Site icon சக்கரம்

வள்ளலார் – 200: சனாதன எதிர்ப்பின் உச்ச நட்சத்திரம்

-எஸ். ஜி. ரமேஷ்பாபு

திருதராஷ்டிரஆலிங்கனம்:

”சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான், பல ரிஷிகளின் நூல்களைப் படித்துள்ளேன். அப்படி வள்ளலாரின் நூல்களை படித்தபோது, பிரமிப்பில் ஆழ்ந்தேன். அப்போது, 10,000 வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்பதைப் புரிந்துகொண்டேன். ஆனால் சிலர், சனாதன தர்மத்திற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நமது நாட்டின் பொருளாதாரத்தை ஆங்கிலேயர் சுரண்டியபோது தோன்றியவர் வள்ளலார். ஆங்கிலேயர்கள் பொருளாதாரத்தை மட்டுமல்ல; நமது ஆன்மீகத்தையும் சீர்குலைத்தார்கள். ஆயிரக்கணக்கான புதிய மதங்கள் வெளியே இருந்து வந்து நமது வழிபாட்டு முறையை அழித்தது.

பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் மொழிபெயர்க்கிறேன் என்று கூறி நமது நூல்களில் இருந்து ஆன்மீகத்தை அகற்றிவிட்டனர். 1857 இல் நியூயார்க் டைம்ஸ் என்றழைக்கப்படும் பத்திரிகையில் இந்தியாவில் நிலவும் சமூக கட்டமைப்பை அழிக்க வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் என்பவர் எழுதினார். அந்த காலகட்டத்தில் தோன்றியவர்தான் வள்ளலார்.”

மேற்கண்ட உரை தமிழகத்தின் ஆர்.எஸ்.எஸ் தலைமை பிரச்சாரகர் ஆர்.என்.ரவி அவர்களுடையது. அவர் கூடுதலாக தமிழக கவர்னர் வேலையும் செய்து வருகிறார் என்பதும் முக்கிய தகவல். 2023 ஜூன் 21 அன்று  கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜெயந்தி விழாவில் அவர் இவ்வாறு விஷம் கக்கியுள்ளார்.

51 வயது வரை மட்டுமே வாழ்ந்த, மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியும், சைவ மத புரட்சியாளருமான வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் 1823 ஒக்ரோபர் 5 அன்று பிறந்தார். 1874 ஜனவரி 30 அன்று மறைந்தார். “எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என உணர்த்தும் “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கத்தை” உருவாக்கியவர். சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்ததாலும், சாதிய பாகுபாடுகளை கடுமையாக சாடியதாலும் மாற்றத்தை விரும்பாத சனாதானவாதிகள் அவரை கடுமையாக எதிர்த்தனர்.

“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார், 1867இல் “சத்திய ஞான தர்ம சபை” என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது. இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் இலட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது.

எதிலும் பொது நோக்கம் வேண்டும்; பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்; மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும்.  இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது. வர்ணங்களின் அடிப்படையில்தான் பிறப்பு நிகழ்கிறது. ஒருவர் தான் நினைத்தாலும், வர்ணங்களை மாற்ற முடியாது. ஏன் வர்ணங்களை படைத்தவனே நினைத்தாலும் மாற்ற முடியாது என்பதுதான் மனுதர்மம். அதுதான் சனாதானத்தின் அடிப்படை. இதை எதிர்த்த வள்ளலாரை, சனாதான தர்மத்தின் உச்ச நட்சத்திரம் என்று அழைப்பதன் மூலம் அவரை திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்ய துடிக்கின்றனர்.

வள்ளலாரும் கார்ல் மார்க்ஸும்:

மனிதகுல வரலாற்றை இயக்கவியல் ரீதியில் ஆராய்ந்து வர்க்க அரசியலின் அடிப்படையை சொன்னார் மாமேதை கார்ல் மார்க்ஸ். மாமேதை கார்ல் மார்க்சை விட ஐந்து ஆண்டுகள் பின்னால் பிறந்தவர் அருள் பிரகாச வள்ளலார். இருவரும் மனித குலத்தின் பசியை போக்க சிந்தித்தவர்கள். மார்க்ஸ் மாற்றத்திற்கு சூத்திரம் தந்தார். வள்ளலார் பசிக்கு ஆறுதல் தந்தார். இருவர் மனதிலும் நிறைந்திருந்தது மனித குலம் மீதான அன்பு. அளவிட முடியாத பேரன்பு மட்டுமே. மார்க்ஸ் ஜென்னியை போல உலகை நேசித்தார். வள்ளலார் கடவுளை போல மனிதர்களை நேசித்தார்.

