Site icon சக்கரம்

ஓசோன் என்னும் பாதுகாப்பு வளையம்

-காமாட்சி ஷியாம்சுந்தர்

லக ஓசோன் (Ozone) தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் திகதி கடைபிடிக்கப்படுகிறது.

ஓசோன் பூமியின் வளிமண்டலத்தை சுற்றி இருக்கும் மிக மெல்லிய படலம் ஆகும். இந்த ஓசோன் படலமே நம்மை சூரியனிடமிருந்து வரும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து பாதுகாத்துக் கொண்டு இருக்கிறது.

பூமியைச் சுற்றி காணப்படும் வளிமண்டல அடுக்குகள் ட்ரோபோஸ்பியர், ஸ்டிராடோஸ்பியர், மீசோஸ்பியர், தெர்மோஸ்பியர், எக்ஸோஸ்பியர். அதிக அளவு ஓசோன் படலமானது ஸ்டிரா டோஸ்பியரில் உள்ளது. ‘ஓ3’ (O3) என்று சொல்லப்படும் இந்த ஓசோன் மூன்று ஒட்சிசன் அணுக்களினால் ஆன ஒரு மூலக்கூறு ஆகும். பூமியின் பரப்பிலிருந்து கிட்டத்தட்ட ஆறு மைல்களில் இருந்து 31 மைல்களுக்கு பரவி உள்ளது.

ஓசோன் படல சிதைவு பற்றிய பயம் 1974 வரை ஏற்படவே இல்லை. Sherwood and Mario Molina 1974 இல் ஸ்டிராடோஸ்பியர் என்ற பூமியின் அடுக்கில் அதிக ஆற்றல் கொண்ட போட்டான்கள் குளோரோ புளோரோ கார்பன் (Chlorofluorocarbon) எனப்படும் வேதிப்பொருட்களால் O3 எனப்படும் ஓசோனை சிதைவடைய செய்யும் என்று கண்டுபிடிக்கும் வரை நமக்கு ஓசோன் படல சிதைவு பற்றிய பயமே இருந்தது இல்லை.

1985 முதல் 1988 வரை அறிவியலாளர்கள் தென் துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டு ஓசோன் படலத்தில் ஏற்பட்ட சிதைவு பற்றி கண்டறிந்தனர். ஆனால் இந்த ஓசோன் படல சிதைவு ஆரம்பமானது, 1970 தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டதாக நாசா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டால் 1989 இல் மிக முக்கிய ஒப்பந்தமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஓசோன் படலத்தின் சிதைவு: நாம் அன்றாடம் உபயோகிக்கின்ற ‘ஏசி’ (AC)மற்றும் குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளிவரும் குளோரோ புளோரோ கார்பன் மற்றும் பசுமை இல்ல வாயுக்கள் எனப்படுகின்ற கார்பன்-டை-ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, சல்பர் டைஆக்சைடு போன்றவற்றினால் ஓசோன் படலம் சிதைவடைகிறது.

வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, தொழிற்சாலைகளின் புகை மற்றும் தேவையற்ற பொருட்களை மண்ணிலிட்டு எரிக்கும்போது வெளிவரும் புகை இவற்றிலிருந்து பசுமை இல்லவாயுக்கள் வெளிப்படுகின்றன. இது ஓசோன்படலத்தில் மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்து கின்ற அளவிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளன. இந்த ஓட்டையின் வழியாக சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியை நேரடியாக வந்தடைகின்றன.

பூமியில் வாழும் உயிரினங்களுக்கு தோல் புற்றுநோய், கண் பார்வை கோளாறு போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கும், பூமியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்திற்கும் ஓசோன் படல சிதைவே காரணம் என்று அறிவியல் தரவுகள் தெரிவிக்கின்றன.

இவற்றிற்கு தீர்வுதான் என்ன ? – தீபாவளி, திருவிழா, திருமணம் போன்ற விழாக்களில் வெடிக்கும் பட்டாசுகளில் இருந்து வெளியேறும் புகை பூமியினை சூழ்ந்திருக்கும் வளிமண்டலத்தினை சிதைவடைய செய்கின்றன. இதைத் தடுக்க மரங்களில் இருந்து ஒளிச்சேர்க்கையின் போது வெளி வருகின்ற ஒட்சிசனை பற்றிய புரிதலை மாணவர்கள் ஆகிய இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மரங்களை பாதுகாக்கவும், வளர்க்கவும் செய்ய வேண்டும்.

“கர்ணனின் கவச குண்டலம் போன்ற

பூமியின் கவசமான

ஓசோன் படலத்தை

சிதைவுறாமல் பாதுகாத்து,

வருங்கால தலைமுறைக்கு

ஓசோன் கவசத்தை பரிசளித்திடுவோம்!

இயற்கையை நேசித்திடுவோம்!”

Exit mobile version