Site icon சக்கரம்

இஸ்ரேல் நடத்தும் பயங்கரத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை

ஸ்ரேலின் தாக்குதலால் காசா பகுதியில் நிலைமை விவரிக்க முடியாத  வகையில் உள்ளது. மேலும் மருத்துவமனைகளை கட்டாயப்படுத்தி மூடுவது  நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிரை ஆபத்தில் தள்ளும் என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் ரெட்ரோஸ் அதனோம் கெப்ரியஸ் (Tedros Adhanom Ghebreyesus) எச்சரித்துள்ளார்.

ஜெனீவாவில் நடந்த ஒரு செய்தியாளர்  சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர், காசா மற்றும் அதன் வடக்கு பகுதியில்  இருபத்தி மூன்று மருத்துவ மனைகளை காலி செய்ய இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படும்  நூற்றுக்கணக்கான நோயாளிகளின் உயிர் ஆபத்தான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது என்று கூறிய அவர், படுகாயமடைந்த மற்றும் நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவுவதற்காக இஸ்ரேல்-ஹமாஸ் போர்  மனிதாபிமான அடிப்படையில் இடைநிறுத்தம் செய்ய வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

10 ஆயிரம் பேர் பலி

மேலும் இஸ்ரேலில் 1,400 பேர் உட்பட, காஸாவில் 9,000க்கும் மேற்பட்டோர் என 10,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். முக்கியமாக இரு தரப்பிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொலையாகியுள்ளனர்.

25,000 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதோடு 14 இலட்சம் பலஸ்தீனர்கள் காசாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில்  பலருக்கு  நீண்ட கால கவனிப்பு தேவைப்படுவதாகவும் அந்த செய்தியாளர் சந்திப்பில் அதனோம் கூறினார்.

நிரம்பி வழியும் பிணவறைகள்

இஸ்ரேலின் பெயரை குறிப்பிடாமல்  “காசாவில் நடந்துவரும் பயங்கரத்தை விவரிக்க எங்களிடம் வார்த்தைகள் இல்லை”  மருத்துவமனைகளில்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நிரம்பி வழிகிறது. பிணவறைகள் நிரம்பி வழிகின்றன மற்றும் மருத்துவர்கள் மயக்க மருந்து இல்லாமலேயே  அறுவை சிகிச்சை செய்யும் கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடும்பங்கள் தங்குமிடம் மற்றும் கழிப்பறைகள் நிரம்பி வழிகின்றன, இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உருவாகி உள்ளது என்றார்.

கைதிகள் போல சித்ரவதை செய்து வெளியேற்றப்படும் காசா தொழிலாளர்கள்

ஸ்ரேல் மற்றும் மேற்குக் கரையில் உள்ள காசா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீன தொழிலாளர்களை வெள்ளிக்கிழமை (03.11.2023) முதல் வெளியேற்றி வருகிறது இஸ்ரேல் இராணுவம்.  

அக்டோபர் 7 ஆம் தேதி, தெற்கு  காசா மீது இஸ்ரேல்  தாக்குதலை துவங்கிய  பின்னர், இஸ்ரேலிய காவல்துறை  பலஸ்தீன தொழிலாளர்களை  கைது செய்து அடைத்து வைத்து  கால்களில் எண்கள் பொறிக்கப்பட்ட பட்டையை கட்டி  மோசமாக சித்ரவதை செய்து குற்றவாளிகளைப்  போல நடத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காசாவைச் சேர்ந்த பலஸ்தீன  தொழிலாளர்கள்,  இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ  எக்ஸ் (Twitter) தளத்தில் வியாழன் (02.11.2023) இரவு தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சுமார் 7000 தொழிலாளர்கள் நடந்தே வடக்கு காசா சென்றதாக பலஸ்தீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  காசாவிற்கு சென்ற தொழிலாளர்கள்  “நாங்கள் அவர்களுக்கு சேவை செய்தோம், வீடுகளில், உணவகங்களில் மற்றும் சந்தைகளில்  அவர்களுக்காக வேலை செய்தோம், அவர்கள் எங்களுக்கு குறைந்த சம்பளமே கொடுத்தார்கள், நாங்கள் அவமானப்படுத்தப்பட்டோம்,” என தங்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version