “நவதந்திரக் கதைகள்’, “சின்னச் சங்கரன் கதை’, “சந்திரிகையின் கதை’ – இவையெல்லாம் சிறுகதையாய், நெடுங்கதையாய்ப் பாரதி புனைகதைத்துறைக்கு முன்னோடி நிலையில் வழங்கிய கொடைகள்.
தமிழின் சிறுகதை வரலாறு எந்தப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது? தமிழின் முதல் சிறுகதை எது? முதல் சிறுகதையைப் படைத்தவர் யார்? இலக்கிய வரலாற்றிலும் இலக்கிய உலகிலும் அடிக்கடி தோன்றும் விவாதப்பொருள் இது. முதல் சிறுகதையாகப் பலரால் முன்மொழியப்படும் வ.வெ.சு. ஐயரின் “குளத்தங்கரை அரசமரம்’ 1915 இல் வெளிவந்தது, தாகூரின் கதையைத் தழுவி அமைந்தது என்பதால் இப்போது மாற்றம் பெற வேண்டிய பழைய வரலாறாகிவிட்டது.
பாரதியின் முதல் சிறுகதை எது? தமிழின் முதல் சிறுகதைக்கும் பாரதியின் முதல் சிறுகதைக்கும் தொடர்பேதும் இருக்கக்கூடுமா? 1905 நவம்பர் மாதம். பாரதிக்கு வெறும் 23 வயது. “சக்ரவர்த்தினி’ இதழில் வெளிவரத் தொடங்கிய “துளஸீ பாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்னும் சிறுகதைதான் இதுவரை கிடைத்துள்ள அவரது கதைகளில் முதலாவது. காலத்தால் முந்தைய கதை நேர்த்திகொண்ட தமிழ்ச் சிறுகதையும் இதுவே எனலாம்.
நிலப்பரப்பில் வடநாட்டுச் சூழல், காலப்பரப்பில் அக்பரின் ஆட்சிக்காலம், கதைப்பரப்பில் சமூகத்தின் பழைமைப் போக்கில் கணவனை இழந்த பெண்ணை உடன்கட்டை ஏற்றும் கொடுமை, இந்து-முஸ்லிம் என்னும் மத பேதம் கடந்து நேசம் மிளிரும் காதல், காதலின் வெற்றி, விதவை மறுமணம் என அத்தனை பரிமாணங்களிலும் பாரதியின் கவித்துவமும் புதுமைக் கருத்தியலும் திகழும் கதையோவியம் இது.
முதற்கட்டத்தில் இந்தக் கதை உரிய கவனத்தைப் பெறவில்லை. எழுத்தாளர் மாலன் இந்தக் கதையின் காலம், கதையின் நேர்த்தி ஆகியவற்றை முதலில் கவனப்படுத்தியிருந்தார். எனினும் “இந்தக் கதைக்குள் பாரதி படைத்த ஒரு சிறு கவிதையும் ஷேக்ஸ்பியரின் கூற்று ஒன்றின் மேற்கோளும் இடம்பெற்றிருந்ததால் முதல் சிறுகதையாக ஏற்பதில் ஆய்வாளர்களுக்கிடையே தயக்கம் இருந்தால், 1910 இல் வெளிவந்த பாரதியின் “ஆறிலொரு பங்கு’ சிறுகதையைத் தமிழின் முதல் சிறுகதையாகக் கொள்ளலாம்’ என்று அவர் எழுதியிருந்தார்.
பேராசிரியர் க. பஞ்சாங்கமும், ஈழத்துப் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானும் பாரதி படைத்த “துளஸீ பாயி’யின் காலப் பழைமையையும், கதைக்கலையின் புதுமையையும் வியந்தும் விதந்தும் எடுத்துரைத்து இக்கதையின் முக்கியத்துவத்தை அண்மையில் விரிவாக விளக்கியிருக்கின்றனர்.
