-இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்
மகாத்மா காந்தி சில கொள்கைகளை தனது வாழ்க்கையின் இறுதிவரை உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தார். உண்மை, அஹிம்சை, வாழ்க்கையின் இன்பங்களைத் துறத்தல் போன்ற தார்மீக நெறிகள்; சுதந்திரம், ஜனநாயகம், அமைதி போன்ற அரசியல் கருத்துக்கள்; மதங்கள் மற்றும் சமூகங்களின் ஒற்றுமை போன்ற சமுதாயக் குறிக்கோள்கள் ஆகிய இவை அனைத்தும் அவரது வாழ்வு மற்றும் போதனைகளின் பிரிக்கமுடியாத பகுதிகள்.
இத்தகைய சில சிறப்பான கொள்கைகளைப் பற்றி நின்றதே மகாத்மா காந்தியை தன் பொதுவாழ்வின் தொடக்க காலத்தில் தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக இயக்கத்தில் ஆர்வத்தோடு ஈடுபடச் செய்தது. இதுவே அவரை தேசத்தின் விடுதலைக்காக ஒத்துழையாமை மற்றும் இதர இயக்கங்களை வகுக்க உதவியது. இதுவே அவரை எண்ணற்ற ஜனநாயக நோக்கங்களுக்காகப் போராடுபவராகவும் ஆக்கியது. இறுதியாக, அவரை தேச ஒற்றுமை எனும் உயரிய இலட்சியத்திற்காக உயிர்நீத்த தியாகியாகவும் ஆக்கியது.
ஏழைகளைத் தட்டி எழுப்பினார்
இரண்டாவதாக, அதுவரை தூங்கிக் கொண்டிருந்த கோடிக்கணக்கான கிராமப்புறத்து ஏழைகளை தட்டி எழுப்புவதில் காந்தியின் கொள்கைகள் மிகப்பெரும் பங்காற்றின. அவர்களோடு பேசும்போது அவர் பயன்படுத்திய அரை மதத்தன்மை கொண்ட மொழி; அவர் வாழ்ந்த எளிய, ஆடம்பரமற்ற வாழ்க்கை; அவர்களின் கோரிக்கைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களில் காட்டிய ஆர்வம். இவையெல்லாம் கோடிக்கணக்கான கிராமப்புற ஏழைகளை அவர் பால் ஈர்த்தன. தங்களை இரட்சிக்க வந்தவராகவும், கடவுளின் அவதாரமாகவும், தாங்கள் இருந்த பரிதாப நிலையிலிருந்து தங்களை மீட்க வந்தவராகவும் அவரைக் கண்டனர்.
பிற்போக்கான சமூகக் கண்ணோட்டம் கொண்டிருந்த காந்தியே நவீன தேசிய ஜனநாயக இயக்கத்திற்கு பெருந்திரளான கிராமப்புற ஏழைகளை ஈர்க்கும் ஆழமான புரட்சிகர அற்புதத்தை உருவாக்கிய காரண கர்த்தா என்று எவரேனும் கூறினால், அது சுயமுரண்பாடு போலத் தோன்றக் கூடும். எனினும், இந்த சுய முரண்பாடு, தேசிய ஜனநாயக இயக்கமானது நிலப்பிரபுத்துவத்துடன் தொடர்புள்ள முதலாளி வர்க்கத்தால் தலைமை தாங்கப்பட்டது என்ற உண்மையிலிருந்து எழுகின்ற நிஜ அரசியல் வாழ்வில் இருந்த முரண்பாட்டின் வெளிப்பாடே ஆகும்.
மூன்றாவதாக, தேசிய இயக்கத்தில் கிராமப்புற ஏழைகளை ஈர்ப்பதில் காந்தி மிக முக்கியப் பங்காற்றினார் என்ற போதிலும், முதலாம் உலகப் போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர்கள் வெளிப்படுத்திய மிகப் பிரம்மாண்டமான விழிப்புணர்விற்கும் அவர் தான் காரணம் என்பது தவறாகும். ஏனெனில், இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளின் விளைவே அந்த விழிப்புணர்வு.
