–பலஸ்தீன பத்திரிகையாளர் மராம் ஹுமெய்ட் (Maram Humaid)
இந்த யுத்தத்தின் போது இங்கே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் கணிக்க முடியாததாகவும் சவாலாகவும் இருக்கிறது. இந்தக் கட்டுரையை எழுத நான் உட்காரும்போதெல்லாம் காதுகளில் ஏவுகணையின் நாராசமான பேரிரைச்சல்களே கேட்கின்றன.
நன்கு அறிந்த தெரிந்தவர்களின் மரணச் செய்திகள், நமது பகுதிக்கு அருகே குண்டு விழுந்துவிட்டது என்ற செய்திகள், தண்ணீர் இல்லை என்றும் உணவு இல்லை என்றும், இணையம் இல்லை என்றும் தினம் தினம் காசா நகரில் நடக்கும் அவலப் போராட்டங்களைப் பற்றிய செய்திகள் எனக்கு வந்துகொண்டே இருக்கின்றன.
என்னோடு வந்த கணவர், சகோதரர்!
நேற்று (18.10.2023) நாங்கள் டெய்ர் எல்-பாலாவுக்கு (Deir el-Balah – இது மத்திய காசா பகுதியில் உள்ள ஒரு நகரம்) இடம்பெயர்ந்தோம். இங்கே வந்த பிறகு , நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிவதற்காகவும் இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகள் குறித்த தகவல்களைச் சேகரிப்பதற்கும் முதல்முறையாக வெளியே சென்றேன்.
தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களால், உள்ளார்ந்த அபாயங்களை நான் அறிந்திருந்தேன். நான் ஒரு பத்திரிகையாளராக கிளம்பிய நிலையில், என் கணவர் மற்றும் என் சகோதரர் இருவரும் என்னுடன் சேர்ந்து, ’நாங்களும் உன்னுடன் வருகிறோம். அப்படியே குடும்பத்துக்கு தேவையான மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டு வருகிறோம்’ என்றனர். இந்த நேரத்தில் என்னை தனியாக விட அவர்களுக்கு உண்மையில் மனமில்லை.
நாங்கள் புறப்படத் தயாரானபோது, பல எண்ணங்கள் என் மனதில் ஓடின. வீட்டில் இருக்கும் நம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமே, வெளியே மற்றவர்களுக்கு ஏதாவது நேர்ந்தால் அவர்களுடன் இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தை என்னால் அசைக்க முடியவில்லை.
“ரெடியா மராம்?” என்று எனக்காக காத்திருந்த என் கணவர் அழைத்தார். பாதுகாப்பான விருப்பமாகத் தோன்றியதாலும், சாலைகளில் போக்குவரத்து குறைவாக இருந்ததாலும் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
அடுத்த தெருவுக்குத் திரும்பியபோது, ஒரு பெரிய வெடிப்பு அப்பகுதியை உலுக்கியது, என் மனம் அச்சத்தால் நிரம்பி வழிந்தது. வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நான் கொண்டிருந்த கவலைகள் மீண்டும் விரைந்து வந்தன. அப்போது வீட்டில் இருந்து எங்கள் குடும்பத்தினர் உடனடியாக எனக்கு போன் செய்து, ‘ஒரே சத்தமா இருக்கு,.. சீக்கிரம் திரும்பி வாங்க’ என்று கண்டிப்போடு வற்புறுத்தினார்கள்,
கண் முன் கரும்புகை… கடைவீதி எங்கும் பதற்றம்!
எங்களுக்கு சற்று தொலைவு முன்னால் வானில் கரும் புகை எழுந்து கொண்டிருந்ததைப் பார்த்து நாங்கள் அப்படியே நின்றோம். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக அங்கேயும் இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தார்கள். தரை முதல் வானம் வரை அங்கே பதற்றம் காற்றில் பரவியது.
