Site icon சக்கரம்

ஜெர்மன் நாஸிசமும் இஸ்ரேலிய பாசிசமும்!

எஸ்.வி.ராஜதுரை

தொலைக்காட்சி ஊடகங்கள்  சொல்ல  விரும்பாத சில உண்மைகள்

நேட்டோ அமைப்பு ரஷ்யாவின் அண்டை நாடான போலந்தில் இராணுவத் தளம் அமைத்துக் கொண்டிருக்கிறது.

இரு நாட்டு எல்லைகளும் ஒன்றோடொன்று சங்கமிக்கும் நிலையில் போலந்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலுள்ள ’நேட்டோ’ இராணுவக் கூட்டமைப்பு, ‘நேட்டோ’வில் இதுவரை உறுப்பினராகச் சேர்க்கப்படாத உக்ரைனுக்கு அந்த அமைப்பு தன் சொந்த விதிகளையும் மீறி செய்துவரும் மிகப் பெருமளவிலானான இராணுவ உதவிகள் – குறிப்பாக நவீனரக ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்கள் – செய்து வருகின்ற சூழலில், இப்போது ரஷ்யாவின் எல்லையோரத்திலுள்ள இன்னொரு அண்டை நாடான போலந்தில் அது இராணுவத் தளத்தை அமைப்பதை ரஷ்யாவால் – அது யாருடைய தலைமையின் கீழ் இருந்தாலும் – ஏற்றுக்கொள்ள முடியும்?

அதனால்தான் புட்டின் தலைமையிலுள்ள ரஷ்யாவின் முன்னாள் இராணுவ அமைச்சர் மெட்வெடோவ், ’நேட்டோ’வின் இராணுவத் தளம் போலந்தில் அமைக்கப்படுமானால், ரஷ்யா போலந்தின் மீது தொடுக்கும் தாக்குதல் கட்டாயமாக மூன்றாம் உலகப் போரின் தொடக்கமாக அமையும் என்று எச்சரித்துள்ளார்.

ஊடகங்களின் பொய் மொழி

தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளிலொன்றுக்கு மிக நெருக்கமான தொலைக்காட்சி சேனல் ஒன்று, 4.11.2023 அன்று காலை தனது 7.30 மணிச் செய்தியில் இந்த விவகாரத்தைக் குறிப்பிடும்போது இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யப்படைகள் போலந்தில் நுழைந்து “அதை கபளீகரம்“ செய்ததாகக் கூறியது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலுள்ள, மேற்கு நாடுகளுக்கு ஆதரவாகப் பொய்ச் செய்திகளைப் பரப்பிவரும் ஊடகங்களின் மொழியைத்தான் மேற்சொன்ன தமிழ் ஊடகமும் பேசிற்று. உலகம் முழுவதையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் நோக்கம் கொண்டிருந்த நாஸி ஜெர்மனியைத் தனிமைப்படுத்த பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை ஸ்டாலின் கேட்டபோது, அவை அதைத் தர மறுத்தன. அதுமட்டுமின்றி செக்கோஸ்லோவேகியாவை நாஸிகள் ஆக்கிரமித்த போது மெளனம் காத்தன. அந்த நாடும் சோவியத் யூனியனின் அண்டை நாடுதான்.

ஸ்டாலினின் இராஜதந்திர உத்தி

மேலும், பிரிட்டிஷ் பிரதமராக இருந்த சேம்பர்லின் பெர்லினுக்குச் சென்று ஹிட்லருடன் இரகசியப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனவே அந்த சூழ்நிலையில் ஹிட்லரின் நாஸி இராணுவம் சோவியத் யூனியன் மீது படையெடுத்து வருமானால் அதை எதிர்க்கொள்வதற்கான கால அவகாசத்தை உருவாக்கிக் கொள்வதற்காக ஸ்டாலின் தனது வெளியுறவு அமைச்சரை அனுப்பி 1939 இல் நாஸிகளுடன் ஒரு நாடு இன்னொரு நாட்டில் இராணுவத் தலையீடு செய்யக் கூடாது என்று கூறுவதுடன், இரு நாடுகளுக்குமிடையே கலாசாரப் பரிவர்த்தனை செய்து கொள்வதற்குமான ஒப்பந்தத்தைச் செய்து கொண்டார். அது ஓர் இராஜதந்திர உத்தி.