இவ்வாறு இக்கதை கவனப்படுத்தப்பட்டுள்ள சூழலில் தமிழின் முதல் சிறுகதை, முன்னோடிச் சிறுகதை எனப் பாரதியின் இந்தச் சிறுகதையை முடிவுசெய்துவிடலாமா என்று எண்ணிப்பார்க்கும் வேளையில், இன்று பாரதியியலில் அதிகம் கவனம்பெறாத, ஆயினும் கவனம் பெறவேண்டிய ஒரு செய்தி இடையீடு செய்கிறது. இணையக்குழு ஒன்றில் ஹரிகிருஷ்ணன், நா. கணேசன் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு பகிர்ந்திருந்த ஒரு செய்தி பாரதி ஆய்வில் திளைக்கும் என் கவனத்திற்கு வந்தது.
அது, மைக்கேல் மாக்மில்லன் என்பவர் பெயரில் 1901 இல் “ப்ளாக்கி அண்டு சன்’ வெளியிட்ட கதைத்தொகுப்பில் உள்ள முதல் கதையைப் பாரதியார் “துளஸீ பாயி’ கதையாக மொழிபெயர்த்துள்ளார் என்பதே ஆகும். இந்தச் செய்தியைக் கண்ட நான் அதிர்ச்சியும் ஆச்சரியமும்கொண்டு ஆங்கில மூலத்தைத் தேடிக் கண்டடைந்தேன். உண்மைதான், பாரதியின் துளஸீ பாயி அந்த ஆங்கில வடிவ மூலத்திலிருந்துதான் முகிழ்த்திருக்கின்றாள்.
ஆனால், முழுமையாக ஆங்கில வடிவத்தைப் படித்தபோது பாரதி படைப்பின் சுயம் வசப்பட்டது. ஆம், “சக்ரவர்த்தினி’ இதழில் வெளிவந்த பாரதியின் “துளஸீ பாயி’ கதையும் ஆங்கிலக் கதையும், சரிபாதி குறிப்பிடத்தக்க நிலைகளில் ஒத்துச் செல்லும் பகுதியையும் சரிபாதி வேறுபட்ட பகுதியையும் கொண்டிருக்கின்றன. முதற்பகுதி கணிசமாக ஆங்கில வடிவத்தை அடியொற்றிச் செல்கிறது. பிற்பாதி முழுவதும் பாரதியின் சொந்தப் புனைவாகச் சுடர் வீசுகிறது.
எனவே இந்தப் படைப்பு முழுமையான மொழிபெயர்ப்பில்லை என்பது தெளிவாகின்றது. ஒத்துச் செல்லும் முற்பகுதிகூட, வெறும் மொழிபெயர்ப்பாக இல்லாமல் பாரதியின் கைவண்ணத்தில் அங்கங்கே மாற்றம் பெற்ற பகுதிகளைக் கொண்ட நிலையில் மலர்ந்துள்ளது.
மைக்கேல் மாக்மில்லன் எழுதிய ஆங்கில வடிவம்கூட வடநாட்டில் வழங்கிய கதையின் ஆங்கில வடிவமாகவே இருத்தல் வேண்டும். முகலாய அரசர் அக்பரின் ஆட்சிக்காலத்தில், அவருக்குக் கட்டுப்பட்ட சிற்றரசர் ஒருவரின் மகன் அப்பஸ்கான் என்பவனாவான். அவன் அக்பர் மேற்கொண்ட ஒரு படையெடுப்பில் பங்கேற்கச் சிறு படையுடன் ரோகிணி நதிக்கரை வழியாகச் சென்று கொண்டிருக்கிறான். அப்போது அவனுக்குமுன் இன்னொரு சிறுபடை சென்று கொண்டிருக்கிறது. அதன் நடுவில் மூடுபல்லக்கில் ரஜபுத்திரக் கன்னியாகிய துளஸீ பாயி.
பாலிய விவாகத்திற்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் ஊரை நோக்கி அந்தப் பல்லக்குச் சென்றுகொண்டிருக்கிறது. திடீரெனக் கள்வர்கள் பல்லக்கைத் தாக்கித் துளஸீ பாயி அணிந்திருந்த ஆபரணங்களை அபகரிக்கத் தொடங்குகின்றனர். தனித்திருந்த துளஸீ பாயியை அப்பஸ்கான் காப்பாற்றுகின்றான். துளஸீயின் பயணம் தொடர்கின்றது. இருவருக்கிடையிலும் கணச்சந்திப்பிலும் கணப்பிரிவிலும் நேசம் பரிமாறிக் கொள்ளப்படுகிறது. பிரியும் தருணத்தில் மரபான கட்டுப்பாடுகளை மீறி அப்பெண் தன் கணையாழியை அப்பஸ்கானுக்கு அளிக்கிறாள்.