இந்திய தேசிய இயக்கத்திற்குள் வளர்ந்து வந்த தீவிரவாதப் பிரிவு சில பகுதிகளில் விவசாயிகளையும் தொட்டது. துருக்கி, சீனா, எல்லாவற்றிற்கும் மேலாக ரஷ்யப் புரட்சி போன்ற சர்வதேச நிகழ்வுகள் ஆசிய மக்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்றவை இந்திய விவசாயிகளின் மனசாட்சியின்மீது செயல்படத் தொடங்கிய சில அடிப்படையான காரணங்களாகும். காந்தி அந்த சித்திரத்திற்குள் வந்திருந்தாலும் அவை செயல்பட்டிருக்கும். ஒரு வேளை அதேமாதிரியாக இருந்திருக்காது. இதைச் சொல்வது இந்திய விவசாயிகளின் விழிப்புணர்விற்கு ஒரு குறிப்பிட்ட மாதிரியான குணாம்சத்தை கொடுத்ததிலும், புதிய எழுச்சி, சுதந்திரம், ஜனநாயகத்திற்கான அரசியல் இயக்கத்தோடு இணைக்கப்பட்டதிலும் தனிநபர் என்ற முறையில் காந்தி ஆற்றிய பங்கை மறுப்பதற்கு இல்லை.
கிராமப்புற மக்களை ஈர்த்ததிலும் அதன் தொடர்ச்சியாக தேசிய ஜனநாயக இயக்கத்தை பலப்படுத்தியதிலும் காந்தியின் பங்கை மறுப்பது, மக்களிடம் ஏற்பட்ட அந்த விழிப்புணர்விற்கு முழுக்க முழுக்க காந்தியே காரணம் என்பது போன்றே ஒருதலைப்பட்சமானதே ஆகும்.
நான்காவதாக, இவ்வாறாக தேசிய இயக்கத்தின் பெரும் பலவீனத்தைப் போக்கியதில் பங்காற்றியவர் என்ற பாராட்டுதலுக்கு காந்தி தகுதியுடையவர் ஆகிறார். அதாவது, இதுவரை அணிதிரட்டப்படாமல் இருந்த பெருந்திரளான கிராமப்புற ஏழைகளை விடு தலை இயக்கத்திற்குள் கொண்டு வந்ததன் மூலம் இயக்கத்தை உண்மையிலேயே ஒரு தேசிய இயக்கமாக, அனைத்து வர்க்கங்களும் கலந்து கொண்ட இயக்கமாக அவர் ஆக்கினார்.
அதேவேளையில், கிராமப்புற ஏழைகள் சுயேச்சையான ஒரு சக்தியாக செயல்பட்டு விடுவார்களோ என்று எப்போதும், தன் இறப்பு வரைக்கும், காந்தி பயந்து கொண்டே இருந்தார் என்பதையும் மறந்துவிடக் கூடாது. சுதந்திரம், ஜனநாயகத்திற்கான இயக்கத்தில் அவர்களை அணி திரட்ட வேண்டும் என்று காந்தி விரும்பியபோதிலும், அவர்கள் அவருடைய சொந்த வர்க்கமான முதலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழேதான் செயல்பட வேண்டும் என்பதிலும் அவர் குறிப்பாக இருந்தார்.
முதலாளி வர்க்கத்தை முழுமையாக கையில் வைத்திருந்தார்
ஐந்தாவதாக, கிராமப்புற ஏழைகள் விஷயத்தில் மட்டுமல்ல; தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்கள் விஷயத்திலும் காந்தியின் அணுகு முறையும் செயல்பாடும் முதலாளி வர்க்கத்திற்கு உதவுவதாகவே இருந்தது. அவரது ‘தர்மகர்த்தா’ முறை பற்றிய கொள்கை, அரசியல் செயல்பாட்டின் வழிகாட்டியாக சில ஒழுக்க நெறிகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது, தனது தளபதிகளின் நாடாளுமன்ற நடவடிக்கைகளோடு ஆக்கப்பூர்வத் திட்டம், சத்தியாகிரகம் போன்ற நாடாளுமன்றத்திற்கு வெளியிலான தனது சொந்த செயல்பாடுகளை சாமர்த்தியமாக இணைத்த விதம், எதிரிக்கு எதிராக மக்கள் இயக்கத்தை நடத்திக் கொண்டே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற பிரத்தியேகமான காந்திய வழிமுறை இவை எல்லாமே நடைமுறையில்,
(அ) ஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயல்பாட்டிற்காக மக்களை திரட்டுவதில்
(ஆ) அவர்களை புரட்சிகர நடவடிக்கைகளில் இறங்குவதிலிருந்து தடுப்பதில்
முதலாளி வர்க்கத்திற்கு அளவற்ற உதவி புரிந்தன.
