Site icon சக்கரம்

யூதர்களும் அவர்களுக்கான தாய்நாடும்

-நசீப் பெஞ்சமின் (Naseeb Benjamin)

காந்திக்கு சில நெருங்கிய யூத நண்பர்கள் இருந்தனர். அவர்களின் சிறப்பான குண நலன்களை பாராட்டினார். கடந்த காலங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். யூதர்கள் இந்தியாவிலும் குடியேறி வாழ்ந்தனர். ஒத்துழையாமை இயக்கத்தின் போது (1919-24) மும்பையில் இருந்த யூதர்கள், இந்து – முஸ்லிம் மக்களிடம் ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டால் ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்து விலகி இருந்தனர். காந்தி யூதர்களிடம் பேசி சமாதானத்தை உருவாக்கினார். விடுதலை இந்தியாவில் அனைத்து மதத்தவரும் சுதந்திரம், பாதுகாப்புடன் வாழ்வார்கள் என்றார்.

பலஸ்தீனத்தில் யூதர்களுக்கான  நாடு பற்றி காந்தியின் சந்தேகம் பலஸ்தீனத்தில் அரேபியர்களை அப்புறப்படுத்தி  யூதர்களுக்கான தாய் நாடு உருவாக்கும் இங்கிலாந்தின் ஆக்கிரமிப்பு – யூத இனவெறித் (சியோனிஸ்ட்) திட்டத்தை காந்தி எதிர்த்தார். அது அறநெறியற்ற செயல் என்றார். அரேபியர்கள் பல நூற்றாண்டுகளாக இறையாண்மை பெற்றிருந்த நாட்டை யூதர்கள் பெற முடியாது என்றார். ‘ஜியூஸ் கிரானிக்கல்’ இதழில் காந்தி ‘‘யூதர்களால் பலஸ்தீனம் கைப்பற்றப்பட வேண்டும் என்பதுதான் சியோனிசம் (யூத இனவெறி)’’ என்றால் அந்த கோரிக்கையின் பால் எனக்கு பரிவொன்றும் கிடையாது என்றார்.

அரேபியர்களின் சம்மதத்துடனே பலஸ்தீனத்தில் குடியேற வேண்டும் பல்வேறு நாடுகளில் உள்ள யூதர்கள் பலஸ்தீனம் திரும்ப வேண்டும் என்றால் அரேபியர்களின் முழுமையான நட்புறவைப் பெற வேண்டும் என்று ஹரிஜன்  இதழில் (1938) எழுதினார். ‘அரபிகள் எதிர் யூதர்கள்’ எனும் கட்டுரையில் ஹிட்லர் யூதர்களை படுகொலை செய்ததை விமர்சிக்கிறேன்; ஆனால் அதற்காக யூதர்களுக்கு தனி நாடு என்பதை ஆதரிக்க மாட்டேன்  என்றார். “இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமோ அவ்வாறே பலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. யூதர்கள் ஜெர்மானியர்களின் மனங்களை வெல்ல வேண்டும். அரபு தேசத்தில் யூதர்களை திணிப்பது  மாபெரும் தவறாகும்.

உலகம் யூதர்களை வஞ்சித்துள்ளது என்பதை அறிவேன். ஆனால் அதற்காக அவர்கள் பலஸ்தீனத்திற்கு திரும்ப வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை. இன்று உலகில்  யூதர்கள் வாழும் நாடுகளே அவர்களின் தாயகம்.  உலகமே அவர்களின் வீடு’’ என்றார்.

‘‘அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவற்றின பலவந்தத்துடன்  பலஸ்தீனத்தில் குடியேற வேண்டும் என்று யூதர்கள் நினைத்தால் அவர்கள் மோசமான தவறு செய்கிறார்கள். தங்களை வரவேற்காத ஒரு நாட்டில் படைபலம், பணபலம் கொண்டு தங்களை குடியமர்த்திக் கொள்வது என்று நினைத்தால் அது தவறான நோக்கமாகும்.

வேண்டுமானால், அரேபியர்களிடம்  யூதர்கள் தங்களைக் காப்பாற்றுமாறு  கோரலாம். பல்வேறு நாடுகளில்  இன-மத ஒடுக்குமுறைக்கு உள்ளான யூதர்கள் உலகின் அனுதாபத்துக்குரியவர்கள்.

