–கிறிஸ்டோபர் ஜெமா
21 ஆம் நூற்றாண்டில் யாவும் தொழில்நுட்பம்… யாவரிடமும் தொடுதிரை செல்போன் என்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனால் தொட்டால் தீட்டு… பட்டியல் சாதியை சேர்ந்தவர் சமைத்தால் எங்கள் குழந்தைகளை சத்துணவு சாப்பிட விடமாட்டோம்… பட்டியல் சாதி ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஆனாலும் கொடியேற்ற விடமாட்டோம்… அவர் நாற்காலியில் உட்கார கூடாது… இவையெல்லாம் போதாதென்று நெஞ்சில் தைக்கும் சாதிக்கொடுமையின் வடுவாய் நிற்கிறது… வேங்கை வயல், நாங்குநேரி விவகாரங்கள்…
இப்போதே இப்படி என்றால் இன்னும் ஒரு நூறாண்டுகளுக்கு முன்னர் சென்று பார்த்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் சாதிய கொடுமைகள்… சகிக்க முடியாத சாக்கடை தடங்களாய் படிந்திருந்தது என்பதே உண்மை.
சனாதனம் வகுத்த நான்கு வர்ணங்கள், அதையும் தாண்டிய எண்ணற்றச் சாதிகள் மக்களைக் கூறுபோட்டுக் கொண்டிருந்தன. நிழல் பட்டாலே தீட்டு என்று சொல்லக்கூடிய அளவுக்கு தீண்டாமை, சமூகத்தில் பற்றியெறியும் புற்றுநோயாக வளர்ந்திருந்தது.
இதிலிருந்து மீள யோசிக்கக் கூட விடாது மக்களை துரத்தியது பஞ்சம், பசி, பட்டினி, வறுமை. இப்படிப்பட்ட காலத்தில் இருளுக்கு ஒளிகொடுக்கும் சூரியனாய், சாதியில் வெந்து செத்துக்கொண்டிருந்த மக்களிடம் சமத்துவத்தை போதிக்கும் வடிவமாய் தோன்றினார் வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார்.
இதனையே ”இன்றைக்கு ஒரு நூறாண்டுக்கு முன்னர் நாட்டில் இருள் படரலாயிற்று. அவ்விருள் கடிய எழுந்த ஞாயிறு நம் இராமலிங்க சுவாமிகள்” என்று தமிழ்த்தென்றல் திரு.வி. கல்யாணசுந்தரனார் கூறினார்.
ஓம், அப்படிப்பட்ட வள்ளலாரின் 200வது பிறந்தநாளை தனிபெருங்கருணை நாளாக ஒக்ரோபர் 5 இன்று தமிழ்நாடு கொண்டாடி வருகிறது.
யார் இந்த வள்ளலார்?
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் ஒக்ரோபர் 5, 1823ல் ராமையாபிள்ளை, சின்னம்மையார் தம்பதியருக்கு பிறந்தவர் ராமலிங்கர். அவர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்த நிலையில், தனது 5 குழந்தைகளோடு பொன்னேரி சின்னகாவனம் பகுதிக்கு சென்று வாழ்ந்தார் தாயார் சின்னம்மையார். பின்னர் சென்னையில் ஏழு கிணறு பகுதியில் குடியேறினார்.
அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார். அவர் தனது தம்பி இராமலிங்கத்தை பெரிய அளவில் படிக்க வைக்கவேண்டும் என்று விரும்பினார்.
ஆனால், இராமலிங்க அடிகளாருக்கோ கல்வியில் நாட்டம் செல்லவில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சிதம்பரம் சபாபதி பிள்ளை. ஆனால் அங்கும் அவரால் சரியாக படிக்க முடியாத நிலையில், ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டிய இராமலிங்க அடிகளார் தன் இறைபணியில் ஆழ்ந்து பயணிக்க தொடங்கி விட்டார்.
சத்துணவு திட்டங்களின் முன்னோடி!
அதன்பின்னர் ஆன்மிகவாதி, சமூக சீர்த்திருத்தவாதி, நூலாசிரியர், சித்த மருத்துவர் என்ற பெயரெடுத்தார் வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார். இதற்கிடையே 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 24 பஞ்சங்கள் ஏற்பட்டன. இதில் கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் மாண்டதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
“பசியினால் இளைத்து வீடுதோறும் இரந்தும், பசி அறாதயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்” என்று வள்ளலார் மனம் வாடிப் பாடினார். அதன்படி மக்களின் பெரும் துயரங்களுள் ஒன்றான பசியைப் போக்கிட தனது 44வது வயதில் மே 23, 1867 அன்று வடலூர் மக்களிடம் இருந்து 80 காணி நிலம் பெற்று தருமசாலையை தொடங்கினார்.
