பலஸ்தீனத்தின் காசாவிலிருந்து தினந்தோறும் வெளியாகும் எண்ணற்ற காணொலிக் காட்சிகள் பிரதான ஊடகங்களில் இடம் பெறுவதில்லை.
நகரமே சுடுகாடாக காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் உயிரற்ற உடல்கள். பள்ளிகள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் அனைத்தும் இரத்தம் தோய்ந்த பிணவறைகளாக மாறிப் போயுள்ளன.
இடிபாடுகளுக்கிடையே தனது மகள்களை தேடும் தந்தைகள்; மொத்தக் குடும்பத்தினரும் கொல்லப்பட்டிருக்க தான் மட்டும் தப்பிப் பிழைத்த கைக்குழந்தைகள்; தாயையும், தம்பியையும் இழந்து தானும் இரத்தவெள்ளத்தில் துடிக்கும் சின்னஞ்சிறு சகோதரிகள்; குண்டு வீச்சில் காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச்சையளித்துக் கொண்டிருக்கும் போது அந்தக் குழந்தைகளுக்கு இடையே உயிரற்றுக் கிடக்கும் ஒரு சிறுமி தனது மகள் என்பதை அறிந்து கதறித் துடிக்கும் மருத்துவ தந்தை; அப்பாவும், தங்கையும் இறந்து கிடக்க, கதறித் துடிக்கும் தம்பியை அழுகையை அடக்கிக் கொண்டே அணைத்துக் கொள்ளும் சின்னஞ் சிறு அக்கா…
எத்தனை எத்தனை பயங்கரக் காட்சிகள். ஒவ்வொன்றும் நமது நெஞ்சை உலுக்குகின்றன. கண் கலங்கச் செய்கின்றன. கதறி அழ வைக்கின்றன. ஒவ்வொருவரும் நமது குழந்தையாக, நமது தாயாக, தந்தையாக, சகோதரியாக எண்ண வைக்கின்றன.
உலகமே பார்த்துக் கொண்டிருக்க, நம் கண் முன்பே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட சுமார் 15 ஆயிரம் பேரின் உயிரை உருவி விட்டது இஸ்ரேல்.
யாருமே, ஒன்றுமே செய்ய முடிய வில்லையே? ஐ.நா.சபை, அரபு நாடுகள், உலகின் மிகப் பெரிய நாடுகள், அவற்றின் கோடிக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடினாலும், ஒரு துளி அளவிற்குக் கூட இஸ்ரேல் இறங்கி வரவில்லையே?
இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் யூத இனவெறி மட்டுமா இதற்கு காரணம்? இல்லை. பலஸ்தீனம் ஓர் எண்ணெய் பூமி. மொத்த எண்ணெய்யும் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் இலாப வேட்கைக்கு தேவை. அதனால்தான் ஏகாதிபத்தியம், இஸ்ரேலை ஏவிவிட்டு பலஸ்தீன மக்களை வேட்டையாடுகிறது.
இலாபம், மேலும் இலாபம், மேலும் மேலும் இலாபம் என்பதைத் தவிர வேறு எதுவும் அறியாத மூலதனம், ஈவிரக்கமற்றது; காட்டுமிராண்டித் தனமானது; இரத்த வெறி பிடித்தது; அதற்கு மனித நேயம் கிடையாது; குழந்தைகளை கொஞ்சத் தெரியாது; இலாப வேட்டைக்கு எதிராக எவர் நின்றாலும் இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தும்.
ஏகாதிபத்திய மூலதனம் நின்று ஆடுகிறது. பாட்டாளி வர்க்கமே, இது உனக்கு ஒரு சவால்!