ஓராண்டு உருண்டோடுகிறது. போர்வெற்றிக்குப்பின் அப்பஸ்கான் அதே ரோகிணி நதிக்கரை வழியாகத் துளஸீ பாயியின் நினைவுகளோடு மீள்கிறான். அப்போது ஒரு பெண்ணின் கூக்குரல். நதிக்கரை மயானம். இறக்கி வைக்கப்பட்ட பாடை. ரஜபுத்திரக் கூட்டம். அப்பஸ்கானுக்கு எல்லாம் புரிந்துவிடுகிறது. அந்தக் காலத்தில் கணவன் இறந்ததும் மனைவியை உடன் நெருப்பிலிட்டு எரிக்கும் வழக்கம் நிலவிவந்ததையும், பெண்ணின் விருப்பமின்றி அச்செயல் நிகழ்வதைச் சக்கரவர்த்தி அக்பர் தடைசெய்திருந்ததையும் நினைவில்கொண்ட அப்பஸ்கான் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.
அக்பரின் ஆணை மீறப்படுகிறதா, பெண்ணின் விருப்பத்தை மீறி எரியூட்டல் நடக்கிறதா எனக் கவனிக்க முனைகிறான். உடன்கட்டையேறவிருந்த பெண்ணின் முகத்தை நோக்கிய அவன் திடுக்கிடுகிறான். ஏனெனில் அவள் துளஸீ பாயிதான். உடன்கட்டை ஏற விரும்பாத அவளுடைய நிலையை உணர்ந்து காக்க முனைகிறான் அப்பஸ்கான். உடனிருந்தோருக்கும் அவனுக்குமிடையில் சண்டை நிகழ்கிறது. அந்தச் சூழலில் மயங்கி விழுந்த துளஸீ பாயியைக் காப்பாற்றித் தனது அரண்மனைக்குக் கொண்டு செல்கிறான் அப்பஸ்கான்.
தனக்கு அந்நியமான முஸ்லிம் இளவரசனின் அரண்மனையில் கண்விழிக்கும் துளஸீ பாயி முதலில் சரியாகப் புரிந்துகொள்ளாமல் அப்பஸ்கானிடம் வெறுப்பை உமிழ்கிறாள்; கடுமையாக நடந்து கொள்கிறாள். அப்பஸ்கான் நடந்தவற்றையெல்லாம் துலக்கிக்காட்ட அவனது தூய உள்ளத்தையும் தூய அன்பையும் உணர்ந்து அவன்மேல் காதல் கொள்கிறாள். மத பேதங்களைத் தாண்டி இருவரும் ஒன்றிணைகின்றனர் – இதுதான் பாரதியின் “துளஸீ பாயி’ கதையின் சுருக்கம்.
ஆங்கில வடிவத்திலோ துளஸீ பாயி முதலில் விதியையும், உடன்கட்டை ஏறாமல் வாழ நேர்ந்தால் படவேண்டிய கொடுமைகளையும் நினைந்து உடன்கட்டை ஏற உடன்பட்ட நிலையில் இருக்கின்றாள். ஆனால் மயானத்தில் அப்பஸ்கானைக் கண்டதும் உயிர்வாழும் ஆசை எழுகிறது. மேலும் இடுகாட்டில் துளஸீ பாயி மயங்கி விழுவதாகவும் காட்டப்படவில்லை. அவளைக் காப்பாற்றிக் குதிரையில் ஏற்றிக்கொண்டு தனது நாட்டுக்குச் சென்று அப்பஸ்கான் அவளை மணந்துகொள்கிறான் என உடனடியாகக் கதை முற்றுப்பெற்று விடுகிறது.
