‘சித்திரச் சோலைகளே உமை நன்கு திருத்த இப்பாரினிலே- முன்னர் எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே’ என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். காட்டை அழித்து வயலாக்க, மலையை உடைத்து சமமாக்க, ஆலைகளையும், சோலைகளையும் உருவாக்க பாடுபட்ட தொழிலாளர் தோழர்களின் உழைப்பைப் போற்றும் வகையில் பாவேந்தர் இவ்வாறு பாடியிருப்பார்.
பிரித்தானியா ஆட்சிக் காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தியத் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக அழைத்துச் சென்றது காலனியாதிக்க அரசு. அவர்களது உழைப்பை ஏகாதிபத்தியம் சுரண்டிக் கொழுத்தது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு தமிழர்கள் கொத்தடிமைகளாக கூட்டிச் செல்லப்பட்டனர்.
பிஜி தீவில் இந்தியப் பெண்கள் பட்டபாட்டினை மகாகவி பாரதியார் ‘கரும்புத் தோட்டத்திலே – அவர் கால்களும், கைகளும் சோர்ந்து விழும்படி வருந்துகின்றனரே’ என்று அழுது எழுதியிருப்பார்.
இதேபோல இலங்கையில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்க பிரித்தானியா ஆட்சியாளர்களால் அழைத்துச் செல்லப்பட்ட தமிழ் மக்கள் பட்டபாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. இன்றைக்கு இலங்கையில் செழித்து வளர்ந்திருக்கும் தேயிலை மற்றும் காப்பிச் செடிகளின் வேர்களை விசாரித்தால் அதில் மலையகத் தமிழர்களின் இரத்தத் துளிகள் ஒட்டியிருக்கும்.
இலங்கையில் மலையகத் தமிழர்கள் குடியேற்றப்பட்டு 200 ஆண்டுகள் (1823 – 2023) கடந்துவிட்டன. அந்த நாடு விடுதலை பெற்ற பிறகும் மலையகத் தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். அவர்கள் இன்னமும் கூட முழு குடியுரிமை பெற்றவர்களாக, சம அந்தஸ்து உள்ளவர்களாக நடத்தப்படுகிறார்களா என்கிற கேள்வி எழுந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்களது 200ஆவது ஆண்டையொட்டி ‘நாம் – 200 ஒற்றுமை, பன்முகத் தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்’ என்ற பெயரில் விழா ஒன்று இலங்கை அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்குமாறு தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் பங்கேற்க இயலாத நிலையில் மாநில நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பங்கேற்பதற்கு முறையான ஒப்புதலை ஒன்றிய இந்திய அரசு வழங்கவில்லை. ஒன்றிய ஆட்சியாளர்களின் சின்னப் புத்தியால் தமிழக முதல்வரின் காணொலி உரையும் அங்கு ஒளிபரப்பப்படவில்லை. மலையகத் தமிழர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதித்துள்ளது மோடி அரசு. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
– ‘தீக்கதிர்’ தலையங்கம்