போரை நிறுத்த அரபு நாடுகளுடன் சீனா முயற்சி
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர யுத்தத்தை எதிர்த்த, அரபு நாடுகளுடன் இணைந்து சீனா முயற்சி மேற்கொண்டுள்ளது. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் அடங்கிய கூட்டுக் குழுவினர், நேற்றும் (20.11.2023) இன்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி (Wang Yi)-வை சந்தித்தனர். அப்போது அவர்கள் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்துவது குறித்து வாங் யி-வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத், ஜோர்டான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அய்மன் சபாடி, எகிப்து வெளியுறவு அமைச்சர் சமே ஷோக்ரி, இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சூடி, பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் (மேற்கு கரை) ரியாத் அல்-மலிகி மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் பொதுச் செயலாளர் ஹூசைன் பிரஹிம் தாஹா ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். பேச்சுவார்த்தைக்குப் பின் பேசிய குழுவினர், பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் போரில் நீதியை நிலைநாட்டுவதில் சீனா அதிக பங்காற்றும் என நாங்கள் நம்புகிறோம் என நம்பிக்கை தெரிவித்தனர்.
“காசாவில் மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் உடனடி போர் நிறுத்தம் மற்றும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும், காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை முழுமையாக வழங்குவதற்கும், அப்பாவி பலஸ்தீனக் குடி மக்களைப் பாதுகாப்பதற்கும், பொறுப்பான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் விரைவில் எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்ட இந்தக் குழுவினர், அந்த வகையில், பலஸ்தீன -இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வந்து பிரச்சனையைத் தீர்ப்பதிலும், சமத்துவம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதிலும் சீனா அதிகப் பங்காற்றும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
முன்னதாக கூட்டுக்குழுவினருடன் நடத்திய உரையாடலின் போது, அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் நல்ல நண்பனாகவும் சகோதரனாகவும் சீனா விளங்கி வருகிறது என குறிப்பிட்ட வாங்-யி, இந்த போரில் நியாயம் மற்றும் நீதியின் பக்கம் சீனா உறுதியாக நிற்கிறது என்றும் குடிமக்களின் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகளை அதிகப்படுத்துவது, மனிதாபிமான பேரழிவுகளைத் தடுப்பது மற்றும் பலஸ்தீனப் பிரச்சனைக்கு கொடுக்கப்பட்ட ஆரம்பத்தீர்வான இரு நாடு கொள்கையை அமுல்படுத்துவது ஆகியவற்றின் தேவை குறித்தும் சீனாவின் நிலையை தெளிவுபடுத்தினார்.
பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், மனிதாபிமான நெருக்கடியைத் தணிக்கவும், பணயக்கைதிகளை விடுவிக்கவும், பலஸ்தீனப் பிரச்சனைக்கு விரைவான, விரிவான, நியாயமான மற்றும் நீடித்த தீர்வை ஏற்படுத்தவும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுடன் இடைவிடாத முயற்சிகளை மேற்கொள்ள சீனா தயாராக உள்ளதாகவும் வாங்-யி குழுவினரிடம் உறுதியளித்துள்ளார்.
இந்த சந்திப்பின் மூலம், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள், சீனாவுடன் நெருக்கமான ஒருங்கி ணைப்பையும், சர்வதேச அளவில் அதிகரித்துவரும் நெருக்கடியை தடுப்பது; அமைதிப் பேச்சு வார்த்தைக்கான செயல்முறையை மீண்டும் தொடங்குவது, இரு நாடுகள் என்ற தீர்வின் அடிப்படையில் ஒரு சுதந்திர பலஸ்தீன அரசு உருவாவதற்கான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியவற்றை சீனாவிடம் எதிர்பார்க்கின்றன என தெரிய வந்துள்ளது. இது சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு ஆக்கப்பூர்வ அணிச் சேர்க்கையாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.
அதற்கேற்பவே, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐ.நா. பொதுச்சபையின் பலஸ்தீன தொடர்புடைய தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்துவது அவசியம் என்றும், உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும் சர்வதேச சட் டத்தை, குறிப்பாக சர்வதேச மனிதாபிமான சட்டத்தை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார். பலஸ்தீனத்தின் எதிர்காலம் தொடர்பான எந்தவொரு முடிவுக்கும் பலஸ்தீன மக்களின் சம்மதத்தைப் பெற வேண்டும் என்றும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் நியாயமான கவலைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் காசாவின் நிலைமை குறித்து மேலும் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்புக் கவுன்சிலில் சீனா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார்.