நிலப்பிரபுத்துவ வீழ்ச்சியின் இறுதி காலத்தில், நீராவி இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளில் தொழில் புரட்சி இளம் பிராயத்தில் இருந்த காலத்தில், உலகப் புகழ் பெற்ற இலக்கியங்கள் தோன்றிய காலத்தில் வாழ்ந்தவர் கார்ல் மார்க்ஸ். உலகம் முழுவதும் உள்ள செய்திகளை படித்து உணர பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற வாய்ப்பு பெற்ற சூழல் அவருடையது. எனவேதான்  உலக சாரத்தை அய்யமுற இயக்கவியல் ரீதியில் கற்றறிந்து, மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். பிரெஞ்சு புரட்சியும், ஜெர்மன் தத்துவமும், இங்கிலாந்து பொருளாதாரமும்  மார்க்சியத்தின் தோற்றுவாயாகவும் மூலக்கூறாகவும் அமைந்தன.

அதேசமயம் இந்திய சமூக அமைப்பில் தொழில் புரட்சி முழுவதும் அறிமுகமாகாத, எளிய பட்டறைகள், அதிலும் குறிப்பாக கைத்தறி பட்டறைகள் சூழ்ந்த, வடலூரில் வாழ்ந்தார் வள்ளலார். அப்போது வடலூரிலிருந்து 25 கி.மி. தூரம் உள்ள பரங்கிப் பேட்டையில் முதல் இரும்பு தொழிற்சாலை துவக்கப்பட்டது. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில், வருண கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்ட மதமும் சாதியும், கடவுளின் பெயரால் உச்சம் தொட்ட பக்தி இலக்கியம் கோலோச்சிய சூழல் வள்ளலாருடையது. தமிழகத்தில் சைவ சமய எழுச்சிக்காக ஆறுமுக நாவலர் உள்ளிட்டோர் பணியாற்றிய காலத்தில், மனிதனின் பசியைவிட கடவுளை மேலாக கொள்வது நியாயமா என்ற சந்தேகத்தை சைவ சமயத்திற்குள் எழுப்பினார் வள்ளலார்.

வள்ளலார் ஏற்றுக்கொண்ட தத்துவத்தின் அடிப்படை:

வள்ளலார் வடலூரில் வாழ்ந்த சமயத்தில், அங்கு கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்கள் எட்டி இருக்கவில்லை. எனினும் கிறிஸ்தவமும் இஸ்லாம் மதமும் கடலூர் மாவட்டத்தில் பரவி இருந்தது. குறிப்பாக நிலபிரபுத்துவ முறை அதன் முழு வடிவத்தில் இருந்த காலம் அது. அவர் கற்ற கல்வியும் அவரது ஞானமும் பல்கலைக்கழகம் சார்ந்தது அல்ல. எனினும் சைவ மதத்தின் உண்மையை அவர் கண்டறிய காரணம்  “உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம்பு ஆலயம்; கள்ளப்புலனைந்தும் காடா மணி விளக்கு” என்று புறக்கோயில்களை விடுத்து, அகக்கோயிலைப் போற்றி கோவிலுக்குச் செல்வதைக்  கண்டித்த திருமூலரை கற்றுணர்ந்ததுதான்.

”படமாடும் கோயில் பரமர்க்கு ஒன்றீயின் நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா; நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்றீயின் படமாடும் கோயில் பரமர்க்கு அங்கதாமே” என கோவில் உண்டியலில் பணம் போடுவதைவிட, நடமாடும் கோவிலான பசித்தவன் வயிற்றுக்கு சோறு போடு என்பதை திருமூலம் அழுத்தமாக  பாடினார்.

திருமூலரின்  ” ஒன்றே குலம் ஒருவனே தேவன்” ”உண்ணும் உணவில் ஒரு கைப்பிடி அரிசியை எடுத்து இல்லாதவனுக்கு கொடு” ”கடவுள் வேதங்களில் இல்லை; மனிதனுக்குள் இருக்கிறான்” ”சாமியார் வேடமிட்டு நெறி தவறி நடப்போர்களை அரசன் தண்டிக்க வேண்டும்” என்ற சொன்ன இந்த சைவ மரபுதான் வள்ளலாருக்குள் கலக விதைகளைத் தூவியது.