பாரதியின் கைவண்ணத்திலோ கதை சரிபாதி அளவு புதிதாகப் படைக்கப்படுகிறது. இருவருக்குமான உரையாடல், துளஸீ பாயி முதலில் அவனைப் புரிந்துகொள்ளாத நிலை, பின்னர்ப் புரிந்துகொள்ளுதல், அழகிய திருப்பங்கள், விளக்கங்கள், இருவரும் ஒன்றாதல் எனக் கதை புதுப்பரிமாணம் பெறுகிறது. முற்பாதியை ஆங்கில மூலத்தைத் தழுவியது என்று சொல்லும் நிலையும் பிற்பாதியைப் பாரதியின் புதுப்புனைவு என்று சொல்லும் நிலையுமாகக் கதை இரு பரிமாணங்களில் இயங்குகின்றது. இது ஒரு புதுமை. பாரதியார் இந்தக் கதைக்குள் ஆங்காங்குக் கதைக்கலைஞராகத் தானே தோன்றி வாசகர்களுடன் உரையாடும் உத்தியையும் மேற்கொள்கின்றார். பரம விரோதிகள் என்ற எதிரெதிர் நிலையிலிருக்கும் முஸ்லிம் இளைஞனும் ரஜபுத்ரப் பெண்ணும் காதல் கொள்வதா என எவருக்கேனும் ஐயம் எழுமெனில் இதோ என் விடை, இதுதான் இயற்கை நியதி எனக் கதைக்குள் வந்து பாரதி இப்படிக் கூறுகின்றார்:
“இந்தச் சிறுகதையைப் படிப்போர்களுக்கு இது சிறிது ஆச்சரியமாகத் தோன்றக்கூடும். பரம்பரையாக மகமதிய துவேஷிகளான மஹாவீரர்களின் குலத்திலே ஜனித்த துளஸீ தேவிக்கு அவளது ரத்தத்திலேயே மகமதிய வெறுப்பு கலந்திருந்தது. உறக்கத்திலேகூட மகமதியனொருவனைக் கொலை புரிவதாகக் கனவு காணக்கூடிய ஜாதியிலே பிறந்த இந்த வீர கன்னிகை மகமதியனை விவாகம் செய்து கொள்ள நிச்சயிப்பது அசம்பாவிதமென்று நினைக்கக்கூடும்.
ஆனால், அப்படி நினைப்பவர்கள் காதலின் இயற்கையை அறியாதவர்கள். காதல் குலப்பகைமையை அறியமாட்டாது. காதல் மத விரோதங்களை அறியமாட்டாது. காதல் ஜாதி பேதத்தை மறந்துவிடும்’.
“சாதி மதங்களைப் பாரோம்’, “சாதிகள் இல்லையடி பாப்பா’ என்றெல்லாம் தமிழ்ச் சமூகத்தில் புரட்சிக் கருத்துகளை, சீர்திருத்தக் கருத்துகளைக் கவிதையில் முழங்குவதற்கு முன்பே அன்பின் ஒளியில் சாதி மத வேறுபாடுகள் அகலும் என்னும் கருத்தைக் கதைப்படைப்பின் வாயிலாகப் பாரதி விதைத்திருப்பதனை இந்தக் கூற்றுகள் முரசறைகின்றன.
பாரதியின் இந்தச் சிறுகதையை முற்றாக மொழிபெயர்ப்பாக இல்லாத நிலையில், மொழிபெயர்ப்பின் அடிப்படையிலான பாதி – சொந்தப் படைப்புப் பாதி என்று கொள்வதினும் பாரதியின் புதுமைப் படைப்பு என்று கொள்வதே சரியானதாக அமையும். அந்த வகையில் பாரதியின் “துளஸீ பாயி’ சிறுகதை தமிழின் முதல் சிறுகதையாக முன்னோடி முகம் காட்டுகின்றது. கதையமைப்பு, சிறுகதைக்குள் கவிதைநயம், இந்திய மறுமலர்ச்சிக்காலச் சூழலுக்கேற்ற முற்போக்குக் கருத்துகள், மதம் தாண்டிய மானுட சங்கமம், காதலின் மேன்மை என அற்புதப் படைப்பாக இதைப் பாரதி படைத்திருக்கிறார்.