எல்லா கடைகளிலும் கூட்டம்.. கடைகளின் விற்பனையாளர்களும் திணறிக் கொண்டிருந்தனர். ஒரு சுப்பர் மார்க்கெட்டில் அதன் உரிமையாளர் ‘ஸ்ரொக்’ (stock) எவ்வளவு இருக்கிறது என்று சத்தமான குரலில் உள்ளே இருக்கும் பணியாளர்களிடம் கேட்டு அதை குறிப்புகளாக எழுதிக் கொண்டிருந்தார்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கடை உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் எல்லாரும் பதற்றத்திலும் அவசரத்திலும் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பத்திரிகையாளராக அவர்களுடன் பேசுவதே எனக்கு சவாலாக இருந்தது. அவர்களுக்கு இப்போது செய்தி கொடுப்பதற்கு நேரம் இல்லை, ஒரு வேளை உயிரோடு இருந்தால் அடுத்த வேளைக்கு பசிக்குமே என்பதற்கான தேடல்களில் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் என்ன பேசுவது? செய்தி சேகரிப்பது? என்று எனக்குள் கேள்விகள் எழுந்தன.
நானும் இடம்பெயர்ந்தவள்தான்!
அந்த நேரத்தில்தான் அந்த தாய் என் கண்ணில் பட்டார். தனது குழந்தைகளை கைகளுக்கும் தன் இடுப்புக்கும் இடையே வாரியணைத்துக் கொண்டு வேகவேகமாக கடைக்கு சென்று கொண்டிருந்தாள். எனக்கு என்னமோ தோன்றியது. இவருடன் பேசிப் பார்ப்போம் என்று.
நான் அவரை அணுகி, ‘ஏம்மா… நீங்கள் இதே ஏரியாவா? (டெய்ர் எல்-பாலா) அல்லது வேற இடத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கீங்களா?’ என்று கேட்டேன். என்னைப் பார்த்து என்ன நினைத்தாரோ… சோகமாக ஒரு புன்னகை சிந்தி, ‘ உயிருக்கு பயந்து இடம் பெயர்ந்துதான் வந்திருக்கோம்’ என்றார். சட்டென என்னையும் அறியாமல் என் கை அந்த பெண்ணின் கையை பிடித்துக் கொண்டது.
‘நானும் அப்படிதான் வந்திருக்கேன்’ என்று சொல்லிவிட்டேன். ஒரு பத்திரிகையாளர் என்ற அறிமுகத்தை விட உயிருக்காக, வாழ்க்கைக்காக இடம் விட்டு இடம் ஓடிவந்தவள்தான் நானும் என்ற அறிமுகமே அந்த இடத்தில் அந்த தாய்க்கும் எனக்கும் ஒற்றுமையான ஆறுதலாக இருந்தது.
உயிரைக் கையில் பிடித்தபடி ஓடுகிறோம்!
எனது பயணம் முழுவதும், இதுபோன்ற கதைகளுடன் பலரை நான் சந்தித்தேன். சிலர் பகிர்ந்து கொள்ள தயங்கினார்கள், மற்றவர்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கண்ணீரோடும் கோபத்தோடும் வெளிப்படுத்தினார்கள். இந்த உயிரை விட்டுவிடக் கூடாது, நம் குழந்தைகளை விட்டுவிடக் கூடாது என்ற துடிப்பில் அவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர்.
அப்படியே நடந்துகொண்டிருக்கும்போதே அங்கிருக்கும் ஒரு மசூதியில் எல்லாருக்கும் குடிதண்ணீர் விநியோகம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். உணவுப் பொருட்கள் வாங்க திரண்ட கூட்டத்துக்கு நிகராக குடிதண்ணீருக்கான கூட்டமும் அங்கே இருந்தது. அங்கேயும் சிலரிடம் பேச முயன்றேன். ஆனால் அவர்கள் என்னிடம் பேசுவதற்கு ஒரு நொடி கூட செலவழிக்க விரும்பாமல், தண்ணீர் விநியோகிக்கும் அந்த நண்பர்களை நெருங்கிச் சென்று தண்ணீர் பெறுவதிலேயே மூர்க்கமாக இருந்தனர். நியாயம்தானே…
ஒரு கட்டத்தில் பத்திரிகையாளர் என்பதைக் கடந்து நானும் இடம் விட்டு இடம் ஓடிக் கொண்டிருப்பவள்தானே என்ற அடிப்படையில் மற்றவர்களிடம் பேச முயற்சிப்பதை சற்றே நிறுத்தி என் குடும்பத்துக்கு தண்ணீர் சேகரிப்பதற்காக அந்தக் கூட்டத்தில் முண்டியடித்து தண்ணீர் பெற்றுத் திரும்பினேன்.