விவசாய கூலிகள் நிறைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் சொந்தமாக நிலங்கள் இல்லாத மக்கள் கடுமையாக பாதிப்பிற்கு ஆளாவதை நேரடியாக கண்டு உணர்ந்தார் வள்ளலார். பசியும் பஞ்சமும் அவர் நெஞ்சை வாட்டி வதைத்தது. பொருளாதார வாழ்க்கை அவருக்கு புரிந்தது. மேலும் அன்றிருந்த நிலையில், வழிபடுவதிலும் மனிதர்கள் மேல் காட்டிய பேதம் அவரை கோபப்படுத்தியது.

இங்கு சாதி மதங்களை எதிர்த்து வள்ளலார் போராடிக் கொண்டிருக்கும்போதுதான், ‘இந்த முடை நாற்றம் அடித்து தேங்கி நின்ற வர்ண அமைப்பை, அழுகிப்போன சாதிய முறைமைகளை, முற்றிலும் வீழ்த்தாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியமில்லை’ என கார்ல் மார்க்ஸ் எழுதினார். ஆனால், சனாதன ஏற்றத்தாழ்வை அழிப்பதை, இந்தியாவின் அழிப்பாக பார்க்கிறது ஆர்.எஸ்.எஸ் கூட்டம். அதனால்தான் ஆளுநர் ரவி போன்ற ஆர்.எஸ்.எஸ் நபர்கள் ஆத்திரமடைகின்றனர்.

தீட்சிதர்களுக்கு எதிராக ‘உத்தரஞான சிதம்பரம்” உருவாக்குதல்:

வைதீக மதம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. சைவ மதம்  ஆகமத்தை அடிப்படையாகக் கொண்டது.  சாதி, வருண வித்தியாசங்களை கேள்விக்குள்ளாக்கிய புத்த, சமண மதங்கள் மக்களிடம் செல்வாக்கு பெற்றபோது, அம்மதங்களை வீழ்த்த, வைதீகத்தோடு சைவம் சமரசம் செய்து கொண்டது. வேதத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தால், சைவம், வைதீகத்திற்குள் கரைந்தது. இதற்கு முன்பே சோழர்கள் காலத்தில் சமஸ்கிருதம் கோவிலுக்குள் நுழைந்த காரணத்தால், அனைத்தும் சமஸ்கிருத மயமானது.

இச்சமயத்தில் கிறிஸ்தவம் தனது அன்பு நெறியோடு தமிழகத்திற்குள் வந்தது. சாதிய கொடுமைகளை எதிர்த்தது. கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கும் கல்வி கொடுத்தது. தமிழை வளர்க்க ஆறுமுக நாவலர் சைவ வித்யா சாலைகளை நிறுவினார்.

இந்த நேரத்தில் வள்ளலார்  சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு தினசரி சென்று வந்தார் சைவத்தின் மீதான பற்று அதற்கு காரணம். ஆனால் அங்கு தீட்சிதர்களின் அடாவடிகளால், ஆடம்பரங்களால் மனம் நொந்து போனார். ‘இனி சிதம்பரம் புகேன்’ என வடலூரில் ‘உத்தரஞான சிதம்பரம்’ என்ற சத்தியஞான  சபையை  உருவாக்கினார்.

”வாழ்க்கை கொடுத்த அனுபவம் ”சைவம், வைணவம் இரண்டையும் நம்பாதீர்கள். அது உண்மையை  சொல்லாது. ஒருகாலத்தில் நானும் சைவத்தை  நம்பினேன்.  எனக்கிருந்த நம்பிக்கைக்கு அளவு சொல்ல முடியாது. ஏன் நம்பியிருந்தேன் என்றால், அப்போது எனக்கு அறிவு கொஞ்சம் தான் இருந்தது என்றார்.”