பாரதியின் இந்தக் கதைக்கு முன்னோட்டமான ஓர் ஆங்கில வடிவம் இருப்பதைப் போலவே பின்னதாக ஒரு தமிழ் வடிவமும் பாரதியின் காலத்திலேயே தோன்றியிருக்கின்றது என்கிற அதிர்ச்சி தருகின்ற வரலாறும் அண்மையில் என்னால் கண்டறியப்பட்டுள்ளது. பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில், 1911 பெப்ரவரி மாதம் “சுதேசமித்திரன்’ இதழில் தொடராகப் பாரதியின் “துளஸீ பாயி’ சிறுகதை, “கமலாபாய் (ஓர் ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்)’ என்னும் தலைப்போடு வெளிவந்திருக்கிறது. இதில் பாரதியின் பெயர் இடம்பெறவில்லை.
மாறாக, சமகாலத்தில் திருவல்லிக்கேணியிலிருந்து வெளிவந்த “கமலாபாய் என்னும் சிறு புத்தகத்திலிருந்து எடுத்து வெளியிடப்படுகின்றது’ என்னும் குறிப்பு கதையின்கீழ் அளிக்கப்பட்டு வந்தது. பெப்ரவரி மாதம் முதல் தேதி “சுதேசமித்திர’னில் “கமலாபாய்’ என்னும் சிறுநூலின் மதிப்புரையும் வெளிவந்திருந்தது. இந்த மதிப்புரை, பாரதியின் “துளஸீ பாயி’ கதை, தலைப்பு மாற்றம் பெற்றுச் சிறுநூலாக வெளிவந்த வரலாற்றை வெளிப்படையாகச் சொல்லாத போதிலும் நாம் உணரத்தருகிறது.
பாரதியின் ஒற்றைச் சிறுகதையே ஒரு தனி நூலாக வெளியிடப்படும் அளவுக்குக் கதையழகாலும் கருத்தழகாலும் சமகாலத்திலேயே வரவேற்பைப் பெற்றிருக்கின்றது என்பதனை இந்த வெளியீடு உணர்த்துகின்றது. தனது கதை மீண்டும் புதிய அவதாரமெடுத்துத் தன் பெயர் இல்லாமல் தன் கதாநாயகியின் பெயரும் மாற்றம் பெற்று வெளிவந்ததனைப் புதுச்சேரியிலிருந்த பாரதி அறிந்திருந்தாரா என்பதை அறிய முடியவில்லை.
பாரதியின் “பாப்பா பாட்டு’, “வந்தே மாதர’ மொழிபெயர்ப்புப் பாடல் முதலியன பாரதியின் பெயரின்றியே சம காலத்தில் இதழ்களில் மறுவெளியீடு பெற்றிருக்கின்றன. பாரதியின் “ஸ்வர்ண குமாரி’ கதை அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் பெயரின்றி இன்னொரு வடிவத்தைப் பெற்று வெளிவந்திருக்கின்றது. இவையெல்லாம் பாரதி படைப்புலகின் ஆச்சர்ய வரலாறுகள். அந்த வரலாற்றில் “கமலாபாய்’ கதையும் இடம்பிடித்துவிடுகிறது.
தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் பாரதியின் “துளஸீ பாயி’ ஒரு நல்ல தொடக்கம். இந்தப் படைப்பு மூன்று பரிமாணங்களைப் பெற்றுள்ள வரலாறு பாரதியியலில் கண்டறியப்பட்ட புதிய பக்கங்களாக விரிகின்றன. கவிதைக்கலையில் சாதனைகள் நிகழ்த்தும் முன்பே கதைக்கலையில் கவித்துவம் மிளிரப் பாரதி முன்னடிகளை எடுத்து வைத்துவிட்டார் என்பதை, சிறுகதையின் முடிவில் வெட்கத்தால் தலைகுனிந்து புன்னகை பூத்த கதாநாயகி துளஸீ பாயி, சிறுகதை வரலாற்றில் தொடக்கம் நானெனும் பெருமிதத்தால் தலைநிமிர்ந்து புன்னகை பூத்து உறுதி செய்கின்றாள்.
(இன்று செப்டம்பர் 11ந் திகதி பாரதியார் நினைவுதினம்)