ஏறத்தாழ அந்தச் சூழலில்தான் ஜெர்மன் நாஸிகள் போலந்திலும் புகுந்து அதன் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கொண்டபோது, அந்த நாட்டின் இன்னொரு பகுதி சோவியத் யூனியனின் எல்லையோரமுள்ள பகுதியும் நாஸிக்களிடம் போய்ச் சேர்ந்துவிடாமல் இருப்பதற்காகவும் நாஸிகள் தன் நாட்டை நோக்கி வராமல் இருப்பதற்காகவும் ஸ்டாலினின் செஞ்சேனைகள் போலந்தின் இன்னொரு பகுதியைத் தன்வசப்படுத்திக் கொண்டன. அவை சில தவறுகளைச் செய்திருக்கலாம். ஆனால் அப்படைகளால் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதியில் யூதர்களின் உயிர்களுக்கோ உடைமைகளுக்கோ எந்த ஊறும் ஏற்பட்டதில்லை.

ஆனால், 1941ஆம் ஆண்டு வரை ஜெர்மனியும் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுக்கவில்லை. அதேவேளை மேற்கு நாடுகள், போல்ஷிவிசத்தை, அதாவது சோவியத் யூனியனை நாஸிகள் முதலில் ஒழித்துக் கட்டட்டும் என்ற ஆசையில் மூழ்கியிருந்தன. 1941 இல் நாஸிகள் சோவியத் யூனியன் மீது தாக்குதலைத் தொடர்ந்தபோது, அதை எதிர்கொள்வதற்கான நிலையில் சோவியத் இராணுவம் தயாராக இருந்தது. ஹிட்லர், சோவியத் யூனியன் மீது தாக்குதல் நடத்துவதுடன் நின்று கொள்ளாமல் பிரான்ஸின் பெரும் பகுதியைக் கைப்பற்றிக் கொண்டதுடன் பிரிட்டன் மீதும் குண்டு வீசத் தொடங்கியதால்தான் சோவியத் யூனியன், பிரிட்டன், பிரான்ஸ். அமெரிக்கா உள்ளிட்ட நேச அணி உருவாகிற்று.

ஆனால் நாஸிகளின் படையெடுப்பின் தொடக்க நாள்கள் சிலவற்றில் சோவியத் யூனியனுக்குப் பின்னடைவுகள் ஏற்பட்டன என்றாலும், மிகச் சிறப்பான இராணுவத் தயாரிப்பு , சோவியத் யூனியனில் இருந்த எல்லாக் குடியரசுகள், தேசிய இனங்கள், இனக்குழுக்கள் ஆகியவற்றிடம் ‘சோவியத் நாட்டுப்பற்றை ‘ உருவாக்கி நாஸிகளின் முதுகெலும்பை உடைத்து சோவியத் யூனியனை மட்டுமின்றி உலகமனைத்தையும் பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து பாதுகாக்க ஸ்டாலினின் தலைமையிலிருந்த சோவியத் யூனியனின் இராணுவமும் மக்களும் செய்த தியாகங்கள், ஸ்டாலினின் வழிகாட்டுதல்கள் ஆகியன காவியத்தன்மை வாய்ந்தவை.

அந்த ஊடகம் சொன்னது உண்மையா?

நாஸி ஜெர்மனி, பாசிச இத்தாலி, பாசிச ஜப்பான் ஆகிய முப்பெரும் தீய சக்திகளை உள்ளடக்கியிருந்த இன்னொரு அணியின் நோக்கம் என்ன? முதலில் சோவியத் யூனியனை வீழ்த்திய பிறகு காகஸ்ஸ் மலைத் தொடர் வழியாக ஆப்கானிஸ்தானின் ஊடாக நாஸி ஜெர்மனிப் படைகள் இந்தியாவிற்குள் வருவதும் அதே வேளை தரைவழியாக பர்மாவிலிருந்து ஜப்பானியப் படைகள் இந்தியாவிற்குள் நுழைவதும்தான் அந்த தீய சக்திகளின் திட்டம். ஆனால் இந்தியப் போர்வீரர்களைப் பெருமளவில் கொண்டிருந்த பிரிட்டிஷ் இராணுவம்  ஜப்பானின் திட்டத்தைச் சுக்கு நூறாக்கியது.

