Site icon சக்கரம்

பலஸ்தீனத்திற்கு உறுதியான ஒருமைப்பாடு சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மாநாடு பிரகடனம்

-எம்.ஏ.பேபி (M A Baby)

துருக்கியின், இஸ்மீரில் (Izmir), ஒக்ரோபர் 19-22 தேதிகளில், சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் (International Meeting of Communist and Workers’ Parties – IMCWP) 23ஆவது மாநாடு நடைபெற்றது. மாநாட்டில், காசாவில் பலஸ்தீனர்கள் மீது சியோனிஸ்ட் இஸ்ரேல்  மேற்கொண்டு வரும் கொடூரமான இனப்படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவித்து கடுமையான வார்த்தைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டை துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிகரமாக நடத்தியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எம்.ஏ. பேபி உரையாற்றினார். இந்த மாநாட்டில் 54 நாடுகளைச் சேர்ந்த 68 கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 121 தோழர்கள் பங்கேற்றார்கள். எம்.ஏ.பேபி ஆற்றிய உரை:

“அமெரிக்காவின் இளைய பங்காளியான இஸ்ரேல், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பலஸ்தீனம், காசாவில் தாக்குதலைத் தொடுத்திருக்கும் நிலையில் சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 23 ஆவது மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. காசா கடுமையாக முற்றுகைக்கு உள்ளாக்கப்படும் என்றும், ‘மத்தியக் கிழக்கு’ எப்போதும் மாற்றியமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தான நிலையாகும். உலக அமைதிக்கு மாபெரும் அச்சுறுத்தலாகும். இதற்கு எதிராகவும், பலஸ்தீனத்திற்கு முழுமையாக ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியும், உலகில் உள்ள அனைத்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளும், முற்போக்கு மற்றும் அமைதியை விரும்பும் சக்திகளும் கை கோர்க்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். ‘மத்தியக் கிழக்கு’ (நம்மைப் பொறுத்தவரை மேற்கு ஆசியா) மாற  வேண்டுமானால், அதற்கு 1967 இற்கு முந்தைய எல்லைகளுடன் பலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட வேண்டும், கிழக்கு ஜெருசலம் அதன் தலைநகராக மாற்றப்பட வேண்டும். மேற்கு ஆசியா அமைதி, முன்னேற்றம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்துடன் கூடிய பிராந்தியமாக மாற்றப்பட வேண்டும்.

அமெரிக்காவின் ஆதரவுடன் நடந்த சிலி இராணுவச் சதி

இந்த ஆண்டு, சிலியில் சல்வடார் அலெண்டே (Salvador Allende) அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவுடன் நடைபெற்ற இராணுவச் சதி நடந்த 50 ஆவது ஆண்டைக் குறிக்கிறது. ஆயிரக்கணக்கான கம்யூனிஸ்ட்டுகளும், சோசலிஸ்ட்டுகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள், சிறைகளில் அடைக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டவர்களில் புகழ் பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா மற்றும் பாடகர் விக்டர் ஜாரா முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

சிலியில் நடைபெற்ற இராணுவச்சதி,  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக மட்டுமல்ல, நவீன தாராளமயத்தின் கீழ் புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டு வருவதற்கான ஆய்வுக்கூட மாகவும் பயன்படுத்தப்பட்டது. சர்வதேச ஊடகங்கள் இராணுவச் சதியையும், புதிய பொருளாதார அடிமைத்தனத்தையும் முழுமையாக ஆதரித்தன. அலெண்டேக்கு எதிராக, தேர்தல் நடைபெற்ற சமயத்திலிருந்தே பிரச்சாரம் செய்து வந்த, ‘தி எக்னாமிஸ்ட்’ இதழ், இராணுவச் சதியையும் ஆதரித்தது. கம்யூனிஸ்டுகளுக்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியத் தலையீட்டை நியாயப்படுத்தியும் எப்படியெல்லாம் கோர்ப்பரேட் ஊடகங்கள் செயல்படும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பாசிச ஆதரவாளர்கள்

இப்போது நாம் புதுப்பிக்கப்பட்ட வலதுசாரித் தாக்குதலைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தாலியில் நடைபெற்றதுபோல் பாசிசத்தின் ஆதரவாளர்கள் அரசாங்கங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த சக்திகள் பல்வேறு விதமான பிளவுவாத சிந்தனைகளை மக்கள் மத்தியில் கொண்டுசென்று தங்களை வலுப்படுத்திக் கொள்வது வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் பொருளாதாரக் கொள்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்கள் மத்தியில் காணப்படும் அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்டு இவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதில் இது பிரதிபலிக்கிறது. பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காக வட்டி விகிதங்களை அதிகரிப்பது போன்ற மூர்க்கத்தனமான நிதிக் கொள்கைகள் பின்பற்றப்படுகின்றன. இவற்றின் விளைவாக வேலையின்மை, உண்மை ஊதியத்தில் இழப்பு ஏற்பட்டு, உழைக்கும் மக்கள் மற்றும் சாமானிய மக்கள் வாழ்க்கை கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

உண்மை ஊதியங்கள் வீழ்ச்சி

யதார்த்தத்தில் தொழிலாளர்களின் உண்மை ஊதியங்கள் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, மாதாந்திர உண்மை ஊதியங்கள் 2022இன் முதல் அரையாண்டில் 0.9 விழுக்காடு வீழ்ச்சி அடைந்தது. இது 2008 இற்குப்பின்னர் முதல் எதிர்மறை வளர்ச்சி விகிதம் (first negative growth) ஆகும்.  ஓ.இ.சி.டி எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி ஸ்தாபனத்தின் அறிக்கையின் படி 2023 இன் முதல் காலாண்டில் மொத்தம் உள்ள 34 நாடுகளில் 31 நாடுகளில் உண்மை ஊதியங்களில் 3.4 விழுக்காடு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு தொழிலாளர்களின் உண்மை  ஊதியங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடிய நிலையிலும் முதலாளிகள் திருப்தி அடையவில்லை. அவர்கள் தொழிலாளர்களுக்கு மேலும் ஊதியத்தைக் குறைக்க வேண்டும் என்றும், தொழிலாளர் சட்டங்களை மாற்ற வேண்டும் என்றும், சிக்கன நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்  என்றும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில், உழைக்கும் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றி  கொள்ளை இலாபம் ஈட்டவேண்டும் என்பதற்கான தங்கள் ஆசையை இவ்வாறு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.  