மக்களை எழுச்சி கொள்ளச் செய்வதிலும், கட்டுப்படுத்துவதிலும், ஏகாதிபத்திய எதிர்ப்பு நேரடி நடவடிக்கைகளை தொடங்குவதிலும், அதே நேரத்தில் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதிலும், அவருக்கு இருந்த தனித்திறன் அவரை முதலாளி வர்க்கத்தின் தன்னிகரற்ற தலைவராக ஆக்கியது. அந்த வர்க்கத்தின் அனைத்து குழுக்களும் கோஷ்டிகளும் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தன. எனவே அவரால் முழு வர்க்கத்தையும் ஒன்றுபடுத்தி, செயல்பட வைக்க முடிந்தது.
இறுதியாக, வரலாற்றில் முதலாளி வர்க்கத்தின் முதன்மையான தலைவர் என்ற பாத்திரத்தை காந்தி வகித்தார் என்பதைக் கொண்டு அவர் எப்போதும், எல்லா விஷயங்களிலும் முதலாளி வர்க்கத்தோடு ஒன்றுபட்டார் எனப் புரிந்து கொள்ளக் கூடாது. மறுபுறத்தில், நண்பராகவும், தத்துவவாதியாகவும் வழி காட்டியாகவும் அவர் இருந்து தலைமை தாங்கிய முதலாளி வர்க்கத்துடன், பல விஷயங்களிலும் காந்தியின் குரல் ஒரு சிறுபான்மைக் குரலாக இருந்திருக்கிறது.
இறுதிநாட்களில்…
காந்தியின் இறுதிநாட்களில் அவருக்கும், அவரது சகாக்களுக்கும் இடையில் அதிகரித்துவந்த இந்த இடைவெளியை ஆராயும்போதே அவரைப் பற்றிய, அவரது குறிக்கோள்கள் பற்றிய உண்மையிலேயே பாரபட்சமற்ற பல கோணங்களிலான மதிப்பீட்டிற்கு நாம் வர முடியும். ஏனெனில், சில தார்மீக விழுமியங்களை காந்தி வலியுறுத்தியதானது ஒரு சமயம் முதலாளி வர்க்கத்திற்கு சாதகமாக இருந்து, பின்னர் அவரது இறுதி நாட்களில் அதற்குத் தடையாக ஆனதன் வெளிப்பாடே அதிகரித்து வந்த இந்த இடைவெளி ஆகும்.
முதலாளி வர்க்கம் தன் கைக்கு வந்த அரசு அதிகாரத்தை தனது வர்க்க நலன்களை காப்பதற்காகவே பயன்படுத்தும். எனவே அரசு அதிகாரத்தை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்தும். முதலாளி வர்க்கம் மற்றும் அதன் பிரதிநிதிகளின் நிலையில் ஏற்பட்ட இந்த மாற்றம்தான் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட நாட்களில் தான் போதித்து வந்த கருத்துக்களை இன்னமும் வலியுறுத்திக் கொண்டிருந்த காந்தியோடு முரண்படச் செய்தது.
ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட நாட்களில் காந்தி போதித்து வந்த தார்மீக நெறிகள் அதிகாரத்திற்கு வந்த அரசியல் வாதிகளுக்குத் தடையாக ஆயின. மறுபக்கமோ காந்தி அவற்றுக்கு உண்மையாக இருந்தார். தனது சகாக்கள், தளபதிகள் ஆகியோரிடம் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்தோடு அவரால் ஒத்துப்போக முடியவில்லை. குறிப்பாக, இந்து-முஸ்லீம் ஒற்றுமை மற்றும் மத்தியில் ஊழல் ஆகிய பிரச்சனைகளில் நிலைமை இவ்வாறே இருந்தது.
ஜனநாயகமே அவரது கோட்பாடு
இவ்வகையில் காந்தியிசத்தை மதிப்பிடுகையில், மார்க்சிஸ்ட்- லெனினிஸ்டுகள் முதலாளி வர்க்கத்தின் தத்துவம், நடைமுறை என்ற வகையில் அதன் சாதக – பாதக அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்ட காலத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பானாலும் சரி, அல்லது பூதான இயக்கத்தின்போது நிலப்பிரபுத்துவ எதிர்ப்பானாலும் சரி, அல்லது 1970களில் எதேச்சதிகாரத்திற்கு எதிரான காலத்திலும் சரி, காந்தியிசம் என்பது முறையே நாட்டு விடுதலை, விவசாய சீர்திருத்தம், ஜனநாயக பாதுகாப்பு ஆகியவற்றுக்காகப் போராடியது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய ‘மகாத்மாவும் அவரது இசமும்’ என்ற நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்.
(ஒக்ரோபர் 2ந் திகதி 154வது பிறந்ததினம்)