யூதர்கள் சுறுசுறுப்பானவர்கள், புத்திசாலிகள். அரேபியர்களோ மகத்தான வரலாற்றுப் பாரம்பரியம் கொண்டவர்கள். எனவே எந்த ஒரு நாட்டின் தலையீடும் இன்றி  யூதர்கள் அரேபியர்களிடம் புகலிடம் கோர வேண்டும். அரேபியர்கள் யூதர்களுக்கு இரங்கினால் அது அவர்களின் பெருந்தன்மையான பாரம்பரியத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும்’’ என்றும் காந்தி எழுதினார்.  பலஸ்தீனத்தில் யூதர்கள் குடியேறுவது  அரேபியர்களின் நல்லெண்ணம் மற்றும் பெருந்தன்மையின் அடிப்படையில் தான் அமைய வேண்டும் என்பதே காந்தியின் கருத்தாகும்  காந்தியின் முடிவான கருத்து. மும்பை யூதர்களின் அமைப்பின் தலைவரான ஏ.இ.ஷோலட் என்பவர் பலஸ்தீனத்தில் யூதர்களுக்கான தனி தேசம் எனும் தமது கோரிக்கைக்கு காந்தியின் ஆதரவை பெற முடியவில்லை.  காந்தி   அரேபியர்கள் – முஸ்லிம்கள் எனும் நோக்கிலேயே பலஸ்தீன  பிரச்சனையை அணுகினார். ஏகாதிபத்திய நாடுகளின் தலையீட்டை நிராகரித்தார்.1930-40 களில் அரேபியர்களும் பலஸ்தீனத்தில் துன்பங்களை எதிர்கொண்டவர்கள் என்றார்.

கல்லென்பாச், அமெரிக்க யூதர் ஜான் ஹெய்ன்ஸ், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்னி சில்வர்மேன் , லூயிஸ் ஃபிஷ்செர் ஆகியோர் யூதர்களுக்கான  தாய்நாடு -(பலஸ்தீன ) நாட்டுக்குள் ஒரு நாடு  எனும் தங்களின் கோரிக்கையை ஆதரிக்குமாறு காந்தியை வலியுறுத்தினர். அதற்கு காந்தி மறுத்துவிட்டார்.

ஒன்றிய பாரதிய ஜனதாக்கட்சி அரசின் இஸ்ரேல் நட்பு

விடுதலை இந்தியாவில் நேரு, காந்தியின் பலஸ்தீனக் கொள்கைப் பாரம்பரியத்தை தொடர்ந்தார். ஐ.நா.வின்  பலஸ்தீனப் பிரிவினையை எதிர்த்தார். 1950 இல் தான் இந்தியா இஸ்ரேலை அங்கீகரித்தது. 1992 இல் தான் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது இஸ்ரேலுடன் தூதராக உறவு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

ஆனால் அதற்கு முன்பாகவே 1988 இலேயே பலஸ்தீனத்தின் ஒரே பிரதிநிதியாக  யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை இந்தியா அங்கீகரித்துவிட்டது. கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு முழு இறையாண்மை மிக்க பலஸ்தீனம் என்பதே இந்தியாவின் கொள்கையாக இருந்தது.

தற்போது இஸ்ரேல் ஈவிரக்கம் இன்றி காசாவில் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது, பயங்கரவாதத்தின் பெயரால் மோடி இஸ்ரேலுக்கு மட்டும் ஆதரவளித்தார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்; அமைதி திரும்ப வேண்டும் என்று அடையாளபூர்வமாகக் கூட மோடி சொல்லவில்லை. இதன் மூலம் காந்தி, நேரு ஆகியோர் வடிவமைத்த பலஸ்தீன ஆதரவுக்  கொள்கையை  மோடி தகர்த்தெறிந்துள்ளார். இந்துத்துவா அரசுக்கு யூத இன -மதவெறி அரசு இயற்கையான கூட்டாளியாக அமைந்துள்ளது .

மோடியின் தடம் புரண்ட வெளியுறவுக் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற  கட்சிகளும் கடுமையாக விமர்சித்த பின்னர் – ஒக்ரோபர் 19 இல்  இஸ்ரேல், காசா மருத்துவமனையை குண்டுவீசித் தகர்த்த பின்னர் பலஸ்தீன குடியரசுத் தலைவர் முகம்மது அப்பாஸிடம் மோடி பேசியுள்ளார். இந்தியாவின் பாரம்பரியமான பலஸ்தீன ஆதரவுக் கொள்கை தொடர்வதாக  ஒப்புக்கு அறிவித்துள்ளார்.

நன்றி: காந்தி மார்க் (Gandhi Marg), ஏப்ரல் – ஜுன் 2023 காலாண்டிதழ்
தமிழில்: ம.கதிரேசன்

Exit mobile version