இந்த தருமசாலைக்கு வந்தவர்களுக்கு 3 வேளை உணவு வழங்கப்பட்டது. இன்றும் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பேரின் பசிதீர்க்கும் அன்னை வடிவமாக ஒளிர்கிறது அடிகளாரின் அணையா தீபம் கொண்ட தருமசாலை.
மேலும் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று அண்ணாவுக்கும், மதிய உணவாய் காமராஜருக்கும், சத்துணவாய் எம்.ஜி.ஆர், கலைஞருக்கும், காலை உணவு திட்டமாய் முதல்வர் ஸ்டாலினுக்கும் முன்னோடியாய் இருப்பது ‘பசித்தோர் முகத்தை பார்த்திராதே’ என்ற வள்ளலாரின் வரிகளும், அவர் உருவாக்கிய தருமசாலையும் தான்.
சன்மார்க்கம் வழியே புரட்சி!
பசி போக்கிட தருமசாலை மட்டுமின்றி, எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம், வடலூரில் இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு ’சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்’, ‘சத்திய ஞான சபை’ ஆகிய நிறுவனங்களை நிறுவினார்.
தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்பிருந்த சமய ஞானிகள் மடங்களையே நிறுவினார்கள். அங்கு காவியாடையுடன் ஆண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அதிலும் புரட்சி செய்த வள்ளலார், ஆண்கள் பெண்கள் இருபாலரும் பங்கேற்கும் வகையில், வெண்மை நிற ஆடை தரித்த சங்கம், சபையை நிறுவினார்.
ஒருமுறை அவரிடம் மற்ற துறவிகள் காவி உடையில் இருக்க, நீங்கள் மட்டும் வெள்ளை உடையில் இருப்பது ஏன் என்று வள்ளலாரிடம் கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர், ”நான் கருணை எனும் கருவி கொண்டு ஆசையை வென்று விட்டேன், அதனால் தான் வெற்றியின் நிறமான வெள்ளை அணிகிறேன்” என்று தெரிவித்தார்.
அனைத்து உயிர்களிடம் அன்பு!
எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை வள்ளலாரின் முக்கிய கொள்கைகள் ஆகும்.
’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று உருகிய வள்ளலார், அனைத்து உயிர்களிடம் அன்பு பாராட்டினார். தனது முதன்மை கொள்கையாக ‘கொல்லாமை’ கொள்கையை கடைபிடித்த அவர், ’எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ என்று கூறி அனைத்து உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையை பரப்பினார்.
மத வெறி கூடாது!
குறிப்பிட்ட சாதியினரே கோயிலுக்குள் நுழைய வேண்டும், குறிப்பிட்ட சாதியினருக்கு கடவுள் சிலையை பார்க்க கூட தடை என்ற பிற்போக்குத்தனமும், சாதிய அடக்குமுறைகளும் வள்ளலார் காலத்தில் எங்கும் நிரம்பியிருந்தது.
ஆனால் உண்மையான ஆன்மீகத்துக்கு சாதி ஒரு தடையில்லை, எந்த சாதியினராக இருந்தாலும் தனது சன்மார்க்கத்தில் இணையலாம் என்று கூறி சமத்துவத்தை நிலைநாட்டி மக்களிடம் முற்போக்கு சிந்தனையை விதைத்தார் வள்ளலார்.
இதுமட்டுமின்றி பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், எந்த உயிரையும் கொல்லக்கூடாது, எதிலும் பொது நோக்கம் வேண்டும், கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர், மத வெறி கூடாது என்று கூறினார் வள்ளலார்.
வள்ளலாருக்கு எதிராக கண்டன குரல்கள்!
சமூக நெறியையும், சமய நெறியையும் போதிக்கும் வள்ளலார் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது. ’சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி” என்று எழுத்துகள் வழியே அவர் எழுப்பிய கலகக்குரலால் ஆரிய சனாதனத்தை போற்றும் உயர்சாதியினரின் வெறுப்புக்கு பகைமைக்கும் ஆளானார்.
பழமைவாதமும், மூடநம்பிக்கையும் நிறைந்த சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்.
வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்தன. அதன்படி 1868 இல் சண்முகம் பிள்ளை என்பவரால் திருவருட்பா தூஷண பரிகாரம், 1869 இல் போலியருட்பா, 1904 இல் நா. கதிரைவேற்பிள்ளை என்பவரால் இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் என்று 12 கண்டன நூல்கள் வள்ளலாருக்கு எதிராக வெளிவந்தன. மேலும் ஆறுமுக நாவலர் என்பவர் வள்ளலாருக்கு எதிராக வழக்குமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாகக் கருதப்பட்டாலும், தற்பொழுது உலகெங்கும் அவருடைய சிந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மக்களால் பின்பற்றப்படுகின்றன. வள்ளலாரின் வலுவான சிந்தனைக் குரலும், சாதீய கொடுமைகளுக்கு எதிரான சனாதன மறுப்பும் அவரை மக்கள் மனதில் உச்சத்தில் நிலைபெற செய்துள்ளது.
வள்ளலார் மறைவும்… வாக்குமூலமும்!
எனினும் அவரது மறைவை வைத்தும் உயர் சாதியினர் இன்றளவும் தங்களது கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். வள்ளலார், எதிரிகளால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டார் என்றும் ஒளியோடு ஒளியாய்க் கரைந்தார் என்றும் கூறுகின்றனர்.
ஆனால் வள்ளலார் காலத்தில் வாழ்ந்து, அவருடனே 25 ஆண்டுகள் பயணித்த அவருடைய தீவிர சீடரான தொழூவூர் வேலாயுத முதலியார், 1882 இல் சென்னை தியாபிசிகல் சொசைட்டிக்கு வள்ளலார் மறைவு தொடர்பாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதில், ”வள்ளலார் 1873 ஆம் ஆண்டு தனது 50 ஆம் வயதை அடைந்த போது தனது சீடர்களைப் பக்குவப்படுத்த தொடங்கினார். அந்த ஆண்டின் கடைசி மூன்று மாதத்தில் பேசுவதையும் உபதேசிப்பதையும் அறவே தவிர்த்து இடையறா மெளனத்தில் ஆழ்ந்தார்.
1874 ஜனவரி மாதம் 30 ஆம் திகதி, நாங்கள் மேட்டுக்குப்பத்தில் சீடர்களிடம் அன்போடு விடைபெற்ற பின், ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறு கட்டிடத்தின் தனி அறை ஒன்றில் நுழைந்து, விரிப்பில் சயனித்துக் கொண்டார். அவரது கட்டளைப் படி அறைக்கதவு பூட்டப்பட்டது. இருந்த ஒரே துவாரமும் சுவர் வைத்து அடைக்கப்பட்டது.” என்று வள்ளாரின் கடைசி நிமிடங்கள் குறித்து அவர் விவரித்திருக்கிறார்.
வள்ளலார் வழி வந்த பெரியார்!
அவர் மறைந்தாலும், அதற்கு பின்னர் 5 ஆண்டுகள் கழித்து பிறந்த பெரியாரின் பகுத்தறிவு தீப்பந்தமும், 8 ஆண்டுகள் கழித்து பிறந்த பாரதியாரின் அறச்சீற்றமும் வள்ளலார் என்னும் அருட்பெருஞ்சோதியால் ஏற்றப்பட்டது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மை.
சமூக முன்னேற்றத்திக்காகவும், மக்களின் அறியாமை போக்கிடவும் அமைதியான வழியில் வழிகாட்டிய வள்ளலாரின் சேவையை கருத்தில் கொண்டு கடந்த 2007 ஓகஸ்ட் 17 இல் அஞ்சல் தலை வெளியிட்டு அரசு சிறப்பித்தது.
இந்த நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் வடலூரில் நடைபெற்ற வள்ளலாரின் 200 ஆவது ஆண்டு ஜெயந்தி விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ’சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்’ என்று கூறினார்.
மதித்த சமயதம் வழக்கெல்லாம் மாய்ந்தது.. வர்ணாசிரமெனும் மயக்கமும் சாய்ந்தது” என்று கூறிய வள்ளலாரின் வெண்ணிற ஆடைக்கு காவி கட்டும் முயற்சியாகவே ஆளுநரின் பேச்சு சர்ச்சையாகவே பார்க்கப்பட்டது.
வள்ளலாரின் 200 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடும் வேளையில், சனாதன தர்மத்திற்கு எதிராகவும், மக்களை அடிமைப்படுத்தும் ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் காலம் கொடுத்த அடிகளாரை சமூக சீர்திருத்தத்தின் உச்சநட்சத்திரம் என்று கூறி நினைவில், நம் மனதில் ஏந்துவோம்!