உண்மைகள் இப்படியிருக்க இரண்டாம் உலகப் போரின்போது “ரஷ்யா போலந்தை கபளீகரம் செய்தது” என்ற ஏகாதிபத்திய மொழியை பேசுகிறது இந்தத் தமிழ் ஊடகம். அதேபோல நாஸிகள் யூதர்களை இனக் கொலை செய்ததையும் இன சுத்திகரிப்பு செய்ததையும்கூட வெறும் ‘குழந்தைக் கதைகள்’ போல ஆக்கியுள்ள இஸ்ரேலிய அரசு, சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாகிய யூதர்களின் நலன்களைக் காப்பதற்காக உரிமை கொண்டாடும் இன்றைய இஸ்ரேலிய பாசிச அரசு,

கடந்த 75 ஆண்டுகளாக அங்கு மண்ணின் மைந்தர்களாக இருந்த பலஸ்தீன அராபியர்களைத் (அவர்களில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களும் இருக்கின்றனர்) தொடர்ந்து இனக் கொலை செய்து வருவதையும், அவர்களுக்கு சட்டப்படி (அது நியாயமற்றது என்றாலும்) பிரித்துக் கொடுக்கப்பட்ட பிரதேசங்களைச் சிறிது சிறிதாகக் கைப்பற்றி, அவர்கள் வாழும் பகுதிகளில் ஒரு நகராட்சி மன்றத்துக்கு உள்ள அதிகாரம்கூட இல்லாமல் செய்ததுடன், சொந்த நாட்டிலேயே பிணைக் கைதிகளாக வைத்துள்ளதுடன், அவர்களை வேலையற்றவர்களாக, அடிப்படை வசதிகளற்றவர்களாக, உணவும் குடிநீரும்கூட இல்லாமல் ஆக்கியுள்ள பாசிச இஸ்ரேல் கடந்த இரண்டாண்டுகளாக காஸா மீது தொடர்ந்து விமானத் தாக்குதலை நடத்தி வந்தையும்கூட மறந்துவிட்டு.

ஊடகங்களின் முக்கியத்துவம்

கடந்த ஒக்ரோபர் 7ஆம் திகதியன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து சில குடிமக்களைக் கொன்றதையும் சிலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றதையும் மட்டுமே பூதாகரமாக்கி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அந்த அமைப்பினரை மட்டும் ‘பயங்கரவாதிகள்’, தீவிரவாதிகள்’ என்று பா.ஜ.க சங் பரிவாரத்தின் நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் மட்டுமல்ல, மோடி ஆட்சியை விமர்சிப்பதற்காக நாள் தோறும் ‘விவாத மேடை’ என்ற பெயரால் பட்டி மன்றங்கள் நடத்தும் ஊடகங்களும்கூட அண்ணாமலை – எடப்பாடி, தேர்தல் நிதிக்கான வங்கிப் பத்திரம், அமுலாக்கத் துறை, வருமான வரித் துறையின் ‘ரெய்டுகள்’ ஆகியவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில் நூற்றில் ஒரு பங்கைக்கூட இஸ்ரேலியர்களின் இனக் கொலை, பலஸ்தீனர்களின் விடுதலை வேட்கை ஆகியவற்றைப் பற்றிய அக்கறை காட்டாதது ஏன்?

அப்படிக் காட்டினால், தங்களை ’இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள்’ என்று சங் பரிவாரம் முத்திரை குத்தி தேர்தலில் ஆதாயம் அடைந்துவிடும் என்று அஞ்சுவதால்தானா?. ஹமாஸின் பதுங்குக் குழிகளையும் சுரங்கப் பாதைகளையும் (இவையும்கூட மேற்கு நாட்டு ஊடகங்கள் சொல்பவைதான்) திரும்பத் திரும்பக் காட்டிவரும் இந்த ஊடகங்களுக்கு சிறிதளவேனும் மனிதப் பரிவோ, நெஞ்சில் ஈரமோ இருந்திருக்குமானால், குறைந்தபட்சம், காஸாவிலுள்ள மருத்துவமனை மீது இஸ்ரேலிய பாசிச இராணுவம் நடத்திய தாக்குதலையும் நூற்றுக்கணக்கான நோயாளிகளைக் கொன்றதையும் பற்றிய ஒரே ஒரு விவாதத்தையாவது நடத்தியிருக்கலாம். இஸ்ரேலியப் பிரதமரும் இராணுவத் தளபதிகளும் பலஸ்தீனத் தாய்மார்களின் கருப்பையில் இருக்கின்ற குழந்தைகளையும் கொன்று பலஸ்தீன இனத்தையே கூண்டோடு ஒழிக்க சூளுரை ஏற்றிருப்பதைப் பற்றிய ஒரு செய்தியையாவது விரிவாக வெளியிட்டிருக்கலாம்.

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளிலும்கூட இலட்சக்கணக்கான மக்கள் போர் நிறுத்தம் வேண்டியும், பலஸ்தீனர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தும் நடத்தி வரும் பேரணிகள் ஒன்றைக்கூட தமிழ் ஊடகங்கள் காட்டாமலிருப்பது ஏன்?