”உபநிஷதம், பிரம்மசூத்திரம், பகவத்கீதை போன்றவை கொலை செய்வதை தர்மமாக கூறியது. இதற்கு மாறாக, வள்ளலார் கொல்லாதே. உணவு  ஊட்டுவதும், உயிர் காப்பதும்தான்  கடமை என்றார். திருவருட்பாவும்  ஜீவகாருண்யமும் அவரது தத்துவமானது.” (1)

சனாதானிகளுக்கு ஒவ்வாத ஆறாம் திருமுறை:

ஆறுமுக நாவலர், வள்ளலாரின் பாடல்கள் ‘திருவருட்பா’ அல்ல என்று மறுத்தார், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் எனும் ஐந்து புராணங்கள் தான் திருவருட்பாவே தவிர, மற்றவை அல்ல என்றார். வள்ளலாரின் பாடல்களை நேரடியாக கண்டித்து, ‘அவர் இயற்றியது அருட்பா அல்ல, மருட்பா’ என்றார். வள்ளலார் ஏற்றுக்கொண்ட சைவர்களால் அவரின் பாடல்கள் தூற்றப்பட்டன. ஏற்கனவே பன்னிரு திருமுறை நூல்கள் உள்ளன. முதல் ஆறு திருமுறைகள் தேவாரம் என்று அழைக்கப்படுகிறது. அவைகளை பாடியது திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் ஆவார்கள். இதில் ஆறாம் திருமுறையை 981 பாடல்களால் திருநாவுக்கரசர் பாடியிருப்பார். பிறகு எதற்கு வள்ளலாரின் திருமுறை என இகழந்தனர்.

அதுமட்டுமல்ல; சனாதான வாதிகளால் திருஅருட்பாவில் உள்ள முதல் ஐந்து திருமுறைகள் கொண்டாடப்பட்டது போல, ஆறாம் திருமுறை கொண்டாடப்படவில்லை. காரணம், முதல் ஐந்து திருமுறைகள் சைவம் சார்ந்து அவர் எழுதிய பொதுவானது.  அவை வள்ளலாரின் துவக்க கால சிந்தனைகளைக் கொண்டதாக உள்ளது. சமயம் சார்ந்தது. தோத்திரம் மிகுந்தது. முக்தி குறித்து பேசுவது. உருவ வழிபாட்டை உயர்த்தி பிடிப்பது. சமய சன்மார்க்கம் பேசுவது,

ஆனால் ஆறாம் திருமுறை சிறப்பானது. பக்தியின் மேம்பட்ட நிலையில் உள்ளது. சமயங்களை கடந்த சமயாதீதம் கொண்டது. பொய்யான தோத்திரங்கள் குறைந்தது. எல்லா உயிர்களையும் நேசிக்கும் சமரச சுத்த சன்மார்க்க தன்மை கொண்டது. மனித வாழ்வின் பொருளாதார காரணிகளில் அனுபவ ஞானத்தை அடிப்படையாக கொண்டது. உருவ வழிபாட்டை மொத்தமாக அது தவிர்த்தது. எல்லோரும் வணங்கும்  ஒளி வழிபாட்டிற்கு இறுதியாய் வந்து சேர்ந்தது. (2) ஆகவேதான், திருமூலரை ஏற்றுக்கொண்ட சனாதனவாதிகள் வள்ளாலாரை எதிர்த்தனர்.

”கடவுள் வழிபாடு என்பது, சடங்குகள், யாகங்கள், வேண்டுதல்களில் இல்லை. மனிதர்களுக்கு மனிதர்கள் உதவும் ‘ஜீவகாருண்யம்’ தான் கடவுள் வழிபாடு. அதுதான், சன்மார்க்கம்” தமிழ் சிந்தனை மரபில் இப்படி மனிதத்தை கடவுளாக்கிய வேறு சிந்தனையாளர் இல்லை. அதே போல் ‘பசித்த வயிற்றுக்கு உணவு இடு’ என்று வேத மத மரபில் எந்த ரிஷியும், அவதாரமும், எந்த வேதமும், புராணமும், மகான்களும் கூறிய சான்றுகளே இல்லை. (2)

வள்ளலார் தமது உபதேசக் குறிப்புகளில் இவ்வாறு எழுதுகிறார்:  “சமயத் தெய்வங்களில் வழிபாடு செய்து அந்த சமயத் தெய்வங்களை பெற்றுக் கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து, மேலேற வேண்டிய படிகள் எல்லாம் ஏறி பூரண சித்தியை அடையாமல், தடைப்பட்டு நிற்றல் நில்லாமல் சர்வ சித்தியை அடைய, கடவுள் ஒருவர் உண்டென்றும், அவரை உண்மையின் பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டும் என்பதே சன்மார்க்க சங்கத்தின் கோட்பாடு” என்கிறார். சமய மறுப்பு, தெய்வ உருவம், சடங்கு மறுப்பு, சன்மார்க்கத்தின் கோட்பாடு. என்று 1872 இலேயே துணிவோடு அறிவித்த வள்ளலாரை வைதீகம் சனாதானம் பகையாளியாகத்தானே பார்க்கும்?