இப்படியாக சில மணி நேரங்கள் கழிந்த நிலையில், ‘என்ன மராம்? வீட்டுக்கு போகலாமா?’ என்று கேட்டார் எனது கணவர். எந்தத் தொழிலாக இருந்தாலும் நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள், நமக்கும் குடும்பம், ஆசாபாசங்கள் இருக்கின்றன என்ற நினைவுகளை அவரது அந்த ஒரு கேள்வி திடீரென எனக்குள் எழுப்பியது.
அந்தப் பக்கம் இருந்து வரும் ஏவுகணை குண்டும், அதற்குள் பதுங்கியிருக்கும் பேரழிவு நெருப்பும் என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள், மருத்துவ பணியாளர்கள் அல்லது அரசு சாரா ஊழியர்கள் என பேதம் பார்க்குமா என்ன? எல்லாரும் தாக்குதலுக்கு உள்ளாகிறோம்.
மடிக் கணினியை மூடி வைத்துவிட்டேன்
இப்படி சுற்றிலும் பதற்றம் நிரம்பிய நிலையில் வீட்டுக்குத் திரும்பினேன். காசாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருப்பவர்களின் வலிகளை, சவால்களை பற்றிய எனது கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போதுதான்… அல் அஹ்லி அரபு மருத்துவமனையில் குண்டுகள் விழுந்து குழந்தைகளும், பெண்களும் கொல்லப்பட்ட இடிச் செய்தி என் இதயத்தைத் தாக்கியது.
ஐய்யோ என்று துடித்தேன். கணவர், குடும்பத்தினர் எல்லாம் பதறியபடி என்னிடம் ஓடிவந்தனர். என்ன என்று கேட்டனர். மருத்துவமனை மீதான தாக்குதலைப் பற்றி கண்ணீர் துளிகளோடு அவர்களிடம் சொன்னேன். அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது, அந்த கொடூரங்களின் உச்சக் கொடூரம். எங்கள் இதயங்கள் அவநம்பிக்கையால் துடிக்கின்றன. இதற்கு மேல் என்னால் எதுவும் எழுத முடியவில்லை. மடிக்கணியை மூடி வைத்துவிட்டேன்.
என் குழந்தைகள் தூங்குகிறார்கள்
நான் பத்திரிகையாளராக தொழில் செய்யலாம். ஆனால் நான் மனுஷிதானே… ஒரு பெண் தானே… குழந்தைகளின் தாயல்லவா? மேலும் இந்த கடலோரப் பகுதியில் ஏன் இப்படி கண்ணீர் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது. வாட்டி வதைக்கும் இந்தப் பெரும் வலியை சொல்ல என்னிடம் வார்த்தைகள் நான் அறிந்த மொழிகளில் எதிலும் இல்லை.
கண்ணீரைத் துடைத்துவிட்டு, என் குழந்தைகளை கட்டித் தழுவிக் கொண்டு சாய்ந்தேன். குண்டுச் சத்தத்தின் பின்னால் இருக்கும் ‘மரணக் கொள்கை அரசியல்’ பற்றி அறிந்திராத அந்த அப்பாவிக் குழந்தைகள் தாயாகிய எனது கதகதப்பில் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய எண்ணங்களோ இதுவரை நான் சென்று வந்த கடை வீதிகளிலும், குண்டு விழுந்த அந்த மருத்துவமனைக்கும் பறந்தன. எங்கிருந்து தூக்கம் வரும்?
மூலம்: My struggle as a ‘displaced’ Gaza mother as Israel bombs my people
தமிழாக்கம் : ஆரா
கட்டுரையாளர் குறிப்பு
மராம் ஹுமெய்ட். ஒரு பலஸ்தீனிய பத்திரிகையாளர், காசா பகுதியைச் சேர்ந்தவர். அவர் பலஸ்தீனத்தின் முற்றுகை நிறைந்த வாழ்வியலின் மானுட வலிகளையும், இளைஞர்களின் நம்பிக்கை பற்றியும் தொடர்ந்து எழுதி வருகிறார்.