ஊடகங்கள் மூலம் வலதுசாரி சித்தாந்தப் பிரச்சாரம்

தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க உணர்வு  அதிகரிப்பது தங்களுக்கு ஆபத்து என்பதை நன்குணர்ந்த ஆளும் வர்க்கங்கள் தங்களின் வர்க்க மேலாதிக்கத்திற்கு சவாலாக அது உருவாகாமல் தடுத்திடுவதற்காக ஊடகங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன. இது இவர்களின் சித்தாந்தத் தாக்குதலின் ஒரு வடிவமாகும். ஊட கங்களில் பெரும்பான்மையானவை, மிகப்பெரும் கோர்ப்பரேட்டுகளால் அவற்றின் நலன்களைக் காப்பதற்காக நடத்தப்படுபவை. தங்கள்  கோர்ப்பரேட் எஜமானர்கள் கொள்ளை இலாபம் ஈட்ட வேண்டும் என்பதே இவற்றின் குறிக்கோள். இதன்காரணமாகத்தான் இவை உண்மை விவரங்களைத் திரித்தும் மறைத்தும் செய்திகளை வெளியிடுகின்றன. தொழிலாளர் வர்க்கத்தின் துன்ப துயரங்களையோ அல்லது அவர்களின் போராட்டங்களையோ இவை காட்டாது. வலதுசாரி அரசியல் பிரச்சாரத்திற்கு இவை முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. நிறவெறி, பிராந்தியவெறி, அடிப்படைவாதம், மதப்பிளவுவாதம், ஆணாதிக்க வெறி, தீவிரவாதம் மற்றும் நவீன பாசிசம் போன்ற பிளவுவாத சிந்தனைகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் இவை பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த செயல்பாட்டில், வரலாற்று உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. வரலாறு என்ற பெயரில் மக்களுக்குக் கட்டுக்கதைகள் ஊட்டப்படுகின்றன. காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்களிலும், பாசிசத்துக்கு எதிரான போரிலும், சமூக சீர்திருத்தங்களிலும், சமத்துவ அமைப்பை நிறுவுவதற்கான போராட்டத்திலும் கம்யூனிஸ்டுகள் ஆற்றிய பங்கு மறைக்கப்படுகிறது. மாறாக, கம்யூனிசத்தை பாசிசத்துட னும், கம்யூனிச ஆட்சியை சர்வாதிகாரத்துடனும் சமப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறாக, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் விஷமத்தனமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது. வலதுசாரி சக்திகளை முழுமையாக தோற்கடிக்க, நமது போராட்டம் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை எங்கள் கட்சி அதன் அடுத்தடுத்த அகில இந்திய மாநாடுகளில் அடையாளம் காட்டியது. இந்த சக்திகளை தேர்தலில் தோற்கடிப்பதற்கான எங்களது முயற்சிகளுடன், அரசியல்,  பொருளாதாரம், கலாச்சாரம், சமூகம் மற்றும் சித்தாந்தத் தளங்களிலும் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று இவர்களுக்கெதிரான போராட்டங்களில் கிடைத்த அனுபவங்களிலிருந்து முடிவுக்கு வந்திருக்கிறோம்

எம்.ஏ.பேபி (M A Baby)

மாற்றுக் கொள்கைகளை மறைத்திடும் ஊடகங்கள்

எங்கள் நாட்டில் முதலாளித்துவ அமைப்பின்கீழ் தங்களுக்குள்ள அனைத்து வரையறைகளுடனும், ஒன்றிய அரசாங்கம் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்காது கழுத்தை நெரிக்கும் கொள்கையைப் பின்பற்றி வந்த போதிலும், அவற்றையெல்லாம் மீறி, கேரளாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் மக்களுக்கு மாற்றுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது குறித்து கோர்ப்பரேட் ஊடகங்கள் வாயே திறப்பதில்லை. இவர்களின் நோக்கம் மிகவும் தெளிவாகும். நவீன தாராளமயம் மற்றும் முதலாளித்துவத்திற்கு மாற்றான எதையும் மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதில் இவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். இந்த அனுபவத்தில் இருந்து வலதுசாரி தாக்குதலை முறியடிப்பதற்கும், சர்வதேச நிதி மூலதனம் நம் நாட்டில் ஊடுருவுவதை முறியடிப்பதற்கும், ஒரு வலுவான கம்யூனிஸ்ட் இயக்கம் தேவை என்பதை உணர்ந்துள்ளோம். தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து சுரண்டப்படும் மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடிந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். மாறிவரும் உலகின் முக்கியமான நிகழ்ச்சிப் போக்குகளை, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள துல்லியமான சூழ்நிலைகளுடன், துல்லியமாகப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் மட்டுமே, நாட்டில் சமூகப் பொருளாதார, அரசியல் மற்றும் சித்தாந்தப் போராட்டங்களைக் கூர்மையாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.”

மூலம்: IMCWP Declares Solid Solidarity with Palestine

– தமிழில்: ச.வீரமணி

Exit mobile version