அணையா அடுப்பின் பின்னணி:

வள்ளலார் வாழ்ந்த இறுதிக் காலம், தாது வருட பஞ்சத்தின் துவக்க காலம் ஆகும். தமிழகத்தை பெரும் பஞ்சம் வாட்டியது. ஆங்கிலேய ஆட்சியின் தடையற்ற தானிய ஏற்றுமதியாலும், இயற்கை வஞ்சித்ததால் ஏற்பட்ட வறட்சியாலும் இலட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.

வள்ளலார் மறைந்த இரண்டு ஆண்டுகளில்  அதாவது 1876-78 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தைக் கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் 1876-78 இன் பெரும் பஞ்சம், தென்னிந்தியப் பெரும் பஞ்சம், 1876-78, சென்னை மாகாணப் பஞ்சம், 1877, தாது வருடப் பஞ்சம் என்று பலவாறு அழைக்கப்படுகிறது. இரு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலாண்டில் தென்னிந்தியப் பகுதிகளைத் (சென்னை, மைசூர், மும்பாய், ஹைதரபாத்) தாக்கியது. இரண்டாம் ஆண்டில் வட இந்தியாவில் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் பரவியது. இரு ஆண்டுகளில் ஐம்பது இலட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர்.

பஞ்சத்தின் துவக்கமே கொடும் தன்மையாக இருந்ததும், ஏற்கனவே நிலமற்ற கூலிகளின் நிலைமையை கண்டதாலும் எல்லா இடங்களிலும் பசித்தோருக்கு உணவிடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார் வள்ளலார். ஏழை மக்களுக்கு உணவளிக்க வடலூர் மக்களிடம் இரந்து பெற்ற 80 காணி நிலத்தில் அணையா அடுப்புடன் கூடிய தருமசாலையை நிறுவினார் வள்ளலார்.

1867 இல் அவர் அணையா அடுப்பை பற்றவைத்தபோது “ உலகத்தில் தருமம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது. இந்த அடுப்பு இருக்கும் வரை தருமம் அணையாது”  என வள்ளலார் சொன்னது, சனாதான தர்மம் அல்ல. அது, சாதி மதங்களைப் பாராமல் எல்லோருக்கும் உணவிடும் தர்மம், வெறுப்புக்கு எதிரான தர்மம்.

பஞ்சத்தை எதிர்கொள்ள தென்னாற்காடு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே மக்களுக்கு உணவளிக்க கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. சிதம்பரத்தில் கஞ்சித்தொட்டி முனை என்ற ஒரு இடமே உள்ளது.

இந்தியாவின் சமூக கட்டமைப்பை மென்மேலும் சுரண்டல் மிக்கதாய் மாற்றிட, சனாதனத்தை வலுப்படுத்த, தத்துவார்த்த தளத்தில் ஓயாமல் பணீயாற்றி வருகிறது சங்பரிவார் கூட்டம். சாதிய முறைமைகள் பொருளாதாரச் சுரண்டலுக்கு உதவுகின்றன. ஆளும் வர்க்கத்திற்கும் மூலதனக் குவிப்பிற்கும் உதவும் கருவியாய் உள்ளன. இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பே இவைகளுக்கு எதிராக களத்தில் போராடிய வள்ளலார் “சனாதான எதிர்ப்பின் உச்ச நட்சத்திரம்” ஆவார். ஆனால் அவரை சனாதானியாக கட்டமைக்க முயற்சிக்கின்றனர். இந்த சக்திகளால் தமிழக தத்துவ களம் கடந்த நூற்றாண்டில் காணாத புதிய சூழலை எதிர்கொண்டு நிற்கிறது.

இந்திய ஆன்மீக மரபை மார்க்சிய அணுகுமுறையில் ஆராய்ந்து, நம்மோடு  அணி சேரவேண்டிய சக்திகளை அடையாளம் காண வேண்டியதும், முற்போக்கு மரபினை முன்னெடுப்பதும், நம் முன் உள்ள  வரலாற்று கடமையாகும். தாமதமின்றி முன்னெடுப்போம்.

உதவிய தரவுகள்:

1. பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன்: திருமூலரை எதிர்க்காத பார்ப்பனர்கள் வள்ளலாரை எதிர்ப்பது ஏன்?

2. ஊரன் அடிகள் பதிப்பித்த திரு அருட்பா – ஆறாம் திருமுறை

Exit mobile version