1998 இல் யூகோஸ்ல்வேவியா மீது நேட்டோ விமானங்கள் குண்டு வீசியதையும் 2011,2003 இல் அமெரிக்க ஏகாதிபத்தியம் இராக்கில் நடத்திய இராணுவ ஆக்கிரமிப்பையும்  மீண்டும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவும் ’நேட்டோ’வும் நடத்திய ஆக்கிரமிப்புத் தாக்குதல்களையும் நியாயப்படுத்துவது போன்ற காட்சிகளைக் காட்டி அவற்றையும் கேளிக்கைப் பொருள்களாக்கிய ஊடகங்களின் கண்கள் பலஸ்தீனர்களுக்கு ஒரு சொட்டுக் கண்ணீராவது விடுமா?

குழந்தைகள் பயங்கரவாதிகளா?

அது போகட்டும். காஸாவில் 3.11.2023 அன்று ஓர் அம்புலன்ஸ் வண்டி மீதும் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்திய இஸ்ரேலிய இராணுவத் தளபதியின் நேர்காணலையும் அதற்கு அந்தத் தளபதி கூறும் விளக்கத்தையும் அமெரிக்க சி.என்.என். தொலைக்காட்சி ஊடகம் ஒப்புதலோடு காட்டியது. அதாவது ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் அந்த அம்புலன்ஸில் இருந்தனர் அவர்கள் தப்பித்துச் செல்ல அம்புலன்ஸ்களையும்கூட விட்டுவைப்பதில்லையாம்.

அந்த அம்புலன்ஸில் இருந்த ‘ஹமாஸ் பயங்கரவாதிகள்’ யார் தெரியுமா?

இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு, உடல் முழுவதும் புழுதியால் போர்த்தப்பட்டிருந்த 3-4 வயதுக் குழந்தையின் உடல்;

உயிரோடு மீட்கப்பட்டும் உடல் முழுதும் புழுதி படிந்திருந்த, எங்கிருந்து உதவி வரும் என்று புரியாமல் தன் தந்தையின் கைகளால் ஏந்தப்பட்டு இடப்பக்கமும் வலப்பக்கமுமாக மலஙக மலங்கப் பார்த்துக் கொண்டிருந்த 4 அல்லது 5 வயதுக் குழந்தை;

’ஹமாஸ் பயங்கரவாதிகளின் தலைமையகம்’ என்று இஸ்ரேலிய பாசிஸ்டுளால் வெட்கமின்றி பொய்யுரைக்கப்படுவதும் சில நாள்களுக்கு முன் இஸ்ரேலிய பாசிசவாதிகளால் தாக்குதல் தொடுக்கப்பட்டு நூற்றுக்கணக்கான அகதிகளைப் பலி கொடுத்ததுமான ஜபாலியா அகதிகள் முகாமுக்குச் சென்று ’ஹமாஸ் பயங்ரவாதப் படையில் ’ சேர்வதற்கு ”இன்னும் வயது போதாமலிருந்த” ஓரு மாதக் கைக்குழந்தை.

இப்படி அந்த அம்புலன்ஸில் இருந்தவர்களில் கொல்லப்பட்டவர்கள் 15 பேர்.

பரபரப்புச் செய்திகளின் விளைவு

ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன் டெல்லியில் நிர்பாயா எனும் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டதைக் கண்டனம் செய்யத் தமிழ்நாட்டிலும்கூட ஆயிரக்கணக்கானோர் – மாணவர்கள் , மாணவிகள் உள்பட – மெழுகுவத்தி ஏந்தி தங்கள் இரக்க உணர்வைத் தெரிவித்தனர் என்றால் அது ஊடகங்களின் பரப்புரையின், பரபரப்புச் செய்திகளின் விளைவு.

சக மனிதர்கள் – பெண்கள், குழந்தைகள் – நிர்வாணப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்கள் மீது சிறுநீர் கழிக்கப்பட்டால், அவர்களது குடி நீர்த் தொட்டிகளில் மனித மலம் கலக்கப்பட்டால், அவர்கள் பட்டியல் சாதியினரைச் சேர்ந்த ‘இழிமக்கள்’தானே என்று சிறிதும் கலங்காத ஒரு சமுதாயம் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன தாய்மார்களுக்காக, அவர்களது குழந்தைகளுக்காக, அத்தாய்மார்களின் கருவிலிருக்கின்ற சிசுக்களுக்காகக் கண்ணீர் வடிக்கும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?.

Exit mobile version