Site icon சக்கரம்

போரை உடனே நிறுத்துக!

லக அரங்கில் அதிகாரப்பூர்வ போர் அறிவிக்கப்படாமலே குற்றுயிரும் குலையுயிருமாக ஒரு நாடு ஆக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அது பலஸ்தீனம் தான்; குறிப்பாக பலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய அதி தீவிர வலதுசாரி – பாசிச பெஞ்சமின் நேதன்யாகு  அரசாங்கத்தின் இராணுவத்தால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடந்த பல மாத காலமாக கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானது. காசா திட்டு முழுவதும் இஸ்ரேலிய இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டது; காசா பகுதியை ஆளுகிற ஹமாஸ் இயக்கத்தின் தலைவர்கள் குறிவைத்து கொல்லப்பட்டனர்; அல் – அக்சா  (Al – Aqsa) மசூதி மீது குண்டுமழை பொழியப்பட்டு ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்; எழுத்தில் வடிக்க முடியாத அளவிற்கு துயரத்தின் விளிம்பில் தள்ளப்பட்டுள்ளனர் காசா மக்கள். 

பொறுத்து பொறுத்துப் பார்த்த காசா மக்களும் அவர்களுக்கு தலைமையேற்றுள்ள ஹமாஸ் இயக்கமும், கடந்த 16 ஆண்டுகளில் முதல் முறையாக மிகத் தெளிவாக வியூகம் வகுத்து, இஸ்ரேலின் அதிநுட்பம் வாய்ந்த உளவு அமைப்புகளின் கண்களை மறைத்து, ஒக்ரோபர் 7  சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேலைச் சுற்றி வளைத்து சரமாரியான ஏவுகணை தாக்குதலை நடத்தினர். இதை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், தனது இராணுவத்தின் நூற்றுக்கணக்கானோரை இழந்தது. இந்த அதிரடி தாக்குதலை, காசா மக்களில் பலரும் ஹமாஸ் இயக்கத்தினரும் ‘பலஸ்தீன விடுதலை நாள்’ என்று குறிப்பிடுகின்றனர்.

ஆனால் இந்த அதிரடிக்கு பதிலடி என்ற பெயரில் இஸ்ரேல் முன்னெப்போதையும் விட அதி தீவிர தாக்குதலை நடத்தும் என்பது இவர்கள் அறியாதது அல்ல. அதன்படியே, இஸ்ரேல் கடந்த இரண்டு நாட்களாக காசாவை சுற்றி  வளைத்து சல்லடையாக துளைத்துக் கொண்டிருக்கிறது. அதிகாரப்பூர்வமாக போர் என அறிவித்து இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதலில் பல நூற்றுக்கணக்கில் பலஸ்தீன மக்கள் மடிந்து கொண்டிருக்கின்றனர். 

இந்தப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், காசாவுக்காக குரல் கொடுக்கும் ஹமாஸ் இயக்கத்தின் செயலை வழக்கம்போல ‘பயங்கரவாதத் தாக்குதல்’ என்று முத்திரை குத்தியுள்ளன. அதன்மூலம் இஸ்ரேலின் போர்த் தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. இஸ்ரேல் அனைத்து விதமான வசதிகளுடனும் கூடிய இராணுவத்தைக் கொண்டிருக்கிறது. பலஸ்தீன மக்கள் தங்களது உயிருக்காகவும் சொந்த மண்ணுக்காகவும் மோதுகிறார்கள். இரண்டு தாக்குதலும் ஒன்றல்ல. எனினும் ஹமாஸ் தற்போதைய தாக்குதல் நிலைப்பாட்டை தவிர்த்திருக்க வேண்டும். போர் தொடுத்துள்ள இஸ்ரேல் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். பலஸ்தீன மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையும் இந்தியா உள்ளிட்ட நாடுகளும் உடனடியாக இஸ்ரேல் போரை நிறுத்திக் கொள்ள வற்புறுத்தவேண்டும்.

தீக்கதிர்
2023.10.08

Exit mobile version